-யூசுப் என் யூனுஸ்-
ஜனாதிபதி அணுர குமாரவின் அனைத்து செயல்பாடுகளிலும் பொதுவாக நாட்டில் ஒரு நல்லெண்ணம் நம்பிக்கைதான் இருந்து வருகின்றது. பேரின சமூகம் அவர் மீது அதித நம்பிக்கை வைத்திருக்கின்றது.
இன ரீதியாகப் பார்க்கின்ற போது முற்றும் முழுதாக அப்படியான ஒரு நிலை நாட்டில் இல்லை என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் சிறுபான்மை சமூகங்களும் அணுர-என்பிபி. அதிகாரத்துக்கு வர கணிசமான ஆதரவை வழங்கி இருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
என்னதான் இன மத ரீதியில் சிந்திக்கக் கூடாது என்று உபதேசங்களை ஆட்சியாளர்கள் சொன்னாலும் கூட இனம் மதம் என்பன இந்த வையகம் இருக்கும் வரை இருந்து கொண்டுதான் வரும்.
எனவே ஏசு, புத்தர், முஹம்மத் போன்ற மா பெரும் மனிதர்களினால் கூட முற்றும் முழுதாக இந்த உலகை ஒரு மதம் இனம் என்று ஒரே குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை.
சமூக ரீதியில் பார்க்கின்ற போது இனம் மதம் என்ற பிரிவுகள் நாட்டில் இருந்து கொண்டுதான் வருகின்றன-வரும். 1917ல் ரஸ்யப் புரட்சி நடை பெற்ற போது அங்கும் பல்லின சமூகங்கள் வாழ்ந்து வந்தன. இன்றும் அதே நிலைதான் அங்கு. ரஸ்யா சனத் தொiயில் 14 கோடி.
இதில் மிகப் பெரிய சிறுபான்மை சமூகம் முஸ்லிம்கள். அது கிட்டத்தட்ட இரண்டு கோடி வரை. ஒரு சமவுடமை நாடு என்பதற்காக அந்தப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டு கடந்தாலும் இனம் மதம் என்பன இன்றும் அங்கு அழிந்து போகவில்லை. அவை வலுவாகத்தான் இருந்து வருகின்றன.
அதே போன்று சீனாவிலும் இன்று இரண்டு கோடி வரை முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அங்கும் கூட மதம் இனம் என்பன இருந்து வருவதுடன் அதிகாரம் மிக்க பதவிகளில் ரஸ்யாவைப் போலவே முஸ்லிம்கள் நிறையவே இருக்கின்றார்கள். செல்வாக்கான அமைச்சுக்களில் பல முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.
அதற்காக இங்கும் முஸ்லிம்களுக்கு அமைச்சுக்கள் தந்துதான் ஆக வேண்டும் என்று நாம் வாதிட வரவில்லை. இனம் மதம் என்பன வேறோடு கலையப்படக் கூடியதல்ல அவை கௌரவிக்கப்படக் கூடியவை என்பதுதான் எமது வாதம். இப்போது அணு குமாரவின் அமைச்சு விவகாரத்துக்கு வருவோம்.
அமைச்சு வழங்கிய நிமிடத்தில் இருந்தே விமர்சனங்கள். அப்படி விமர்சனங்களைப் பண்ணிக் கொண்டிருப்போரில் பல்வேறு மட்டங்களும் தரங்களும் அதில் அரசியல் சார்ந்த நோக்கங்களும் இருக்கின்றன.
அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்துவதற்குத் தனித்தனி விளக்கங்கள் கொடுக்க வேண்டும். என்னதான் யதார்த்தங்களைச் சொன்னாலும் நாம் ஏற்கொனவே சொன்ன மதம் இனம் போல அது அகற்றிவிடக்கூடிய ஒன்றல்ல. விமர்சனங்கள் ஏதோ உருவில் வந்து கொண்டுதான் இருக்கும்.
சிறுபான்மையினருக்கு அமைச்சு இல்லாமல் போனாலும் அவர்களை அரசு ஒரு போதும் கைவிடாது என்பது எமது நம்பிக்கை.
முஸ்லிம்களுக்கு அமைச்சுக் கிடைக்கவில்லை என்ற அதே ஆதங்கம் தமிழர்கள் தரப்பிலும் இருக்கின்றது. ஆனால் அது பாரிய அளவில் எழவில்லை. இப்போதுதான் அது மெல்ல மெல்லப் பேசப்படுட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் அனுர அமைச்சர் அவையில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். சகோதரர். சந்திரசேகரனுக்கு கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டிருக்கின்றது. அதிலும் எல்லை கடந்த ஒரு அரசியல் இருக்கின்றது. புரிகின்றவர்களுக்குப் புரியும்.
அவர் வடக்கைச் சேர்ந்த ஒரு மனிதன் அல்ல. அத்துடன் அவருக்கு அமைச்சுக் கொடுத்தது பற்றி எவரும் கேள்வி கேட்கவும் முடியாது. அப்படியான கேள்விகள் அறியமையின் வெளிப்பாடு என்றுதான் நாம் சொல்ல முடியும்.
அவர் அந்த அமைப்புக்குச் செய்த தியாகங்கள் பற்றி அந்தக் கட்சிக்கு நன்றாகத் தெரியும். தன்னை கட்சி மலை நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்து அனுப்ப முடிவு செய்த போது சகோதரர் சந்திரசேகரன் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதற்கான நியாயமான சமூகக் காரணங்களை அவர் கட்சியிடத்தில் முன்வைத்தார். ஆனால் கட்சி அவரைக் கட்டாயப்படுத்தி பணிக்கு அங்கு அனுப்பி வைத்தது. அதன் ஊடாக இன்று மிகச் சிறந்த அறுவடையை அவர் கட்சிக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
இது இன்று சர்வதேச அளவில் பேசு பொருளாகி வருகின்றது. மேலும் சந்திரசேகரன் கல்வி மட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகின்றது. நாமக்குத் தெரிந்த வகையில் அவர் பல்கலைக்கழகம் முதல் கட்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். சிறை சென்றிருக்கின்றார்.
அதனால்தான் கடந்த சந்திரிகா காலத்திலே கட்சி அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது. சரோஜா சாவித்திரி போல்ராஜ் என்பரும் அதே போன்றுதான். கட்சிக்கு பெரும் பங்காற்றி வந்ததால்தான் அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது. அவர் ஒரு ஆசிரியர். அவரது கணவர் ஒரு பேரினத்தைச் சேர்ந்த டாக்டர். அதனால் வடக்கு சமூகம் தனது இனத்துக்கு அமைச்சுக் கிடைத்தது என்ற ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
இதிலிருந்து நாம் முஸ்லிம் சமூகத்துக்கு எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால், வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்துக்குக் கூட இன ரீதியாக ஒரு அமைச்சுக் கூட கொடுக்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம்கள் அளவிற்கு அவர்கள் அதனை ஒரு விவாதப் பொருளாக்கிக் கொள்ளவுமில்லை.
பல தசாப்தங்களாக அமைச்சு ருசியை டக்லஸ் மட்டுமே அங்கு பார்த்து வந்திருந்தார். இப்போது அவர் அமைச்சை வைத்த என்ன செய்தார் என்ற கதைகள் விவாதப் பொருளாகி வருகின்றன. இனி கோடு கச்சேரி என்ற காட்சிகள் வரக் கூடும்.
நாம் இப்படிக் கருத்துக்களைச் சொல்லி சிறுபான்மை சமூகங்களின் அமைச்சுக்களுக்கான கோரிக்கைகளை முன்வைப்பது தவறு என்று வாதிட வரவில்லை. வடக்கு கிழக்கு மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு குறைந்த பட்சம் தலா ஒரு கெபினட் அமைச்சுக்களையாவது வழங்கி இருக்க வேண்டும் என்பதுதான் நியாயமானது.
இதற்கு என்னதான் மாற்றுக் கருத்துக்களை சொல்லி விவாதங்களை முன்னெடுத்துச் சொன்றாலும் அவை சமூக ரீதியில் பார்க்கின்ற போதும் தேசிய ரீதியில் பார்க்கின்ற போதும் ஒரு வலுவான காரணங்களாக ஒரு போதும் அமையாது. இதனை ஆட்சியாளர்களும் அமைச்சுத் தேவையில்லை என்போரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பௌத்த பீடாதிபதிகள் இன்னும் பல தேரர்கள் பிர சமூகத்தினர் கூட முஸ்லிம்களுக்கு ஒரு அமைச்சையாவது வழங்கி இருக்க வேண்டும் என்றுதான் பகிரங்கமாக குரல் கொடுத்திருக்கின்றனர்.
அதே போன்று கடந்த தேர்தல் காலங்களில் அனுரவுக்கும் என்பிபி. க்கும் பகிரங்கமாக ஆதரவாக செய்திகளை சொல்லிக் கொண்டிருந்த பிரபல பேரின ஊடகவியலாளர்களும் இந்த விடயத்தில் விமர்சனங்களை செய்திருந்தனர்.
