-நஜீப் பின் கபூர்-
(நன்றி ஞாயிறு தினக்குரல்- 13/07/2025)
”இப்படி ஒரு கடும் போக்கு ஆட்சியாளர்கள்
பதவிக்கு வந்து சட்டதை இருக்கமாக
அமுல்படுத்துவார்கள் என்று முன்னைய ஆட்சிகள்
ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அதனால்தான் நமது அரசியல்வாதிகள்
சட்டம் நீதி என்பவற்றை மதிக்காது
ஒருவரே டசன்கணக்கில் பல பாரிய
கொள்ளைகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இதில் தெரிந்தும் தெரியாதும் சில அரச
அதிகாரிகளும் பங்களிப்பு வழங்கி அதில் தாமும்
கோடிஸ்வரர்களாக மாறி இருக்கின்றார்கள்.’
சமகால உலகில் பல்வேறுபட்ட ஆட்சி முறைகள் காணப்படுவதை நாம் அறிவோம். அதனை நாம் இங்கு பட்டியலிட்டுக் காட்டத் தேவையில்லை என்று எதிர்பார்க்கின்றோம். அந்த வரிசையில் நமது நாட்டில் காணப்படுவது ஜனநாயக ஆட்சி. இந்த ஜனாநாயக ஆட்சியை முன்னெடுப்பதற்கு நமக்கு ஆங்கிலேயர் தந்துவிட்டுப் போன டொமூர் அரசியல் யாப்பு நாடு சுதந்திரம் அடையும் போது இருந்தது.
1970ல் ஸ்ரீ மா அம்மையார் பதவியேற்று 1972ல் அது தூக்கி வீசப்படும் வரை அதனை வைத்துக் கொண்டுதான் நாட்டில் அரசியல் செயல்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. கொல்வின் ஆர் டி சில்வா அறிமுகம் செய்த இந்த அரசியல் யாப்பு மூலம் நாடு குடியரசானது. முடியாட்சியில் தேசாதிபதியாக இருந்தவர் ஜனாதிபதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டார்.
1977ல் நடந்த தேர்தலில் ஸ்ரீ மா அம்மையார் தோல்வியைத் தழுவ மேற்கத்திய விசுவாச ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. அதற்கு ஜே.ஆர். ஜெயவர்தன தலைமை தாங்கினார். 1972ல் அம்மையார் கொண்டு வந்த அரசியல் யாப்பை அவர் ஆறு ஆண்டுகளிலே குப்பையில் போட்டு விட்டு தனது அரசியல் யாப்பை 1978ல் நாட்டில் அறிமுகம் செய்தார். அதன் மூலம் அவர் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவும் அதிகாரத்தில் அமர்ந்தார்.
அது ஒரு தனிமனிதனுக்கு எந்தளவு அதிகாரம் கொடுக்க முடியுமே அந்தளவுக்கு அதிகாரங்களைக் கொடுத்தது. அதன் மூலம் தனக்கு ஒரு பெண்ணை ஆணாக்கவும் ஆணைப் பெண்ணாக்கவும் மட்டுமே முடியாது என ஜே.ஆரே ஒருமுறை பகிரங்கமாகவும் சொல்லி இருந்ததும் அனைவரும் அறிந்ததே. இந்த அரசியல் யாப்புத்தான் நாட்டின் இன்றைய சாபக்கேட்டுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்ற விமர்சனங்கள் இன்றும் தொடர்கின்றன.
ஜே.ஆர். அரசியல் யாப்புப்படி ஒருவர் இரு தடவைகளுக்கு மேல் நாட்டில் ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வரமுடியாது என்று ஒரு விதி இருந்தது. போருக்குப் பின்னர் மன்னராட்சி போல் சொன்று கொண்டிருந்த ஜனாதிபதி செயல்பாடுகளை அவதானிக்கின்ற போது ராஜபக்ஸாக்கள்தான் நாட்டில் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. என்றாலும் 2015ல் நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவால் வெற்றி பெற முடியாமல் போனது நமது அரசியலில் ஒரு அதிரடி நிகழ்வு.
அதன் பின்னர் மைத்திரி-ரணில் நல்லாட்சியில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதியாக வரலாம் என்ற ராஜபக்ஸாக்கள் யாப்பில் ஏற்படுத்தி இருந்த திருத்ததுக்கு ஆப்பு வைக்கப்பட்டதால், 2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸாவுக்கு மூன்றாவது முறையாக தேர்தலில் நிற்க முடியவில்லை.
