ஆளும் தரப்புக்கு மூன்றில் இரண்டு சஜித் நம்பிக்கை எல்லாமே கனவு!

-நஜீப் பின் கபூர்-

பேராசிரியர் ரத்னஜீவன் கருத்து மிகவும் நியாயமானது!
நாட்டில் சட்டம் பச்சோந்தி நிலையில் செயல்படுகிறது!
தேர்தலுடன் ஐ.தே.கட்சி நூதன சாலைக்குப் போகிறது
பிரபாகரன் அஷ;ரஃப் தேர்தல் சந்தையில் நல்ல விலை
ஊழல் மோசடி குறைய ஜே.வி.பி பலம் பெற வேண்டும்
சாடியில் அடைக்கப்பட்ட பூதத்தை திறந்து விட்டார்களா!

மீண்டும் ஒரு முறை தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டிருக்கின்றது. அனேகமாக இந்த முறை அறிவிக்கப்பட்டிருக்கின்ற படி ஆகஸ்ட் ஐந்தாம் திகதி தேர்தல் நடக்கலாம் என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் தேர்தல் பணிகளும் வேட்பாளர்களும் சுறுசுறுப்படைந்து வருகின்றார்கள். முன்புபோல் அல்லாமல் தேர்தல் பணிகள் எப்படி முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வைத்தியத்துறையினர் கடுமையான ஒழுக்கக் கோவை ஒன்றை கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் வழங்கி இருக்கின்றார்கள். இதனை சட்டத்தையும் ஒழுங்கையும் முன்னெடுக்கின்ற பாதுகாப்புத்துறையினர் எந்தளவு நடுநிலையாக முன்னெடுக்கப் போகின்றார்கள் என்பதில் பலத்த சந்தேகங்கள் இருந்து வருகின்றன.

நாம் ஏன் இப்படிக் குறிப்பிடுகின்றோம் என்றால் கொரோனா கட்டுப்பாடுகள் முன் னெடுக்கப்பட்ட ஒழுங்குகள் விவகாரத்தில் நடுநிலைத் தன்மை பேணப்படவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக ஆறுமுகம் தொண்டமான் மரணத்தின் போது நடந்த நிகழ்வுகள் அடுத்து அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டத்தின் போது பொலிசார் நடந்து கொண்ட ஒழுங்குகள் ஒன்றுக்கொன்று எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாதவையாக இருந்து வருகின்றன. இந்த இடங்களில் ஆளும் தரப்பிலுள்ள அதிகாரம் படைத்தவர்களை பாதுகாப்புத் தரப்பினர் திருப்திப்படுத்துகின்ற வேலைகளைப் பார்த்திருக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டப்படுகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ புதல்வரும் ஆளும் தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ கூட அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது பொலிசார் நடந்து கொண்ட ஒழுங்கை தான் கடுமையாக எதிர்ப்பதாக பகிரங்கமாக பேசி இருந்தார். இன்று அமெரிக்க பிரசைகளே அதிகரம் மிக்க பதவிகளிலும் தீர்மானம் எடுக்கின்ற இடங்களிலும் இருப்பதால் அவர்களுக்கு அமெரிக்க நலன்களைப் பாதுகாக்க வேண்டிய தேசபக்த கடமை இருக்கின்றது என்று நையாண்டித்தனமாக இந்த விவகாரத்தை விமர்சித்திருக்கின்றார் ஜேவிபி தலைவர் அணுர குமார திசாநாயக்க.

சிரிப்பவர் கடுத்தார்!

தேர்தல் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆளும் தரப்பிலுள்ள சில அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். அவர்கள் ஏதோ தேர்தல் ஆணைக்குழு அரச விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற ஒரு அமைப்பு என்று மக்கள் முன் நியாயப்படுத்த முனைக்கின்றார்கள். இதற்கு சில ஊடகங்களும் துணைபுரிந்து வருகின்றன என ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கடுமையாக குறை கூறி இருக்கின்றார். அத்துடன் ஊடகத்துறையினர் நாம் போய்வரும் இடங்களில் எல்லாம் எங்களை விரட்டிக் கொண்டும் படமெடுத்துக் கொண்டும் திரிகின்றார்கள். அப்படி எடுத்த படங்களை வைத்துக் கொண்டு நாம் சொல்லாத கதைகளை சொன்னதாக கதை கட்டி விடுகின்றார்கள்.

