ஹிட்லர் திட்டத்துக்காக ஆரிய பெண்கள் பிரசவித்து  பல ஆயிரம் குழந்தைகள் – வரலாறு

Femmes allemandes portant des enfants d'une prétendue pureté aryenne dans un Lebensborn, centre de sélection des naissances par des méthodes eugénistes, pendant la Seconde Guerre mondiale. Femmes allemandes portant des enfants d'une prétendue pureté aryenne dans un Lebensborn, centre de sélection des naissances par des méthodes eugénistes, pendant la Seconde Guerre mondiale.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் லெபென்ஸ்போர்ன் திட்டத்தின்கீழ் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள்

(உலக வரலாற்றின் மிக மோசமான இனப் படுகொலையை நிகழ்த்திய ஹிட்லர் இறந்த நாள் இன்று. இதையொட்டி இந்த கட்டுரையை மறுபகிர்வு செய்கிறோம். பிபிசி தமிழின் வரலாற்றுப் பதிவுகள் தொடரின் 16வது கட்டுரையாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது இது.)

அடோல்ஃப் ஹிட்லர், 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்து, 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இறந்தார் என்பதெல்லாம் வரலாறு. 1934இல் அந்த நாட்டின் தலைவராக உருவெடுத்த அவர், ‘ஃபியூரர்’ என ‘மகா தலைவர்’ பட்டத்துடன் அழைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாஜிப்படைகள் தோல்வியுற்றன. அந்த படையினர் தன்னை நெருங்கி வரும் முன்பே ஹிட்லரும் அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்ட வரலாறை படித்திருப்போம்.

முதலாம் போரில் வீழ்ச்சியடைந்த ஜெர்மன் மக்கள் தொகையை மீண்டும் பெருக்க ஒரு அதிரடி திட்டத்தை அந்த நாட்டின் நாஜிப்படை அறிமுகப்படுத்தியது. அதில் பல பெண்கள் தாமாக முன்வந்து கர்ப்பம் தரித்து நாட்டுக்காக குழந்தைகளைப் பெற்றெடுக்க ஆர்வம் காட்டியது, நாம் அதிகம் படித்திருக்காத வரலாறு. அத்தகைய ஒரு மாறுபட்ட வரலாற்றுப்பதிவைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

1936 ஆம் ஆண்டில், நாஜி ஆதரவாளரும் பட்டதாரியுமான ஹில்டேகார்ட் ட்ரூட்ஸ் ஜெர்மனியின் இனரீதியான ‘தூய்மையான’ பெண்களில் ஒருவராக ஒரு திட்டத்தில் சேர்க்கப்பட்டார். ஆரிய குழந்தையை உருவாக்கும் நம்பிக்கையில் ‘ஷுட்ஸ் ஸ்டேஃபல்’ எனப்படும் எஸ்.எஸ் அதிகாரிகளுடன் உடலுறவு கொள்வது இந்த பெண்கள் நாஜி ஆளுகைக்கு ஆற்றும் சேவையாகப் பார்க்கப்பட்டது.

இந்த எஸ்.எஸ். அதிகாரிகள், கறுப்பு நிற சீருடையில் ஹிட்லரின் மெய்க்காவல் படையின் முக்கிய கேடயமாக விளங்கியவர்கள். இதன் தலைவராக இருந்தவர் ஹிம்லர். ஹிட்லரின் நிழலாகவும் அவரது முடிவுகளை செயல்படுத்தும் தளபதியாகவும் இவர் செயல்பட்டார்.

இவரது எண்ணத்தில் உருவான தன்னார்வ பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் திட்டம் தான் லெபென்ஸ்போர்ன். இதற்கு தமிழில் ‘வாழ்க்கையின் நீரூற்று’ என அர்த்தம்.

ஜெர்மனியில் அக்காலத்தில் வீழ்ச்சியடைந்த ஜெர்மனிய பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், நாஜி கொள்கைக்கு கட்டுப்பட்ட படை வம்சத்தை புனித இனமாக வகைப்படுத்தும் முயற்சியாகவும் இந்த லெபென்ஸ்போர்ன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆதி ரோமாபுரி மற்றும் ஜெர்மன் சாம்ராஜ்ஜியத்தின் வழிவந்தவராக தன்னை அழைத்துக் கொண்ட ஹிட்லரின் ஆளுகை (1933-45) நடந்த 12 ஆண்டுகளில், குறிப்பாக ஜெர்மனி மற்றும் நார்வேயில் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், லெபென்ஸ்போர்ன் திட்டப்படி இனப்பெருக்கம் செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. திட்டப்படி எஸ்.எஸ். படையில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் நான்கு பிள்ளைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் ஹிம்லர் வகுத்த ஆரிய குணாதியம் கொண்ட பெண் வழியாகவே அந்த குழந்தை பெற்றெடுக்கப்பட வேண்டும். ஆனால், அவர் எதிர்பார்த்த பலன் திட்டத்தின் மூலம் கிடைக்கவில்லை.