அதனால்தான் தம்பி கோட்டாவை வேட்பாளராக களமிறக்கினார்கள். கடும் போக்கு இனவாதிகள் அன்று அவருக்கு பக்க துணையாக இருந்ததால் அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தார். அதன் பின்னர் குறுகிய காலத்துக்குள் அவர் மக்கள் போராட்டங்களுக்கு முகம் கொடுக்க முடியாது நாட்டில் இருந்து தப்பி ஓடவேண்டி வந்தது.
அதன் பின்னர் ராஜபக்ஸாக்களின் தயவில் ரணில் அதிகாரத்துக்கு வந்ததும், 2024ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி. வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியான கதைகள் எல்லாம் நாம் அண்மையில் பார்த்த காட்சிகள் எனவே அவைபற்றியும் இங்கு விரிவாக பேச வேண்டியதில்லை என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
இப்போது அதிகாரத்துக்கு வந்திருக்கின்ற என்பிபி. அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளைப் பார்ப்போம். தேர்தல் கால வாக்குறுதிகள் பொருளாதார முன்னகர்வுகள் அரசியல் தீர்வுத் திட்டங்கள் புதிய அரசியல் யாப்பு வேலை வாய்ப்புக்கள் சர்வதேச உறவுகள் என்று அவற்றை பார்க்க முடியும். ஒரு அரசாங்கத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான ஆளணி இவர்களுக்கு இல்லை என்று எதிரணியினர் குற்றம் சாட்டி இருந்தனர். ஆனால் அவர்கள் இன்று வெற்றிகரமாக சர்வதேச தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
ஜனாதிபதிக்கு ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் கதைகள் இருந்தன. ஆனால் அவை எதுவுமே இன்று எடுபடவில்லை. அவை முட்டால்தனமானவை என்று இப்போது நிரூபனமாகி இருக்கின்றன. அதேவேலை சர்வதேசத்துடன் நல்ல தொடர்புகளை வைத்திருந்தவர்கள் ஏன் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுபோய் விட்டனர் என்று தற்போதய ஆட்சியாளர்கள் திருப்பிக் கேட்கின்றனர். ரணிலுக்கு சர்வதேசத்தில் மதிப்பும் மரியாதையும் நல்ல அறிமுகங்களும் இருந்திருந்தால் ஏன் உள்நாட்டில் மக்கள் அவர் தலைமையலான அணியை விரட்டி அடித்தார்கள் என்றும் திருப்பிக் கேட்கப்படுகின்றது.
ரணில் பற்றிய இந்த இமேஜ் ஒரு மாயை அது அவர்களது கையாட்கள் சிலர் மேற்கொள்ளும் பரப்புரைகள்-பிரச்சாரங்கள் மட்டுமே. ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகள் ரணில் பெற்று வெற்றி பெறுவார் என்று அவரது சகா வஜிர கூறி இருந்தார். அதே போன்று பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளை இந்த முறை ஐக்கிய தேசியக் கட்சிதான் கைப்பற்றும் என்று அதே ஆள் சொல்லி இருந்ததும் நினைவில் இருக்கலாம். நம்மைப் பொறுத்தவரை அரசியலில் ரணில் ஒரு செல்லாக்காசு-நிராகரிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்றலும் அவரை ஊதிப்பெருப்பிக்க சில கையாட்களும் அவருக்கு என்று சில ஆயிரம் தொண்டர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
வங்குரோத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தற்பேதய அரசு மேற்கொள்ளும் நடடிவக்கைகள் மீது குடிமக்களுக்கு ஒரு புரிதல் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரம் என்னதான் தற்போதய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் இந்த அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருக்கின்ற தரப்பினரை நாம் குத்து மதிப்பாக ஒரு முப்பது சதவீதம் என்று எடுத்துக் கொள்ள முடியும். பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் இந்தக் கணிப்பு. எனவே அரசு என்னதான் நல்ல காரியங்களைச் செய்தாலும் அதை ஜீரணித்துக் கொள்ளாத மனநிலையில் இருப்பவர்கள் விகிதத்தை இதன்மூலம் கணித்துக் கொள்ள முடியும்.
கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பு நோக்கின்ற போது என்பிபி. அரசாங்கத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்க மாட்டார்கள் என்ற ஒரு நல்லெண்ணம் அவர்களது அரசியல் எதிரிகளுக்கும் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக் கொண்டு வந்த தரப்புக்கள் என்று பார்க்கின்ற போது அரச ஊழியர்களையும் எடுத்துக் கொள்ள முடியும் அவர்களது சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இந்த அரசாங்கம் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் திருப்தி கொள்ளும் மட்டத்தில் இருக்கின்றது. ஓய்வூதியம் பெறுகின்றவர்கள் நிலையும் சாதகம்மாகவே தெரிகின்றது. வேறு எவர்தான் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் இப்படியான மாற்றங்கள் ஒருபோதும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை.
