அமெரிக்காவில் பசில் செய்த தண்டனைக்குரிய குற்றம்? 

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவை ஒருசிலருக்கு இல்லையென்று நாங்கள் நம்புகிறோம். குறிப்பாக நிதி அமைச்சருக்கு நாட்டிலுள்ள பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை மேலும் வலுப்படுத்தி நாட்டை பூச்சியத்துக்குக் கொண்டுச் செல்ல வேண்டுமென்பதே நிதி அமைச்சரின் தேவையாகவுள்ளது. தம்மை மேலும் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி எமது இயலாமையைப் பயன்படுத்தி, மேற்கத்தைய நாடுகளின் தேவைக்கு எம்மை பயன்படுத்த பார்க்கிறார்.

தற்போதுள்ள நிலைமை மேலும் தீவிரமடைந்ததும் ஏதாவது செய்து தமது தேவைகளை பூர்த்தி செய்யுமாறு மக்கள் கோருவார்கள். அவ்வாறான நிலைமை நாட்டில் உருவாகும்போது 500 அமெரிக்க டொலர் கடனுதவி தருகிறோமென்றும், எம்.சி.சி. உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறும் கோருவார்கள்.

அந்த உடன்படிக்கையிலுள்ள சிக்கல் நிலையை அறிந்த அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாம் என்று கூறுவார்கள். ஆனால், மக்கள் அவர்களுக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க எந்த உடன்படிக்கையிலாவது கைச்சாத்திட்டு பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டுமென மக்கள் கோருவார்கள்.

அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எம்.சி.சி. உடன்படிக்கையில் கைசசாத்திட்டு தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

இதன் காரணமாகவே, பிரச்சினை தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தாமலும், நிபுணர்களின் உதவியைப் பெறாமலும் இருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி மேற்கத்தையர்களை பலப்படுத்துவதே எமது நாட்டிலுள்ள சிலரின் தேவைப்பாடாகவுள்ளது.

அந்த நாடுகளுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இதனை முன்னெடுக்கிறார்கள். தங்களது இறுதிக் காலத்தை சிறப்பாகக் கொண்டு நடத்த முடியும். இவர்கள் செய்திருக்கும் தவறுகளும் அந்த நாடுகளுக்கு தெரியும்.

பசில் ராஜபக்ஷ இலங்கைப் பிரஜை இல்லை. அவர் அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டின் சட்டப்படி தண்டனை வழங்கக் கூடியளவுக்கு பாரிய குற்றத்தை செய்துள்ளார். அந்தத் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவார். அதன் காரணமாகவே நிதி அமைச்சர் இவ்வாறு செயற்படுகிறார்.

அவரின் திட்டங்கள் நிறைவேறியதும் இறுதிக் காலத்தில் தண்டனைகளை அனுபவிக்காமல் அவரது உறவுகளுடன் அமெரிக்காவில் இறுதிக் காலத்தை நிம்மதியாகக் கழிப்பார். தனது தனிப்பட்ட தேவைக்காக நாட்டை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றவே முயற்சிக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு சஜித் உரை

Next Story

ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள்