-நஜீப் பின் கபூர்-
நன்றி: 19.01.2025 ஞாயிறு தினக்குரல்
‘இந்திய சீனா உறவு என்பது நமக்கு
கயிற்றில் நடக்கும் இராஜதந்திரம்’
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு தற்போது நாடு திரும்பி இருக்கின்றார். ஜனாதிபதியானதும் தனது முதலாவது விஜயத்தை இந்தியாவில் வெற்றிகரமாக முடித்துக் கொண்ட அனுர அங்கும் தனது நல்லுறவை உறுதிப்படுத்திக் கொண்டார். இப்போது சீனாவுக்குப் போய் பதினைந்து (15) உடன்படிக்கைகளைச் செய்து அதன் மூலமும் பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றர்.
இதில் ஹம்பாந்தோட்டையில் எண்ணைத் தாங்கிகளைப் புதிதாக அமைத்தல் மற்றும் இலங்கையில் விவசாயம் கல்வி மற்றும் ஊடகத்துறை மேம்;பாடுகள் இதில் அடக்கம். சீன ஜனாதிபதி சீ ஜின் பிங் மற்றும் பிரதமர் லீ உயர்மட்ட அரசியல் தலைவர்களை அனுர அங்கு சந்தித்ருக்கின்றார். அத்துடன் சீன ஜனாதிபதியை விரைவில் இலங்கைக்கு வருமாறும் அனுர அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியாவையும் சீனாவையும் சமமாக வைத்துக் கையால்வது என்பது ஒரு அசாதாரமான காரியம் என்றாலும் பெரும்பாலும் இதில் ஜனாதிபதி அனுர வெற்றி பெற்றிருக்கின்றார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். முன்பு ஒரு முறை இது கயிற்றில் நடக்கின்ற ஒரு செயல் என்று நாம் சொல்லி இருக்கின்றோம்.என்னதான் இருந்தாலும் இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் நமக்கு வாழ்வு கிடையாது என்பதனை அனுர நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.
ஆனாலும் அவரது அரசியல் எதிரிகள் இந்தியா விஜயத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தியது போல சீன விஜயத்தையும் விமர்சிக்க செய்வார்கள். அதே நேரம் இந்தியாவும் அவரது சீன விஜயத்தை அணு அணுவாக பிய்த்து ஆராந்து கொண்டுதான் இருக்கின்றது-இருக்கும். ஆனாலும் தனது மண்ணிலிருந்து இந்தியாவைக்கு எதிராக எந்த ஒரு துரோகச் செயல்களுக்கும் இங்கு இடம் கிடையாது என்ற ஒரு வலுவான செய்தியை அனுர இந்தியாவுக்குக் கொடுத்திருக்கின்றார்.
என்றாலும் இந்தியா இலங்கை-சீன உறவில் மிக மிக எச்சரிக்கையாக இருக்கின்றது. அதே போன்று அமெரிக்கா ஜப்பான் ஐரோப்பிய நாடுகளின் நிலையும் இதுதான். இதற்கு நல்ல உதாரணம்தான் இந்திய பிரதமர் மோடி இந்த வருடம் நடுப்பகுதி அளவில் இலங்கை வருகை தர இருக்கும் செய்தி சொல்கின்றது.
இது இந்தியாவின் அரசியல் இராஜதந்திரம் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையுடன் சீனாவின் நெருக்கத்தை அடிக்கடி சமன்படுத்திக் கொள்ளும் இந்தியாவின் யுத்தி இது. இதன் மூலம் ஜனாதிபதி அனுரவை தனது நெருக்கமான ஒரு நண்பனாக தொடர்ந்தும் வைத்துக் கொள்ள இந்திய முனைகின்றது.
அடுத்த என்னதான் சீனா அழுத்தங்கள் கொடுத்தாலும் அனுர முற்றும் முழுதாக சீனாவின் பக்கம்சாயும் சாத்தியம் இல்லை. அப்படி ஒரு முடிவை மேற்கொள்ள ஜனாதிபதி அனுர ஒரு முட்டாலும் கிடையாது. அனுர சீன விசிட் பற்றிய கதை அப்படி இருக்க தலைப்புக்கு வருவோம்.
நமது பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற ஒரு சிறு சலனம் கூட நாட்டில் பெரிய சரிவுகளை உண்டு பண்ணி விடும் என்று பல பொரியியல் விற்பண்ணர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர். அதே போன்று இந்த அரசுக்கு பொதுமக்கள் வழங்கிய ஆதரவும் அப்படிப்பட்ட ஒன்றுதான் என்பது எமது கருத்து.
