-நஜீப் பின் கபூர்-
நன்றி: 26.01.2025 ஞாயிறு தினக்குரல்

ஜேவிபி. முதலாவது வரவு செலவுத் திட்டம் மற்றும் இன்னும் இரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிப்பு என்பன வெகுவிரைவில் வர இருப்பதால் அவைபற்றி பேச இருக்கின்றது. அதற்கு முன்னர் இன்று அனுர அரசின் நண்பர்கள் விரோதிகள் என்ற தலைப்பில் சில விடயங்களை பேச எதிர் பார்க்கின்றோம்.
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது நமக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்தும் போன ஒரு கதைதான். எனவே அதற்கு நாம் மேலும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதனால் இன்றைய நண்பர்கள் நாளை விரோதிகளாகலாம். இன்றைய விரோதிகள் நாளை நண்பர்களாகலாம். அதனால் எதிரிகள் நண்பர்கள் என்பன காலத்தால்-சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
எனவே அரசியலில் நண்பர்கள் விரோதிகள் ஒரு இசுவே கிடையாது. இதனை மக்கள் கண்டு கொள்ளத் தேவை இல்லை. ஆனால் புரிந்து கொள்ள வேண்டும். என்றாலும் நமது அரசியல் வரலாற்றில் இந்த தடம் பிரல்வுகள் சிலவற்றறை மட்டும் இங்கு தொட்டுக் காட்டலாம் என்று தோன்றுகின்றது.
அவற்றில் தனிப்பட்ட ரீதியில் அரசியல்வாதிகள் பல்டிகள் ஒருபுறம் இருக்க கட்சி ரீயிதியில் ஒட்டுமொத்தமாக நடந்த நண்பர்கள் பகைவர்களான கதையும் பகைவர்கள் நண்பர்களான மாறிய நிகழ்வுகள் என்று பார்க்கும் போது எஸ்.டப்லியு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சுதந்திரக் கட்சியை அமைத்தபோது இலங்கை அரசியலில் ஐதேக.வும் சுதந்திரக் கட்சியும் எதிரிகளானார்கள். இது இந்த எதிரும் புதிருமான பகைமை அறை நூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது.
அடுத்து 1970ல் நடந்த பொதுத் தேர்தலின் போது வீஜேவீர அணியினர் ஸ்ரீமா அம்மையாரை ஆதரித்தனர். இவர்கள் யாரை தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்தார்களோ, அவர்களுடன் 1971ல் ஆயுதங்களுடன் மோதினார்கள். அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின.

தனது கணவன் விஜேகுமாரணதுங்ஹாவை ஜேவிபி. சுட்டுக் கொன்றாலும் அவர்களுடனே கூட்டணி போட்டு தேர்தலில் நின்று அரசு கூட அமைத்தார். நாம் முன்பு சொன்ன ஸ்ரீமா காலத்து ஆயுதப் போராட்டம் மற்றும் சந்திரிகா கணவன் விஜேகுமார படுகொலை தொடர்பாக ஜேவிபி. வேறு கதைகளைச் சொல்லி வருகின்றது.
இதற்குப் பின்னர் சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரி தனது பரம அரசியல் எதிரியான ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். இதனால் புதிய நண்பர்களும் பகைவர்களும் அரசியல் அரங்கில் தோன்றினார்கள்.
தேர்தலில் தான் தோற்றுப் போய் இருந்தால் ராஜபக்ஸாக்கள் தன்னை ஆறு அடி ஆழத்தில் குழி தோன்றிப் புதைத்திருப்பார்கள் என்று மைத்திரி பகிரங்கமாகவே கூறி இருந்தார். அப்படிச் சொன்ன அதே மைத்திரி அடுத்த தேர்தலில் ரஜபக்ஸாக்களுடன் கூட்டணி போட்டது எவ்வளவு பெரும் முரண்பாடு.
இதே போன்று ரஜபக்ஸாக்கள் அதிகாரத்துக்கு வருவதற்கும் மைத்திரி ஜனாதிபதியாவதற்கும் ஜேவிபி. ஆதரவு வழங்கி சந்தர்ப்பங்கள் நமது அரசியலில் இருக்கின்றன. எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது அரசியல் என்பதும் பச்சோந்தியின் நிலையில்தான் இருந்து வருகின்றது.

இன்று சமகால அரசியல் களத்தில் ஆளும் அனுர தரப்பின் நண்பர்கள் பகைவர்கள் தொடர்பாகப் பேசுவதுதான் இந்தக் கட்டுரையின் கருப்பொருளாக நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனை இங்கு சுட்டடிக்காட்ட விரும்புகின்றோம்.
முதலில் அனுர தரப்பு நண்பர்களாக எவரெல்லாம் இருந்தார்கள் இருக்கின்றார்கள் என்று பார்த்தால் ஜனாதிபதித் தேர்தலானாலும் சரி பொதுத் தேர்தல் ஆனாலும் சரி ஜேவிபி-என்பிபி எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் குடி மக்களின் ஆதரவை நம்பித்தான் தேர்தலில் நின்றார்கள். அதே நேரம் சமூக ஊடகங்கள் அவர்களுக்கு முடியுமான மட்டும் ஆதரவை வழங்கி மக்கள் மனங்களில் தங்களின் மீட்பாளர்கள் இவர்கள்தான் என்று சொல்லி வந்தன.