சில தினங்களுக்கு முன் அவர் காரியலத்துக்கு சென்று கொண்டிருந்து போது தன்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த ஒரு ஊடகக்காரரிடம் உங்களுக்கு தொழில் ரீதியில் சில உரிமைகள் இருப்பதைப்போன்று எங்களுக்கும் எங்கள் தொழில் ரீதியாக கடமைகளைச் செய்வதற்கு சில உரிமைகள் இருக்கின்றன. எனவே எங்களது தொழில் ரீதியான நடவடிக்கைகளின் போது நீங்கள் எந்த நேரமும் தெந்தவு செய்யக் கூடாது அத்துடன் எமக்கும் தனிப்பட்ட வாழ்க்கை என்று ஒன்றிருக்கின்றது. எப்போதுமே ஊடகங்கள் முன் சிரித்த முகத்துடன் பேசுபவர் அன்று நெருப்பாகி கடுப்பாக நின்றதுடன் முதலில் உங்களை கெமோராவை என்முகத்துக்கு பிடிக்காது கீழே போடுங்கள் என கண்டிப்பாக கூறிவிட்டார். அவரது கதைக்கு ஊடகக்காரர் எந்த மாற்று கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம் ஒரு சிங்கள நாளிதழ் பேராசிரியர் ரத்னஜீவன் ஆளும் தரப்புக்கு வாக்களிக்கக் கூடாது என்று பகிரங்கமாக வடக்கில் குறிப்பிட்டதாக ஒரு செய்தியை தலைப்புச் செய்தியாக சொல்லி இருந்தது. அடுத்த நாளும் இந்த சர்ச்சைக்குறிய செய்தியை மேலும் உறுதிப்படுத்திய அதே ஊடகம் இந்த தகவலை தமக்கு வடக்கிலுள்ள ஆளும் தரப்பு ஒரு அரசில்வாதி உறுதி செய்ததாக தகவல் என்று சொல்லி இருந்தது. இது பற்றி கருத்துக் கூறிய ஜேவிபி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுஹெத்தி பேராசிரியர் ரத்தனஜீவன் கருத்தில் எந்தத் தவரும் கிடையாது. அவர் மிகச் சரியாகவே பேசி இருக்கின்றார். அரசு தரப்பு ஆட்கள்தான் கதையை திரிவுபடுத்தி வருகின்றார்கள்.

பேராசிரியர் ஊழல்வாதிகளுக்கும் மோசடிக்காரர்களுக்கும் மக்கள் வாக்குப் போடக் கூடாது என்றுதானே பேசி இருக்கின்றார். இதனை ஆளும் தரப்பு தமக்கு எதிரான கருத்து என எப்படி எடுத்துக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகின்றார். பேராசிரியர் கருத்தை ஆளும் தரப்பு தனக்குக் கூறப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்கின்றார்கள் என்றால் ஆளும்தரப்பினர் ஊழல் பண்ணுகின்றார்கள், அல்லது பண்ணத் தயாராகின்றார்கள் என்றுதான் நாமும் எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மையிலே பேராசிரியர் கருத்து மட்டுமல்ல மஹிந்த தேசப்பிரிய கருத்துக்களைக் கூட சில ஆளும் தரப்பினர் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்று இந்தக் கதைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

225 க்கு 7452 களத்தில்

நமது நாடாளுமன்றத்துக்கு 225 பேர் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள். இதற்காக களத்தில் 7452 போட்டிக்கு வந்திருக்கின்றார்கள். 196 பேர் நேரடியான போட்டியிலும் 29 பேர் கட்சிகள்-சுயேச்சைகள் எடுக்கின்ற மொத்த வாக்குகளின் அடிப்படையிலும் பிரிந்து செல்ல இருக்கின்றது. இதற்கு வெட்டுப்புள்ளி என்ற தடைதாண்டலும் இருக்கின்றது. கடந்த பொதுத் தேர்தலில் ரணில் தலைமையிலான ஐ.தே.க. அதிகமான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு சம்பந்தன் தரப்பு அணியின் ஒத்துழைப்புடன் தனது அரசாங்கத்தை முன்னெடுத்துச் சென்றது. பின்னர் ஜனாதிபதி ஜீ.ஆர். பதவியேற்ற போது சில நாட்களில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமரானார். அவருக்கு பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ள முடியவில்லை. எனவே மீண்டும் சில நாட்களுக்கு ரணில் பிரதமராக இருந்தார். பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு இருந்ததால் கலைக்கப்படும்வரை ரணிலே பிரதமராக இருந்தார்.

