அனிரா கபீர்: ‘என்னைக் கொன்றுவிடுங்கள்’ – திருநங்கை

கடந்த ஆண்டு நவம்பரில், வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் சென்றிருந்தார் அனிரா கபீர். கடந்த இரண்டு மாதங்களில் அவரது 14வது நேர்முகத் தேர்வு அது. ஒரு தொப்பியும் முகக்கவசமும் அணிந்திருந்ததால் அவரது முகத்தின் பெரும்பகுதி மறைக்கப்பட்டிருந்தது.

35 வயதான அனிரா ஒரு திருநங்கை. முந்தைய நேர்முகத் தேர்வுகளில் அவர் எதிர்கொண்டது போன்ற சங்கடங்களை தவிர்க்கவே அவர் இவ்வாறு செய்கிறார்.

கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அனிராவுக்குத் தற்காலிகமாக ஒரு வேலை கிடைத்தும் இரண்டு மாதங்களுக்குள் தான் அநியாயமாக நீக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டார். மாவட்ட அதிகாரி பி. கிருஷ்ணன் கூறுகையில், அனிரா கபீர் நீக்கப்படவில்லை என்றும் அவர் தவறாகப் புரிந்து கொண்டதாகவும் தலைமையாசிரியர் தனக்குத் தெரிவித்ததாகக் கூறுகிறார்.

அனிரா என்ன செய்தார்?

அனிரா கபீர் ஜனவரி மாதம், அரசிடமிருந்து ஒரு சட்ட உதவியைக் கோரினார். அதாவது தன்னைக் கருணைக் கொலை செய்வதற்கான மனுவைத் தாக்கல் செய்ய ஒரு வழக்கறிஞரைத் தேடினார். உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் அது முடியாமல் போய்விட்டதுதான் அதற்குக் காரணம் என்றும் கூறுகிறார் அனிரா கபீர்.

14 வயதில் பாலியல் தொல்லை எதிர்கொண்ட பவன் இன்று மகாராஷ்டிராவின் முதல் திருநங்கை வழக்குரைஞர்

அனிரா கபீர் கருணைக்கொலையை அனுமதிக்கும் நாடுகளைப் பற்றி படித்துள்ளார். ஆனால் இந்தியாவில் passive euthanasia மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதாவது ஒருவர் நோய் பாதித்து அதைச் சரி செய்ய வழியே இல்லாத நிலையில், வென்டிலேட்டர் அல்லது உணவுக்கான குழாய் போன்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருந்தால் மட்டுமே அதை நீக்கச் சொல்லிக் கோர உரிமை உள்ளது. இதுவே பேசிவ் யூதனேசியா (passive euthanasia) ஆகும்.

மேலும், “சட்டப்படி விருப்ப மரணம் எனக்கு அனுமதிக்கப்படாது என்று தெரியும்.” ஆனால் நான் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினேன் என்கிறார் அனிரா.

அனிராவின் போராட்டம்

அனிரா கபீர் இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க விரும்பினார். அதில் வெற்றியும் பெற்றார். அரசு உடனடியாக இதில் தலையிட்டுச் செயல்பட்டதால், அனிராவுக்கு வேறு வேலை கிடைத்தது.தனது வாழ்வை அழித்துக்கொள்வதில்லை என்பதில் அனிரா மிக உறுதியாக இருந்தார். அவரது செயல் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கவும் அவர் விரும்பவில்லை. இந்தியாவில் இது போன்ற ஒரு போராட்டம் அசாதாரணமானதும் கூட.

பல ஆண்டுகளாக, இந்தியர்கள் உண்ணாவிரதம், இடுப்பிற்கு மேல் உள்ள நீரில் பல நாட்கள் நிற்பது, உயிருடன் உள்ள எலியை வாயில் கடித்துப் போராடுவது போன்ற பல விதங்களில் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக நீண்ட நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்தார் மகாத்மா காந்தி. இதுவே செயல்திறன் மிக்க போராட்டங்களின் வலிமையை உணர்த்துகிறது என்கின்றனர் சமூகவியலாளர்கள். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் அரசு தாமதமாகவே போராட்டங்களுக்கு செவிசாய்க்கிறது.

அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று கூறுவதே அனிரா கபீரின் நோக்கம் என்று கூறுகிறார் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் அனகா இங்கோலா.

“இந்த விஷயத்தில் அரசாங்கம் ஒருவரின் வேலை செய்யும் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.” என்பது அவர் கருத்து. அனகா, சமூகப் பாகுபாட்டை ஒழிக்க பல விஷயங்களைச் செய்துள்ளார்.இந்தியாவில் சுமார் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆனால், உண்மையில், இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 2014 ஆம் ஆண்டு, இந்திய உச்ச நீதிமன்றம், திருநங்கைகளுக்கும் மற்றவர்களைப் போலவே உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது.

இருப்பினும், இந்தியாவில் திருநங்கைகள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான தங்களது உரிமைக்காக இன்னும் போராடி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் யாசகம் பெறுவது மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.திருநங்கைகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு தேவை என்று அனிரா கபீர் கூறுகிறார்.

