நஜீப் பின் கபூர்
நன்றி 01.11.2026 ஞாயிறு தினக்குரல்
அரசியலில் சமயமும் குருமார்களின் தலையீடும் நாம் அறிந்தவரை வரலாறு முழுதிலும் இருந்து வந்திருக்கின்றது. அது இன்றும் பல்வேறு மட்டங்களில் நாடுகளில்-ஆட்சிகளில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அதன் அகலம் நீளம் தொடர்பில் பல்வேறு அளவீடுகளும் நிறைகளும் இருக்கலாம்.
இங்கு நாம் பார்க்கப்போவது நமது நாட்டில் மதகுருமார்களின் குறிப்பாக பௌத்த தேரர்களின் ஆதிக்கம் அரசியலில் எந்தளவு செல்வாக்குச் செலுத்தி வருகின்றன என்பது தொடர்பாகத்தான். இதற்கு நீண்ட வரலாறு ஒன்று இங்கும் இருக்கின்றது. தேவநம்பிய தீசன் இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த நாட்களில் மஹிந்த தேரர் இலங்கைக்கு விஜயம் செய்து மன்னனை மிகிந்தலை காட்டில் சந்தித்ததாகவும் அப்போது மன்னன் வேட்டையில் ஈடுபட்டிருந்ததாகவும் வரலாறுகள் குறிப்புக்களைத் தருவதுடன் மஹிந்த தேரரின் போதனைகளை ஏற்று தேசசம்பிய தீசன் பௌத்த சமயத்தை ஏற்றுக் கொண்டதாகவும் அந்தக்குறிப்புக்கள் தகவல் தருகின்றன.
இதிலிருந்து பார்க்கின்றபோது அன்றிலிருந்து பௌத்த சமயத்தினதும் தேரர்களினதும் செல்வாக்கு மன்னர்கள் அரசாட்சியிலும் தமது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்க வேண்டும். அதுதான் இயல்பானதும். நடைமுறையும் கூட. தேவநம்பிய தீஸ்ஸனது ஆட்சிக்காலம் கி.மு307-267. அந்த நாட்களில் மன்னன் எந்த சமயத்தை தழுவிக் கொள்கின்றானோ குடிகளும் தாமாகவே முன்வந்து அவர்களும் அந்த சமயத்தை ஏற்றுக்கொள்வதுதான் சம்பிரதாயம். அதுதான் இங்கும் நடந்திருக்கின்றது.
மறுபட்ட சமயங்களோ ஆட்சியாளர்களோ இல்லாத இடத்தில் அங்கு முரண்பாடுகள் இல்லாமல் இது நகர்ந்து கொண்டு போய் இருக்கும். பிற்காலத்தில் தென்னிந்தியப்படையெடுப்புக்களுடன்; இந்து சமயக் கோட்பாடுகளும் இங்கு நுழைந்திருக்கும். அதே போன்று அரேபியர் வருகையுடன் இஸ்லாமும் ஐரோப்பியர் வருகையுடன் கிருஸ்தவ சமயமும் இங்கு ஊடூருவி இருக்கின்றது என்பதுதான்யதார்த்தம்.
அன்று தொட்டு இன்று வரையிலான பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தும் பௌத்த சமயம் பிரதான சமயமாக இருந்தாலும். அதில் அதிகமான சிதைவுகளை நாம் மேற்சொன்ன இனங்களும் அவர்களுடைய சமயக் கருத்துக்களும் இந்த நாட்டில் ஏற்படுத்தி இருக்கின்றன. இது எந்தளவுக்கு என்றால் வடக்குக் கிழக்கில் இந்து இஸ்லாமிய பரம்பலும் அதற்கு வெளியில் மேற்சொன்ன சமயங்களுடனும் கிருஸ்துவ சமயமும் கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இதனால்தான் கம்பஹ மன்னார் புத்தளம் போன்ற மாட்டங்களில் கிருஸ்தவ சமயத்தின் செல்வாக்கு வலுவாக காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில்தான் இனவாதமும் இனக்குழுக்களுக்கிடையிலான முறுகல்களும் நாட்டில் ஏற்படுகின்றது. இப்படி இங்கு வந்த ஐரோப்பியர்கள் இந்த நாட்டில் இருந்த கனிசமாக சிங்களவர்களை பதவிகளும் அந்தஸ்துக்களும் பணம் நிலபுலங்களையும் கொடுத்த மத மாற்றம் செய்து கொள்கின்றார்கள்.
