குறை  மாத பிரசவமே அனுர அரசு!

நஜீப் பின் கபூர்

நன்றி 29.11.2026  ஞாயிறு தினக்குரல்

குறைமாத பிரசவம் என்பது குழந்தை பிறப்பில் அவதானமான ஒரு நிலை என்பது வயது வந்தவர்களுக்கு புரியம். இதனை இன்னும் விரிவாக அல்லது இலகுவாக தெளிவுபடுத்துவதாயின் சாதாரணமான குழந்தைப் பிறப்புக்கு பத்து மாதங்கள் அளவில் தேவைப்படும். ஆனால் சில சமயங்களில் அந்தப் பிரசவம் ஆறு ஏழு எட்டு மாதங்கள் என்ற குறைவான காலத்தில் நிகழ்வதை நாம் பார்க்கின்றோம்.

அப்படி பிறக்கின்ற குழந்தைகளை காப்பாற்ற  வைத்தியர்களும் பெற்றோர்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டி வருகின்றது. காரணம் அந்த சிசுவுக்கு உயிர் ஆபத்தான கட்டங்கள் கூடவே இருக்கின்றன. எனவே நாம் தற்போதய அனுர அரசை அல்லது அவர்களின் என்பிபி. ஆட்சியை குறைமாத பிரசவம் அல்லது சிசுவுக்கு ஒப்பீடு செய்கின்றோம். இதற்காக நாம் முன்வைக்கின்ற நியாயங்கள் அல்லது தர்க்கங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

குறைமாத பிரசவங்களுக்கும் என்பிபி. அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி ஏழுப்பப்படலாம். குறைமாத குழந்தைகளை உயிர் பிழைக்க வைக்க அல்லது காப்பாற்றுவதற்கு வைத்தியர் மற்றும் பெற்றோர் பக்கத்திலும் விஷேட அவதானம் அல்லது தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கின்றது. இதனை நாம் விரிவாக விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. குறைமாத பிரசவம் என்றதும் அவதானம் என்ற ஒரு எச்சரிக்கை அதனுடன் கூடவே வந்து விடுகின்றன.

இது அனைவரும் அறிந்த விவகாரம்தான். 1947 முதல் இந்த நாட்டில் அதிகாரத்துக்கு வந்த அனைத்து தலைவர்களும் கட்சிகளும் சம்பிரதாய வலதுசாரிப் போக்குடைய கட்சிகளும் பிரபுத்துவ தலைமைகளுமாகவே  இருந்து வந்திருக்கின்றன. அந்த நாட்களில் இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட சமசமாஜக் கட்சி மற்றும் கம்யூனிச கட்சிகள் இந்த வலது சாரிகளை விட சற்று கடும் போக்கானவையாக இருந்தன.

அதன் தலைவர்களாக என்.எம்.பெரேரா கொல்வின் ஆர்டி சில்வா பீட்டர் கெனமன் போன்றவர்கள் இருந்தனர். அவர்களும் பிற்காலத்தில் குறிப்பாக பண்டாரநாயக்க துவக்கிய சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சியின் செல்வாக்கான பங்காளிகளாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில்தான் றோஹன விஜேவீர என்ற ஒரு பாத்;திரம்  இலங்கை அரசியலில் பேசுபொருளாக தெற்கு அரசியலில் பிரவேசமெடுக்கின்றது. விஜேவீர மாத்தறை- கோடேகொடயில் 1943.07.14 பிறந்தார். அப்போது நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலமாக இருந்தது.

இந்த விஜேவீர தந்தை தொன் அந்திரிஸ் விஜேவீர. இவர் நாம் முன் குறிப்பிட்ட கம்யூனிச கட்சியின் செயல்பாட்டாளராக இருந்து வந்திருந்ததும், வலதுசாரி குறிப்பாக ஐதேக. ஆதரவாலர்களினால் அவர் தாக்கப்பட்டு நிரந்தரமாக முடமாக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இதே தெற்கு இடதுசாரிகளின் சிபார்சில் 1960 ரஸ்யா லுவும்பா நட்புறவு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக விஜேவீர இணைந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 17. அங்கு சென்றவர் அந்த நாட்டுக்கு எதிரான சீன சார்பு செயல்பாடுகளில் ஆர்வமாக இருந்தால் விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்தவருக்கு மீண்டும் ரஸ்யா அரசு விசா வழங்க மறுத்து விட்டது.

