அமெரிக்கா மீது கோபம் ரஷ்யாவுடன் நெருக்கம்! மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கோபம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் சட்டப்பிரிவு 99 ஐ நடைமுறைப்படுத்திய பின்னர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.சட்டப்பிரிவு 99 அமுல்படுத்தப்பட்ட பின்னர், காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையை நிறுத்த பாதுகாப்பு கவுன்சில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்தை முன்மொழிந்து. அதன் மீது வாக்கெடுப்பு நடந்தது. பாதுகாப்பு கவுன்சிலின் 13 உறுப்பினர்கள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் அமெரிக்கா அதை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தது.பிரிட்டன் இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருந்தது. ஆனால் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதால் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது.

வீட்டோ அதிகரத்தை பயன்படுத்தியதற்கு ஆதரவாக வாதிட்ட ஐ.நா.வுக்கான அமெரிக்க துணை தூதர் ராபர்ட் ஆர். வூட், “போர் நிறுத்த தீர்மானத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் ஹமாஸ் தாக்குதலை கண்டிக்கவில்லை” என்றார். குறிப்பாக, இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றிய அறிக்கைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு என்பதையும் தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய கோபம்

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்கா மீது அரபு நாடுகள் கோபம்

1950 களில் இருந்து, அரபு நாடுகளும் இரானும், சர்ச்சைக்குரிய பாலத்தீனப் பகுதியில் ராணுவ மற்றும் மனிதாபிமான பிரச்னைகள் வெடித்ததால், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எண்ணெய் வளத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது பற்றி விவாதித்து வருகின்றன.

இரண்டு முறை எண்ணெய் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. முதலில் 1967 இல் ஆறு நாள் போரின் போதும், ​​பின்னர் 1973 இல் யோம் கிப்பர் போரின் போதும் எண்ணெய் வினியோகம் நிறுத்தப்பட்டது. முதல் தடை பலனளிக்கவில்லை, ஆனால் இரண்டாவது தடை ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.

மேற்கத்திய நாடுகளும் அரபு நாடுகளும் இச்சம்பவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டன. எனவே, இப்போது யாரும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது பற்றிப் பேசுவதில்லை. யாரும் அவ்வாறு செய்ய விரும்புவதில்லை.

50 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் தன்னை யாரும் தாக்க மாட்டார்கள் என்று நினைத்தது போல அமெரிக்காவும் அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தாது என்று நினைத்தது. ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் நடந்தன.

கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா உலகளாவிய பங்கை வகிக்க வேண்டும் என்று அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அடங்கிய குழு அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது.

சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், வெள்ளிக்கிழமையன்று வாஷிங்டனில் பேசிய போது, “நாங்கள் பயன்படுத்தக் கூடிய செல்வாக்கை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதால் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம்,” என்றார்.

சர்வதேச சமூகம் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. சர்வதேச அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு, உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. போர் நிறுத்தம் என்பது ஒரு தோல்வியைத் தாங்கிய சொல்லாக மாறிய நிலையை நாம் பார்க்கிறோம். வெளிப்படையாகச் சொன்னால், நாங்கள் அதைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்.

ஓமன் வெளியுறவு அமைச்சர் பதர் அல்புசைதி அமெரிக்காவின் வீட்டோ அதிகாரம் தற்போது பயன்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

“பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோவைப் பயன்படுத்துவது மனித விழுமியங்களை அவமதிக்கும் செயல்” என்று ஓமன் வெளியுறவு அமைச்சர் தமது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். “யூதவாதத்துக்காக அப்பாவி குடிமக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கும் அமெரிக்காவை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். இன்றைய இந்த வீட்டோ வரலாற்றில் அவமானமாக பார்க்கப்படும்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சரின் இந்த எதிர்வினை குறித்து, ‘திங்க் டேங்க் குயின்சி இன்ஸ்டிட்யூட்டின்‘ துணைத் தலைவரான ட்ரிட்டா பார்சி தமது எக்ஸ் பதிவில், “ஐ.நா.வில் போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் வந்த போது, வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக ஓமன் அமைச்சர் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்,”என்று எழுதியுள்ளார். ஓமன் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. பைடன் தனது நல்ல நண்பர்களைக் கூட இஸ்ரேலுக்காக ஒதுக்கி வைக்கிறார்.