இன்று பெரும் இனவாதிகளாகவும் பௌத்த தேசபக்கதர்களாகவும் தம்மைக்காட்டிக் கொள்கின்றவர்கள் ஒரு காலத்தில் கிருஸ்தவர்களாக மதம்மாறி இருந்தவர்கள். இதனை பேரின சமூகத்தில் இருக்கின்ற அனைவரும் போல நன்றாக அறிந்தும் புரிந்தும் வைத்திருக்கின்றார்கள். அதனால்தான் மதம் மாறியவர்கள் இன்று சிங்கள சமூகத்தின் மத்தியில் தாங்களை தூய்மையான சிங்களவர்களாக காட்டிக் கொள்ளும் பரப்புரைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று இவர்களின் முகத்திரைகளை பேரின புத்திஜீவிகளும் ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களும் சந்தயில் கிழித்துத் தொங்கவிட்டுக்கொண்டிருகின்றார்கள். இப்படியான தகவல்களை தமிழ் ஊடகங்கள் பெரும்பாலும் பேசுவதில்லை. அந்த இடைவெளியை நாம் ஓரளவுக்கு பார்க்கலாம் என்பதால் இது போன்ற கதைகளை இங்கு சொல்ல முனைகின்றோம்.
மதங்கள் கூட நிரந்தரம்கிடையாது.இதற்கு நாம் சில தகவல்களை முன்வைக்கலாம். ஒரு காலத்தில் பௌத்த இந்து தேசங்களாக இருந்த இந்தோனேசியா மலேசியா ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இன்று இஸ்லாமிய நாடுகளாக மாறியது போன்ற தகவல்களை நாம் இங்கு முன்வைக்கலாம். மக்களிடத்தில் ஏற்படுகின்ற சிந்தனை ரீதியிலான மாற்றங்கள் அவன் பின் பற்றுகின்ற மதத்தை கூட மாற்றி அமைத்து விடக்கூடும். இதனால் இன்று உச்சியில் வைத்துப் பேசப்படுகின்ற சமயங்களை அதே மனிதர்கள் இனங்கள் நாளை தூசிக்கும் கணக்கெடுக்காத ஒரு நிலையும் வரலாம்.
எனவே எந்த விவகாரமாக இருந்தாலும் மனிதன் அதனை போதையாக்கிக் கொள்ளக் கூடாது. போதை எப்போது மனிதனின் சுய உருவத்தை மாற்றி அமைத்துவிடும் என்பதுதான் நாம் நினைவுபடுத்தவிரும்புகின்ற ஒரு கருத்தாக இருக்கின்றது.இது அனைத்து சமூகங்களுக்கும் சமயங்களுக்கும் பொருந்தும்.
1815ல் ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றி தமது கொடியை அங்கு ஏற்றிய போது தலதா மாளிகை இருக்கும் இடத்தில் ஆங்கிலேயக் கொடியை ஏற்றமுடியாது என்று அதனைக் கீழே போட்டுவிட்டு சிங்களப் பௌத்த கொடியை அந்த இடத்தில் ஏற்றியதால் வாரியப்பொல சிரி சுமங்களத் தேரர் பௌத்த மக்களின் ஹீரோவாக இன்றும் போற்றிப் புகழப்படுகின்றார். அப்போது அவர் அஸ்கிரியபீடத்தின் அனுநாயக்கராக இருந்து வந்திருக்கின்றார். அதனால் தலதா மாளிகையில் இருந்த தங்ததாத்துவை (புத்தரின் புனித பல்)1818ல் அங்கிருந்து அகற்றி தேரர்களிடம்அதனை
ஆங்கிலேயர்கையளித்திருந்தனர்.1818. மார்ச் 02 நடந்த கிளர்ச்சி இதற்கு காரணமாக அமைந்திருந்தது. பின்னர் வாரியபொல சிரிசுமங்களத் தேரரை ஆங்கிலேயர் கைது செய்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது தேரர்கள் அரசியலில் தமது ஆதிக்கத்ததை நிலைநாட்டிய முக்கியமான ஒரு சந்தர்ப்பமாக அமைந்திருந்தது.
அதே போன்ற நமது சுதந்திர போராட்டங்களிலும் தேரர்கள் தமது பங்களிப்பை வழங்கி இருந்தனர். நமது ஆட்சியாளர்களில் பௌத்த தேரர்களுடன் மிகவும் மோசமாக மோதிக் கொண்ட ஒரு தலைவர்தான் முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை. ஒருசமயம் தேரர்களின் தலையில் தார் பூசி அடிக்க வேண்டும் என்றும் இவர் பேசி இருக்கின்றார். தனது வார்த்தையின் கொடூரத் தன்மையை பின்னர் உணர்ந்து கொண்ட பிரதமர் ஜோன் கொத்தலாவலை தேரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
அப்போது மண்டபத்தில் பௌத்த தேரர்களுடன் சமனாக அமர்வதற்காக பிரதமருக்கு ஆசனம் போடப்பட்டிருந்தது. தேரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தனது அறையில் இருந்து வெளியே வந்த பிரதமர் இதனைப்பார்த்து விட்டு தனது காலால் அந்தக்கதிரையை உதைத்து தள்ளி நான் எப்படி கண்ணியமிக்க தேரர்களுக்கு சமமாக அமர்ந்து கொண்டு பேச்சுவார்தை நடாத்த முடியும் என்று அங்கு கேள்வி எழுப்பி ஒரு குட்டையான சிறிய கதிரையில் அமர்ந்து தேரர்களுடன்பணிவாக பேச்சுவாhத்தைகளில் ஈடுபட்டிருந்திருக்கின்றார்.
இது அவர் அரங்கேற்றிய ஒரு நாடகம் என்று அப்போதே பரவலாக பேசப்பட்டிருக்கின்றது.ஆனாலும் தேரர்கள் தொடர்பில்தான் வெளியிட்ட மோசமான கருத்துக்களை பிரதமர் ஜோன் கொத்தலவலை மாற்றிக் கொள்ளவோ அதற்கு மன்னிப்புக் கேட்பதற்கும் தயாராக இல்லை என்று அங்கு சொல்லியதுடன் தான் உங்களைப்போன்ற புனிதமானவர்களுக்கு அப்படிப்பேசவில்லை.
ஆனால் தேரர்களின் மிகவும் மோசமானவர்கள் இருக்கின்றாhகள் அவர்களுக்குத்தான் தான் அப்படிப்பேசியதாகவும் அதே இடத்தில் கூறி இருக்கின்றார். ஜோன் கொத்தலாவலை ஒரு வித்தியாசமானதும் கடும்போக்கான மனிதரும் என்பதற்கு இந்த சம்பவங்கள் நல்ல உதாரணம்.
சொலமான் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா துவங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கனிசமான தேரர்கள் ஆதரவு வழங்கி இருக்கின்றார்கள். இதனால் பண்டாரநாயக்க தேர்தலில் வெற்றி பெற்று 1956ல் பிரதமராக பதவியில் அமர முடிந்தது. இதுவரை சிங்ளமும் தமிழும் அரச கரும மொழியாக செயல்பட்டு வந்தது. இவர் பதவி ஏற்றதும் சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என்ற நிலைப்பாடடை பண்டா எடுத்தார்.
ஆனால் பிற்காலத்தில் செல்வநாயகத்துடன் தமிழ் மொழிக்கு சம உரிமை என்று ஒரு உடன்பாட்டை செய்து கொள்ள பிரதமர் முனைகின்றார் என்ற குற்றச்சாட்டில் பண்டா தம்மை ஏமாற்ற முனைவதாக தேரர்கள் அவருக்கு எதிராக செயல்படத்துவங்கினார். இதனால் 1959 பண்டாரநாயக்கவை தல்துவ சோமராம தேரர் சுட்டுக் கொன்றிருக்கின்றார். அவருக்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டதும் தெரிந்ததே.
அதே போன்று டட்லி செல்டன் சேனாநாயக்க பிரதமராக இருந்த நாட்களில் பௌத்த தேரர்கள் அவருடனும் முரண்பட்டனர். அந்த மோதலில் தம்பராவ தேரர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் இன்னும் பல தேரர்கள் சம்பவத்தில் காயப்பட்டனர். இதனால் அடுத்து வந்த தேர்தலில் மீண்டும் சிரிம பண்டாரநாயக்காவுக்கு தேரர்கள் ஆதரவு கொடுத்ததால் அவர் இலகுவாக வெற்றி பெற்று பிரதமரானார். அவருக்கு அன்றைய இடதுசாரிகளும் ஆதரவு வழங்கி இருந்தனர்.
அதே போன்று இன்று அதிகாரத்தில் இருக்கின்ற என்பிபி.யின் ஆணிவேராக இருக்கின்ற ஜேவிபி.வளர்ச்சியிலும் பௌத்த தேரர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றனர்.