அது அப்படி இல்லை குழறுபடிகள் இருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும் அதற்கெதிரான போராட்டங்களை நடாத்தக் கூடிய பலம் தற்போது இருக்கின்ற எதிரணிக்குக் கிடையாது. இது இந்த அரசுக்கு ஒரு சாதகமானநிலை. கொள்ளையடிக்கப்பட்ட பொது மக்களின் உடமைகள் மீட்டெடுக்கப்படும் அரசியல்வாதிகள் பெறுகின்ற அசாதாரண ஓய்வூதியம் கொடுப்பனவுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மோசடிகள் தொடர்பான கைதுகளும் கதறல்களும் பாரவலாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. வருகின்ற நாட்களில் இது அதிரடியாக அமையும் என்று எதிர்பார்க்க முடியும். இது இவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் பிரதானமானது. அதனை நிறைவேற்றுமாறுதான் பொதுமக்கள் கோரிக்கையாகவும் இருக்கின்றது.
பொதுவாகப் பார்க்கின்ற போது அரசின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் தேர்தல் காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நகர்த்திச் செல்கின்ற ஒழுங்கு முறைகளில் குறைபாடுகள் தாமதங்கள் இருந்தாலும் அவற்றில் திருப்திகரமான நிலை இருந்து வருகின்றது என்பதுதான் எமது கருத்தாக இருக்கின்றது. ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைக் கண்டறிதல் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. இது தொடர்பான ஒரு நம்பிக்கையும் அரசு மீது இருக்கின்றது. ஆனால் நிறையவே சிக்கல்களும் காணப்படுக்கின்றது.
ஒரு சமயம் தனக்கிருந்த ஒரே ஒரு பெரும்பான்மை ஆசனத்தை வைத்துக் கொண்டு ஜனாதிபதி சந்திரிக்கா தனது ஆட்சிக்காலத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றது அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தெரியும். எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை வைத்திருக்கின்ற என்பிபி.க்கு பெரிய ஆபத்துக்கள் வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
அப்படிச் சொல்ல முடியாது கோட்டாவுக்கு வந்த நிலை தெரியாத என்று சிலர் கேள்வி எழுப்ப இடமிருக்கின்றது. அரசியலில் எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொன்னாலும் நமது பார்வையில் அந்த ஆபத்த இந்த அரசுக்கு கண்ணில் தெரியும் தூரத்தில் இல்லை. இதற்குப் பிரதான காரணம் வலுவான ஒர் எதிரணி இன்று நாட்டில் இல்லாமல் இருப்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விருப்புகின்றோம்.
இப்படி ஒரு கடும் போக்கு ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்து சட்டதை இருக்கமாக அமுல்படுத்துவார்கள் என்று முன்னைய ஆட்சிகள் ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால்தான் நமது அரசியல்வாதிகள் சட்டம் நீதி என்பவற்றை மதிக்காது ஒருவரே டசன்கணக்கில் பல பாரிய கொள்ளைகளை பண்ணி இருக்கின்றார்கள். இதில் தெரிந்தும் தெரியாதும் அரச அதிகாரிகள்-ஊழியர்கள் பங்களிப்பு வழங்கி அதில் தாமமும் கோடிஸ்வரர்களாக மாறி இருக்கின்றார்கள்.
இந்த வலுவான அரசுடன் சரிசமனாக நின்று பிடிப்பதற்கான ஆளுமை பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்திக்கு அரவே கிடையாது என்பதை நாம் மட்டுமல்ல அவர்களது தரப்பிலும் விமர்சனங்கள் இருந்து வருகின்றது. அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பற்றி நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டி இருக்கின்றோம். மொட்டுக் கட்சியில் இருந்த அரசியல்வாதிகள் அனைவரும் போல ஏறக்குறைய நிராகரிக்கப்பட்டுவிட்டனர். ஆனால் நாமல் ரணில் யுக்தியில் உள்ளே வந்து விட்டார்.
அங்குள்ள அனைவரும் போல ஏதோவகையில் குற்றச் சாட்டுக்களுக்கு இலக்காகி நெருக்கடிகளை எதிர் நோக்கி வருகின்றார்கள். அதில் ராஜபக்ஸாக்கள் முன்னணியில். ஒருவருக்கு குறைந்தது தலா டசன் கணக்கான பெரும் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன. இன்று என்பிபி அரசாங்கத்தில் இருக்கின்ற அரசியல் செயல்பாட்டாளர்களுடன் ஒப்பு நோக்கம் போது மொட்டுக் கட்சியில் இருக்கின்ற எவரும் அவர்களுடன் மோதும் அளவுக்கு புத்திஜீவிகளாக இல்லை.
