ஆப்கான் மற்றொரு ஷாக் உத்தரவு!

காபூல்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தொடர்ந்து பிற்போக்குத் தனமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது சர்வதேச சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர்.

இதுவரை தாலிபான் தலைமையை உலகின் பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தாலிபான்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என சில நாடுகள் அறிவித்துள்ளன.

ஆப். ஆட்சி

உலக நாடுகள் இப்படி அறிவித்துள்ளதற்கான காரணம் இருக்கத் தான் செய்கிறது. ஏனென்றால் கடந்த 1996-2001 வரையிலான தாலிபான்களில் முதல் ஆட்சியில் மனித உரிமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் அங்கு இருந்தன. குறிப்பாகப் பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் வகையில் பல சட்டங்கள் இருந்தன. பெண்கள் கல்வி கற்கக் கூட அங்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதே நிலை மீண்டும் ஏற்படுமோ என அஞ்சப்பட்டது.

தாலிபான்கள் உறுதி

இருப்பினும், ஆட்சி அமைத்த போது இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வர மாட்டோம் என்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாகத் தாலிபான் இருக்கும் என்றும் அந்த அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தாலிபான் அமைச்சரவையிலேயே கூட பெண்கள் யாரும் இல்லாமல் இருந்தனர். இதுவே சற்று அதிருப்தியைச் சம்பாதித்தது.

காற்றில் பறந்த உறுதி

அடுத்த கட்டமாக ஆண் மற்றும் பெண்கள் இருபாலும் சேர்ந்து படிக்கும் கல்வி முறைக்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்குப் பல முக்கிய சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சூழ்நிலையில், தற்போது ஆண் உறவினர்கள் இல்லாமல் பெண்கள் வெளியே போகக் கூடாது என்று அடுத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது தாலிபான் அமைப்பு! ஆப்கனை மீண்டும் தாலிபான்கள் பின்னோக்கி இழுத்துச் செல்வதையே இது காட்டும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்,

புதிய உத்தரவு

இது தொடர்பாக ஆப்கன் நாட்டின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “45 மைல்களுக்கு (72 கிலோமீட்டர்) அதிகமாகப் பயணம் செய்யும் பெண்களுடன் அவர்களின் ஆண் உறவினர்கள் இல்லை என்றால் ஏற்றக் கூடாது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஹிஜாப் கட்டாயம்

அப்படி ஆண் உறவினர்களுடன் செல்லும் போது பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் பயணிக்கும் போது பொதுமக்கள் இசையைக் கேட்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்குப் பல சமூக ஆர்வலர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சர்ச்சை உத்தரவுகள்

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், டிவி நாடகங்களில் பெண் நடிகர்கள் நடிப்பதை நிறுத்துமாறு ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்போது ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பல பிராந்தியங்களில் பெண் கல்விக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கன் பெண்கள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர்கள்

இப்படி அடுக்கடுக்கான பெண் உரிமைகளைப் பறிக்கும் உத்தரவுகளைத் தாலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர். இது சர்வதேச சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாலிபான்களின் இந்த உத்தரவுகள் ஆப்கனை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் வகையில் உள்ளதாக அவர்கள் சாடியுள்ளனர்.

Previous Story

சுனாமி :மறக்க முடியாத டிசம்பர் 26, 2004!

Next Story

கொரோனாவுக்கு முடிவு : போப்  பிரார்த்தனை