இன்று செல்வாக்குடன் இருக்கின்ற பல ஜேவிபி தலைவர்கள் அன்று விகாரைகளில் மறைந்து வாழ்ந்தது மட்டுமல்லாது பலர் தேரர்களாகவும் துறவறம் பூண்டும் இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது என்பிபி அரசை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் இந்த தேரர்கள் பாரிய பங்களிப்பை செய்து வந்திருந்தனர். இன்றும் இந்த அரசை பாதுகாப்பதிலும் அவர்களில் கணிசமான தொகையினர் உறுதிபூண்டிருக்கின்றார் என்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அதே போன்று பௌத்த மக்களில் மனங்களில் பாரிய சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு மதத் தலைவர்தான் சோம தேரர். அவர் ரஸ்யாவில் இருந்த போது நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவர் மிகவும் நிதானமான மனிதராகவும் சிந்தனை ரீதியில் மக்கள் மனங்களில் இடம்பிடித்தும் வந்திருந்தார். அவரது சிந்தiனைகளின் அடிப்படையில் 1990களில் வளர்ந்த ஜனதா மிதுரோ-குடிகளின் நண்பன் என்ற அமைப்பு ஜாதிக ஹெல உறுமய என்ற அரசியல் இயக்கமாக 2004ல் தேர்தலில் களமிங்கி ஆறுசதவீத வாக்குகளைப் பெற்று ஒன்பது ஆசனங்களைகைப்பற்றியது.
தானும் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கி சிங்கள மக்களின் செல்வாக்கைப் பெற்று அரசியல் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கனவு கண்டவர்தான் ஞானசாரதேரர் அதற்காக அவர் 2012ல் பொது பல சேனா என்ற அமைப்பை உருவாக்கினார். ஆனால் அது முழுக்க முழுக்க வன்முறையையும் இனவாதத்தையும் முன்னிறுத்திய அமைப்பாக செயல்பட்டதால் சிங்கள மக்களே அந்த அமைப்பையும் ஞானத்தையும் நிராகரித்து விட்டனர்.
அதனால் ராஜபக்ஸாக்களின் எடுபிடியாக இருந்து செயல்பட்டுவந்த இந்த ஞானசார தேரர் அதற்காக வன்முறை அமைப்புக்களை வழி நடாத்தி வந்திருக்கின்றார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன.இதற்காக அவருக்கு பொருளாதார இலாபங்களும் கிடைத்து வந்திருக்கின்றது.
குறிப்பாக அவரது அமைப்பை சேர்ந்தவர்களின் பிழைப்புக்காக இராணுவ உளவுத்துறையினர் கோட்டா காலத்தில் சம்பளமும் கொடுத்து வந்திருக்கின்றது இது ஒன்றும் இரகசியம் கிடையாது என்று அமைச்சர் பிமல் ரத்னாயக்காவே ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர நமது நாட்டில் அரசியல் செய்கின்ற மஹிந்த விமல் சம்பிக்க கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் தமக்கு என சில தேரர்களை வைத்து அவர்களைப் பாவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் அனுரகுமார திசாநாயக்க அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் பௌத்தத்துக்கு பெரும் ஆபத்து விகாரைகள் இயங்காது பெரஹர வைபவங்கள் நாட்டில் நடைபெறாது என்று பரப்புரைகளை செய்து வந்ததுடன் அவர்கள் கம்யூனிஸ்டுக்கள் அவர்களுக்கு மதமோ மத நம்பிக்கைகளோ கிடையாது என்றெல்லாம் மேடைகளில் பேசிக் கொண்டிருந்தனர்.
சிறுபான்மை தலைவர்களில் குறிப்பாக ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் அனுர அதிகாரத்துக்கு வந்தால் நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது என்றெல்லாம் முஸ்லிம்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தனர்.
இன்று கஸ்ஸப தித்தகல்ல சமந்த உலப்பன கல்கந்த போன்ற தேரர்கள் அரசியல் வரப்பிரசாதங்களை இழந்திருப்பதால் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கி வருகின்றார்கள். அதனால் மீண்டும் எப்படியாவது ராஜப்ஸாக்களின் வாரிசை அதிகார கதிரையில் அமர்த்திவிட வேண்டும் என்று வெறியில் களத்தில் இறங்கி இருக்கின்றார்கள்.
கண்டியில் இருந்து போன பாதயாத்திரை விகாரமகாதேவியில் சத்தியக்கிரகப்போராட்டம் என்று பல கூத்துக்களை இதற்காக இவர்கள் ஆடிவருகின்றார்கள்.
ஆனால் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றவர்கள் மீது சிங்கள சமூகத்தின் மத்தியில் நல்லெண்ணம் கிடையாது வழக்குகள் கொள்ளைகள் சொத்து சேகரித்தசிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பஞ்சபாத குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது இருந்து வருகின்றது.
எதிர் வருகின்ற காலங்களிலும் இப்படியான போராட்டங்களை இவர்கள் நடாத்திக்கொண்டுதான் இருப்பார்கள். அவற்றுக்கு மக்களும் குறிப்பாக பேரின சமூகமும் ஆட்சியாளர்களும்தான் பதில் கொடுக்க வேண்டும்.



