நஜீப் பின் கபூர்
நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல்
எந்த ஒரு நாடாக இருந்தாலும் அங்கு ஒரு அரசாங்கம் இருக்கும் அதற்கென ஆட்சியாளர்கள் இருப்பார்கள். அத்துடன் அரச அதிகாரிகள் நிருவாகத்தை முன்னெடுத்துச் செல்ல இருப்பார்கள். அரச சட்டத்தையும் ஒழுங்கையும் கவனித்துக் கொள்ள பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் இருக்கும். நெருக்கடிகள் சிக்கல்கள் என்று வரும் போது அரசியல் யாப்பு நீதித்துயை என்பன செயல்படும். அதே நேரம் மாற்றுக் கருத்துடைய அரசியல் செயல்பாடுகள் என்ற ஒரு தரப்பும் நாட்டில் இருக்கும்.
இது பொதுவாக எதிரணி என்ற பெயரில் இயங்கும். அவர்கள் அரசியல் செயல்பாடுகள் தொடர்ப்பில் தனது கருத்துக்களையும் பார்வையையும் முன்வைப்பார்கள். இது ஜனநாயகத்துக்கு நல்ல பாதுகாப்பு கவசமாக நாம் பார்க்க முடியும். பொது மக்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவாகவும் எதிரணிகளுக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். நமது நாட்டில் இன்று இவை எப்படி செயலாற்றுகின்றன என்பது பற்றி இந்த வாரம் போசுவோம்.
கடந்த கால அரசுகளும் தற்போதய அரசு என்ற விடயங்கள் பற்றிய இப்போது பார்ப்போம். சுதந்திரத்துக்குப் பின்னர் அதாவது 1948களுக்கு பின்னர் 2025 பொதுத் தேர்தல் வரை இந்த நாட்டில் ஐதேக. மற்றும் சுதந்திரக் கட்சி என்பனவே அதிக காலம் நாட்டை ஆட்சி செய்து வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்குப் பின்னர் 2016ல் பசில் ராஜபக்ஸவால் ஆரம்பிக்கப்பட்ட பொதுசன ஐக்கிய முன்னணி மிகச் சிறிய ஒரு காலம் ஆளும் கட்சியாக இருந்து வந்துள்ளது.

இவர்கள் பெரும்பாலும் சுதந்திரக் கட்சியிலிருந்து பிரித்து ராஜபக்ஸாக்கள் தலைமையில் இந்தக் கட்சியை முன்னெடுத்து வந்திருக்கின்றனர். எனவே எழுபத்தி ஆறு வருடங்கள் -76 வலதுசாரிகள் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். இதில் ஐதேக. வலதுசாரிகளாகவும் சுதந்திரக் கட்சி மொன்போக்கு வலதுசாரிகளாக இருந்து வந்துள்ளனர்.
இந்த பின்னணியில் கடந்த எழுபத்தி ஆறு வருடங்களும் ஆட்சியாளர்களாக இருந்து வந்தவர்கள் அனேகமாக வாரிசு அரசியல்வாதிகளாகவே இருந்து வந்துள்ளனர். பிரதான தலைவர்கள் முதல் பாராளுமன்ற மாகாணசபைகளிலும் இவர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிகின்றது.
இது கீழ்மட்ட மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையைத் தோற்று வித்திருந்தது. இதற்கு எதிராக இளைஞர்கள் 1971ல் ஆயுப் போராட்டங்களில் இறங்கி அதன் மூலம் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் 1987-1989 களிலும் நாட்டில் அமைதியின்மை தோன்றி அதிலும் பல்லாயிரம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இது தவிர வடக்குக் கிழக்கிலும் தமிழ் தரப்பிலும் தனி நாட்டுக்கான ஒரு ஆயுதப் போராட்டம் துவங்கியது. இதுவும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வரை நீடித்தது. அதிலும் இலட்சக் கணக்கானவர்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டனர். எனவே தெற்கு ஆட்சியாளர்களில் மீது வடக்கு கிழக்கு சிறுபான்மை சமூகத்தினரும் திருப்தி இல்லாத ஒரு நிலையில்தான் இருந்து வந்திருக்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நல்லாட்சி நாட்டில் இருந்திருந்தால் இப்படி மக்கள் அரசுடன் மோதி இரத்தம் சிந்தி இருக்க வேண்டி வந்திருக்க மாட்டாது. எனவே சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் அதிகாரத்தில் இருந்தவர்கள் தொடர்ப்பில் திருப்தி இல்லாத ஒரு நிலை பெரும்பான்மை இனத்தில் மட்டுமல்ல சிறுபான்மை இனங்களிடத்திலும் இருந்து வந்திருக்கின்றது.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் ஒரு பிரபுத்துவ ஆட்சி முறையும் அடக்குமுறையும் தான் இருந்து வந்திருக்கின்றது. என்றாலும் அதிகாரத்துக்கு வந்தவர்கள் ஜனநாயக முறையில் பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பதனையும் இங்கு சுட்டிக்காட் வேண்டும். இதனால்தான் தெற்கு சிங்கள இளைஞர்களும் வடக்குக் கிழக்கு தமிழ் இளைஞர்களும் பதவியில் இருந்த அரசுகளுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்திப் போராட வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை நாட்டில் தோன்றி இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் தெற்கில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த வலதுசாரிகளுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்கியவர்கள் ஜனநாயகவழிக்கு வந்து இன்று அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சியாளர்களாக கதிரைகளில் அமர்ந்திருக்கின்றனர். அதுவும் தனித்துக் களமிறங்கி அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளைக் கொடுத்து இன்று மக்கள் அதிகாரத்தில் அமர்த்தி இருக்கின்றார்கள்.