எனினும், இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் மீது எவ்வளவு கோபம் காட்டினாலும், அவர்களால் அதிகமாக எதுவும் செய்ய முடியாது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1973 அரபு-இஸ்ரேல் போரின் போது, அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியிருந்த நிலை வேறுபட்டது.

அந்த காலகட்டத்தில் அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு விதிக்கப்பட்ட எண்ணெய்த் தடைக்குப் பிறகுதான் அமெரிக்கா எண்ணெய் விநியோகத்திற்கான மாற்று ஆதாரங்களைத் தேடத் தொடங்கியது.

இஸ்ரேலைப் பொறுத்தவரையில், ஹமாஸுடனான அதன் போர் தொடர்ந்தால், மற்ற அரபு நாடுகளும் அதனுடன் இணைந்தால், அதன் நிலைமை சிக்கலானதாக மாறலாம். ஏனெனில் தாக்குதலின் போது, இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் டேங்கர்கள் வரும் இஸ்ரேலின் துறைமுகங்கள் குறி வைக்கப்படும் ஆபத்து வலுவாக இருக்கிறது.

இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய கோபம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலின் படுகொலைகளை ஆதரித்துள்ளதாக அரபு நாடுகள் விமர்சிக்கின்றன.

வீட்டோவுக்குப் பிந்தைய அமெரிக்காவின் விமர்சனம்

பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய பின், அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தனர்.

பிளிங்கனின் உதவியாளர்கள் காஸாவின் எதிர்காலத்தைப் பற்றி அவர் பேச விரும்புவதாகக் கூறினர். ஆனால் ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் எமான் சஃபாடி அவரது அணுகுமுறையை நிராகரித்தார்.

“இன்றைய மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஆதரிப்பதில் தோல்வி என்பது பாலத்தீனர்களைப் படுகொலை செய்வதை ஊக்குவிக்கிறது என்பதுடன் சர்வதேச சட்டங்களை மீறுவது மற்றும் போர்க்குற்றங்களைச் செய்வதற்கு சமம்” என்றார்.

அதேநேரத்தில், துருக்கியும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதை கடுமையாக குறிவைத்துள்ளது. உலக மனித உரிமைகள் தின நிகழ்வில் அதிபர் ரெசெப் தயிப் எர்துவான், “மேற்கத்திய நாடுகளின் அசைக்க முடியாத ஆதரவைப் பெற்றுள்ள இஸ்ரேல், காஸாவில் படுகொலைகளை நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் உலகம் நியாயமாகச் செயல்படவேண்டும். ஆனால் அமெரிக்காவால் எதுவும் நடக்காது. ஏனெனில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது,” தெரிவித்தார்.

மேலும், அப்போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை எர்துவான் வலியுறுத்தினார்.

முன்னதாக, துருக்கியின் வெளியுறவு அமைச்சர், வீட்டோவுக்குப் பிறகு, காஸா விவகாரத்தில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார் . துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், ஓஐசி மற்றும் முஸ்லிம் நாடுகளின் அமைப்பான அரபு லீக்கின் சக ஊழியர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, அரசின் செய்திநிறுவனமான TRT க்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவை குறிவைத்துத் தாக்கிப் பேசினார்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடந்த போது அமெரிக்கா தனித்து நிற்கிறது என்பதை நமது நண்பர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

துருக்கி மேற்கத்திய நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பான நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. ஆனால் மற்ற உறுப்பினர்களைப் போல, அது ஹமாஸை ஒரு தீவிரவாத குழுவாக கருதவில்லை.

