நடிகர்கள்
சாம் ஒர்திங்டன், ஜோ சல்தானா, சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், க்ளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர். ஒளிப்பதிவு
ரஸ்ஸல் கார்ப்பன்டர்
இசை
சிமோன் ஃப்ராங்ளன்;
கதை இயக்கம்
ஜேம்ஸ் கேமரான்.

2009ஆம் ஆண்டில் வெளிவந்த அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் இது. முதல் பாகம் வெற்றியடைந்ததும் அடுத்த பாகத்தை 2014ஆம் ஆண்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், மேலும் சில பாகங்களை உருவாக்க நினைத்ததாலும், புதிய தொழில்நுட்பம் தேவைப்பட்டதாலும் முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாம் பாகம் வெளியாயிருக்கிறது. முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், உற்சாகம் குறையாமல் இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இப்போது உலகம் முழுவதும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் தற்போது வெளியாகியிருக்கிறது. உலகில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.
முதல் பாகம், பண்டோராவின் வனப் பகுதியில் நடந்தது எனில், இந்த இரண்டாவது பாகம் கடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கதை இதுதான்
மனிதனாக இருந்து நவியாக மாறிய ஜாக் சல்லியும் நவியின் இளவரசி நேத்ரியும் சேர்ந்து 4 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆகாயவாசிகள் Vs மனிதர்கள்
அவர்களோடு மனிதக் குழந்தையான ஸ்பைடரும் ஒன்றாக வாழ்கிறான். ஆனால், பூமியில் வசிக்கும் மனிதர்கள் இவர்களை நிம்மதியாக இருக்க விடுவதில்லை.
மீண்டும் பண்டோராவுக்கு வரும் அவர்கள், ஜாக்கை பிடித்து ஒழிக்க நினைக்கிறார்கள். இதனால், அங்கிருந்து ஜாக்கின் குடும்பம் புறப்பட்டு கடல் பிரதேசத்தில் வாழும் மெட்கயினாவுக்கு வருகிறது.
புதிய சூழலோடு அவர்கள் பொருந்த நினைக்கையில், அங்கேயும் வந்துவிடுகிறார்கள் ஆகாயவாசிகளான மனிதர்கள். அவர்களை வென்று, நவி குடும்பத்தினர் நிம்மதியாக வசித்தார்களா என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாகக் கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், இதற்கு 4.5 நட்சத்திரங்களைக் கொடுத்திருக்கிறது. இந்த வருடத்தின் மிகச் சிறந்த சினிமா அனுபவம் இந்தப் படம் என்கிறது அந்த நாளிதழ்.
“இந்த முறை கதை பசுமையான காடுகளில் இருந்து பவளப்பாறைகள் நிரம்பிய கடலுக்கு நகர்ந்திருக்கிறது. ஆனாலும் முந்தைய படத்தைப் போலவே மெய்மறக்க வைக்கிறது. அந்தக் கடல் மனிதர்களின் உலகில் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீங்கள் மூழ்கிவிடுவீர்கள்.
இந்த இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன், உணர்ச்சிகரமான காட்சிகள் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அடிப்படையில் பார்த்தால் இந்தக் கதை ஒன்றும் புதுமையானதல்ல. ஆனால், கதை சொல்லப்பட்ட விதமும் காட்சி ரீதியான அனுபவமும் இதனை ஒரு காவியத் திரைப்படமாக்கியிருக்கின்றன.

“அவதார் உலகுக்கு அழைத்துச் செல்லும் படம்”
இந்தப் படத்திற்குள் மூழ்கியிருக்கும்போது, நீங்கள் நிஜ உலகிற்குத் திரும்பவே விரும்ப மாட்டீர்கள்” என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.
அவதாரின் முதல் பாகம், அதனுடைய கதை – திரைக்கதை, காட்சி அனுபவம் ஆகியவற்றுக்காகப் பேசப்பட்டாலும், அதிலிருந்த அரசியல் குறியீடுகளும் சூழல்சார்ந்த கருத்துகளும் பெரிதும் கவனிக்கப்பட்டன. இந்தப் படமும் அதே பாணியில் தொடர்வதைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்.
“மாயமான, கற்பனை உலகில் கதை நடந்தாலும், சமூக – அரசியல் கருத்துகளும் படத்தில் இல்லாமல் இல்லை. இனம், நாகரீகம் குறித்த விவாதங்களை எழுப்பும் இந்தக் கதை, ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தையும் முன்வைக்கிறது. அதே நேரம் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்தும் பேசுகிறது.
பெற்றோர் குழந்தைகளைக் காப்பாற்றும் அதே நேரத்தில் குழந்தைகளும் பெற்றோரைக் காப்பாற்றும் உச்சகட்ட காட்சி அட்டகாசமாக இருக்கிறது.
13 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த முதல்பாகம், விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுக்கு ஒரு உயர் தரத்தை நிறுவியது. இந்தப் படம் ஒரு அடி அதனைத் தாண்டிச் சென்றிருக்கிறது.
முப்பரிமாணம் என்பதை, இன்னொரு வித்தையாகப் பயன்படுத்தாமல் பார்வையாளர்களின் அனுபவத்தை அதிகரிக்கப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்த வருடத்தின் மிகச் சிறந்த சினிமா அனுபவம் இந்தப் படம்” என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