பொதுவாக அவதானிக்கின்ற போது எழுபத்தி ஆறு வருடங்ளாக அதிகாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் போல இன்று எதிரணியில் இருக்கின்றனர். வேடிக்கை என்னவென்றால் ஏழு தசப்தங்கள் அதிகாரத்தில் இருந்த ஐதேக. இன்று காணாhமல் போய் இருக்கின்றது. சுதந்திரக் கட்சி மற்றும் மொட்டுக் கட்சிகளின் நிலையும் இதுதான். இவர்களின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கைகூட விரல் விட்டு எண்ணுகின்ற அளவில்தான் இருந்து வருகின்றது.
ரணிலின் பிரபுத்துவத் தலைமைத்துவத்துடன் ஒத்துப் போக முடியாது என்பதால் அதிலிருந்து வெளியேறிய சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதுக் கட்சி துவங்கி இன்று எதிர்க் கட்சியில் 40 உறுப்பினர்களுடன் அமர்ந்திருக்கின்றார். அந்தக் குழுகூட ஒரு கூட்டணி. சஜித் கூட வாரிசு அடிப்படையில் அரசியலுக்கு வந்த ஒருவர்தான் என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆளும் தரப்பில் இருக்கின்றவர்கள் அனேகமாக ஜேபியின் செல்வாக்கான தலைவர்களும். பிற்காலத்தில் அவர்கள் தோற்றுவித்தவர்களும் தான் என்பிபி.யில் இருக்கின்றார்கள். எனவே தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் அனேகமானவர்கள் மக்களுக்கு பெரியளவில் பரீட்சியமானவர்களும் அல்ல. பதவியில் இருந்த ராஜபக்ஸாக்கள் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பும் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்த ரணில் தலைமையிலான அணியையும் மக்கள் துடைத்தெரிந்திருப்பதைத்தான் பொதுத் தேர்தல் முடிவுகள் காட்சிப்படுத்தி இருந்தது.

தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற ஆளும் தரப்பு உறுப்பினர்களில் கனிசமானவர்கள் ஜேவிபி. முக்கியஸ்தர்கள். அடுத்து இவர்கள் பிற்காலத்தில் துவங்கிய என்பிபி. அணியில் இணைந்து கொண்டவர்கள். இவர்களில் கனிசமானவர்கள் பொது மக்களுக்குப் பரிசதமானவர்களும் அல்ல. இந்த என்பிபி. மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுத்தது.
என்பிபி. மக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் சொன்ன வேகத்தில் நிறைவேற்றுவதில் நிறையவே சிக்கல்கள் இருந்து வருகின்றன. அப்படியான சந்தர்ப்பத்தில்தான் எங்கே சொன்னபடி கள்வர்களைப் பிடித்து விட்டீர்களா சிறையில் தள்ளிவிடீர்களா என்றெல்லாம் இன்று எதிரணியில் இருந்தவர்கள் கேள்வி எழுப்பி ஆளும் தரப்பை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

இதற்குப் பதில் கொடுத்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நல்லது ஆனால் உங்கள் கேள்விகளுக்குப் பதில் வரும் போது கதற வேண்டாம் என்றும் இவர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதி சொன்னபடி ஒவ்வொன்றாக நடக்கின்ற போது அப்படி கிண்டல் பண்ணியவர்கள் இன்று கதறுகின்ற காட்சிகளையும் நாம் தினந்தேறும் இப்போது பார்த்து வருகின்றோம்.
அதே நேரம் கடந்த ஆட்சிகாலத்தில் முக்கிய பதவிகளில் இருந்த அதிகாரிகளில் கனிசமானவர்கள் இந்த மோசடிகள் ஊழல்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற வேகத்தில் இதன் இலக்குகளை அடைவதில் சிக்கல்கள் தாமதங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.
இன்று இந்த அரசின் நடவடிக்கைகளில் குறிப்பாக ஊழல் மோசடி கொள்ளை கொலை போன்ற கடந்த ஆட்சி கால சம்பவங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது ராஜபக்ஸாக்கள் ரணில் மட்டுமல்லாது சஜித்தும் கூட்டணியில் இணைகின்ற முயற்சிகளையும் நாம் பார்க்க முடிகின்றது. அத்துடன் தித்வா, ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் போர் அதனால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்களை ஏதோ அரசின் கணக்கில் வரவு வைக்கின்ற ஒரு முயற்சியிலும் இந்த எதிரணி அரசியல்வாதிகள் ஒத்த கருத்துடன் இருக்கின்றார்கள்.