“நான் கருணைக்கொலை போன்ற ஒரு அதி தீவிர நடவடிக்கையை எடுக்க விரும்பவில்லை, ஆனால் எங்களுக்கு என்ன மாற்று இருக்கிறது?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார். மத்திய கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வளர்ந்த அனிரா கபீர், பிறப்பால் தனக்குக் கிடைத்த இந்தப் பாலின அடையாளத்தால் பல ஆண்டுகளாகப் போராடி வருவதாக கூறுகிறார்

“என் குடும்பம் விரும்பியபடி வாழ நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். சிகரெட் பிடிப்பது, ஜிம்முக்கு செல்வது, ஆளுமை மேம்பாட்டு படிப்புகள் இவற்றின் மூலம் ஆணாகிவிடலாம் என என்னைச் சுற்றியிருப்பவர்கள் சொன்னார்கள். ஆனால் இதையெல்லாம் செய்து என்னை வருத்திக் கொள்ளவில்லை,” என்கிறார் அனிரா.

அனிரா கபீர் மிகவும் கஷ்டப்பட்டு படித்தார். அவர் குழந்தைகளுக்குக் கற்பிக்க விரும்பினார். மாணவப் பருவத்திலிருந்தே பிற குழந்தைகளுக்குக் கற்பித்து வந்தார். அக்கம் பக்கத்து பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகும், தான் விரும்பிய வாழ்க்கையை வாழப் போராடுகிறார்.

அனிரா கபீர் மூன்று முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆசிரியர் பயிற்சிப் பட்டமும் பெற்றுள்ளார். உயர் நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான மாநிலத் தேர்வையும் அவர் எழுதினார். ஆனால் நேர்முகத் தேர்வில் அவரிடம் சங்கடமான கேள்விகள் கேட்கப்பட்டன.

நேர்முகத் தேர்வின் போது, ​​மாணவர்களை பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டீர்கள் என்று எப்படி நம்புவது என்று ஒருவர் கேட்டுள்ளார்.

“வேலைக்குச் செல்வதற்கான தகுதிகள் என்னிடம் உள்ளன.” என்று அவர் கூறுகிறார். அவர் சமூக அறிவியல் இள நிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இது ஒரு தற்காலிகப் பதவி. தான் திருநங்கை என்பது குறித்துப் பள்ளி அதிகாரியிடமும் கூறியதாக அனிரா கூறியுள்ளார். ​​”நான் ஒரு திருநங்கை என்றும் வீட்டு வாடகை செலுத்தக்கூட வசதியில்லை என்றும் வேலை மிகவும் அவசியம் என்றும் கூறினேன்”.

நவம்பர் 2021 இல் அனிரா ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய போது, ​​​​தனது சக ஊழியர்களிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொண்டார். ஆனால் மாணவர்கள் நன்றாகப் பழகியுள்ளனர். இதுகுறித்து அனிரா கபீர் கூறும்போது, ​​”ஜனவரி 6 முதல் பள்ளிக்கு வரக்கூடாது என திடீரென கூறினர். அதாவது நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன்” என்று தெரிவித்தனர்.

அனிரா கபீர் தனது வேலையை இழந்து விடுவோமோ என்று அஞ்சினார். பள்ளி அருகே உள்ள கடைகளுக்குச் சென்று வேலை கேட்டுள்ளார். ஆனால் யாரும் வேலை கொடுக்கவில்லை.

இந்த நேரத்தில் அவர் சட்ட உதவியை நாடினார். இந்தச் செய்தி வைரலானதையடுத்துக் கேரளக் கல்வி அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டுச் செயல்பட்டார். “நான் கபீரைச் சந்தித்தேன், பாலக்காட்டில் உள்ள அரசு அலுவலகத்தில் இன்னொரு தற்காலிக வேலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் அனிராவைப் போலவே பலர் இன்னும் உதவிக்காக காத்திருக்கிறார்கள்

நீண்ட போராட்டம்

2018 ஆம் ஆண்டு, ஷான்வி பொன்னுசாமி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் விருப்ப மரணத்திற்கான அனுமதியும் கோரியிருந்தார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் தனக்கு வேலை மறுக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். ஏர் இந்தியா நிறுவனத்திடம் திருநங்கைகளைப் பணியமர்த்துவதற்கான கொள்கை எதுவும் இல்லை. இந்த மனுவுக்குப் பல மாதங்களாக அரசும், ஏர் இந்தியாவும் பதிலளிக்கவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார் ஷான்வி.

பின்னர் ஏர் இந்தியா, ஷான்வியின் மனு பொய்யானது என்றும், அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் மிரட்டியது.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்ட நேரத்தில் அவரது சேமிப்பும் கரைந்து கொண்டே இருந்தது. பின்னர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். ஆனால், இப்போது வரை அவரது நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?

“ஒன்றும் மாறவில்லை. எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஏர் இந்தியாவை தற்போது டாடா என்ற தனியார் நிறுவனம் வாங்கியுள்ளது. இது வேலை கிடைக்கும் வாய்ப்பை மேலும் குறைத்துள்ளது.” என்கிறார் ஷான்வி.

ஆனால் சட்டப் போராட்டத்தில் ஏற்பட்ட செலவுக்கு இழப்பீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷான்வி மனு தாக்கல் செய்துள்ளார். “இப்படி ஒரு அமைப்பு இருந்தால், மக்கள் எப்படி வாழ முடியும்?” என்கிறார் ஷான்வி.

Previous Story

'அப்பா வெளியே மகன் உள்ளே'

Next Story

ஐ.எஸ் குழு தலைவரை கொன்ற அமெரிக்க  - ஜோ பைடன்