தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் மனிதர்கள் வாழ முடியாது. முழுக்க முழுக்க பனிக்கட்டிகளால் சூழப்பட்டு வெள்ளை நிற போர்வை போர்த்தியது போல இருக்கும் ஒரு இடமாகவே இது இருக்கும். உறையும் வெப்பத்தில் உள்ள அந்த பிராந்தியத்தில் இருந்து ஒரு நீர்வீழ்ச்சி கொட்டுகிறது, அதுவும் ரத்தத்தை போல சிவப்பு நிறத்தில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..
இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா என்பது மனிதர்களுக்குப் புலப்படாத இடங்களில் ஒன்றாகும். இது பல காலமாகவே ஆராய்ச்சி மற்றும் சாகசங்களுக்கான இடமாக இருந்து வருகிறது.
இன்றும் கூட, அண்டார்டிகாவை நாம் முழுமையாக ஆய்வு செய்துவிடவில்லை.. அங்கு ஆய்வுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அங்கு நடக்கும் அதிசயங்கள் விஞ்ஞானிகளை வியக்க வைப்பதாகவே இருக்கிறது.
வெண்மை பனிக்கட்டிகள்: வெண்மையான பனிக்கட்டிகள் நிறைந்த இந்த அண்டார்டிகா பகுதியில் உள்ள சுவாரசியமான விஷயங்களில் ஒன்று அங்குள்ள ரத்த நீர்வீழ்ச்சி ஆகும். இது டெய்லர் பனிப்பாறையிலிருந்து மேற்கு ஏரி போனி என்ற பகுதியில் பாய்கிறது.
வெள்ளை நிற பனி சூழ்ந்துள்ள இந்த இடத்தில் ஓடும் சிவப்பு கலர் நீர்வீழ்ச்சி பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. இது 1911ஆம் ஆண்டில் புவியியலாளர் தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது முதலே இது மக்களின் கவனத்தைப் பெரியளவில் ஈர்த்து வருகிறது. இந்த ரத்த நீர்வீழ்ச்சி குறித்து சில சுவாரசிய தகவல்களை நாம் பார்க்கலாம். ரத்த நீர்வீழ்ச்சி என்று அழைக்கப்படும் இது 110 ஆண்டுகளுக்கு முன்பு கிரிஃபித் டெய்லரால் கண்டுபிடிக்கப்பட்டது.
சிவப்பு கலர் நீர் ஓடும் பனிப்பாறைக்கும், அந்த பள்ளத்தாக்கிற்கும் கிரிஃபித் டெய்லர் தனது பெயரையே சூட்டினார். என்ன காரணம்: அங்கு ஓடும் தண்ணீரில் சிவப்பு பாசி அதிகம் இருப்பதாலேயே தண்ணீர் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கலாம் என ஆய்வாளர்கள் முதலில் கருதினர்.
இருப்பினும், சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவுகள் வேறு விதமாகவே உள்ளது. அதாவது நீர்வீழ்ச்சியில் இரும்புச்சத்து அதீதமாக இருக்கிறதாம். அது பனிப்பாறையிலிருந்து வரும் நீர் உடன் வெளிப்படும்போது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினை புரிந்து, ரத்தத்தைப் போன்ற கருஞ்சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது.
ஆய்வாளர்களை வியக்க வைக்கும் மற்றொரு விஷயம் அங்குள்ள வெப்பமாகும். அங்கு மைனஸ் 19 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. பொதுவாகவே தண்ணீர் 0 டிகிரி செல்சியஸிலேயே ஐஸ் கட்டியாக மாறிவிடும். ஆனால், இங்கே மைனஸ் 19 டிகிரி செல்சியஸாக வெப்பம் உள்ள சூழலிலும் தண்ணீர் உறையாமல் எப்படி ஓடிக் கொண்டே இருக்கிறது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.
இது முதலில் ஆய்வாளர்களை ரொம்பவே குழப்பியது. இதற்கான பதில் 2003ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. அதாவது இந்த பகுதியில் ஓடும் நீரில் உப்பு அளவுக்கு அதிகமாக இருக்கிறதாம். அதுவும் கடல் நீரில் உள்ள உப்பைக் காட்டிலும் இங்கு ஓடும் நீரில் உப்பு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.
இந்தளவுக்கு உப்பு இருப்பது தான் தண்ணீர் ஐஸ் கட்டியாக மாறுவதை தடுக்கிறது.. இதன் காரணமாகவே அங்கு மைனஸ் 19 டிகிரி வெப்பம் இருக்கும் போதிலும், தண்ணீர் பனிக்கட்டியாக மாறாமல் நீர் வீழ்ச்சியில் கொட்டுகிறது. அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் எல்லாம் நன்னீரால் ஆனது.
அப்படி இருக்கும் போது இந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கடல் நீர் எப்படி வந்தது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கான பதிலையும் ஆய்வாளர்களே அளிக்கிறார்கள். அதாவது, சுமார் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் கடல் தான் இருந்ததாம். அப்போது நடந்த இயற்கை மாற்றங்களால் ஏரி போன்ற அமைப்பு உருவாகி அதில் கடல் நீர் சிக்கிக்கொண்டது.
அதிசயத்தின் உச்சம் அதைச் சுற்றி பனிப்பாறைகள் உருவாகிவிட்டது. இப்படியே பல ஆயிரம் ஆண்டுகளாக அந்த ஏரியில் கடல் நீர் இருந்தது. அதுவே ஒரு கட்டத்தில் வெடித்து இதுபோல நீர்வீழ்ச்சியாக மாறியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படிப் பல இயற்கை நிகழ்வுகளால் உருவான இந்த ரத்த நீர்வீழ்ச்சி இப்போதும் ஆய்வாளர்கள் வியக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.