அரசாங்கத்தினதும் ஆளும் கட்சியினதும் அரசியல் செயல்பாடுகளைக் கொச்சசைப் படுத்துவதற்காக சில ஊடகங்களை எதிரணியினர் கூலிக்கு அமர்த்தி அதனுடாக அரசுக்கும் அந்தக் கட்சிக்கும் இருக்கின்ற செல்வாக்கை மட்டுப்படுத்தும் ஒரு முயற்சியும் இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட ஒரு செய்தி கடந்த வாரம் அந்த ஊடகங்கள் சந்தைப்படுத்தி இருந்தன. அது சில நிமிடங்கள் கூட உயிர் வாழவில்லை.

பெலவத்தையில் ஜேவிபி செயலாளர் தாக்கப்பட்டு பற்கள் கூட உடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு செய்தியும் அதற்குப் பின்னர் மற்றுமொரு தினத்தில் பெலவத்தையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் செயலாளர் டில்வின் சில்வாவும் அமைச்சர் லால் காந்தவும் மோதிக் கொண்டு தனிப்பட்ட வாழ்கை தொடர்பாக பேசிக் கொண்டார்கள் என்ற ஒரு செய்தி, இந்த இரண்டு செய்திகளும் கூலிக்கு அமர்த்தப்பட்ட சமூக ஊடகங்கள் பார்த்தை வேலை.
ஆனால் சில நிமிடங்களில் அந்த செய்திகள் அவர்களின் கற்பனையும் விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் என்று உறுதியபாது. இப்படியான அப்பட்டமான பொய்களை சந்தைப்படுத்தியதற்காக அந்த ஊடகங்கள் அதனை ஒரு அவமானமாகவும் கருதுவதாக இல்லை. இப்படியான செய்திகள் மூலம் அரசை வீழ்த்த எடுக்கும் முயறச்சிகள் வெற்றி பெறப்போவதில்லை என்பது இப்போது உறுதியாகி இருக்கின்றது.
எனவே இன்று என்பிபி. அரசு மிகவும் வலுவாக இருக்கின்றது. ஆனாலும் நாம் முன்பு சொன்னது போல தித்வா பேரிடர் மற்றும் ஈhரன்-அமெரிக்க நெருக்கடி உலக நாடுகளைப் பாதித்தது போல நாம்மையும் பாதித்திருக்கின்றது. இது இந்த அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி இருக்கின்றது. நமது அவதானப்படி இதனைப் பெரும்பாலனா மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே பொதுமக்களை வீதிக்கு இறக்கி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிரணியினர் எடுக்கின்ற எந்த முயற்சியும் எந்தத்தாக்குதல்களையும் ஏற்படுத்தப்போவதில்லை..இதனை எதிரணியினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் அரசுக்கு எதிராகவும் என்பிபி.க்கு எதிராகவும் மேற்கொள்ளும் முயற்சிகளை நாம் விமர்சிக்க முடியாது. குடிமக்கள்தான் அது பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அதே நேரம் எதிர்க் கட்சிகள் நாம் வழக்கமாகக் குற்றம்சாட்டுவது போல மிகவும் பலயீனமான நிலையில் இருந்து வருகின்றது. இவர்கள் குறிப்பாக சஜித் மற்றும் நாமல் தரப்பினர் அல்லது ஐமச-மொட்டு இரண்டு அணிகளும் அரசியல் பொது வேலைத் திட்டத்தை வடிவமைத்துக் கொண்டு அரசுக்கு எதிரான ஒரு பொது வேலைத் திட்டமொன்றை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். தேர்தல்களைச் சந்தப்பது பற்றி பின்னர் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் சஜத்தும் நாமலும் இப்படியான ஒரு கூட்டணிக்கு வருவதில் நிறையவே சிக்கல்கள் இருந்து வருகின்றன.
அதே நேரம் ரணிலின் ஐதேக. மற்றும் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியும் இன்று சில்லரைகள் என்ற நிலையில் இருப்பதால் இலங்கை அரசியலில் அதன் தாக்கம் இப்போது மக்கள் மத்தியில் எடுபடாமல் இருக்கின்றது.
அதனால்தான் வீரவன்ச கம்மன்பில் கோட்டாவின் முன்னாள் செயலாளர் சுவிஸ்வர போன்றவர்கள் தனி நபர்களாக விரல் விட்டு எண்ணக் கூடிய தமது கையாட்களை அழைத்துக் கொண்டு போய் ஆங்காங்கே போரட்டங்களை நடத்தி ஊடகங்களில் தெருக் கூத்துக்களை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள்.
இதனை மக்கள் ஒரு நகைச்சுவையாகத்தான் பார்த்துக் கொண்டு வருகின்றார்கள். இவர்களின் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது மக்கள் நன்கு அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள்.





