அதிர்ந்தது உக்ரைன்: ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்

கீவ், உக்ரைனின் தலைநகரான கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று காலை முதல் தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் எட்டு மாதங்களை நெருங்குகிறது.

அதிர்ந்தது உக்ரைன்: ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்

குற்றச்சாட்டு

உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், அவற்றை மீட்கும் முயற்சியில் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்ய படைகள் சற்று பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவால் 2014ல் கைப்பற்றப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும், ரஷ்யாவையும் இணைக்கும் 19 கி.மீ., துார கடல் பாலத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு சமீபத்தில் வெடித்தது.

இதில் அந்த பாலம் கடும் சேதம் அடைந்தது. ரஷ்யாவில் இருந்து உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் எடுத்துவர இந்த பாலம் பயன்படுத்தப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத செயல் என கண்டித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ‘இதற்கு உக்ரைன் ராணுவமே காரணம்’ என குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, உக்ரைன் மீது ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பல மாதங்களுக்கு பின், தலைநகர் கீவ் மீது நேற்று காலை முதல் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

மின்சாரம் துண்டிப்பு

கீவ் நகரில் நடந்த தாக்குதல் ஒன்றில் எட்டு பேர் உயிரிழந்ததாகவும், 24 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் அந்நாட்டின்உள்துறை ஆலோசகர் தெரிவித்தார்.

கீவ் நகரில் அரசு அலுவலகங்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க பழைய நகரான ஷெவ்சென்கோ என்ற இடத்தில் குண்டுகள் வெடித்தன.

கீவ் தேசிய பல்கலைக்கழகத்தின் அருகேயும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

கீவ் நகர் மீது அதிகாலையில் நடந்த ஏவுகணை தாக்குதலுக்கு பின், பல்வேறு இடங்களில் பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

குடியிருப்பு பகுதிகள், எரிசக்தி கட்டமைப்புகள் உள்ள பகுதிகளை ரஷ்யா குறிவைத்து தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இவை தவிர லிவிவ், கார்கிவ், டெர்னோபில், மெல்னிட்ஸ்கி, சைடோமிர் உள்ளிட்ட நகரங்களிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

மூன்று முறை தாக்கப்பட்ட கார்கிவ் நகரில்மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

நேற்று மட்டும், உக்ரைனின் பல்வேறு நகரங்களில், 75க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைச்ரஷ்யா ஏவியுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. மேலும், இவை ஈரானில் தயாரிக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைனில் நடக்கும் சம்பவங்கள்கவலை அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியர்கள், உக்ரைனுக்கு பயணிப்பதை தவிர்க்கும்படியும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

துடைத்து எறியும் முயற்சி!

உக்ரைனை இந்த உலகில் இருந்தே துடைத்து எறியும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. யாரும் பதுங்கு குழியில் இருந்து வெளியேற வேண்டாம். மன உறுதியுடன் நீங்கள் இருக்கும் இடங்களிலேயே இருக்கவும்.

வோலோடிமிர் ஜெலன்ஸ்கி -உக்ரைன் அதிபர்

Previous Story

அரச அதிகாரிகளுக்கு பிரதமர்  கடுமையான உத்தரவு

Next Story

செளதி அரேபியா- அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பு?