வெளிநாடுகளில் புலம் பெயர்ந்திருக்கின்ற இலங்கையர்கள் அனைவரும் போல இந்தத் தேர்தலில் அனுர தரப்பினருக்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தனர். சில தனியார் தொலைக் காட்சிகளும் ஊடகங்களும் அனுர வெற்றி வாய்ப்புக்கான கதவைத் திறந்து கொடுத்துக் கொண்டிருந்தன. பொதுமக்களின் கணிசமான ஒரு தொகையினர் சுயேட்சையாக அனுர தரப்புக்கு ஆதரவாக தங்களால் முடிந்த ஒத்தாசைகளை வழங்கி வந்தனர்.
அதே அனுர மற்றும் அவர் தரப்பினர் மிகச் சிறப்பாக மக்களை விளிப்படை செய்து கொண்டிருந்தனர். இது வரை நம்மை ஆட்சி செய்த தலைவர்கள்-அரசாங்கங்கங்கள் குடிமக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதற்குப் பின்னரும் இதே நிலமை தொடர்ந்தால் தங்களது சந்ததியினர்-குழந்தைகளின் எதிர்காலம் சூன்யமாகி விடும் என்று மக்களை எச்சரிக்கை செய்து வந்தனர்.

நாட்டில் வாழ்கின்ற அனைத்து சிறுபான்மை சமூகங்களும் தங்களது எதிர்காலம் அனுர தரப்பினர் வெற்றியில்தான் தங்கி இருக்கின்றது என்று நம்பினார்கள் மொத்த குடிமக்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இலக்கை கடக்கும் அளவுக்கு அனுர தரப்புக்கு ஒரு தேர்தல் வெற்றிகயை பெற்றுக் கொடுத்தார்கள். இதனை அவர்கள் தங்களது சொந்த வெற்றியாகவும் பார்த்தனர்.

அதற்கான உழைத்தும் வந்தார்கள். உள்நாட்டைப் பொறுத்து அனுர தரப்பு வெற்றிக்கு இவை காரணங்களாக அமைந்திருந்தன. அந்த வகையில் மேற்சொன்னவர்கள் அல்லது சொன்னவை அனுர அரசின் நண்பர்கள் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
இப்போது அனுர அரசின் விரோதிகள் அல்லது எதிரிகள் பற்றிப் பார்த்தால் அல்லது அவர்களது அரசியல் எதிரிகள் என்று எடுத்துக் கொண்டால், அரச விரோத ஊடகங்கள், புதிய அரசால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், படைத்தரப்பினர், வியாபாரிகள் போதைவஸ்து வியாபாரிகள், குற்றவாளிகள் என்று நீண்டதோர் பட்டியல் இருக்கின்றது.
இதில் அரசியல் விரோதிகள் என்று பார்த்தால் மஹிந்த மற்றும் அவர் தரப்பு மொட்டுக் கட்சியினர். மற்றும் ரணில் தரப்பு ஐக்கிய தேசிய கட்சியினர், பிரதான எதிர்க் கட்சியினர் என்று இன்னும் பல அரசியல் கட்சிகளை எடுத்துக் கொள்ள முடியும். இது ஜனநாயகத்தில் நடக்கின்ற வழக்கமான ஒரு ஒழுங்குதான். அதனால் அதனை நாம் ஒரு குற்ற உணர்வுடன் விமர்சிக்க முடியாது. எந்த நாட்டிலும் நிலை இதுதான்.