மஹிந்த-சஜித்

பல அரசியல் குழுக்கள் தேர்தலில் நின்றாலும் பிரதமர் பதவிக்கான போட்டிக்கு மொட்டுக்கள் தரப்பில் குருனாகல மாவட்டத்தில் போட்டிக்கு வந்திருக்கின்ற மஹிந்த ராஜபக்ஸாவுக்கும் கொழும்பிலிருந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவுக்குமிடையே நிழவுகின்றது. எமது கணிப்புப் படி இந்தத் தேர்தலிலும் நாம் ஜனாதிபதித் தேர்தலில் முன்கூட்டி சொன்னது போல இங்கு ஒரு போட்டி நிலையே கிடையாது. இதுவும் ஒரு தனிக்குதிரை ஓட்டம் என்ற நிலையில்தான் இதுவரை கள நிலவரம் போய்க் கொண்டிருக்கின்றது. தேர்தலுக்கு வேட்பு மனுக் கொடுத்தவர்கள் தற்போது போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக அறிவிப்புச் செய்த வருகின்றார்கள். தேர்தல் சூடுபிடிக்கின்ற போது இது போன்று நாடகங்கள் தொடர இருக்கின்றது என்று எமக்கு தகவல்கள் வருகின்றன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சராகவும் கடந்த அரசில் நிதி அமைச்சராகவும் இருந்த மங்கள சமரவீர இப்படி ஒரு ஆட்டத்தை துவக்;கி வைத்திருக்கின்றார். இதற்கு முன்னரும் இதுபோன்ற வேலைகள் நடந்திருக்கின்றன. ரணிலுக்கு மிகவும் நெருக்கமான வஜிர அபேவர்தன இது ரணிலின் விளையாட்டு என்று ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கின்றார். அது சரியாக இருக்கும். முன்பொருமுறை ரணில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த மங்களம் கருவா பொல்லு ஆட்டம் போட்ட ஆளாயிற்றே. நாம் சஜித் தரப்புக்கு மற்றுமொரு தகவiலையும் எத்திவைக்க விரும்புகின்றோம். தேர்தலுக்கு முன்னர் இன்னும் பலர் மங்கள போன்று தொலைபேசிக்கு ஆப்பு வைக்க இருக்கின்றார்கள்.

அதே போன்று தேர்தலுக்குப் பின்னர் வெற்றி பெற்று ஆளும் தரப்பில் போய் இணைந்து கொள்ள இன்றும் 12க்கும் குறையாதவர்கள் மொட்டுக்களின் கோட்பாதருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி முடித்திருக்கின்றார்கள். அவர்களில் எத்தனைபேர் கரைசேரப் போகின்றார்களோ தெரியாது! எனவே சஜித் தரப்பில் தேர்தலுக்கு முன்னாலும் பின்னாலும் நிறையவே பல்டிகள் இருக்கின்றது என்பதனை நாம் பொறுப்புடன் தெரிவிக்கின்றோம். எனவே தேர்தலில் ஆளும் தரப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒருபோதும் பெறாது.