அவருக்கு ரஸ்யா போக உதவியவர்களாலும் மீண்டும் சிபார்சு செய்ய முடியாத நிலை. அந்த நாட்களில் இடது சாரிகளின் தலைமைகள் மூன்றாக பிளவு பட்டிருந்தன. ரஸ்ய தரப்பு சீன தரப்பு மற்றும் அல்பேனிய அணி என்பது அவை. செயல்பட்டுக் கொண்டிருந்தன.  அன்று பாலதம்பு அணி சீன ஆதரவாக இங்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியில் 1965.05.14ம் திகதி விஜேவீர தனது மக்கள் விடுதலை முன்னணி என்ற அரசியல் இயக்கத்தை துவங்கினார். அப்போது அவருக்கு வயது 22.மட்டுமே. இது கடும் போக்கு  இடதுசாரி அமைப்பாக செயல்பட்டதுடன் ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் 1971ல் தனது முதலாவது போராட்டத்தை நடாத்தியது. அதில் அவர்கள் தோற்றுப் போனார்கள். அதே போன்று 1988-1989 காலப்பகுதியிலும் இவர்கள் தனது இரண்டாவது கிளர்ச்சியை ஆரம்பித்து அதுவும் வெற்றி பெறவில்லை.

இந்த இரண்டு கிளர்ச்சிகளிலும் 1971ல் 11000 பேரையும் 1988-1989ல் 60000ம் வரை தமது ஆதரவாலர்களை அல்லது தொண்டர்களையும் இவர்கள் பலி கொடுத்திருந்தனர். 1970 தேர்தலில் இவர்கள் சிரிமா பண்டார நாயக்காவுக்கு தமது ஆதரவைக் கொடுத்தனர். ஆனால் சிரிமாவுடன் இருந்த சம்பிரதாய இடதுசாரிகள் ஜேவிபி.காரர்களை அமெரிக்காவின் கையாட்கள் என்று கூறிவந்தனர். காரணம் தமக்கு எதிரான ஒரு இடதுசாரிகள் அதுவும் கடும்போக்கு கருத்துக்களைக் கொண்ட இளைஞர்கள் இதில் ஆர்வமாக இருந்ததால் அவர்கள் மீது சேறுபூசும் எண்ணத்தில்தான் சம்பிரதாய இடதுசாரிகள் இப்படி ஒரு கதையை விஜேவீரவுக்கு எதிராக கட்டிவிட்டனர்.

 1988-1989ல் நடந்த கிளர்ச்சியில் ஜேவிபி.காரர்கள் தனது தலைவன் விஜேவீரவையும் பறிகொடுத்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த விஜேவீர கண்டி-உலப்பனையில் கைதானது முதல் அவர் படுகொலை செய்யப்படும் வரையிலான கதைகளை நாம் முன்பு விரிவாக வாசகர்களுக்கு ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கின்றோம்.

எனவே அவைபற்றி இங்கு மீண்டும் பேச வேண்டியதில்லை. இப்போது நேரடியாக குறைமாத பிரசவத்துக்கும் அனுர அரசுக்கும் இடையே இருக்கின்ற நெருக்கத்தைப் பற்றி இப்போது பார்ப்போம். 1982 நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளராக நின்ற ரோஹன விஜேவீர 273428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இது 4.19 சதவீதம். அன்று செல்லுபடியான வாக்குகள் 6522147. 2019ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வந்த அனுர குமார பெற்றுக் கொண்ட வாக்குகள் 418553. இது 3.16 சதவீதம். செல்லுபடியான வாக்குகள். 13252499. இதிலிருந்து நாம் எதனைக் குறிப்பிட வருகின்றோம் என்றால் 1982 முதல் 2019 ஆண்டுவரை ஜேவிபியின் வளர்ச்சி விகிதத்தை ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.! அங்கு 1.03 சதவீத வீழ்ச்சிதான் கணப்படுகின்றது. முன்னேற்றத்தை விட இங்கு சரிவுதான் நடந்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் அனுரகுமார எப்படி 2024 ஜனாதிபதித் தேர்தலில் சாதிக்க முடிந்தது என்று கேட்கின்றோம். நாம் முன்பு ஒரு முறை சொல்லி இருந்தது போல இங்குதான் குடிகளின் மனமாற்றம் என்ற அதிஸ்டமே இவர்களுக்கு ஜனாதிபதி பதவியைக் கொண்டு வந்து கொடுத்திருக்கின்றது. 1982-2019 வரையிலான 37 வருட கால இவர்களது அரசியல் வீழ்ச்சியை நோக்கியே பயணித்திக்கின்றது. (விஜேவீர முதல் அனுர வரை) அப்படி இருக்க 2019க்கும் 2024க்கும் இடைப்பட்ட குறுகிய காலப்பகுதியான ஐந்து வருடங்களில் அதிகாரத்தை பெற்றுக் கொண்டதன் பின்னணி என்னவாக இருக்கும்.? இது இயல்பான வளர்ச்சி என்பதனை விட நாம் முன்பு குறிப்பிடுக்கின்ற குறைமாத பிரசவம்தான். எனவே இந்த பதவியையும் அதிகாரத்தையும் இவர்கள் எப்படி பாதுகாத்துக் கொள்ளப்போகின்றார்கள் என்பதுதான் நமது கேள்வி.

