-நஜீப் பின் கபூர்-
நன்றி: 29.12.2024 ஞாயிறு தினக்குரல்
ஒரு மனிதனது பலமும் பலயீனமும் அவனுக்கு நெருக்கடிகள் வருகின்ற போதுதான் வெளிப்படும். அப்படியான ஒரு நிலையில்தான் நாம் ஜனாதிபதி அணுர குமாரவின் சீன விஜயத்தை பார்க்கின்றோம். இது ஜனாதிபதி அணுரவால் நடக்கின்ற ஒரு நிலை அல்ல. சமகால உலகில் காணப்படுகின்ற அரசியல் பின்புலங்கள்தான் இதற்குக் காரணமாக அமைகின்றன.
நாம் இங்கு எதனைச் சொல்ல வருகின்றோம் என்றால், சீனாவும் இந்தியாவும் எதிர் எதிர் திசைகளில் பயணிக்கின்ற நாடுகள். இவை இரண்டும் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றன. அல்லது பகைமை நாடுகளாகத்தான் ஒட்டு மொத்த உலகமுமே பார்க்கின்றது என்றால் அது தவறாகமாட்டாது. அதற்கு பல சம்பவங்கள் நிகழ்வுகள் ஆதாரங்களாகவும் இருக்கின்றன.
இந்தப் பின்னணியில் இரு நாடுகளையும் சமாளிப்பது – நட்புடன் வைத்துக் கொள்வது என்பது இலங்கைக்கு கயிற்றில் நடப்பது போல ஒரு பயணம் என்பது நமது கருத்து. இன்று உலகில் இருக்கின்ற மிகவும் செல்வாக்கான நாடுகளில் இவை இரண்டும் முன்னணியில் இருப்பதுடன் இராணுவ பொருளாதார தொழிநுட்ப ரீதியில் பலமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணம்.
ஒருவர் பலமாகவும் மற்றுமொருவர் பலயீனமாகவும் இருந்தால் இவர்களின் மேலாதிக்கம் இந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்தி இருக்க மாட்டாது. சீனாவும் இந்தியாவும் பிராந்திய சர்வதேச அளவில் வல்லலாதிக்கம் செலுத்துகின்ற நாடுகளாக இருந்து வருகின்றன. உலகளவில் இன்று ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இவ்விரு நாடுகளும் மிக வேகமாக முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குப் போய் வந்திருக்கின்ற நமது ஜனாதிபதி அணுர குமார இன்னும் சில நாட்களில் சீனாவுக்குப் பயணிக்க இருக்கின்றார். எப்போதுமே நாட்டுக்கு புதிதாக அதிகாரத்துக்கு வருகின்ற தலைவர் தனக்கு நேசமான- நெருக்கமான ஒரு நாட்டுக்கு முதலில் விஜயம் செய்வதுதான் அரசியல் சம்பிரதாயமாகவும் அனுகுமுறையாகவும் இருந்து வருகின்றது.
ஆனால் ஜனாதிபதி அணுர குமார தனது முதல் விஜயமாக இந்தியாவைத் தெரிவு செய்தது சர்வதேச அளவிலும் உள்நாட்டு அரசியலிலும் சற்று ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகத்தான் பார்க்கப்பட்டது. இதற்குக் காரணம் அரசியல் சித்தாந்த ரீதியில் சீனாவிலும் இலங்கையிலும் ஏறக்குறைய ஒரே சிந்தனை-கொள்கையுடைய ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி அணுர குமாரவின் அரசு சீனாவுக்கு நெருக்கமாகப் போய்விடும் என்ற ஒரு அச்சம் இந்தியாவுக்கு இருந்தது. பல இந்திய அரசியல் ஆய்வாலர்கள் கூட இந்தத் தேர்தலில் அணுர வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அணு அளவிலேனும் கிடையாது என்று கூறிக் கொண்டிருந்தனர். அப்படி அணுர வெற்றியில் எவராது நம்பிகை கொள்வார்களானால் அது அவர்களின் அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகத்தான் இருக்கும் என்றும் இந்திய ஊடகங்களில் எழுதியும் பேசியும் வந்தனர்.
இந்த விடயத்தை நாம் அன்றே கேள்விக்கு உற்படுத்தி விமர்சித்திருந்தோம். இது யாருடைய அறியாமை என்று நாம் திரும்பவும் ஒரு முறை அவர்களைக் கேட்கின்றோம். மறுபுறத்தில் இது எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் அணுர வெற்றியை ஜீரணிக்க அவர்கள் தயாராக இருந்திருக்கவில்லை என்பதனைத்தான் இது சுட்டிக் காட்டுகின்றது. ஆனால் இந்திய உளவுத்துறை அரசுக்கு யதார்த்தத்தை முன்கூட்டி சொல்லி இருந்ததால்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இந்திய அரசு அணுரவுடன் நல்லுறவில் காரியம் பார்த்து வந்தது.
