அலிகர் கல்லூரி வளாகத்தில் தொழுகை: பேராசிரியர் மீது நடவடிக்கை!

வட இந்தியாவில் புகழ்பெற்ற நகரமான அலிகரில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர், கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளியில் தொழுகை செய்யும் வீடியோ வெளியானதை அடுத்து, நிர்வாகம் அவரை விடுப்பில் அனுப்பியுள்ளது.

அலிகர் - தொழுகை

ஸ்ரீ வர்ஷ்ணோய் கல்லூரி வளாகத்தில் உள்ள பூங்காவில் பேராசிரியர் எஸ் கே காலித் தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வெளியானதாக நிர்வாகத்தை மேற்கோள் காட்டி பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

வீடியோ வைரலானவுடன், பாரதிய ஜனதா மற்றும் யுவ மோர்ச்சா உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் பேராசிரியருக்கும், கல்லூரிக்கும் எதிராக போராட்டம் நடத்தத் தொடங்கின.

தொழுகை நடத்துவதற்கு எதிராக சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. மேலும் அந்தப் பேராசிரியர் ஒரு மாதம் விடுப்பில் அனுப்பப்பட்டதையும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், அந்த வீடியோ கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் ஏ.கே.குப்தா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், சம்பவத்தின் போது, தான் விடுப்பில் இருந்ததாக தெரிவித்தார். மேலும் அவர், “அப்போது அவர் விடுப்பில் இருந்தேன், திரும்பி வந்ததும் விசாரித்தேன். அவசரத்தில் இருந்ததால் பூங்காவில் தொழுகை செய்ததாகப் பேராசிரியர் கூறினார். விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குழுவின் முடிவுக்கேற்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சர்ச்சைக்குள்ளான நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இந்த வாரம் சமர்ப்பிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மன்னிப்பு வழங்கப்படுமா இல்லையா என்பது விசாரணைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்,” என்றார் குப்தா.

அலிகர் - தொழுகை

அலிகர் வலதுசாரிக் குழுக்கள், கல்லூரி வளாகத்தை மதச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றன.

இது குறித்து டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரும் கட்டுரையாளருமான அபய் குமாரிடம் பிபிசி பேசியபோது, ​​மதச்சார்பற்ற நாட்டில் சிறுபான்மைச் சமூகத்தை இப்படிக் குறிவைப்பது வருத்தமளிக்கும் சம்பவம் என்றார்.

“அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டுச் சுதந்திரம் வழங்குவது மட்டுமின்றி, அவர்களின் மதத்தைப் பரப்பவும் அனுமதிப்பதால், இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகும்” என்றார்.

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக, சில வகுப்புவாதிகள் அனைத்து விதமான தந்திரங்களையும் கடைப்பிடித்து வருகின்றனர், மேலும் அவர்களின் செயல்கள் குறித்த அரசின் மௌனத்தால் இன்னும் ஊக்கம் பெறுகின்றனர்.

இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி தன்னை ஒரு இந்துவாகக் காட்டிக்கொள்ள முடிந்தது. அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்ததா? மற்றவர்கள் அவ்வாறு செய்வதிலிருந்து எப்படித் தடுக்க முடியும்?” என்றார்.

ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தின் மோதல் ஆய்வுத் துறை பேராசிரியர் அசோக் சவாய், இந்தச் சம்பவம் குறித்த தனது ட்வீட்டில், “வலதுசாரி இந்து மதவெறி அனைத்து எல்லைகளையும் தாண்டியுள்ளது” என்று எழுதியுள்ளார்.

அலிகர் - தொழுகை

அதேசமயம், கல்லூரி நிர்வாகம் வகுப்புவாதிகளுக்கு அடிபணிந்துவிட்டதால், வலதுசாரி வகுப்புவாதிகளைக் கண்டிப்பது போல், கல்லூரி நிர்வாகத்தையும் கண்டிப்பதாக அபய் குமார் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியைப் பகிர்ந்த ஹரிணி கிளிமர் என்ற பயனர், “அனைவரும் சரஸ்வதியை வணங்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோரிக்கை உள்ள நிலையில், அலிகரைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் பிரார்த்தனைக்காக விடுப்பில் அனுப்பப்பட்டதுடன், அவர் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ” என்று ட்வீட் செய்துள்ளார்.

மக்களின் இரு வேறு கருத்துகள்

இந்தியாவின் அரசுப் பள்ளிகளில் இந்துக் கடவுளான சரஸ்வதியை வழிபடுவது வழக்கம் என்று பலர் வருத்தமும் ஆச்சரியமும் தெரிவித்து எழுதியுள்ளனர்.

ஷியாம் திவாரி என்ற பயனர், “ஏபிவிபி தலைவர் கபில் சவுத்ரி, காந்தி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், மேலும் கல்லூரியில் பிரார்த்தனை செய்வதன் மூலம் இஸ்லாமியமயமாக்கல் செய்யப்படுகிறது, இன்று இது தடுக்கப்படவில்லையெனில், நாளை வகுப்பிலேயே தொழுகை செய்வார்கள்,” என்று எழுதியுள்ளார்.

அகமது கபீர் என்ற பயனர், “கல்லூரி வளாகத்தில் நமாஸ் படிப்பது குற்றம் ஆனால் கல்லூரி கோவிலில் பூஜை ஆரத்தி செய்வது அனைவருக்கும் ஒரு ஆசீர்வாதம்… அரசியலமைப்பின் 25-28 வது பிரிவு அனைத்து குடிமக்களுக்கும் அவரவர் விருப்பப்படி மதத்தை கடைப்பிடிக்கவும் பின்பற்றவும் அதிகாரம் அளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் உள்ள கல்லூரி ஒன்றில் உருது ஆசிரியரும் பிரபல உருது பத்திரிக்கையாளருமான ஜைன் ஷம்சி பிபிசியிடம் பேசுகையில், முஸ்லிம்கள் இதற்காக சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் அல்லது முஸ்லிம்களின் பிரதிநிதிகள் பிரதமரை சந்திக்க வேண்டும், இதுபற்றி அவரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

“முஸ்லிம்களின் நிலைமை மோசமாக உள்ளது, எனவே அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களை மதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று அவர்கள் பேசினாலும், அவர்களே அதைச் செய்கிறார்கள், 2% பேர் இப்படிப் பட்ட செயல்களில் ஈடுபட்டாலும் அரசின் மௌனம் அவர்களை 98% ஆக்குகிறது.

சில சமயம் மாட்டிறைச்சி என்ற பெயராலும், சில சமயம் லவ் ஜிஹாத் என்ற பெயராலும், சில சமயம் சந்தேகத்தின் பேரிலும் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டாலும், தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியும் பிரச்சினை இன்னும் அப்படியே உள்ளது.” என்றார் அவர்.

Previous Story

சங்ககாரா விமர்சனம்: அஸ்வின் நறுக் பதில்

Next Story

நாளை முதல் வெள்ளிக்கிழமை அரச அலுவலகங்கள் கிடையாது!