இரானின் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய பிறகு மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“யூதவாத ஆட்சியின் (இஸ்ரேல்) குற்றங்கள் மற்றும் போர்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் வரை, இப்பிராந்தியத்தில் கட்டுப்படுத்த முடியாத ஒரு போர்ச்சூழல் வெடிக்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது,” என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுடனான தொலைபேசி அழைப்பின் போது கூறினார் .

மலேசியாவின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதமர்கள் இருவரும் அமெரிக்கா தற்போது வீட்டோவைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், “அப்பாவி குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை ஆதரிக்கும் நாடுகள் இருப்பதும், அவை மௌனமாக இருப்பதும் விசித்திரமானது. மனித மனசாட்சிக்கு அப்பாற்பட்டது,” என்றார்.

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, யூடியூப் சேனல் ஒன்றுடன் பேசுகையில், இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரிப்பது தாராளவாதத்துடன் எந்த தொடர்பும் கொண்ட வெளிப்பாடு அல்ல என்று கூறினார்.

இஸ்லாமிய நாடுகளின் தற்போதைய கோபம்

அமெரிக்காவின் செயல்பாடுகளின் காரணமாக அரபு நாடுகள் ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

ரஷ்யா – அரபு நாடுகள் இடையே அதிகரிக்கும் நெருக்கம்

கடந்த வாரம்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் மறுநாளே மாஸ்கோவில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை புதின் சந்தித்தார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் அரபு நாடுகளை அமெரிக்கா குறிவைத்து இருக்கும் நிலையிலேயே புதின் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.

யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, விளாடிமிர் புதின் சில நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளார். இதில் அரபு நாடுகளுடன் ரஷ்யாவின் நெருக்கம் அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

சௌதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவான OPEC Plus இல் உறுப்பினர்களாக உள்ளன. மேலும் இது தொடர்பான எந்த முக்கிய முடிவுகளிலும் அவற்றின் செல்வாக்கு முக்கிய இடம்பெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையேயான உறவுகள் வலுவடைந்து வருவதாகத் தெரிகிறது.

சௌதி அரேபியாவுக்கு வந்த போது, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனக்கு அழைப்பு விடுத்ததற்கு புதின் நன்றி தெரிவித்தார். முன்னதாக முகமது பின் சல்மான் ரஷ்யாவுக்கு வரப் போகிறார் என்றும் ஆனால் பயணத் திட்டங்களில் சில மாற்றம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும், அடுத்த கூட்டம் மாஸ்கோவில் நடைபெறும் என்பது தெளிவாகியுள்ளது.

யுக்ரேன் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யாவுடன் சௌதி அரேபியாவின் உறவுகள் வளர்ந்து வருகின்றன. இதனால், அமெரிக்காவைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை நோக்கி நகரும் விதத்தையும் காட்டுகிறது.

ரஷ்ய அதிபர் புதினின் அறிக்கையிலும் இது பிரதிபலிக்கிறது. “எங்கள் நட்பு உறவுகள் முன்னேறுவதை எதுவும் தடுக்க முடியாது,” என்று பட்டத்து இளவரசரிடம் அவர் கூறினார்.

மறுபுறம், பல ஆண்டுகளாக சௌதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் பல ஏற்ற தாழ்வுகள் உள்ளன. இருப்பினும் அது அமெரிக்க ஆயுதங்களை அதிகம் வாங்கும் நாடாகவே திகழ்கிறது. ஆனால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போருக்குப் பிறகு, அமெரிக்காவுடனான சௌதி அரேபியாவின் மேம்பட்ட உறவுகள் ஸ்தம்பித்துள்ளன.

அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய பிறகு, சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் காஸாவில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் உலகின் பல நாடுகளின் அரசாங்கங்கள் அதை தங்கள் முன்னுரிமையாக கருதவில்லை என்று தெரிகிறது.

Previous Story

வாழ்வுக்கு போராடும் அரசியல் கட்சிகள்!

Next Story

வாராந்த அரசியல்