ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை பாகிஸ்தானை வென்றது எப்படி?

இலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக வனிந்து ஹஸ்ரங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துபாயில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளிடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இலங்கை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவதற்கு அவரது சிறப்பான ஆட்டம் உதவியது.

வனிந்து ஹஸ்ரங்கா

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி இப்பொழுது ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மேலும், இந்த கோப்பையுடன் சேர்த்து, இலங்கை அணி ஆறாவது முறையாக இக்கோப்பையை வென்றுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வியுடன்தான் இலங்கை தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் அதன் பின்பு ஒரு போட்டியில் கூட இலங்கை அணி தோல்வி அடையவில்லை.

இந்த வெற்றி மூலம் தங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அடைவதற்கான ஒரு வாய்ப்பை இலங்கை அணி கொடுத்துள்ளது. அதுபோக, ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றிலும் சிறப்பாக விளையாட இலங்கை அணிக்கு இதன்மூலம் உந்துதல் கிடைக்கும்.

முகமது ரிஸ்வான் அரைசதம் வீண்

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்குக்கு முகமது ரிஸ்வான் முதுகெலும்பாக இருந்தார்.

நேற்றைய இறுதிப் போட்டியிலும் கூட அரை சதம் அடித்து பாகிஸ்தானின் போராட்டத்தை தொடர்ந்தார். ஆனால் ஹஸ்ரங்க 16வது ஓவரில் மூன்று அதிர்ச்சிகளை பாகிஸ்தானுக்கு கொடுத்து அதன் விதியை மாற்றினார்.

முதலில் குணத்திலக, ரிஸ்வான் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார். மூன்றாவது பந்தில் ஆசிஃப் அலி போல்டானார். ஐந்தாவது பந்தில் குஷ்தில் ஷா அடித்த பந்தை தீக்ஷான கேட்ச் பிடித்தார்.

முகமது ரிஸ்வான்

இதனால் 112 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்கு பாகிஸ்தான் அணி சுருண்டது.

ரிஸ்வான் மிகவும் நிதானமாக பேட்டிங் செய்தது, பாகிஸ்தான் மீது அழுத்தத்தை அதிகரிக்க இலங்கைக்கு உதவியது. கடந்த சில போட்டிகளாகவே பாகிஸ்தான் அணியின் பிரச்னைக்குரிய காலகட்டத்தில் உதவி செய்யும் ஆட்டக்காரராகவே ரிஸ்வான் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

எனினும் இறுதிப்போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்கள் அவரை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை.

ஒவ்வொரு ஓவரிலும் பாகிஸ்தான் எடுக்க வேண்டிய ரன் ரேட் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் எடுத்த முயற்சியின் போது, பாகிஸ்தானின் நவாஸ் மற்றும் ரிஸ்வான் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

அழுத்தத்தில் மதூஷன்

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பிரமோத் மதூஷன் இறுதி போட்டியில் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகி இருந்தார். பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மீது பந்துவீச்சு தாக்குதல் நடத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் அவர் நோபாலுடன் தொடங்கினார்.

ஒரு நோபால், ஏழு வைடு, ஃப்ரீ ஹிட்டில் அடிக்கப்பட்ட ஒரு ரன் என அனாமதேயமாக அவர் ஒன்பது ரன்கள் கொடுத்த பின்னும் முதல் பந்தை வீச காத்திருக்க வேண்டி இருந்தது. மொத்தத்தில், முதல் ஓவரில் மட்டும் அவர் 12 ரன்கள் கொடுத்தார்.

ஆனால், அவர் பின்னர் மீண்டு வந்தார். அவர் வீசிய நான்கு ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

இலங்கையின் சொதப்பல் – பயன்படுத்திக் கொள்ளாத பாகிஸ்தான்

Asia Cup: Sri Lanka Pakistan

முதலில் பேட் செய்த இலங்கைக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்த அணி 58 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் பனுக்கா ராஜபக்ஷ மற்றும் ஹஸ்ரங்க ஆகியோரின் பேட்டிங் நிலைமையை மாற்றியது. ராஜபக்ஷ 6 ஃபோர் மற்றும் 3 சிக்ஸர்கள் அடித்து ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 157.78.

ஹஸ்ரங்க 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இது இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எனும் ஸ்கோரை எட்ட உதவியது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 171.43.

அதேவேளை, பாகிஸ்தானின் பந்துவீச்சும் முதல் 10 ஓவரில் இருந்ததைப் போல அடுத்த 10 ஓவர்களில் இல்லை. இலங்கை பேட்டிங் இறுதியை நெருங்கும்போது ராஜபக்ஷ மற்றும் கருணாரத்ன கூட்டணி 54 ரன்கள் எடுத்து. இது ஏழாம் விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் அடித்த அடி இலங்கை அணி ரன் குவிக்கவும், அடுத்ததாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் 13வது ஓவர் முதல் பாரபட்சமின்றி வெளியேறவும் 2022 ஆசிய கோப்பையை இலங்கையின் பெயரில் எழுதவும் உதவியது.

Previous Story

பசில் பதவி விற்பனை!

Next Story

அமெரிக்க ஓபன்: சாம்பியன்  அல்காரஸ்: 19