ஹிட்லரால் கவரப்பட்ட பெண்கள்

இந்த காலகட்டத்தில்தான் தன்னார்வ முறையில் குழந்தைகளை ஈன்ற இளம் பெண்களில் ஒருவரது வாழ்வை மையமாக வைத்து பிரிட்டிஷ் எழுத்தாளர் கைல்ஸ் மில்டன் தமது புத்தகத்தை எழுதியிருந்தார். அந்த பெண்ணின் பெயர் ‘ஹில்ட்கார்ட் ட்ரூட்ஸ்’.

ஹிட்லரின் நாஜி கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே இளைஞர் இயக்கத்தின் (பிடிஎம்) பெண்கள் அணியில் ட்ரூட்ஸ் உறுப்பினராக இருந்தார். ஜெர்மன் மொழியில் இந்த அணியை ‘பண்ட் டாய்ச்சர் மேடல்’ (Bund Deutscher Mädel) என அழைத்தனர்.

இந்த ஹில்ட்கார்ட், ட்ரூட்ஸின் அனுபவத்தை ஆராய்ந்து, ஹிட்லருக்காக கர்ப்பம் தரிக்க பல இளம் ஜெர்மன்கள் ஏன் ஆர்வமாக இருந்தனர் என்பதை பிரிட்டிஷ் எழுத்தாளர் கைல்ஸ் மில்டன் தமது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஹிட்லரின் தலைமைக்கு, ஹில்ட்கார்ட் ட்ரூட்ஸ் விசுவாசமான ஆதரவாளராக இருந்தார். அவர் 1933இல் பிடிஎம் அணியில் சேர்ந்து, அதன் வாராந்திர கூட்டங்களில் கலந்து கொண்டார்.

“அடோல்ஃப் ஹிட்லர் மீதும் எங்களுடைய புதிய சிறந்த ஜெர்மனி குறித்தும் நான் பைத்தியக்காரத்தனமான நம்பிக்கையை கொண்டிருந்தேன். இளைஞர்களான நாங்கள் ஜெர்மனிக்கு எவ்வளவு மதிப்புமிக்கவர்கள் என்பதை அந்த அணியில் சேர்ந்த பிறகே உணர்ந்தேன்,” என்று ஹில்ட்கார்ட் கூறியிருக்கிறார். ட்ரூட்ஸ் விரைவில் உள்ளூர் அமைப்பின் முக்கிய தலைவரானார்.

“ஜெர்மனியர்களுக்கே உரிய பொன்னிற முடி மற்றும் நீலக் கண்கள் காரணமாக ‘நோர்டிக்’ பெண்ணின் கச்சிதமான உதாரணமாக நான் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டேன். நீளமான கால்கள், வலுவான புஜங்கள், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு வசதியான அகலமான இடுப்பு எலும்புக்கட்டு போன்ற அம்சங்கள் எனக்கு இயல்பாகவே இருந்தன,” என்று ட்ரூட்ஸ் கூறினார்.

நாஜி ஜெர்மனி ஆளுகையில் லெபென்ஸ்போர்ன் திட்டத்தின்கீழ் பிரசவித்த தமது செயல்பாட்டில் தாம் குற்றமற்றவர் என்று கூறி 1947ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி நடந்த ரூஷா நுரெம்பர்க் தீர்ப்பாய விசாரணைக்காக ஆஜராகி சாட்சியம் அளித்த இங்க் வியர்மெட்ஸ்

1936ஆம் ஆண்டில், ட்ரூட்ஸுக்கு 18 வயதானபோது, தனது பள்ளிப்படிப்பை அவர் முடித்தார், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். ட்ரூட்ஸின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு ஆலோசனையை அவருக்கு பிடிஎம் தலைவர் ஒருவர் வழங்கினார்.

“வாழ்வில் உருப்படியாக என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், ஃப்யூரருக்காக (ஹிட்லரின் பட்டப்பெயர்) ஒரு குழந்தையை ஏன் பெற்றுக் கொடுக்கக்கூடாது? ஜெர்மனிக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக தேவைப்படுவது இன ரீதியாக பங்களிப்பு.” என அந்த தலைவர் கூறினார்.

