இது சற்றும் நம்ப முடியாத ஒரு கதையாக இருந்தாலும் விவகாரம் முற்றிலும் உண்மை. மு.கா.வின் செல்வாக்கு மிக்க ஒரு செயலாளராகவும் தலைவர்களில் ஒருவராகவும் இருந்து சமூக உணர்வுடன் கட்சியில் செயலாற்றியவர்தான் நிந்தவூர் ஹசனலி.
சமூக மற்றும் கட்சி விவகாரங்களில் தலைவருடன் முரண்பட்டதால் அவரை ஹக்கீம் திட்டமிட்ட சதிமூலம் வெளியே தள்ளி விட்டார்.
இவரது வீட்டு விராந்தையில் நாடு அனுரவோடு (ரட அனுரட) என்ற பெரும் கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்த தகவல் நமக்குக் கிடைத்தது. இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள நாம் அவரைத் தொடர்பு கொண்டு நேரடியாக் கேட்டோம். ஆம் என்றவர் அதற்கு என்ன பிரச்சினை என்றும் எம்மை திருப்பிக் கேட்டார்.
நீங்கள் தலைவர் அஸ்ரஃபுடன் நெருக்கமாக இருந்தவர் செல்வாக்கான முன்னாள் மு.கா. செயலாளராகவும் இருந்தவர். உங்கள் இந்தச் செயல் கட்சியைப் பாதிக்காதா என்று நாம் திருப்பிக் கேட்டோம். நிச்சயமாக தாக்கத்தை செலுத்தும்-செலுத்த வேண்டும் என்றவர்,நான் ஏன் இப்படிச் செய்தேன் என்பதற்கு அவர் நமக்குத் தந்த விளக்கம் குறிப்பாக கிழக்கு சமூகம் எந்தளவுக்கு மாறிப்போய் இருக்கின்றது என்பதற்கு அது நல்ல சான்றாக இருந்தது.
அவரது கதையை இப்போது படித்துப் பாருங்கள் வீட்டுக்கு வருகின்றவர்கள் எல்லோரும் இதனை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு ஏன் இப்படி என்றும் என்னிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே நான் இதனை வைத்து விட்டேன். இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் மக்களை ஏமாற்றி கஸ்டத்தில் போட்டு விட்டனர் என்பது எனக்குப் புரிகின்றது.
அதனைவிடவும் இப்போது முஸ்லிம் தனித்துவக் கட்சி நடாத்துகின்றவர்கள் குறிப்பாக மு.கா. தலைவர் ஹக்கீம் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு சாபக்கேடாக மாறி பெரும் அட்டகாசங்களை இங்கு செய்து கொண்டிருக்கின்றார்.
தலைவர் அஸ்ரஃப் என்ன இலச்சியங்களுக்காக மு.கா.வை ஆரம்பித்தாரோ இன்று அந்தக் கட்சி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் பேராபத்தான ஒரு அமைப்பாக மாறி விட்டது. எனவே அதிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவதாக இருந்தால் முஸ்லிம்கள் என்பிபி.யை ஆதரிப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை.
இதனை இங்குள்ள புத்திஜீவிகள் மட்டுமல்ல பாமர மக்களும் உணர்ந்து விட்டார்கள். எனவே அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது என்போன்றவர்களின் சமூகப் பொறுப்பு. அதனைத்தான் நான் இங்கு காட்டி இருக்கின்றேன் என்று அவர் நமக்குக் கூறினார்.
இந்தமுறை திகாமடுல்ல-அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நாம் அவரை கேட்ட போது கல்முனை சம்மாந்துறை பொத்துவில் பிரதேசங்களில் ஏற்பட்டிருக்கின்ற அனுர அலையால் என்பிபி. மொத்தமாக உள்ள ஏழு (7) ஆசனங்களில் நான்கு (4) ஆசனத்தை கைப்பற்றும் என்று ஹசனலி அடித்துக் கூறுகின்றார்.
சிங்கள தமிழ் வாக்குகளை குறி வைக்கின்றார் ஹக்கீம்!
சரி கண்டியில் என்ன நடக்கின்றது என்று ஹசனலி எம்மைத் திருப்பிக் கேட்ட போது பணமும் நயவஞ்சகமும் தீர்மான சக்தியாக இங்கு இருக்கின்றன. மக்கள் வெறுத்துப்போய் இருக்கின்றார்கள்.
தலைவருக்கு முஸ்லிம்கள் வாக்குத் தராவிட்டாலும் சிங்கள தமிழ் வாக்கிலாவது அவர் கரை சேருவார் என்று அவரது கையாட்கள் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் என்று நாம் அவருக்கு பதில் கொடுத்தோம்.