நாம் இப்படிச் சொல்வதற்குக் காரணம் இந்த அரசுக்கு மக்கள் வழங்கிய ஆதரவானது அவர்களது அரசியல் சித்தாந்தங்களை-கொள்கைகளை ஏற்றுக் கொண்டதற்கான பதிவு அல்ல. மாறாக கடந்;த ஆட்சியாளர்கள் மீது குறிப்பாக ராஜபக்ஸாக்கள் மீது மக்களுக்கு இருந்து கோபத்தின் வெளிப்பாடாகத்தான் இது அமைந்திருந்தது என்பது நமது கணிப்பு. இந்த மக்களின் உணர்வுகள் எந்த நேரத்திலும் மாற்றமடைய-தடம்புறல முடியும்.
நாம் கடந்த காலங்களில் எழுதி வந்த அனேகமான கட்டுரைகள் ஒரு ஆட்சி மாற்றம் நாட்டில் கட்hயம் வர வேண்டும். நீதி நியாயங்கள் அனைவருக்கும் சமமாக வேண்டும். ஊழல் மோசடி மிக்க அரசியல்வாதிகள் களத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லி வந்ததால், இந்த அரசை பதவிக்கு அமர்த்துவதில் நமது பங்கும் இருக்கின்றது என்ற கருத்தில் அனுர அரசு மீதான விமர்சனங்களை செய்வோர் எம்மையும் கோள்விகளுக்கு ஆட்படுத்துகின்ற ஒரு நிலையை நாமும் பல இடங்களில் சந்தித்து வருகின்றோம். சிலர் முகத்திற்கே இதனை நம்மிடமும் கேட்கின்றனர்.
பொதுவாகத் தேர்தல் காலங்களில் அனுர தரப்பினருக்கு நாட்டில் பேரின சமூகத்தினர் மத்தியில் மூன்று அல்லது நான்கு (3-4) சதவீத ஆதரவு வாக்குகள் பதிவாகிய வந்த போது அதனை விட மிகவும் குறைந்த எண்ணிக்கை வாக்குகளே சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு வழங்கி இருந்தனர்.
இதனை எண்ணிக்கையில் சொல்வதாக இருந்தால் ஒரு ஆயிரம் வாக்காளர்கள் இருக்கும் சாவாடியில் சிங்கள மக்கள் முப்பது அல்லது நாற்பது (30-40) அளவில் வாக்குகள் வழங்கி வந்த போது அதே எண்ணிக்கையில் இருக்கும் சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற ஒரு வாக்குச் சாவடியில் இவர்களுக்கு மூன்று அல்லது நான்கு (3-4) வாக்குகள் மட்டுமே அங்கு பதிவாகி இருக்கும். அதுவும் தவறுதலாக விழுந்த வாக்குகள் என்று சொன்னாலும் பிழையாகாது. அந்தளவுக்குத்தான் அனுர தரப்பினருக்கு நாட்டில் ஆதரவு இருந்து வந்தது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இது தலைகீழாக மாறி பேரின மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு ஐம்பத்தி ஐந்து அறுபது (55-60) என்று அதிகரிக்கின்ற போது சிறுபான்மை மக்கள் மத்தியிலும் இது ஏறக்குறைய நற்பது ஐம்பது (40-50) சதவீத எண்ணிக்கையைத் தொட்டது. எனவே தான் நாட்டில் இருக்கின்ற மட்டக்களப்பு மாவட்டம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பொதுத் தேர்தலில் அனுர தரப்பினருக்கு வெற்றி கிடைத்தது.
இது நமது தேர்தலில் ஒரு வரலாற்றுப் பதிவாகவும் அமைந்தது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற போது நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களும் அனுர அணிக்கு நமது ஆதரவை வழங்கி வந்திருக்கின்றன என்பது மிகவும் தெளிவானது.
அவர்களின் கட்சிக் கொள்கைகள் மீது ஈடுபாடும் தியாகமும் செய்த பல ஆயிரக்கணக்கானவர்கள் இந்த என்பிபி. அமைப்பில் இருக்கின்றார்கள். அதிலும் ஜேவிபி.யினர் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் இவர்களுக்குக் கிடைத்த வாக்குகளைப் பார்க்கின்ற போது கடந்த தேர்தலில் ரஜபக்ஸாக்களை ஆதரித்தவர்களே அதிகளவில் தமது நிலைப்பாட்டை மாற்றி அனுர தரப்பினருக்கு வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
அதே நேரம் கணிசமான ஐமச-ஐதேக. ஆதரவாளர்களும் இந்த முறை இவர்களுக்கு வாக்களித்திருந்தனர். அதனால்தான் சஜித் மற்றும் ரணில் அணியினர் மிகவும் குறைந்த ஆசனங்களைப் பெறநேர்ந்தது. அதனால்தான் சிறுபான்மையினர் பெருவாரியாக வாழ்கின்ற யாழ்ப்பாணம் வன்னி திருகோணமாலை திகாமடுல்ல மற்றும் நுவரெலிய ஆகிய மாவட்டங்களிலும் அனுரதரப்பினர் வெற்றி கொள்ள முடிந்தது.