ஜனாதிபதி அணுர இந்தியாவுக்குப்போய் அங்கு தனது நல்லெண்ணத்தை காண்பித்தாலும் அதில் ஒரு சந்தேகம் இந்தியாவுக்கு என்றும் இருந்து கொண்டுதான் இருக்கும் என்பது நமது பார்வை. ஜனாதிபதி அணுர குமார இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு செயல்பாடும் தம்மாலோ பிரராலோ மேற்கொள்ள அனுமதிக்கப்படமட்டாது என்று மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் வாக்குறுதி அளித்ததானது இந்தியாவுக்கு மிகுந்த மன நிறைவைக் கொடுத்திருக்கின்றது என்பதனை அவதானிக்க முடிகின்றது. அணுர சீனாவை மையமாக வைத்துத்தான் இந்தக் கருத்தை முன்வைத்தார் என்பதும் தெரிந்ததே.
இதனைத்தான் இந்தியாவும் எதிர்பார்த்திருந்தது. நாம் அணுர இந்திய விஜயத்தில் இனப்பிரச்சனைக்கு தீர்வு விடயத்தில் அது பெரும் அலுத்தங்களைக் கொடுக்க வாய்ப்பு இல்லை என்று அன்று சொல்லி இருந்தோம் அதுதான் நடந்தது. அதே நேரம் புதிய அரசியல் யாப்பு மாகாணசபைத் தேர்தல் போன்றவற்றில் ஒரு சின்ன நம்பிக்கையையும் ஜனாதிபதி அணுர குமார அங்கு வெளிப்படுத்தி தனது இராஜதந்திர கூர்மையை உறுதி செய்திருந்தார்.
சீனாவை விடவும் இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தி பாதுகாப்பு விடயங்களில் இந்தியாவின் தயவு மிகவும் அவசியம் என்பதை அணுர நன்கு புரிந்து வைத்திருக்கின்றார். சுருக்கமாக அணுரவின் இந்திய விஜயம் இரு நாடுகளின் நல்லுறவில் புதியதோர் நல்லெண்ணத்தையும் பாரியதோர் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதுதான் எமது கணக்கு!
அதே நேரம் அணுராவும் அவரது ஜேவிபியும் இந்தியாவுக்கு எதிரான தமது கடும் போக்கை கைவிட்டு அவர்களுடன் நேசக்கரம் நீட்டுவது உள்நாட்டில் அவரது அரசியல் எதிரிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.
அவர்கள் அணுர இந்தியாவுடன் முரண்பட்டுக் கொண்டு நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்த்திருந்தனர். அல்லது இந்தியா அணுரவை நிராகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அந்த ஏமாற்றத்தினால் அவர்கள் முன்னெடுக்கின்ற விமர்சனங்களை இப்போது உள்நாட்டு மக்கள் கண்டு கொள்வதில்லை.
தனிப்பட்ட ரீதியில் பார்க்கின்ற போது உள்நாட்டில் இதுவரை அதிகாரத்துக்கு வந்த தலைவர்களில் அணுர குமாரவின் ஆளுமை என்பது தனித்துவம் மிக்கதாகத்தான் பார்க்கப்படுகின்றது. அதற்கு அவரது பேச்சாற்றல் அறிவு கூர்மையும் உழைப்பு முக்கிய காரணங்களாக இருந்து வருகின்றன.
குறிப்பாக ராஜபக்ஸாக்களினால் இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கலாச்சாரம் மிகவும் தவறானது-தப்பானது தான்தோன்றித் தனமானது என்பதனை மக்கள் மயப்படுத்துவதில் அணுர தரப்பினர் மேற்கொண்ட சிந்தனை ரீதியிலான மாற்றங்கள் அவர்களுக்கு அளப்பறிய அறுவடைகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
எனவே பேரின சமூகத்தின் மத்தியில் தற்போதய அரசியல் பின்னணியில் அவர்களுக்கு எந்த நெருக்கடிகளும் உடனடியாக இல்லை. அப்படி வந்தாலும் உள்நாட்டில் அதற்கான மாற்றீடுகள் எதுவுமே கண்ணுக்கெட்டிய தூரத்தில் கிடையாது. எதிர்க் கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் அணுரவுடன் ஒப்பு நோக்கின்ற போது மிக மிக பலயீனமாகத்தான் இருந்து வருகின்றார்.
