ஃபர்ஹானா – சினிமா விமர்சனம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ’ஃபர்ஹானா’ திரைக்கு வந்திருக்கிறது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ஃபர்ஹானா

‘தி கேரளா ஸ்டோரி’ படம் இஸ்லாம் மதத்திற்கு எதிரானது என சர்ச்சை ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்தப் படமும் அப்படியானதே என சொல்லப்பட்டது. அதனால், இந்தப் படத்தையும் தடை செய்ய வேண்டும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தின. ஆனால், அதை வெளியாவதற்கு முன்பே படத்தை தடை செய்யக் கோருவது தவறான முன்னுதாரணம் என படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், திரைக்கு வந்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியின் நடுத்தர முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்). தனது கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்) நடத்தி வரும் செருப்பு கடையின் வியாபாரம் கைகொடுக்காததால் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.

அதன்படி கால் சென்டர் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த பின் ஃபர்ஹானாவின் குடும்ப பொருளாதார சூழல் முன்னேற்றம் காண்கிறது.

இதனிடையே தனது குழந்தைக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படும் ஃபர்ஹானாவுக்கு மேலும் பணம் தேவைப்படுவதால், அவர் வேலை செய்யும் கால் சென்டரில் 3 மடங்கு அதிகம் மற்றும் இன்சென்டிவ் கொடுக்கும் மற்றொரு பிரிவில் பணியாற்ற ஒப்புக்கொள்கிறார்.

அந்த வேலை ஃபர்ஹானாவின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப்போடுகிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை எனக் குறிப்பிட்டி இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது.

‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இம்முறை இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் வழியாக முகமறியாதவர்களுடனான இணையவெளித் தொடர்பு உரையாடல்களில் இருக்கும் ஆபத்துகளையும், மனம் விட்டு பேசுவதன் முக்கியத்துவத்தையும் படைப்பாக்கியிருக்கிறார்.

“பெண் விடுதலையின் குரலை ஒலிக்கும் படம்”

ஃபர்ஹானா

இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் சென்னை ஐஸ்ஹவுஸின் நெருக்கடியான வீடுகளுக்குள் பிரவேசிக்கும் முஸ்லிம் பெண் ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் சுழலோட்டத்தையும், அவரைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் கோடுகளின் எல்லைகளையும் படம் பதிவு செய்கிறது. அந்தப் பெண்ணின் அக-மன வெளிச்சிக்கல்களை நோக்கி படம் நகரும்போது காட்சிகள் உயிர்கொள்கின்றன என குறிப்பிட்டுள்ள இந்து தமிழ் திசை, ஒரு பெண்ணுக்கான ‘பொருளாதாரா விடுதலை’யின் தேவையை உரைத்துக்கொண்டேயிருக்கும் படம் ஓரிடத்தில் சாலையோர பெண்மணியின் குரலின் வழியே அதன் அழுத்தத்தை கூட்டுவது ‘நச்’ ரகம் எனவும் பதிவு செய்கிறது.

மேலும், செல்வராகவனுடனான ஐஸ்வர்யா ராஜேஷின் அந்த மொத்த உரையாடலை கவிதைகளாக்கி ரசிக்க வைத்திருப்பது எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், சங்கர் தாஸ், நெல்சன் தீலிப்குமாரின் வசன மேஜிக். ‘எல்லா விதிக்கும் ஒரு விதி விலக்கு இருக்கு’, ‘நீ சொன்ன வார்த்தையோட அந்த நிமிஷம் கடந்து போகாத படி உறைய வைச்சிருக்கேன்’, ‘நான் இந்த போன கட்பண்ணிட்டா அடுத்து பேசுறவன் குரல் வழியாகவே உன்ன தடவி பார்ப்பான்’ போன்ற வசனங்கள் கவனம் பெறுவதாகவும் இந்து தமிழ் திசையின் விமர்சனத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

முந்தைய தலைமுறைக்கும் தற்போதைய தலைமுறைக்குமான வித்தியாசத்தை ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பா மற்றும் கணவர் மூலம் காட்சிப்படுத்தியிருந்ததும், தன் மனைவி மீது பழி வந்தபின்பும் அதனை குர்ஆன், ஹதீஸின் வழியே எதிர்கொள்ளும் கணவர் கதாபாத்திரமும் பாராட்டுக்குரியது.

சர்ச்சையான கொலைக்குப் பின்பும் கால் சென்டர் மீண்டும் இயங்குவதும், ஜித்தன் ரமேஷ் குடும்ப பொருளாதார சூழலை எதிர்கொள்ள எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததும், செல்வராகவன் கதாபாத்திரத்தின் பின்னணியில் தெளிவின்மை, தனியாளாக அவர் எப்படி எல்லாவற்றையும் கண்டறிகிறார் உள்ளிட்ட லாஜிக் சிக்கல்களும் இல்லாமலில்லை.

தவிர, ஒரு கட்டத்தில் படம் அடுத்தடுத்து நகராமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பது அயற்சியை ஏற்படுத்துவதாக இந்து தமிழ் திசை குறிப்பிட்டுள்ளது.

மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய குடும்ப பின்னணியிலிருந்து இந்த கதையை அணுகியிருப்பதற்கான தேவையையும், அதற்குரிய நியாயத்தையும் படத்தின் காட்சிகளோ, திரைக்கதையோ சேர்க்காமலிருக்கும் சூழலில் ‘ஃபர்ஹானா’வாக இந்தப்படம் உருவானது ஏன் என்ற கேள்வி இறுதி வரை தொக்கி நிற்பதாக விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறது ‘இந்து தமிழ் திசை’.

ஃபர்ஹானா

இறுக்கமான த்ரில்லர் பாணியில் ’ஃபர்ஹானா’ திரைப்படம் சிக்கலான கருத்துகளை சொல்லியிருப்பதாக ’இந்தியா டுடே’ விமர்சனம் குறிப்பிட்டு இருக்கிறது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் இந்த திரைப்படம் ஃபர்ஹானா வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க வைக்கிறது. அதுவே, அடுத்தடுத்த காட்சிக்கான சுவாரஸ்யத்தையும் கூட்டுவதாகவும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்ஹானாவின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், பார்வையாளர்களை கவர்கிறது. முதன்மை கதாபாத்திரத்தின் ஒவ்வொரு நாளும் அந்த வீட்டு சுவற்றுக்குள்ளேயே முடிகிறது என்பதை அழகாக பதிவு செய்கிறது. அதேபோல், முதல்முறையாக அவள் வேலைக்கு செல்லும்போது ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வெளியுலகமும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது யதார்த்தமான நடிப்பால் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தாங்கியிருக்கிறார். ஆனால், ஜித்தன் ரமேஷின் கதாபாத்திரம்தான் கேக்கின் மேல் செர்ரியைப் போல் சிறப்பாக இருப்பதாகவும், அவர் அந்த கதாபாத்திரத்தில் மிகவும் சரியாக பொருந்துகிறார் எனவும் இந்தியா டுடே விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் கதாபாத்திரம் ஆச்சரி Dream Warrior Pictures யமளிப்பதாகவும், ஆனால், அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பேசும் தொலைபேசி உரையாடல்கள் சில இடங்களில் சிரிப்பை வரவழைப்பதாகவும் தெரிவிக்கிறது. சிறு சிறு குறைகளை நீக்கியிருந்தால், இந்தப் படம் தரமானதாக இருந்திருக்கும் எனவும் ‘இந்தியா டுடே’ விமர்சனம் தெரிவிக்கிறது.

“முரண்பாடுகளுக்கு விடை கொடுத்த சுவாரஸ்ய கதை”

ஃபர்ஹானா

ஒரு தனித்துவமான அமைப்பில் புதிர் நிறைந்த பூனை, எலி மோதலை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு வசீகரிக்கும் படைப்பை நெல்சன் வெங்கடேசன் வழங்கியிருப்பதாக குறிப்பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா, ‘ஃபர்ஹானா’ விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் உள்ள முரண்பாடுகள் சுவாரஸ்யமான திரைக்கதையால் நிரப்பப்பட்டு இருப்பதாகவும், உணர்வுபூர்வமான காட்சியமைப்புகளால் படம் கவனிக்க வைப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய இடமாக இருந்தாலும், ஒளிப்பதிவாளர் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறார் என தெரிவித்துள்ள அந்த விமர்சனம், ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை ஒரு த்ரில்லர் படத்திற்கான பதட்டத்தை திறத்துடன் உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளது.

காட்சியமைப்புகளின் வேகம் படத்தின் கதையோட்டத்தை பாதித்தாலும், முடிவில் உணர்வுபூர்வமாக ரசிக்க முடிவதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்திய தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நெல்சன் வெங்கடேசன் ஒரு சிம்பிளான கதையை இஸ்லாம் குடும்பப் பெண்ணையும், அவளது வாழ்வியல் நெறிமுறைகளையும் கலந்து சொல்லியிருக்கிறார் என விமர்சனத்தில் பதிவு செய்திருக்கிறது.

ஃபர்ஹானா

இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் ஒருவள் நெருக்கடியான இப்படியான சூழ்நிலைக்குள் தள்ளப்படும் போது, அவளிடம் இயல்பாக இருக்கும் ஒழுக்கமும், அவளின் மார்க்கமும் அவளை கேள்விக்கேட்கும் தருணங்கள் படத்தை இன்னொரு தளத்திற்கு நம்மை கொண்டு சென்று இருக்கிறது எனவும் அந்த விமர்சனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபர்ஹானா படத்தின் முதல் பாதி கொஞ்சம் நீளம் போன்ற உண்ர்வைக்கொடுத்தாலும், வலுவையும் திரைக்கதையும், செல்வராகவன் பேசும் வசனங்களும் நம்மை படத்தோடு ஒன்ற வைக்கின்றன. இரண்டாம் பாதி முழுக்க பரபரப்புடன் இருப்பதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை என்றாலும், பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவனை சந்திக்கும் இடம் முழுமையடையாத உணர்வை கொடுப்பதாகவும், அந்த இடத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக கையாண்டு இருந்தால் ’ஃபர்ஹானா’ பெரிய வெற்றியை அடைந்திருப்பாள் எனவும் தனது விமர்சனத்தில் பதிவு செய்திருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

Previous Story

வெசக் நல்லெண்ண விஜயம்!

Next Story

விலகு விலகாதே அதிரடி!