அமைச்சர் நசீர் அஹமதுக்கு எதிராக  SLMC போர்க் கொடி 

-யூ.எல். மப்றூக்-

இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக நேற்று திங்கட்கிழமை 17 பேர் பதவியேற்றுள்ள நிலையில், சுற்றுச் சூழல் அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் என்பவருக்கு எதிராக அவரின் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு நாடாளுமன்றில் 5 உறுப்பினர்கள் உள்ளபோதும், அந்த கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் மட்டுமே எதிர்கட்சி சார்பாக செயல்பட்டு வருகிறார். ஏனைய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்தனர்.

கடந்த காலத்தில் அரசாங்கம் கொண்டு வந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் மற்றும் வரவு -செலவுத் திட்டம் ஆகியவற்றை எதிர்த்து நாடாளுமன்றில் வாக்களிக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்து. ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் தவிர ஏனைய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகவே வாக்களித்தனர்.

இதனையடுத்து தமது 4 உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்தது. அந்த உறுப்பினர்கள் கட்சி அளவில் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.

இந்தப் பின்னணியில் தற்போது அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் பெருமெடுப்பில் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், தமது அரசாங்க சார்பு நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.

கட்சியின் தீர்மானங்களை மீறி அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வந்த முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்; இனி கட்சியின் தீர்மானத்தின் படி செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது அரசாங்கத்துக்கு தமது வெளிப்படையான ஆதரவை வழங்குவதிலிருந்தும் தவிர்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் பதவியேற்றுள்ளார்.

அவமானச் சின்னம்

இதனையடுத்து, “ஹாபிஸ் நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக் கொண்டுள்ளார்” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் காங்கிரஸ் நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றில் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார்.

“முழு நாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு, அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட், தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார்”.

“ஏற்கனவே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியமைக்காக நஸீர் அஹமட் உட்பட 04 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் பதவியை நசீர் அஹமட் பெற்றுக் கொண்டமையானது மிகவும் அசிங்கமானது” என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீடம் எதிர்வரும் வெள்ளிகிழமை (22) உத்தியோகபூர்வமாக ஒன்றுகூடி, நஸீர் அஹமட்டுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் ரஊப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த ஹாபிஸ் நசீர் அஹமட்

முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் நெருக்கமாக இருந்து, அந்தக் கட்சியின் முக்கிய நபராக செயற்பட்டு வந்தவர் ஹாபிஸ் நசீர் அஹமட்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட முக்கிய சொத்துக்களின் பொறுப்புதாரியாகவும் இவர் உள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையும் இவர் பதவி வகித்திருந்தார்.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டமைத்து, பொதுச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்ட அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும், தனது சொந்தச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அங்குதான் ஹாபிஸ் நசீரும் களமிறங்கினார்.

முஸ்லிம் காங்கிரஸுக்கு 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதும், அந்தக் கட்சியின் சொந்தச் சின்னத்தில் (மரம்) போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எனும் சிறப்பான அடையாளம் ஹாபிஸ் நசீருக்கு உள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் செய்து வந்தபோதிலும், அந்தக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய ஹாபீஸ் நசீர்; தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவேன் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் கோபமடைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம்; தனது கட்சி வேட்பாளரான ஹாபிஸ் நசீருக்கு ஆதரவை வெளிப்படுத்தாத வகையில் பொதுத் தேர்தல் களத்தில் செயற்பட்டு வந்தார். ஆயினும், அவற்றையெல்லாம் மீறி, அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார் ஹாபிஸ் நசீர் அஹமட்.

ஹாபிஸ் நசீர் சொல்வது என்ன?

இந்த நிலையில் பிபிசி தமிழுக்கு பேசிய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தற்போதைய அரசாங்கத்துடன் தங்களை இணைத்து விட்டவர் தமது கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் என்கிறார்.

“பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டிடுக்கு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் தேதி மிலிந்த மொரகொடவுடன் (தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர்) ஒரு தடவை சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து தனக்குத் தேவையான அனைத்து ஒப்பந்தங்களையும் செய்து முடித்தார்” என்றும் ஹாபிஸ் நசீர் தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கம் கொண்டு வந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தமக்கு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்தான் கூறியதாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வீட்டுக்கு 2020 ஒக்டோபர் 18ஆம் தேதி பசில் ராஜபக்ஷ வந்து ஹக்கீமுடன் பேசியதாகவும், அப்போது – தான் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு இருந்ததாகவும் கூறிய ஹாபிஸ் நசீர் அஹமட்; “அதன்போது முஸ்லிம் காங்கிரஸின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்தை ஆதரித்து நாடாளுமன்றில் வாக்களிப்பார்கள்” என்று, பசீல் ராஜபக்ஷவிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதி வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவுடனான அந்த சந்திப்பு பகல் 12.16 மணிக்கு ஆரம்பித்து 1.15 வரைக்கும் நடந்ததாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார்.

“அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்றில் நான் உரையாற்றிய போது, எமது கட்சித் தலைவர் மனச்சாட்சிக்கு அமைவாக வாக்களிக்குமாறு எங்களுக்குக் கூறியுள்ளார் என கூறினேன். அதனை தலைவர் ஹக்கீம் கேட்டுக் கொண்டிருந்தார். நான் கூறியது பொய் என்றால், அவர் என்னை இடைமறித்து, ‘நீங்கள் 20ஆவது திருத்தத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்’ எனக் கூறியிருக்கலாமல்லவா? ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. காரணம், அவரின் உத்தரவுக்கு அமைவாகத்தான் அன்று 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நாம் வாக்களித்தோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தம்மை அரசாங்கத்தின் பக்கம் செல்லுமாறு கூறிவிட்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தன்னை குற்றப்படுத்திக் கூறுவது – எந்தவகையில் நியாயம் எனவும் ஹாபிஸ் நசீர் கேள்வியெழுப்பினார்.

விதியை மீறிய இருவர்

முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், பல்வேறு தடவை அரசாங்கங்கள் ஆட்சியமைப்பதற்கு ஆதரவளித்துள்ளதோடு, தமது கட்சி சார்பில் அமைச்சர் பதவிகளையும் பெற்றிருந்தார். அதன்போது அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவிகளை தனக்கு மட்டுமே அவர் பெற்றிருந்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 2000ஆம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தொன்றில் மரணமடைந்தமையினை அடுத்து, அந்தக் கட்சியின் தலைமைப் பதவியை ரஊப் ஹக்கீம் பெற்றுக் கொண்டார்.

அவர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்துள்ள 22 வருட காலத்திலும், பல்வேறு தடவை பல அரசாங்கங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக இருந்துள்ளதோடு, ரஊப் ஹக்கீமும் கேபினட் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்த சந்தப்பங்களில் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதியமைச்சர் மற்றும் அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சர் பதவிகளையே ஹக்கீம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

அந்த வகையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் மட்டுமே அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்கிற ‘எழுதப்படாத ஒரு விதி’ இருந்து வந்தது. இந்த விதியை முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராகப் பதவி வகித்த பசீர் சேகுதாவூத் மீறி, மஹிந்த ராஜபக்ஷ கடைசியாக ஜனாதிபதியாக இருந்தபோது, ஹக்கீமுக்குத் தெரியாமல் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் அந்தக் கட்சியின் அப்போதைய தவிசாளருக்கும் இடையில் இருந்து வந்த முறுகல் நிலை, பெரும் போராக மாறுவதற்குக் காரணமாக அமைந்தது. இதன் பின்னர் பசீர் சேகுதாவூத் கட்சியிலிருந்தே விலகிச் செல்ல நேரிட்டது.

இப்போது முஸ்லிம் காங்கிரஸின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ஹாபிஸ் நசீர் அஹமட், தனது கட்சித் தலைவருடைய ‘எழுதப்படாத விதி’யை மீறி, அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியொன்றைப் பெற்றுள்ளார்.

இனி, முஸ்லிம் காங்கிரஸுக்குள் அவரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை, எதிர்வரும் 22ஆம் தேதி கட்சியின் உயர்பீடம் எடுக்கும் தீர்மானத்தின் பின்னர்தான் அறிய முடியும்.

Previous Story

கோட்டாவின்  மூவர் ஓட்டம்

Next Story

நாம் சொன்னபடி ஹக்கீம் மூக்கை உடைத்தார் ஹாபீஸ் நசீர்