அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் காலிமுகத்திடல் ஆதரவு பேரணி

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது.

மக்களின் வாழ்வுரிமைக்காகக் காலிமுகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்துக்கான தமது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலிமுகத்திடல் நோக்கி இந்த அடையாளப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் நேரடியாக இந்த அடையாளப் பேரணியில் கலந்துகொள்வார்கள் எனவும், நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் அதேகாலப் பகுதியில் அந்தந்தப் பல்கலைக்கழகங்களில் அடையாளப் போராட்டத்தை நடத்துவார்கள் என எதிர்பார்கப்படுகின்றது எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டத்துக்கு கம்பன் கழகத்தின் நிறுவுநர் கம்பவாரிதி ஜெயராஜ் தலைமையிலான குழுவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டக் களத்துக்கு இன்று அவர்கள் நேரடியாகச் சென்று அரசாங்கத்திற்கு எதிராகக் கோஷம் எழுப்பியுள்ளனர்.

இந்து மக்கள் சார்பாகக் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்டோம் என்று கம்பவாரிதி ஜெயராஜ் இதன்போது தெரிவித்துள்ளார்.

Previous Story

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை14 பேர் கைது

Next Story

மைத்திரிக்கு சுரேன் ராகவன் ஆப்பு