கொரோனா வந்திருக்காவிட்டால் கூட நிலமை இதுதான். ஆனால் கொரோனா ஆளும் தரப்புக்கு ஒரு சின்ன காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது சஜித்தை பிரதமராக கொண்டுவர எந்தவகையிலும் போதுமானதல்ல. ஆளும் தரப்புக்கு மூன்றில் இரண்டு இல்லை என்று நாம் அடித்துக் கூறினாலும் மொட்டுக்களின் கோட்பாதர் அதனை சமைக்கின்ற திட்டத்தை ஏற்கெனவே வடிவமைத்திருக்கின்றார். எனவேதான் அரசுக்கு மூன்றில் இரண்டு வராது ஆனால் அது சமைக்கின்றது என்று குறிப்பிடுகின்றோம். வடக்கு கிழக்கில் இருந்து கூட இந்த முறை ஆளும் தரப்புக்கு நேரடியாவும் மறைமுகமாகவும் ஒத்துழைக்கின்ற ஒரு வியூகமும் கிடப்பில் இருந்து வருகின்றது. இதன் மூலம் ஈழத் தமிழர்களின் பெரிய கனவுகளுக்கு தீனி கிடைக்கப்போவதில்லை.

ஜேவிபி-ஐதேக போட்டி!

பண்டாரநாயக்கரர்களின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மைத்தரி எப்படி முதுகொழும்பை முறித்துப் போட்டாரோ அதைவிட ரணில் விக்கிரமசிங்ஹ ஐக்கிய தேசியக் கட்சிக்கு விசத்தை பருக்கி விட்டார் என்பதனை தேர்தல் முடிவுகளில் பார்க்க முடியும். கடைசியாக தொழிற் சங்க அமைப்பினருடன் மோதிக் கொண்ட ரணில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குப்போட முடியாவிட்டால் மொட்டுக்கு வாக்களியுங்கள் என தலைவர் ரணில் அங்கு கேட்டார் என்று சஜித் தரப்பினர் ஊடகங்கள் முன் ரணிலைக் குற்றம் சாட்டி இருந்தார்கள்.

எனவே வருகின்ற தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள் நூதன சாலையில்தான் கட்சியைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். என்றாலும் தமது தனிப்பட்ட செல்வாக்கு ஜனரஞ்சகம் காரணமாக ஓரிரு ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி முயல்கொம்பு போல் வெற்றி பெறவும் ஒரு சின்ன வாய்ப்பு சிலருக்கு இருக்கின்றது ஆனால் உழைப்பு கடுமையாக வேண்டும். தனக்குத் தேர்தலில் அதிர்ச்சியான முடிவு வர இருப்பதை ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் தெரிந்து iவைத்திருக்கின்றார் எனவே தெற்கில் மூன்றாம் இடத்தை அடைய ஜேவிபியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இந்தமுறை போட்டியிடுகின்றது என்பது நமது கருத்து.

தயான் ஜயதிலக விசனம்

இதுவரை மஹிந்தவுக்கு விசுவாசமாக இருந்து வந்த பிரபல அரசியல் ஆய்வாளர் தயான் ஜயதிலக்க தற்போது சஜித் தரப்பு வேட்பளர்களுக்காக நடாத்திய செயலமர்வொன்றில் தற்போதய அரசங்கத்தின் நடவடிக்கைகளையும் வெளியுறவுக் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்திருக்கின்றார். எனவே அவர் சஜித் அணியை ஆதரிக்கின்றாரோ இல்லையோ ராஜபக்ஸாக்களையும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணிலையும் கடுமையாக விமர்சிக்க்கின்றார். இவர் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாணசபையில் அமைச்சராக வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைபோன்று ஒரு நாடு பட்சோந்தித்தனமான வெளிநாட்டுக் கொள்கைளைப் பின்பற்றவது மிகவும் ஆபத்தானது. அங்கு பேசிய முன்னாள் அமைச்சர் பாக்கீர் மரைக்கார் முன்பெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும்பான்மை கருத்துக்களுக்கு மதிப்பும் இடமும் இருந்தது ஆனால் அங்கு பௌடர் பேபிகள்தான் கட்சியை வழிநடாத்தும் நிலை வந்ததால்தான் கட்சிக்கு இந்த நிலைக்கு இன்று ஆளானது என்றார்.

இதற்கிடையில் அதிகமான நிருவாகத்துறைக்கு இராணுவ அதிகாரிகளை பொறுப்பாளர்களாகவும் செயலாளர்களாகவும் நியமிப்பதன் மூலம் நாட்டில் இராணுவ ஆட்சி நடக்கின்றது. அல்லது அதற்கான அடித்தளம் போடப்படுகின்றது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. மேலும் நாம் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் முதற்பணியாக மங்கள சமரவீரவின் கடந்த கால அமைச்சுப் பதவிகளில் அவர் செய்த முறைகேடான விடயங்கள் தொடர்ப்பில் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். எனவே அவர் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டதற்காக அவரை நாம் சும்மா விடப்போவதில்லை என்று மொட்டு வேட்பாளர்கள் பேசி வருகின்றார்கள். இவை எல்லாம் வெரும் நாடகங்கள் மட்டுமே. தேர்தலில் ஒருவர் விலக்கிக் கொண்டார் என்பதற்காக அவரது இலக்கம் வேட்பாளர் சீட்டிலிருந்து நீக்கப்படுவதில்லை. ஒருவர் மரணித்தால் கூட கதை இதுதான்.

ஜார்ஜ் ஃப்ளைடும் நமது தேர்தலும்!

ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கும் நமது தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் என்பது நியாயமான கேள்வியாக ஏழ இடமிருக்கின்றது. அமெரிக்காவில் வெள்ளை இன பொலிஸாரால் படுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்தைத் தெடர்ந்து அமெரிக்க தீப்பற்றி எறிந்தது. மக்கள் ஊரடங்குச் சட்டங்களை மதிக்கமால் தெரு வீதிகளில் குவிந்தார்கள். பொலிஸார் அனைவரும் போல் குற்றவாளிகள் என்ற மனநிலையில் ஆர்ப்பட்டகாரர்கள் முன்னால் மண்டியிட்டதால் அவர்களுக்கு சட்டத்தை மீறியவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு நிலை அங்கு இருந்தது. அந்த மக்கள் நெருக்கமே இன்று அமெரிக்காவின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை மீண்டும் அதிகப்படுத்தி இருக்கின்றது என்று அங்கிருந்து வரும் புதிய தகவல்கள் கூறுகின்றன.

நமது நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் நாங்கள் உலகிற்கு ஆசான்களாக நிற்க்கின்றோம் என்று கூறிய அரசே அவசரப்பட்டு தற்போது தேர்தலை நடத்த எற்பாடுகளைச் செய்ய தனது வைத்தியத்துறையினரைப் பாவித்து விட்டது. இப்போது இங்கு தேர்தல். நாட்டில் ஓரளவுக்கு இயல்பு நிலை என்ற ஒரு எண்ணப்பாடு உருவாகி இருக்கின்றது. மக்கள் வீதிகளில் நடமாட ஆரம்பித்து விட்டார்கள். போக்குவரத்து சீராகி வருகின்றது. காரியாலயங்கள் செயல்படுகின்றன. பாடசாலைகள் திறக்கப்பட இருக்கின்றன.

இந்தச் செய்திகள் நல்ல தகவல்கள் என்று பார்க்கப்பட்டாலும் ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு ஒருமைப்பாட்டைக் காட்ட போய் அமெரிக்காவில் கொரோவை மீண்டும் உசுப்பேற்றிவிட்டது போல் நமது நாட்டில் தேர்தலுக்கு அவசரம் காட்டி சாடியில் அடைக்கப்பட்ட பூதத்தை திறந்து விட்டது போல் ஒரு காரியத்தை வைத்தியத்துறையினர் ஊடாக அரசு செய்து கொண்டதோ என்ற ஒரு அச்சம் நமக்கு இருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு வைத்தியத்துறை பணிந்துறைத்தார்கள் நாம் தேர்தலை அவர்க்ள் ஆலோசனைப்படி நடாத்தினோம் என்று சொல்லித் தப்பிக்க வாய்ப்பு நிறைய இருக்கின்றது. நமது கடற்படையினரை கொரோனா விரட்டியது போல பொது மக்களையும் துரத்த ஆரம்பித்தால் நிலமை மோசமாக அமைந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

அமெரிக்கா வீழ்கின்றது சீனா பலம் பெறுகிறது! ரஷ;யாவும் இந்தியாவும் வரலாறு படைக்கின்றது

Next Story

தேர்தல் அரங்கம் அங்கே நிகழ்வது என்ன!