இவர்களுக்கு வந்த வெற்றி இயல்பானது கிடையாது. அது குறைமாத குழந்தை கதை போல ஒன்று. எனவே இதனை பாதுகாத்துக் கொள்ள நிறையவே காரியங்களை செய்ய வேண்டி இருக்கின்றது என்பது நமது கணக்கு. மக்கள் இவர்கள் மீது அசாதாரணமாக நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அதனால் இன்று வரை எதிரணியினரும் இனவாதிகளும் கூலிக்கு வேலை பார்க்கின்ற ஊடகங்களும் எதனைச் சொன்னாலும் மக்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். இந்த நிலை தொடந்து நீடிக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாது. எனவே அரசு தொடர்ச்சியாக மக்களைத் தெளிவூட்டி யதார்த்தத்தை அவர்களுக்கு விளக்க வேண்டும்.

அனுர தலைமையிலான என்பிபி அரசு குறைமாத குழந்தை என்ற நமது இந்த வாதத்துக்கு நாம் இன்னும் சில ஆதரங்களை தருகின்றோம். ஒரு முறை நாம் இன்று அமைச்சராக இருக்கும் சமந்த வித்தியாரத்தனாவை அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகேயின் மஹியங்கனை வீட்டில் சந்தித்த போது தங்களால் எப்போது அதிகாரத்துக்கு வர முடியுமாக இருக்கும் என்று நேரடியாக கேட்டபோது, எப்போது தேர்தல் ஒன்றில் பத்து சதவீத வாக்குகளை எமக்குக் கடந்து போக முடிகின்றதோ அதன் பின்னர் ஒரு ஐந்து வருடங்களில் வருகின்ற தேர்தலில் நாம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று அவர் நமக்கு அன்று கூறி இருந்தார்.

இதனை நாம் அந்த நாட்களிலே எழுதி இருந்தோம். அவர் கருத்துப்படி 2019ல் வெறும் 3.16 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அவர்கள் எப்படி அடுத்த 2024ல் வந்த தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.? எனவே அவர்களது மதிப்பீட்டுக்கும் நம்பிக்கைக்கும் மாற்றமாகவே இந்த வெற்றி அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது. எனவேதான் இந்த அரசு அவர்களே எதிர்பாரா முன்கூட்டிய குறைமாத பிரசவம் என்று நாம் கூறுகின்றோம்.

மேற்குறிப்பிட்ட நமது கதை பல வருடங்கள் பழைமையானது என்று வைத்துக் கொள்வோம். சில தினங்களுக்கு முன்னர் சதுரங்க அபேசிங்ஹ என்பவர் ஒரு ஊடக சந்திப்பில் சொன்ன கதை இது. 2019ல் நான் தற்செயலாக என்பிபி. பிரச்சார பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அப்போது நாம் வெற்றிபெற மாட்டோம் என்பதனை நாம் நன்றாக உணர்ந்திருந்தோம். ஆனால் ஒரு கனிசமான வாக்கை பெறுவதுதான் அன்றைய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் 2024ல் நாம் அதிகாரத்துக்கு வந்து விடுவோம் என்று ஒரு போதும் அன்று எதிர்பார்க்கவில்லை என்று கூறி இருந்தார்.

வித்தியாரத்ன மற்றும் சதுரங்க கதைகளின்படி இந்த அரசு பதவிக்கு வந்தது ஒரு அசாதாரண நிலை என்பது இதிலிருந்து உறுதியாகின்றது. குறைமாத குழந்தை என்ற நமது விதிக்கு மற்றும் ஒரு ஆதாரம் இது. இந்த சதுரங்க என்பவர் தற்போது பிரதி அமைச்சர். மற்றும் என்பிபி. செயலாளர் டாக்டர் அபேசிங்ஹவின் மகனும் கூட என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதனால் இந்த குறைமாத அரசுக்கு நிறையவே ஆபத்துக்கள் இருக்கின்றன என்பது தெரிந்தது. இந்த அரசு ஒரு மாதங்கள் கூட உயிர் வாழமாட்டாது.! ஆறுமாதங்கள் என்றெல்லாம் எதிரணியினர் நாள் குறித்திருந்தனர்.!  ஆனால் அது ஈராண்டுகளைக் கடந்து இன்று பயணிக்கின்றது. எனவே அரசியல் காட்டில் என்பிபி. தனிக்காட்டு ராஜா என்ற நிலையில் பயணிக்கின்றது. ஆனாலும் அதற்கு எதிரான உள்ளூர் சர்வதேச சதிகள் தொடர்கின்றன.