அதே நேரம் இன்று நாட்டில் இருக்கின்ற சில தனியார் தொலைக் காட்சிகள்-பத்திரிகைகள் என்பன அரச விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற சில அரசியல்வாதிகள் அவ்வாறான ஊடகங்களின் பெயர் குறித்துக் குற்றம் சாட்டி வருகின்றனர்.
புதிய அரசு பதவிக்கு வந்திருப்பதால் அதில் பல அரசியல்வாதிகள் பாதிப்புக்கு இலக்காகி இருக்கின்றனர். அதில் தாம் அதிகாரத்துக்கு வந்தால் ராஜபக்ஸாக்கள் மற்றும் அவர்கள் காலத்தில் இருந்த அமைச்சர்கள் அரிசியல்வாதிகள் மேற்கொண்ட சட்டவிரோத செயல்பாடுகள் கொள்ளைகள் தொடர்பாக ஆளும் தரப்பு சட்ட நடவடிக்கைகளில் இன்று இறங்கி இருப்பதால் அவர்கள் தாம் பாதிக்கப்படலாம் என்பதால் இன்று ஆட்சியாளர்களுடன் முரண்பாட்டில் -கோபத்தில் இருக்கின்றார்கள். அச்சத்தில் இருக்கின்றார்கள்.
அதே போன்று நல்லாட்சி காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளை, அதற்கு நியாயம் சொல்லியவர்கள் என்று பலரும் அரசின் எதிரிகளாக இருக்கின்றார்கள். அதே போன்று கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த பல மோசடிகளுக்கு ஆதரவாக செயலாற்றிய அதிகாரிகள் இன்று பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துடன் நல்லென்னத்தில் இல்லை.
அத்துடன் அரசியல்வாதிகளுடன் இணைந்து இவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதால் அப்படியான அதிகாரிகள் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததால் தமது தனிப்பட்ட வருமானத்துக்குக் கூட ஆப்பாகிவிட்டது என்று கருதுகின்றனர். அவர்களும் இன்று அரச எதிர் மனநிலையில் இருக்கின்றார்கள்.
படைத்தரப்பினர் மத்தியிலும் இப்படியான ஒரு குழு இருக்கின்றது. அவர்களும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டதால் விசாரணைகள் சட்ட நடவடிக்கைகள் என்று வந்தால் தமக்கு ஆபத்து என்று கருதுவதால் அவர்கள் கூட இந்த அரசின் எதிரிகள் என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள்.
அதே போன்று அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளுடன் இணைந்து வியாபாரத்தில் பங்குகளை பெற்று வந்த ஒரு வர்த்தக கோஷ;டியும் இந்த அரசு பதவிக்கு வந்ததால் பாதிப்புக்கு இலக்காகி இருக்கின்றது. உதாரணமாக சீனி கொள்ளை மற்றும் சமயல் எண்ணை வியாபாரம் மருந்து வியாபாரம்-கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவர்கள்.
குறிப்பாக இதில் கோட்டா காலத்தில் நடந்த இந்த வியாபாரத்தை உதாரணமாகக் கொள்ள முடியும். அதில் வியாபாரிகள் கொள்ளை இலாபம் பெற்றதுடன் ஜனாதிபதி கோட்டா தேர்தல் செலவுகள் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிய வியாபாரிகள் சகாக்களும் இதில் இருக்கின்றனர். அவர்களும் இந்த அரசை ஜீரணித்துக் கொள்ள தயாராக இல்லை.
இன்று நமது நாட்டில் போதைவஸ்து வியாபாரிகளின் பின்னணியில் அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதில் பங்கு இருப்பது மிகவும் தெளிவு. அந்த இரு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய படைத்தரப்பினர் குறிப்பாக பொலிஸார் என்று பலர் இதில் பங்காளிகளாக இருக்கின்றார்கள்.
போதை வியாபாரிகளிடம் மாதாந்தம் சம்பளம் வாங்குபவர்களும் இந்த அரசு பதவிக்கு வந்தது தமக்கு பெரும் பாதிப்பு என்று கருதுகின்றார்கள். எனவே அவர்களும் இந்த அரசு பதவிக்கு வந்ததால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பாக இருக்கின்றார்கள். எனவே இவர்களும் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் என்றுதான் பார்க்க வேண்டும்.
![]()
ஏற்கெனவே குற்றவாளிகளாக தண்டனை பெற்று வருகின்ற பலருக்கு சிறைச்சாலைகளில் சலுகைகள் வழங்கப்படுவதால் இதுவரை அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள். தற்போது இந்த அரசு இவர்கள் விடயத்தில் கடுமையாக இருப்பதால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறைச்சாலை அதிகாரிகளும் அதனால் தமக்குக் கிடைத்த வருமானம் தற்போது இல்லாமல் போனதால் இந்த ஆட்சியாளர்களினால் பாதிக்கபட்டவர்களாக இருக்கின்றார்கள். எனவே இவர்களும் இந்த அரசின் எதிரிகளாகத்தான் இருக்கின்றார்கள்.
இப்படி மேல் மட்டம் முதல் உள்ளூராட்சி சபைகள் போன்ற கீழ் மட்ட வரை ஊழல் மோசடிக்குப் பழகிப்போன ஊழியர்கள் இன்று பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள். இந்த அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் அவர்கள் கூட இந்த அரசால் பாதிக்கப்பட்ட தரப்பாகத்தான் இருப்பார்கள்-இருக்கின்றார்கள். எனவே இவர்களும் இந்த அரசுக்கு எதிரான தரப்பினராகத்தான் நாம் பார்க்க வேண்டும்.
இப்படி இவர்கள் அரசுக்கு எதிராக பலமாக இருப்பதால் அனுரதரப்பினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அல்லது மேடைகளில் சொன்ன பதவிக்கு வந்ததும் அடுத்த நாள் செய்வதாகச் சொன்ன மாற்றங்களை இன்றுவரை அவர்களினால் முன்னெடுக்க முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே அனுர அரசின் எதிரிகள் இன்னும் பலமாக இருப்பதைத்தான் இந்தத் தாமதங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.