கடந்த காலங்களில் நமது செயல்களும் அப்படித்தான் இருந்தன. அமைச்சு விவகாரத்தில் எமது நிலைப்பாடும் இதுதான். எனவே எதிரணியினர்தான் இதுபற்றி குழப்புகின்றார்கள் என்ற வாதம் முற்றிலும் தப்பானது-பிழையானது.
அது அப்படி இருக்க முஸ்லிம்களுக்கு நீதி அமைச்சு வெளிவிவகார அமைச்சுக்களை கோட்டா வழங்கி இருந்த காலத்தில்தான் முஸ்லிம் உடல்கள் தீயில் போட்டு எறிக்கப்பட்டன. அதனை அந்த முஸ்லிம் அமைச்சர் அலி சப்ரியால் தடுக்க முடிந்ததா?
அத்துடன் அவர் ராஜபக்ஸாக்கள் இன்னும் குறைந்தது கால் நூற்றாண்டுகளுக்காவது இந்த நாட்டில் அதிகாரித்தில் இருப்பார் என்று சொல்லி முஸ்லிம் சமூகத்தை எச்சரித்து அந்த அரசுக்கு ஆதரவாக செல்படுமாறு பயமுறுத்தி வந்ததும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இது தவிர கடந்த காலங்களில் அமைச்சர் அவையில் தமது விகிதாசாரத்துக்கும் மிகைப்பட்ட தொகையில் முஸ்லிம் அமைச்சர்கள் அதிகாரத்தில் இருந்து வந்தனர். அதனால் சமூகத்துக்கு ஏதாவது நன்மைகள் நடந்திருக்கின்றனவா?
கடந்த இரு தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குப் பலத்தை காட்டி நமது தலைவர்கள் முழுக்க முழுக்க அமைச்சுக்களைப் பெற்று அரசியல் பலத்தை வைத்து வியாபாரங்களைத்தானே செய்து வந்தனர்.
அத்தோடு சமூக விரோத பிரேரணைகளுக்கு ஆதரவாக கைதூக்கி சமூகத் துரோகம் பண்ணியதும் இவர்கள் ஆட்கள்தானே. அவை அனைத்தும் அரசியல் டீல்களே அன்றி வேறு என்ன?
அரசியலில் இலாபமீட்டி தமது காஜானாக்களை நிரப்பி இப்போது இவர்கள் கோடிஸ்வரர்களாக மாறியது எப்படி? இதில் சிலர் பிறப்பிலே ஊழல்வாதிகள். அந்தக் கதை வேறு!
தனது உடன் பிறப்புக்களுக்கு மட்டுமல்லாது குடி மக்கள் வரிப்பணத்தில் அவர்களின் பிள்ளைகளுக்கும் கையாட்களுக்கும் இலட்சக் கணக்கில் சம்பளம் வாங்கியது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது நிலுவையில் இருக்கின்றன.
இவை பற்றி சமூகம் எப்போதாவது கேள்வி எழுப்பி இருக்கின்றதா.? அல்லது இது பற்றிய தகவல்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? தங்கம் கடத்தி சமூகத்துக்குத் தலைகுணிவை ஏற்படுத்தியது யார்.?
அப்படிப்பட்ட ஒரு சமூக விரோதிக்கு அதே கட்சி மீண்டும் வேட்பு மனுக் கொடுத்தது எப்படி? இது தனித்துவத் தலைவர்களுக்கு தெரியாதா?
இவற்றை எல்லாம் சொல்லி இந்த அமைச்சு விவகாரத்தில் அனுர தரப்பு நடவடிகையை நாம் நியாயப்படுத்த வருகின்றோம் என்பதல்ல. முஸ்லிம் அமைச்சுக்கள் என்பது கடந்த இரண்டு தசாப்தங்கள் வரை சமூக விரோதிகளின் கையில் சிக்கி நாட்டுக்கு அட்டகாசங்களை-அழிவத்தான் செய்து வந்திருக்கின்றன என்பதனையும் சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இந்த அமைச்ச விடயத்தை அதிகாத்தில் இருக்கின்ற தலைவர்களும் சிறுபான்மை சமூகங்களும் குறிப்பாக முஸ்லிம்கள் சமநிலைப்படுத்தி இந்த விவகாரத்தை சற்றுப் பொறுத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் எமது கருத்தாக இருக்கின்றது. சமூக விரோதிகள் இதனை வாய்ப்பாக பாவிக்க நிறையவே இடைவெளிகளும் இருக்கின்றன.