இப்போது ஜனாதிபதி அணுராவின் சீன விஜயம் தொடர்பாக நமது பார்வையைச் செலுத்துவோம். இதனை சுருக்கமாக ஒரே வார்த்தையில் கூறுவதாக இருந்தால் நிச்சயமாக அணுரவின் சீனா விஜயமும் அவருக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுக்கும். அதன் மூலம் அவருக்கு மேலும் நம்பிக்கையையும் அரசியல் இலாபங்களும் கிடைக்கும் என்பது உறுதி.
பொதுவாக சுதந்திரத்துக்குப் பின்னர் அதாவது (1956) S.W.R.D. பண்டாரநாயக்கவுக்குப் பின்னர் இந்த நாட்டு அரசியல் இராஜதந்திரத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றமாக சீனாவுடனான இலங்கையின் உறவு காணப்படுகின்றது. அந்த உறவு நாட்டில் வாழ்கின்ற பேரின சமூகத்தின் மத்தியிலும் இன்றும் மதிக்கப்பட்டு வருகின்றது.
ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் அவர்கள் சீனாவுடனான உறவில் பெரிய அளவில் ஆர்வங்களை காட்டாத போதிலும் சீனா உறவில் பாரிய விரிசல்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இல்லை. சமகால அரசியலில் சீனா அமெரிக்காவை பல துறைகளில் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடங்களைக் கைப்பற்றி அதனையும் கடந்து பயணிக்கின்றது.
எனவே இன்னும் இரு வாரங்களில் சீனாவுக்கு விஜயம் செய்கின்ற நமது ஜனாதிபதிக்கு மிகுந்த கௌரவம் கொடுத்து அவரை சீனா வரவேற்கத் தயாரகிக் கொண்டிருக்கின்றது என்பதனை அங்கிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று சீனா அடைந்து வருகின்ற அரசியல் பொருளாதார தொழிநுட்ப முன்னேற்றங்களில் இருந்து அதிகூடிய இலாபங்களையும் நன்மைகளையும் பெற்றுக் கொள்கின்ற ஒரு நாடாக அணுர குமார தலைமையிலான இலங்கை அரசு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும். சமபலமான இராணுவ பலம், போர்களைத் தவிர்த்து சமாதானங்களை உலகில் நிலை நாட்டுகின்றன என்ற ஒரு நியதி இருக்கின்றது.
அதே போன்று சீனா, இந்திய அரசியல் பொருளாதார பலத்திலும் இலங்கைக்கு அதிகூடி நண்மைகளைப் பெற்றுக் கொள்ளும் வியூகங்களை அணுர தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்று நாம் நம்புகின்றோம். இலங்கையின் பிராந்திய அமைவும் இதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. இந்தியாவிடம் எப்படி எல்லாம் அணுர விட்டுக் கொடுத்து காரியம் சாதிக்க முனைகின்றாரோ அதே போன்ற ஒரு நிலையைத்தான் அவர் சீனாவுடனும் கையாள்வார் என்று எதிர்பார்க்க முடியும்.
சீனாவும் இந்தியாவும் பிராந்தியத்தில் செல்வாக்கான நாடுகளாக இருப்பதால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கின்ற இலங்கை அதனை சாதகமாக வைத்தும் அரசியல் பொருளாதார நலன்களை இரு நாடுகளிடமிருந்தும் பெற்றுக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் இதனால் ஏற்படுகின்றன. இது நாம் முன்பு சொன்ன சமபல ஆயுதம் சமாதானத்தைக் கொண்டும் வரும் என்பது போல ஒரு அணுகுமுறைதான்.
தற்போதும் கூட இலங்கையில் இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கம் மேலோங்கி இருப்பது தெரிந்ததே. தெற்கில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்பில் சீன துறைமுக நகர் என்பனவும் வடக்கில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திருகோணமலை எண்ணைத் தாங்கிகள், இந்தியாவின் கப்பல் சேவை, காற்றாடி மின்வலு, கொழும்பு அதாயின் துறைமுக அபிவிருத்தி, டீஜிடல் தொழிநுட்பம் என்பன இதற்கு நல்ல உதாரணங்காளாக காணப்படுகின்றன.
புதிய ஜனாதிபதி அணுரவின் இந்திய, சீன விஜயங்கள் மூலம் இன்னும் பலமடங்கான முனேற்றங்களை இராஜதந்திர மட்டத்தில் ஜனாதிபதி அணுர குமாரவின் சீன விஜயம் நமக்கு நிச்சயம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியும்.
பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த ஒரு நாட்டை மீளக் கட்டி எழுப்புவதாயில் அதற்குத் தலைமைத்துவம் கொடுக்க ஒரு அசாதாரண தலைவர் நாட்டுக்குத் தேவை. அந்த இடைவெளியை அணுர நிரப்புவார் என்ற ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் தற்போது பரவலாகக் காணப்படுகின்றது.
இந்தியாவுடன் நல்லுறவையும் வளர்த்துக் கொண்டு சீனாவுடனும் அதே விதமாக உறவுமுறையை பேணி வருவது என்பது ஒரு அசாதாரண முயற்ச்சியாகத்தான் இருக்க முடியும். ஆனால் இது விவகாரத்தில் ஜனாதிபதி அணுர சாதிப்பார். அதற்கு அவரிடத்தில் இருக்கின்ற ஆளுமை கைகொடுக்கும்.
சீனாவின் உதவித்திட்டங்களின் கீழ் இலங்கையில் பல விவசாய தொழிநுட்பங்களையும் மேலும் புதிய பல கைத்தொழில் நடவடிக்கைகளும் இலங்கையில் துவங்க இருக்கின்றது. இந்திய விஜயத்தின் பின்னர் எட்டப்பட்ட இனக்கப்பாடுகள் தொடர்பாக பல விமர்சனங்களை அவரது அரசியல் எதிரிகள் செய்தது போல சில விமர்சனங்கள் சீன விஜயத்தின் பின்னரும் நடக்கும். என்றாலும் மக்கள் மத்தியில் அவை எதுவும் எடுபட மாட்டாது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது மூன்றும் மூன்றும் ஆறாகலாம் மிஞ்சிப்போனால் ஒன்பதுதான் என்று கணக்குச் சொன்னவர்களும் அப்படித்தான் அதிகாரத்துக்கு வந்தாலும் ஒரு வாரங்கள் கூட இவர்களினால் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. அணுர வெற்றி பெற்றால் அடுத்த நாளே டொலரின் விலை 400 ரூபாவுக்கு மேல் சென்று விடும் என்று கதைகளைச் சொல்லி இருந்தனர்.
அப்படிக் கதை சொன்னவர்களும் எழுதியவர்களும் பேசியவர்களும் நாம் இந்த அரசு பற்றி என்னவெல்லாம் பேசினோம் சொன்னோம் என்று ஒரு முறையாவது மக்களிடம் விளக்கம் கொடுத்தார்களா? மன்னிப்புத்தான் கேட்டார்களா? இதனைத்தான் அரசியல் நயவஞ்சகத்தனம் விசமத்தனமான பரப்புரைகள் என்று கூறுவது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசுக்கு வீழ்ச்சி என்று கூறியவர்களை சுவரில் சாத்தி அறைவது போல மக்கள் பதில் கொடுத்திருக்கின்றார்கள். இப்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனாவரி முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் அறிவிப்புச் செய்யப்பட இருக்கின்றது.
அப்போது அணுர அரசு சொன்னது எதனையும் செய்யவில்லை அதானால் மக்களுக்கு பெரும் ஏமாற்றம் என்று இன்று பேசித் திரிகின்றவர்களுக்கு அதில் பதில் கிடைக்கும். அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் வந்தாலும் இதே கெதிதான் எதிரணியினருக்கு நடக்கும். அதனையும் நாம் இன்னும் சில மாதங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
இப்படி எல்லாம் நாம் கருத்துக்களைச் சொல்வதால் கண்களை மூடிக் கொண்டு இந்த அரசுக்கும் அணுராவுக்கும் வக்காலத்து வாங்குகின்றோம் என்பது பொருள் அல்ல. கள நிலவரத்தைதான் நாம் இங்கு சுட்டிக் காட்டி வருகின்றோம். நாட்டில் பலயீனமான எதிர்க் கட்சி இருக்கின்ற போது நாம் மக்கள் நலன்களுக்காக அந்தப் பக்கம் நின்றுதான் கருத்துச் சொல்ல வேண்டும். ஆனால் எதிரணி விமர்சனங்கள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதால் அவர்கள் கருத்துக்களுடன் நமக்கு உடன்பட முடியாத ஒரு நிலை.
இந்த ஆட்சியாளர்களுக்கு இன்னும் சில காலத்தைக் கொடுத்து நாம் இவர்களுக்கு எதிரான விமர்சனங்களையும் மேற்கொள்ளலாம் என்று இருக்கின்றோம். இந்த அரசு தொடர்பாக சில விமர்சனங்கள் இருக்கின்றன ஆனால் எதிரணியினர் அவற்றை இனம் கண்டு கொள்ளவில்லை.