இன்று மொட்டுக் கட்சிக்குத் தலைமைத்துவம் கொடுக்கின்ற நாமல் வாரிசு அடிப்படையில் இலங்கை அரசியலுக்குள் நுழைந்த ஒருவர். அவர் சட்டதரணியானது முதல் அதிகாரங்களைத் துஸ்பிரயோகம் செய்தது. நாட்டில் நடைபெற்ற படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஒரு நபர்தான் இந்த நாமல். அவரது தயார் சிரந்திக்கும் இது போன்ற குற்றச்சாட்டுக்கள்.
எனவே மீண்டும் இவர்களை அரசியல் களத்துக்குக் கொண்டு வரும் மனநிலைக்கு பேரினச் சமூகம் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. இப்போது பேரின சமூகம் நல்ல அரசியல் தெளிவுடன் இருந்து வருகின்றது. கடந்த காலங்களில் மேற்சொன்ன சஜித் ரணில் நாமல் போன்றவர்கள் ஒரு அரசியல் கூட்டணி தொடர்பான கருத்துக்களை- பேச்சுவாhத்தைகளும் நடாத்தி இருந்தனர் ஆனால் அது பிறந்த இடத்திலே பல முறை மரணித்தும் போனது.
இந்தப் பின்னணியில்தான் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான சந்திப்புக்களும் அங்காங்கே நடந்து வருகின்றன. ரணில் ஐதேக. தலைமைப் பதவியில் இருக்கும்வரை அவர்களுடன் சஜித் அணி கூட்டணி என்பதும் நாமலுடன் அவர்கள் இணைவு என்பதும் ஒரு உயிர்த் துடிப்பில்லாத விவகாரம். அப்படித்தான் அமைந்தாலும் சஜித் அணிக்குப் இது பெரும் பின்னடைவைத்தான் கொடுக்கும்.
புதிய கட்சி புதுக் கூட்டணி என்ற கதைகள் எல்லாம் நடைமுறைச் சாத்தியம் இல்லாத முயற்சிகள் என்பதுதான் எமது கருத்து. மாகாணசபைத் தேர்தல் மூலமாவது அரசியல் களத்துக்கு மீண்டும் வந்துவிட வேண்டும் என எதிர்பார்க்கின்ற ஒரு கூட்டம் நாட்டில் இருப்பதால் சந்தர்ப்பவாத அரசியல் அணிகளுக்கும் கூட்டணிகளுக்கும் ஒரு சின்ன வாய்ப்பும் இல்லாமலும் இல்லை. என்றாலும் அவர்கள் ஜெலிக்க வாய்ப்பே கிடையாது என்பது எமது கருத்து. வேண்டுமானால் மாகாணசபைகளில் ஆங்காங்கே ஒரிரு ஆசனங்களை அவர்கள் பெற்றுக் கொள்ளமுடியும்.
எனவே நாம் முன்பு சுட்டிக்காட்டியது போல நாட்டில் இருக்கின்ற மூன்றில் ஒரு சதவீதமானவர்கள் தொடர்ந்தும் இந்த அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் நின்று விமர்சனங்களை பண்ணிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆட்சியாளர்கள் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. என்றாலும் இந்த அரசை பதவிக்கு கொண்டு வந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் அரசு மீது விமர்சனங்களை துவங்குவார்களாக இருந்தால் இது விடயத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அண்மையில் நடைபெற்ற ஈரான்-இஸ்ரேல் மோதல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுக்கின்ற வரிவிதிப்பு முடிவுகள் மற்றும் சர்வதேசத்தில் ஏற்படுகின்ற சிறு தளம்பல்கள்; கூட நமது பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிகளை உண்டு பண்ணிவிடும். மேலும் இனவாதிகள் எப்படி மீண்டும் தமது ஆட்டத்தை துவங்கலாம் என்று நேரம் பார்த்திருக்கின்றார்கள்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு. புதிய அரசியல் யாப்பு என்று வரும் போது அரசுக்கு எதிரானவர்கள் சக்தி பெற வாய்ப்புக்கள் இருக்கின்றன. அத்துடன் இந்த ஆட்சியை சர்வதேச சதிகாரர்களுடன் சேர்ந்து கவிழ்த்து அதன் மூலம் தமது விமோசனத்தை எதிர்பார்க்கும் ஒரு குற்றவாளிகள் கும்பல்-கூட்டமும் நாட்டில் இருப்பதை ஆடசியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.