அமெரிக்காவுக்கும், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்புக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஏமனுக்குள் நுழைந்து அமெரிக்கா தாக்கியதற்கு ஹவுதிகளும் பதிலடி தாக்குதலை தொடங்கி உள்ளன. இதன் ஒருபகுதியாக ஏமனின் ஹவுதிகளின் அமெரிக்காவின் 2 முக்கிய ட்ரோன்களை ஏவுகணை மூலம் வீழ்த்தி உள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகள் ஈரானுக்கு ஆதரவாக பிற நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஏமனில் செயல்படும் அமைப்பு ஹவுதி. இந்த ஹவுதி அமைப்பினர் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தான் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கு இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் வணிக கப்பல்களை செங்கடல் பகுதியில் வைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் கடந்த மாதம் 16ம் தேதி அமெரிக்கா நேரடியாக ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகள் மீது கொடூர தாக்குதலை தொடங்கியது. செங்கடலில் நிறுத்தப்பட்டு இருந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் இருந்து விமானங்கள் பறந்து சென்று ஹவுதிகளின் படை தளத்தை குறிவைத்து அமெரிக்கா தாக்கியது.
ஏமன் தலைநகர் ஸனா மற்றும் வடக்கு சாடா பிராந்தியத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதையடுத்து ஹவுதி அமைப்பினரும், அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஏமனின் ஹவுதிகள் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் என்பது நீண்டு கொண்டே செல்கிறது.
இப்படியான சூழலில் தான் ஹவுதியின் புதிய நடவடிக்கை அமெரிக்காவை கலங்க வைத்துள்ளது. அதாவது ஏமன் மீது ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கி உள்ளது. தற்போது மரிப் மாகாணத்தை கைப்பற்ற ஏமன் ஹவுதிகள் முயன்று வருகின்றன. இந்த மாகாணம் என்பது எண்ணெய் மற்றும் கியாஸ் வளம் கொண்டது. தற்போது இது ஏமன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதற்கிடையே தான் நேற்று இரவு மரிப் மாகாணத்தில் ஹவுதிகளை நோக்கி அமெரிக்காவின் ட்ரோன் பறந்து சென்றுள்ளது. இந்த ட்ரோன் என்பது ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதனை ஹவுதியின் செய்தி தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் யாக்யா சாரி உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛அமெரி்காவின் எம்க்யூ 9 ட்ரோன் என்பது ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டள்ளது. இந்த ட்ரோன் என்பது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதன் தொடர்ச்சியாக தான் இன்று அமெரிக்காவின் எம்க்யூ – 1 Reaper ரக ட்ரோனை ஹவுதிகள் ஏவுகணை மூலம் வீழ்த்தி உள்ளனர். இந்த ட்ரோன் மரிப் மாகாணத்தின் மீது பறந்து வந்தபோது ஹவுதிகள் ஏவுகணையை ஏவி சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
ஹவுதியின் இந்த பதிலடி தாக்குதல் என்பது அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்காவின் ட்ரோன்களை தொடர்ந்து ஹவுதிகள் வீழ்த்தி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டில் இருந்து இதுவரை ஹவுதிகள் 26 அமெரிக்கா ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி உள்ளனர். இதனால் கோபமாகி உள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஹவுதிகளுக்கு கடும் வார்னிங் விடுத்துள்ளார்.
இதுபற்றி, ‛‛ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதல் என்பது வெறும் டிரைலர் தான். இன்னும் செல்ல செல்ல தாக்குதல் என்பது தீவிரப்படுத்தப்படும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.