இப்பபடியாதொரு வெற்றி தங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் கூட நம்பி இருக்கவில்லை. எனவேதான் நமக்குக் கிடைத்த இந்த அசாதாரன வெற்றி மீது நாம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜேவிபி. செயலாளர் டில்வின் சில்வா கூட தமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பேசும் போது எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இவர்களுக்கு வாக்காளித்த அனைவரும் இவர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்ல முடியாது இதனை அனுர தரப்பினர் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
இந்த என்பிபி. அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்கள் மற்றும் பதவிகள் வழங்குகின்ற போது நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் அனுர அரசு மீது ஒரு அதிர்ப்தி ஏற்பட்டது. தமிழர் தரப்பில் இது பெரிய இசுவாக எடுத்துக் கொள்ளப்படவிட்டாலும் முஸ்லிம்கள் அதனை ஒரு பெரும் குறையாக எடுத்துக் கொண்டனர். அதே நேரம் நடுநிலையான பேரின ஊடகவியலாளர்கள் கூட இது நியாயம் இல்லாத ஒரு செயல் என்று கடும் விமர்சனங்களைச் செய்திருந்தனர் என்பதனை நாம் இந்த ஆட்சியாளர்களுக்கு சுட்டிக்காட்ட நேரம் வந்திருக்கின்றது என்று கருதுகின்றோம்.
முதலில் அனுர அமைச்சுக்களை வழங்குகின்ற போது வடக்குக் கிழக்கு தமிழர் தரப்பில் இருந்தும் முஸ்லிம் சமூகத்தில் இருந்தும் மலையத்தில் இருந்தும் குறைந்தது தலா ஒருவருக்காவது வாய்ப்புக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதில் மலையகத்தில் இருந்து சந்திரசேகரனுக்கு வாய்ப்புக் கிடைத்தது அவர் அந்த பதவிக்கு மிகவும் பொறுத்தமானவர்.
அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சுக் கூட இந்திய இலங்கை உறவு மற்றும் கடல் பிராந்தியத்தில் ஏற்படுக்கின்ற கொந்தளிப்புக்களை ஒரு தமிழரை வைத்து அனுகுவதற்காக வழங்கப்பட்ட ஒரு இரஜதந்திரம்-நியமனம்தான் இது என்பது எமது பார்வை. அது கூட தவறுகிடையாது. கடந்த காலங்களில் டக்லஸ் வகித்த பதவிதான் இது.
சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் இதற்கு பொறுத்தமான ஆட்கள் இல்லையே என்ற தோரணையிலும் சில பதில்கள் அப்போது கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் ஜேவிபி-என்பிபி.னர் பதவிகளை வழங்குகின்றவர்களுக்கு அதில் பாண்டித்தியம் அனுபவம் தேவை என்ற கட்டாயம் கிடையாது.
அந்த அரசியல் இயக்கத்தில் செல்வாக்கான செயல்பாட்டாளர்கள் நிருவாகிகள் நிறையவே இருக்கின்றார்கள். பொம்மை ஒன்றுக்கு பதவியைக் கொடுத்து இந்த ஆட்சியாளர்கள் விரும்பினால் அவரை ஊதிப் பெருப்பித்து ஒரு ஹீரோவாகவும் காட்ட முடியும். அதற்குத் தரமான ஆளணி அவர்கள் மத்தியில் போதுமான அளவு இருக்கின்றார்கள்.
எனவே தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் அவர்களுக்கு பதவிகளுக்கு ஆள்கிடைக்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு கதையல்ல. அவர்கள் மனம் வைத்திருந்தால் சிறுபான்மை சமூகங்களில் இருந்து சில அமைச்சர்களை அன்று நியமனம் செய்திருக்கலாம்.
அதே போன்று உச்ச நீதி மன்றத்துக்கு ஜனாதிபதி ஆட்களை நியமனம் செய்கின்ற போது சிரேஸ்டமானவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதுதான் சம்பிரதாயம்-வழக்கம் ஆனால் அண்மையில் ஜனாதிபதி இப்படி நியமனம் செய்த போது லபார் தாஹீர் என்பவர் ஓரம் கட்டப்பட்டிருப்பதன் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.
அவரை விட ஜூனியர்கள் இருவர் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள். மற்றுமொரு பெரும்பான்மை இனத்தவரும் ஓரம் கட்டப்பட்டிருக்கின்றார். ஆனால் அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் இந்த லபார் தாஹீர் மீது எந்த முறைப்பாடுகளோ குற்றச்சாட்டுக்களோ கிடையாது. லபார் தாஹிர் ஓரம்கட்டப்பட்டது தொடர்ப்பில் சிங்கள ஊடகவியலாளர்கள் பலரும் ஜனாதிபதி அனுரவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜனாதிபதி அனுரவின் கிளீன் ஸ்ரீலங்கா திட்ட முகாமைத்துவத்துக்கு ஆளணியை நியமிக்கின்ற போது அங்கும் சிறுபான்மையினருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இந்த கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஜனாதிபதி நிறைய அதிகாரங்களை வழங்கி இருப்பதும் அதன் மூலம் பல மாற்றங்னளை நாட்டில் செய்ய எதிர்பார்ப்பதும் தெரிந்ததே.
