வளைகுடா பிராந்தியத்தில் ராணுவத்தை அமெரிக்கா தொடர்ந்து குவித்து வரும் போக்கு வெறும் எச்சரிக்கை என்பதை தாண்டி மோதலுக்கு நேரடியாக தயாராகும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
இரானிய கடல் பகுதிக்கு அருகே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பலின் வருகை ஏற்கனவே ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில், மற்றொரு விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டும் (USS Gerald R Ford) அந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உலகின் மிக வலிமையான ராணுவம் மற்றும் மத்திய கிழக்கில் அதன் பலமான கூட்டாளியான இஸ்ரேலை எதிர்கொண்டாலும், இரானியத் தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஏன் இன்னும் விட்டுக் கொடுக்காமல் உள்ளனர்?
அதற்கான பதில் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளில் உள்ளது என்றே கூறலாம்.

இரான் பார்வை என்ன?
இரான் பார்வையில், அந்த கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கானது மட்டுமல்ல, மாறாக நிபந்தனையற்ற சரணடைதலுக்கு சமமானவை.
யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துவது, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வரம்பைக் குறைப்பது, பிராந்தியம் முழுவதும் உள்ள ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவை நிறுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டபடி, இஸ்லாமியக் குடியரசு தனது சொந்த குடிமக்களை நடத்தும் விதத்தை மாற்றியமைப்பதும் அதில் அடங்கும்.
இரான் தலைமையை பொறுத்தவரை, அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகள் இரானின் இரண்டாம் நிலை கொள்கைகள் அல்ல. மாறாக அவை அனைத்தையுமே தங்களின் பாதுகாப்பு கட்டமைப்புக்கான மைய அம்சமாக இரான் கருதுகிறது.

‘எதிர்ப்பின் அச்சு’
தனக்கு வலிமையான சர்வதேச கூட்டாளிகள் இல்லாத நிலையில், ‘எதிர்ப்பின் அச்சு’ என்ற கட்டமைப்பை உருவாக்க பல ஆண்டு காலத்தை இரான் செலவிட்டுள்ளது.
இது மோதலை இரானின் எல்லைகளிலிருந்து விலக்கி வைத்து, அழுத்தத்தை இஸ்ரேலுக்கு அருகில் தள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களின் ஒரு வலையமைப்பாகும்.
பழமையான விமானப்படை மற்றும் குறைவான நவீனத்தன்மை கொண்ட தனது ராணுவ தொழில்நுட்பத்துக்கான மாற்றாக இரானுக்கு அதன் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் உள்ளது.
அணுசக்தித் திட்டம் அதிகாரப்பூர்வமாக அமைதி நோக்கங்களுக்கானது என கூறப்பட்டாலும், அது பெரும்பாலும் ஒரு தடுப்பு சக்தியாகவே பார்க்கப்படுகிறது.
எனவே இத்தகைய விஷயங்களில் தனது ஆதிக்கத்தை குறைப்பது இரானின் பார்வையில், அதன் தடுப்பு திறனுக்கான அடித்தளத்தையே தகர்த்துவிடுவது போல.

போரை எதிர்கொள்வதை விட ஆபத்தானதா?
இரானின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி பார்வையில், இத்தகைய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது, அமெரிக்காவுடன் ஒரு சிறிய போரை எதிர்கொள்வதை விட ஆபத்தானதாக தெரியலாம்.
பெரிய இழப்புகளை ஏற்படுத்தினாலும் ராணுவ மோதல் மீண்டெழுவதற்காக வாய்ப்பாக அவருக்கு தெரியலாம். ஆனால், வியூக ரீதியான விஷயத்தில் பின் வாங்குவது அந்த வாய்ப்பை வழங்காமல் போகலாம்.
ஆனால், இந்த கணக்கீட்டின் பின்னால் உள்ள அபாயங்கள் மேலோட்டமானவை அல்ல, அதே போல அத்தகைய அபாயங்கள் இரானுக்கு மட்டும் இல்லை.
அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் அதன் ஆரம்ப கட்டத்திலேயே உயர்மட்டத் தலைமையைக் குறிவைக்கக்கூடும். காமனெயி கொல்லப்பட்டால், அது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், ஒரு பலவீனமான தருணத்தில் அடுத்த தலைமையை உருவாவதையும் சீர்குலைக்கக்கூடும்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் மீதான தாக்குதல்கள், இஸ்லாமிய குடியரசின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் வன்முறை ஒடுக்குமுறைக்குப் பிறகு சமீபத்தில் கட்டுப்பாட்டை நிலைநாட்டிய கட்டமைப்பை பலவீனப்படுத்தக்கூடும்.

“கடல் ஆச்சரியங்கள்” என்ற தலைப்புடன், இரானிய நாளிதழான வதன்-இ எம்ரூஸின் பிப்ரவரி 19 பதிப்பு
அண்மையில் வீதியில் இறங்கி போரடியவர்கள் அரசு கடும் பலத்தை பயன்படுத்திய பிறகே பின்வாங்கினார்கள். ஆனால், அவர்கள் இன்னும் அதிருப்தியுடன்தான் உள்ளனர். எனவே அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது உள்நாட்டு சமநிலையை கணிக்க முடியாத வகையில் மாற்றக்கூடும்.
மற்றொரு புறம் பொருளாதார அழுத்தமும் ஆபத்தை அதிகரிக்க கூடியதாக உள்ளது.
ஏற்கனவே பொருளாதாரத் தடைகள், பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் பொருட்களை வாங்கும் திறன் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இரானின் பொருளாதாரம், ராணுவ மோதலைத் தொடர்ந்து ஏற்படும் அதிர்ச்சிகளைத் எதிர்கொள்ள சிரமப்படும்.
அதே போல, எண்ணெய் ஏற்றுமதிக்கு ஏற்படும் இடையூறு அல்லது உட்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம், மக்களின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தும்.

இரானில் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன.
இரான் உறுதியுடன் எதிர்ப்பது ஏன்?
இந்த பின்னணியில் பார்த்தால் இரான் உறுதியுடன் எதிர்ப்பது பல நோக்கங்களை கொண்டுள்ளது. அதாவது வெளியுலகிற்கு இஸ்லாமிய குடியரசின் உறுதியைக் காட்டும், உள்நாட்டில் அதன் பலத்தை காட்டும். ஆனால் அதே சமயம் சமரசத்திற்கான வாய்ப்பையும் சுருக்கும்.
ஒருவேளை விரிவான போர் மூண்டால் இரு தரப்பும் விரும்பாத விளைவுகளை உருவாக்கக்கூடும். இரானில் அதிகார வெற்றிடம் உருவானால், புதிய, சிதறிய அல்லது தீவிர கருத்துக்களை அதிகார மையங்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது.
இது பிராந்திய அதிகார சமநிலையை சிக்கலாக்கி, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு விருப்பமற்ற விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
அதி உயர் தலைவருக்கு தற்போது சாதகமான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது இரானின் எதிர்ப்பு உத்தியை பலவீனப்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.
அவற்றை நிராகரிப்பது உள்நாட்டிலேயே பலவீனமாக இருக்கும் சமயத்தில் மோதலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
அதி உயர் தலைவர் மிக மோசமான வாய்ப்பாக கருதக்கூடியது வீயூக ரீதியான சரணடைதல், அதைவிட குறைவான மோசமான வாய்ப்பு கட்டுப்படுத்தக் கூடிய சிறிய ராணுவ மோதலில் ஈடுபடுவது ஆகிய இரண்டு விஷயங்களில், இரான் இரண்டாவது விஷயத்தை தேர்வு செய்வது போல தெரிகிறது.





