அநுர குமாரவின் அமைச்சரவை!

-ரஞ்சன் அருண் பிரசாத்-
இலங்கை அமைச்சரவை

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள்.

இதன்படி, 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

பிரதமராக ஹரினி அமரசூரிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி ஆகிய அமைச்சு பொறுப்புக்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சு பொறுப்புக்களில் இரண்டு பெண்கள் அடங்குவதுடன், இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.

ஹரிணி அமரசூரிய மற்றும் சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஆகியோர் பெண்கள் என்பதுடன், சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் தமிழர்களாவர்.

சரோஜா சாவித்திரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் அமைச்சராகவும், இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அமைச்சரவை

21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்

அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், சரோஜா சாவித்திரி போல்ராஜ் அமைச்சராகி உள்ளார்.

சத்திய பிரமாண நிகழ்வில் இராமலிங்கம் சந்திரசேகர் தமிழ் மொழியில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் இடம்பிடிக்காமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

அமைச்சரவை நியமனம் தொடர்பில் அரசியல் விமர்சகரான ஜனகன் விநாயகமூர்த்தியிடம் பிபிசி தமிழ் வினவியது.

”இவர்கள் அனைவரும் புதியவர்களாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக இவர்கள் எவ்வாறானவர்கள் என்று உடனடியாக சொல்ல முடியாது. ஆகவே, அவர்களுக்கான காலத்தை கொடுத்து பார்க்க வேண்டும்.” என அவர் கூறுகின்றார்.

இலங்கை அமைச்சரவை, முன்னைய அமைச்சரவையை விடவும் மாறுப்பட்டதா?

மேலும் பேசிய அவர்,”ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்றே இந்த அமைச்சரவையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆகக் குறைவான அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையொன்றை ஸ்தாபிப்பதாக அநுர குமார திஸாநாயக்க தனது தேர்தல் பிரசாரங்களின் போது தெரிவித்திருந்த நிலையில், 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவையொன்றை அமைத்துள்ளார்.

குறைவான அமைச்சர்களுடனான அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள போதிலும், அமைச்சுக்களின் விடயதானங்களில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை” என அரசியல் விமர்சகரான ஜனகன் விநாயகமூர்த்தி குறிப்பிடுகின்றார்.

உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் நல்ல விடயம் என்னவென்றால், இந்த முறை இரண்டு தமிழர்களுக்கு அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

”மாத்தறை பகுதியிலிருந்து ஒரு தமிழருக்கும், வடக்கு பகுதியிலிருந்து ஒரு தமிழருக்கும் அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதை சிறப்பாக பார்க்கின்றேன். முதல் தடவையாக தெற்கு பகுதியிலுள்ள தமிழர் ஒருவருக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமை நல்ல முயற்சியாக பார்க்கின்றோம்.

ஆனாலும், நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அமைச்சு சம்பந்தமான முழுமையான அனுபவம் இல்லாதவர்கள் என்ற பிரச்னை உள்ளது. ஆகவே இந்த அமைச்சு பதவிகளை எவ்வாறு கொண்டு போக போகின்றார்கள் என்பதில் மிக பெரிய கேள்வி ஒன்று இருக்கின்றது. ” என்றார்.

“இன்னுமொரு விடயம் வன்னி மாவட்டத்திலிருந்து தேசிய கட்சியொன்றுக்கு இரண்டு தமிழர்கள் இம்முறை சென்றிருக்கின்றார்கள். தேசிய மக்கள் சக்திக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆதரவானது மிகவும் அதிகமாக இருக்கின்றது. இந்த ஆதரவுக்கு ஏற்ற வகையில் இன்னும் பல அமைச்சுக்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்”

யாழ்ப்பாணத்தில் இம்முறை மூன்று பேர் தெரிவு  செய்யப்பட்டிருக்கின்றார்கள். மலையகத்தை பொறுத்தவரை பதுளை நுவரெலியா பகுதிகளில் பலர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை” என்று விவரித்தார்.

”அநுரவிற்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு அதிகரித்துள்ள நிலையில், தமிழ் சிங்களம், முஸ்லிம் என்று பாராமல், அனைவரையும் சமமாக இணைத்துக் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு சந்தர்ப்பம் வழங்காததை மிக முக்கியமான விடயமாக பார்க்கின்றேன்.”

”முஸ்லிம்கள் அதிகமாக வாக்களித்திருந்தார்கள். அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்காதது என்பது மிகப் பெரிய பிரச்னையாகும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பாராமல் அனைவருக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்” என ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இலங்கை அமைச்சரவை, முன்னைய அமைச்சரவையை விடவும் மாறுப்பட்டதா?
அரசியல் ஆய்வாளர் ஜனகன் விநாயகமூர்த்தி

அமைச்சர்கள் யார் யார்?

  • பேராசிரியர் சந்தன அபேரத்ன- பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  • சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்.
  • லால் காந்த – கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனம்
  • அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு
  • உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
  • சுனில் ஹந்துன்னெத்தி – கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
  • ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு, பாராளுமன்ற அலுவல்கள்
  • பிமல் ரத்னாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
  • ஹினிதும சுனில் செனவி – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்
  • நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதாரம், வெகுசன ஊடகம்
  • சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு
  • சுனில் குமார கமகே – விளையாட்டு, இளைஞர் விவகாரம்
  • வசந்த சமரசிங்க – வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
  • கிருஷாந்த சில்வா அபேசேன – விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
  • அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில்
  • குமார ஜயகொடி – வலுசக்தி
  • தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல்
Previous Story

'வெண்ணெய் திரண்டு வரும் போது தாளியை உடைக்காதீர்'

Next Story

ராஜாங்க அமைச்சர்கள் இனி இல்லை! ஓரிரு நாட்களில் 26 - 28 துணை அமைச்சர்கள்