இந்தியா டுடே வார இதழும் இந்தப் படத்தை வெகுவாகப் புகழ்ந்திருக்கிறது. நான்கு நடசத்திரங்களை இந்தப் படத்திற்கு வழங்கியிருக்கிறது.
“அவதாரின் முதலாவது பாகம் காடுகளைப் பாதுகாப்பது பற்றியும் மனிதனின் பேராசை எப்படி நமது கிரகத்தை அழித்து வருகிறது என்பது பற்றியும் பேசியது. இரண்டாவது படம் கடலைப் பற்றியும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றியும் பேசுகிறது.
இரண்டு படங்களுமே, ஒன்றோடு ஒன்று ஆழமான உறவைக் கொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் வரும் காட்சிகளும் பாத்திரங்களும் நம் கிரகம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து உபதேசிக்காத தொனியில் பேசுகின்றன.
படம் துவங்கும் முதல் காட்சியிலிருந்தே நாம் உள்ளே மூழ்கிப் போகிறோம். அவதார் பட வரிசையில் இந்தப் படத்தைத்தான் முதலில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால்கூட, முப்பரிமாணத் தொழில்நுட்பத்தை கேமரான் பயன்படுத்தியிருக்கும் விதமும் அவர் உருவாக்கியிருக்கும் காட்சி அற்புதங்களும் அவர் காட்டும் காடுகளில் வரும் தாவரங்களும் கடல்களில் தெரியும் மீன்களும் பவளப் பாறைகளும் அதன் வண்ணங்களும் உங்களை மயக்கி உள்ளே இழுத்துவிடும்” என்கிறது இந்தியா டுடேவின் விமர்சனம்.

ஆனால், அவதாரின் இரண்டாம் பாகத்தைப் பார்த்த சில ரசிகர்கள் படம் வெகு நீளமாக இருப்பதாகவும் சில சமயங்களில் அலுப்பூட்டுவதாகவும் சொல்கிறார்கள். இந்தியா டுடே இதழின் விமர்சனமும் அதனைச் சுட்டிக்காட்டுகிறது.
“முதல் பாதியில் சற்று தடுமாற்றம் இருக்கிறது. படத்தின் இந்தப் பகுதியில் பல புதிய, பழைய பாத்திரங்களை அவர் அறிமுகப்படுத்துவதால், யார் என்ன செய்கிறார்கள் என்ற குழப்பம் ஏற்படுகிறது. சில காட்சிகள் மிக நீளமாக இருப்பதால், காட்சிகளின் அழகைக் காட்டுவதற்காகவே அவை வைக்கப்பட்டதைப் போல இருக்கின்றன” என்கிறது இந்தியா டுடே.
இருந்தபோதும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதையும் இந்தியா டுடே விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது.
“மேலே குறிப்பிட்ட தடைகளைத் தாண்டி, இரண்டாவது பாகம் வேகமெடுக்கிறது. பண்டோராவின் உள்ளே உங்களை இழுத்துக் கொள்கிறது. கேமரானின் மிகப் பெரிய பலமே, நீங்கள் விரும்பக்கூடிய பாத்திரங்களை உருவாக்குவதுதான். டைட்டானிக் திரைப்படத்தில் பனிமலை கப்பலோடு மோதும் காட்சியைவிட, ஜாக்கிற்கும் ரோஸிற்கும் இடையிலான காதல்தான் ரசிகர்களை ஈர்த்தது. அவதார் படத்திலும் இதுபோன்ற காட்சிகளே ஜாக் சல்லியின் குடும்பத்தினரோடு ஒன்ற வைக்கிறது.
சினிமா வரலாற்றின் மிகப் பெரிய திரைப்படத்திற்கு, மிகச் சரியான இரண்டாவது பாகம். பார்க்கத் தவறவிடாதீர்கள்” என்கிறது இந்தியா டுடே வார இதழின் இணைய தளம்.

இந்து தமிழ் திசையின் விமர்சனத்தைப் பொறுத்தவரை, படம் குறித்து பெரும் பாராட்டுகளை முன்வைத்திருந்தாலும் சில விமர்சனங்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
“‘அவதார்’ படத்தின் முதல் பாகம் ஒரு புதிய உலகை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் கூட்டியிருந்தது. அதன் நீட்சியாக வந்துள்ள இந்த இரண்டாம் பாகத்தில் எந்தவித புதுமையும் நுழைக்கப்படாமல் திரைக்கதையில் ஆங்காங்கே கற்பனை வறட்சி மேலிடுகிறது. காட்சிகளாக பிரமாண்டமாக விரியும் இந்த படத்தில், கதையில் இருந்து வெளிப்படும் சுவாரஸ்யம் சொற்பமே.
கனிம சுரண்டலுக்கு எதிராக நிற்கும் வேற்று கிரகவாசிகளின் போராட்டம், அவர்களது உறுதி என முதல் பாகத்திலிருந்த கதையின் அடர்த்தி, இரண்டாம் பாகத்தில் வெறும் குடும்பக் கதையாக சுருண்டு, வறண்டிருப்பது ஏமாற்றம். வெறுமனே நாயகன் ஜேக் சல்லி தனது குடும்பத்தை எதிரிகளிலிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டும், சென்டிமென்ட் காட்சிகள் வழியே உரையாடிக் கொண்டுமிருப்பது சோர்வளிக்கிறது” என்கிறது இந்து தமிழ் திசை.
இருந்தபோதும் அட்டகாசமான காட்சி அனுபவத்தை வழங்கி, ‘குடும்பங்கள் கொண்டாடும்’ ஹாலிவுட் திரைப்படம் என்றும் கூறியிருக்கிறது இந்து தமிழ் திசை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அவதாரின் முதல் பாகத்திலிருந்து காட்சி அனுபவத்தைவிட, இந்தப் பாகம் சிறப்பான காட்சி அனுபவத்தைத் தந்தாலும், படத்தின் நீளமும் கதையில் போதிய ஆழமின்மையும் சோர்வளிப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன.