அரபாத் வரலாறு

 1929-2004

யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். 1929-ஆம் ஆண்டு பிறந்தார். எகிப்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோதே, அரபாத், அரசியல் மற்றும் சமூக ஆர்வலராகிவிட்டார். 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது, அரபாத்தின் தந்தையார் கொல்லப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் எகிப்தியப் பாலைவனங்களில் கைவிட்ட ஆயுதங்களைத் தேடி எடுத்து, ராணுவப் பயிற்சி மேற்கொண்ட அரபாத், பிறகு, எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று, சூயஸ் கால்வாய்ப் போர் மற்றும் அதற்குப் பிறகு நடந்த அரபு-இஸ்ரேல் போர் ஆகியவற்றில் களத்தில் செயல்பட்டார். இக்கால கட்டத்தில்தான், அதாவது 1958-ஆம் ஆண்டு, அல்-பத்தா என்ற அரசியல் அமைப்பையும் நிறுவினார்.

1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்தான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அரபாத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது. இதை அடுத்து, அரபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக ஆனார்.

1970-ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டிலிருந்து அரபாத்தும் பாலஸ்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலஸ்தீனப் போராளிகள் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைககளில் ஈடுபட்ட போதும், அரபாத் அவற்றை விவாதிக்க விரும்பவில்லை, மாறாக 1974-ஆம் ஆண்டு, பரபரப்பான சூழ்நிலையில், ஐநா மன்றப் பொதுச்சபையில் நுழைந்து அவர் உரையாற்றினார்.

தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன, எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று அரபாத் அன்று ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது 1982-ஆம் ஆண்டு, அப்போது இஸ்ரேலிய ராணுவ அமைச்சராக இருந்த ஷரோன், லெபனானில் இருந்த பாலஸ்தீன நிலைகள், அகதி முகாம்கள்மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து, அரபாத், லெபனான் நாட்டிலிருந்து வெளியேறி த்யூனிசியா நாட்டுக்குச் சென்று தஞ்சம் பெற்று வாழ நேர்ந்தது.

ஆனால், 1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலஸ்தீனப் பகுதிகளில் “இன்டிபாடா” என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப்போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.

1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வைத்து இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ரபினுடன் அரபாத் கைகுலுக்கினார்.சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசை, பாலஸ்தீன விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள்,எருசலேம் நகரின் எதிர்கால நிலை, பாலஸ்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் கிடப்பில் போடப்பட்டன.

சமரச உடன்பாட்டை அடுத்து, அரபாத், ரபின், இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரஸ், ஆகியோருக்குக் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், சமரச உடன்பாடு, முறையாகச் செயல்படவில்லை. மேற்குக் கரை ரமல்லா திரும்பி பாலஸ்தீன நிர்வாக அமைப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த அரபாத், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த வில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலஸ்தீனர்களின் போராட்டம் தொடர்ந்ததை அடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக, அரபாத்தின் ரமல்லா வளாகத்தை இஸ்ரேல் முற்றுகை இட்டிருந்தது. பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வற்ற நிலைதான் இன்னும்.

பாலஸ்தீனர்களின் பிரதான தலைவராக இருந்து வந்த யாசர் அரபாத் மீது, இஸ்ரேலியத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவிர, வேறு பல குற்றச்சாட்டுகளும் இருந்துவந்தன. முக்கியமாக, பாலஸ்தீன நிர்வாக அமைப்பின் மீது சர்வாதிகாரம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அரபாத்தின் வாழ்க்கை, பல காலம், நாடுவிட்டு நாடுசென்று வாழ்வதாகவே அமைந்தது. ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளில் வாழ்ந்தபோது, பல முறை இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் தீரமிக்க செயல்களில் ஈடுபட்டவர் அரபாத் என்கிறார்கள் அவருடன் இருந்த
பாலஸ்தீனத் தலைவர்கள். 1992-ஆம் ஆண்டு லிபியா நாட்டில் அரபாத் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது, அப்போது பதினைந்து மணி நேர காத்திருப்புக்குப் பின் அரபாத் மீட்கப்பட்டார். தம் வாழ்க்கையின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய முற்றுகையில் கழிக்க நேரிட்டதும் முக்கியம்.

யாசர் அரபாத், ஒரு தீவிரப் போராளியாக இருந்த போது, தம்முடைய நடமாட்டங்களை ரகசியமாகவே வைத்திருந்தார். 1990-ஆம் ஆண்டு இவருக்குத் திருமணமான செய்தி கூட, ஓராண்டு ரகசியமாகத் தான் இருந்தது. சுஹா என்ற பாலஸ்தீனப் பெண்மணியை அரபாத் மணந்திருந்தார்.
இவர்களுக்கு, ஸஹ்வா என்ற மகளும் உண்டு.அரபாத் போன்று உலகறிந்த பாலஸ்தீனத் தலைவர்கள் இல்லாத நிலையில் அவருடைய மரணத்தை அடுத்து, பாலஸ்தீனப் பிரச்னையின் ஒரு பெரும் சகாப்தம் நிறைவடைந்து.

Previous Story

பைடன் - புடின் பேச்சு தோல்வி!

Next Story

கோர விபத்து உயிரிழந்த 53பேர்!