இந்த நாட்டில் பலமான ஒரு ஆட்சி அமைவதை விரும்பாத சர்வதேச சக்திகள் இருக்கின்றன. சர்வதேச ஆதிக்கப் போட்டியில் இலங்கை மீது தொடர்ச்சியான ஒரு சந்தேகப்பார்வை மேற்கத்திய தரப்பில் இருந்து வருகின்றது. அதனை சமாளிப்பதில் இது வரை அவர்கள் ஆரோக்கியமான நிலையில் இருக்கின்றார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாமும் நம்மைப் போன்ற பலரும் குறிப்பிடுவது போல ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கு நிறையவே உயிராபத்துக்கள் இருந்து வருகின்றன.

எனவேதான் அவர்களின் அரசியல் எதிரிகள் எப்படியாவது அதிகாரத்தில் இருந்து இவர்களை வீழத்திவிட வேண்டும் என்று வைராக்கியத்தில் இருக்கின்றார்கள். அவர்களில் கடந்த காலத்தில் ஊழல் மிகுந்த ஆட்சியை முன்னெடுத்து மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து இன்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் முதன்மையானவர்கள். இதில் ராஜபக்ஸாக்கள் தரப்பினர் முன்னணியில் இருக்கின்றார்கள்.

அடுத்து அவர்களுக்கு ஒத்துழைத்து தாமும் சுகபோகங்களை அனுபவித்த ஒரு கூட்டமும் இன்றும் என்பிபி நிருவாகத்திலும் இருந்து வருகின்றனர். எப்படியாவது ஒரு முறையாவது அதிகாரத்துக்கு வந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்ற சஜித் சம்பிக்க திலித் போன்றவர்களும் இதில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் சம்பிரதாய மற்றும்  சமூக ஊடகங்களை வைத்துக் கொண்டு இந்த அனுர அரசுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அத்துடன் இதற்காக இனவாதிகளை இவர்கள் பெரும்பான்மை இனங்களிலும் சிறுபான்மை இனங்களிலும் வைத்து இயக்கிக் கொண்டும் வருகின்றார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் பேரில் போலியான சமூக ஊடகங்களை இயக்கி வன்முறைகளை ஏற்படுத்த முனைந்த ஒரு குழுவினரை பொலிசார் கைது செய்தார்கள். அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சிங்கள இளைஞர்கள். பின்னர் அவர்கள் தப்பிக்கொள்ள கூறிய காரணம் தான் விளைவுகளை அறியாமல் ஒரு விளையாட்டுக்காகத்தான் இதனை செய்தோம் என்று கூறி இருக்கின்றார்கள். மற்றுமொருவர் இந்த நாட்டில் பௌத்தர்கள் ஒரு சதவீதம் கூட கிடையாது என்ற கருத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றார். இந்த மனிதனுடைய பின்னணியை பார்த்தால் அவர் ஒரு வன்முறையாளன் அல்லது அரசியல் வியாபாரி என்று தெரிய வருகின்றது. அதனால் அவருக்கு பல தரப்புக்களுடன் உறவு.

கடந்த ஆட்சி காலங்களைவிட என்னதான்  இந்த அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சிலர் அதில் திருப்தி கொள்ளாமல் இன்று அரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்கள்.

சர்வதேச நிகழ்வுகளும் பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணம் என்பதனை ஏற்றுக் கொள்ள சிலர் தயாராக இல்லை. கடந்த கால ஆட்சியாளர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்திருந்தால் நிலமை என்னவாக இருக்கும்.?

இதனால் தினந்தோறும் இந்த அரசுக்கு எதிரான செயல்பாடுகளும் தொடர்கின்றன. அதனால் ஒரு குறைமாத குழந்தைக்கு இருக்கின்ற ஆபத்து இந்த அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து வருகின்றது என்பது நமது அவதானம்.

 

Previous Story

கல்முனை-சாய்ந்தமருது சமர்!

Next Story

தங்கப் பதக்கம் வேண்டுமா!