ஆசியக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் குறுக்கிட்ட மழை 

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்யத் தொடங்கியதால் ஆட்டம் தொடர்ந்து நடக்குமா என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், லேசான மழைதான் என்பதால் ஆட்டம் தடை படாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆசியக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான்

இதற்கிடையே, போட்டி நடந்துகொண்டிருந்தபோது அரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தின் ‘வெற்றிக்கொடி கட்டு’ பாடல் ஒலித்தது. அதுமட்டுமின்றி, மேலும் சில தமிழ் பாடல்களும் ஒலிக்கப்படுகின்றன.

ஆட்டத்துக்கு இடையே மழை

ஆசியக் கோப்பை இந்தியா பாகிஸ்தான்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின.

அதன்படி சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று விளையாடி வருகின்றன.

பாகிஸ்தான் ஏற்கெனவே தனது முதல் சூப்பர் 4 சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி இருந்தது. எனவே, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந்த அணி எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

மறுபுறம் சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் விளையாடும் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும்.

நான்காவது ஓவர் இறுதியில் இந்தியா 25 ரன்களை எடுத்திருந்த நிலையில், மைதானம் அமைந்துள்ள பகுதியில் மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், அதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லாத காரணத்தால் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இருப்பினும், இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மழை பெய்யத் தொடங்கியதால், ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் அவுட் ஆகியிருந்த நிலையில், தற்போது விராட் கோலி, கே.எல்.ராகுல் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான லீக் ஆட்டம் இலங்கையின் பெல்லகெலேவில் நடைபெற்ற நிலையில் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. மழையால் ஆட்டம் ரத்தானதால் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர்.

எனவே இன்று நடைபெறும் ஆட்டம் ஒருவேளை மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால் ரிசர்வ் தினமாக (Reserve Day) நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

காலியாக இருக்கும் இருக்கைகள்

ஆட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மைதானத்தில் ஏராளமான இருக்கைகள் காலியாகவே உள்ளன. மொத்தம் 35,000 இருக்கைகள் உள்ள நிலையில் 19,000 இருக்கைகள் வரை காலியாக உள்ளன.

இதற்கு டிக்கெட் விலையும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பொதுவாக இலங்கை மதிப்பில் 500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும். ஆனால், இந்த போட்டிக்கு குறைந்தபட்சமாக 3000 இலங்கை ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய கடந்த ஆட்டத்திற்கு இலங்கை மதிப்பில் 9000 ரூபாய்க்கு முதலில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. பின்னர் இது 1,900 ரூபாயாக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்டத்திற்கு விலை குறைக்கப்படவில்லை.

அதேநேரம் மைதானத்தின் முன்பு ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்க காத்திருந்தும் தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

பிபிசியிடம் பேசிய கிரிக்கெட் ரசிகர் ஒருவர், நான் 200 கி.மீ. தொலைவில் இருந்து இந்தப் போட்டியைக் காண வந்திருக்கிறேன். டிக்கெட் விலையை அதிகமாகக் கூறுகின்றனர். அப்படியும் டிக்கெட்டை வாங்க முடியவில்லை. ஒருவேளை இலங்கை கிரிக்கெட் வாரியம் டிக்கெட்டை அடிக்கவில்லையா என்று தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலமே டிக்கெட்டை பெற முடிவதாகவும் நேரடியாகச் சென்றால் டிக்கெட் கிடைப்பது இல்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் டிக்கெட் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 3000 இலங்கை ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டின் விலை சற்று முன்பு முதல் 480 மற்றும் 960 இலங்கை ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Previous Story

சீனாவுக்கு  ஆப்பு

Next Story

'கோட்டா-பிள்ளை' அமெரிக்கா தூதுவராலயம் அதிரடி