எனவே இந்தியாவில் மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் கோட்டா போன்றவர்களின் செயல்பாடுகளுக்கும் இடையே எந்த வேறுபாடுகளும் அனுர அரசில் கிடையாது என்றும் விமர்சனங்கள் தற்போது வருகின்றன. இது அனுர அரசுக்கு ஆரோக்கியமான ஒரு நிலை அல்ல. வருகின்ற தேர்தல்களில் இதற்கான பெறுபேருகள் கூட வரலாம் என்று நாம் அரசை எச்சரிக்கின்றோம்.
ஆனாலும் சிறுபான்மை சமூகத்தினர் மத்தியில் கூட அப்படி இன ரீதியான அமைச்சுக்கள் அவசியம் கிடையாது நல்லது நடந்தால் போதும் என்ற கருத்துடையவர்களும் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை. ஆனால் என்னதான் இனம் மதம் என்ற தனித்துவங்கள் எந்த ஒரு அரசியல் சிந்தனையாலும் ஆட்சியாலும் அழிந்து விடக் கூடிய ஒன்றாக இல்லை. எனவேதான் ரஸ்யா சீன போன்ற நாடுகளில் கூட சிறுபான்மை சமூகங்களில் இருந்து அமைச்சர்கள் அதிகாரிகள் ஆளுநர்கள் என்ற பதவிகள் 1917 ரஸ்யப் புரட்சி மற்றும் 1949 மவோ சேத்துங் காலத்திலிருந்து இன்றுவரை வழங்கப்பட்டு வருகின்றன.
அடுத்தது தற்போது இந்த சிறுபான்மை சமூகத்தில் இருந்து இன்று தெரிவாகி இருக்கின்ற நாடாளுமன்ற என்பிபி. உறுப்பினர்கள் கூட தமது சமூகம் தொடர்பான விவகாரங்களில் எந்தளவு தெளிவு-அறிவுடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதிலும் நமக்கு நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால் தெரிவாகி இருக்கின்றவர்கள் தமது அரசு-கட்சி மீதான அதித விசுவாசங்களை காட்சிப்படுத்த முனைவதால் எதிர்காலத்தில் இவர்களுக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்குமிடையே முரண்பாடுகளுக்கும் அதிக வாய்ப்பு இருக்கின்றன.
கடந்த ஆட்சிக் காலங்களிலும் இதே குறைபாடுகள் இருந்திருக்கின்றன. ஆனால் சமூகங்களின் தனித்துவ பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வுகளைக் கொடுக்க அனுர அரசு முயலுமாக இருந்தால் இவர்கள் சிறுபான்மை சமூகங்களின் சிவில் சமூகத்தினருடன் ஒரு நெருக்கமான உறவை-தொடர்பை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதே போன்று அனுர அரசுடன் சிறுபான்மை சிவில் அமைப்புக்களும் நல்லுறவை வளர்த்துக் கொள்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது. என்பது நாம் அரசுக்கும் சிறுபான்மை சமூகங்களுக்கும் கொடுக்கின்ற ஆலோசனையாகும்.
நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதவிக்கு வந்திருக்கின்ற ஒரு அரசிடம்தான் நாம் இப்படியான ஒரு கோரிக்கையைக் கூட முன்வைக்க முடியும். என்பிபி. வட்டாரக் கிளைகள் மாவட்ட செயற்குழு என்பவற்றை வைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வுகான முனைவதைப்போல இன மத சமூக ரீதியிலான தனித்துவப் பிரச்சினைகளைக் கையால்வதற்கும் ஒரு ஒழுங்கு முறை ஆட்சியாளர்களுக்கும் சமூங்களுக்கும் இடையே அவசியம்.
இது தமது அரசியல் கட்சிகளை மையமாக வைத்துதான் நடக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தாலும் அதற்கான பொறுத்தமான ஆளணிகள் அவசியம். எனவே அனுர அரசு தனக்கு சகல சமூகங்களிலும் இருந்து கிடைத்த மக்கள் ஆணையை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் மேற்சொன்ன எதிர்பார்ப்புகள் விடயத்திலும் தனது கவனத்தை செலுத்த வேண்டும். இப்படி அனைத்து விடயங்களிலும் சிறுபான்மை சமூகங்கள் ஓரம்கட்டப்படுமாக இருந்தால் இங்கு ஏதே நடக்கின்றது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்.