அதுவரை லெபென்ஸ்போர்ன் எனப்படும் அரசு ஆதரவு பெற்ற திட்டத்தைப் பற்றி ட்ரூட்ஸ் அறிந்திருக்கவில்லை. அதன் நோக்கம் இனப்பெருக்கம் மூலம் பொன்னிற முடி, நீலக்கண்ணுள்ள ‘ஆரிய’ குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதாகும். இனத் தூய்மை உள்ள ‘கன்னிப் பெண்கள்’ எஸ்.எஸ். அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால், அவர்கள் கர்ப்பம் தரித்து ஆரிய குழந்தைகளை பெற்றெடுப்பார்கள் என்று பிடிஎம் தலைமை நம்பியது.

இந்த லெபென்ஸ்போர்ன் திட்டம் எப்படி வேலை செய்கிறது என்பதை ட்ரூட்ஸுக்கு அந்த தலைவர் விளக்கினார். ஆரம்பத்தில் சில மருத்துவ பரிசோதனைகளுக்கு தன்னார்வலர் உட்பட வேண்டும். அதன் மூலம் அவரது வம்சம் உறுதிப்படுத்தப்படும். எவ்வித யூத ரத்தமும் அவரது உடலில் கலக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவே இந்த பரிசோதனை. பரிசோதனைகள் முடிந்து விட்டால், எஸ்.எஸ். துணைவரை தேர்வு செய்யும் கட்டத்தை அந்த பெண் தன்னார்வலர் அடைவார்.

1935இல் நாஜி திட்டத்துக்காக பயன்படுத்தப்பட்ட லெபென்ஸ்போர்ன் மகப்பேறு இல்லம்

பதின்ம வயதை கடந்த நிலையில், ஹிட்லருக்காக குழந்தை பெற்றுக் கொடுக்கும் திட்டம் ட்ரூட்ஸை மெய்சிலிர்க்க வைத்தது. உடனடியாக திட்டத்துக்கு உடன்பட ஒப்புக்கொள்ளும் படிவங்களில் கையெழுத்திட்டார். இதுபோன்ற முரண்பாடான திட்டத்துக்கு தமது பெற்றோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவர்களிடம் ஓராண்டுக்கு தேசிய சோஷலிச பயிற்சிக்காக உறைவிட பள்ளியொன்றுக்கு செல்லவிருப்பதாக கூறிச்சென்றார்.

பிரும்மாண்ட கோட்டையில் சொகுசு வசதிகள்

இதையடுத்து பிடிஎம் தலைமை முன்பு ஆஜரான அவரை டேகர்ன்ஸே அருகே உள்ள பவேரியா என்ற இடத்துக்கு நாஜி அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்குள்ள பிரும்மாண்டமான கோட்டையில் இவரைப் போலவே மேலும் 40 பெண்கள் இருந்தனர். எல்லோரும் உண்மையான பெயரை மறைத்துக் கொண்டு புனை பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். இங்குவரை வருவதற்கு இந்த பெண்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் இவர்கள் குறைந்தபட்சம் தங்களுடைய தாத்தா வழி முதல் ஆரிய இனத்தவர்தான் என்பதை நிரூபிக்க ஓர் சான்றிதழ் மட்டுமே.

அந்த கோட்டை, செல்வச்செழிப்பின் உச்சமாக இருந்தது. விளையாட்டுகள், உள்ளரங்கு விளையாட்டுகளுக்கு என பெரிய, பெரிய பொதுவான அறைகள் மற்றும் அரங்குகள் அதனுள் இருந்தன. நூலகம், இசை கேட்கும் அறை, திரையரங்கு கூட அங்கு இருந்தது. அங்கு பரிமாறப்பட்ட உணவு, தனது வாழ்நாளில் அதுவரை சுவைத்திராததாக இருந்தது என்று ட்ரூட்ஸ் கூறினார். வேலை செய்யவே அவசியமற்ற நிலை போல, எண்ணிலடங்கா பணியாளர்கள் அங்கு இருந்தனர். அந்த சூழ்நிலை, தன்னை சோம்பேறியாக்கியதாகவும், வெகு சீக்கிரத்திலேயே அந்த சொகுசு வாழ்க்கைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டதாகவும் ட்ரூட்ஸ் தெரிவித்தார்.

நார்வேஜிய தாய்க்கும் ஜெர்மன் தந்தைக்கும் பிறந்த 154 நார்வேஜிய குழந்தைகளில் ஒருவரான கெர்ட் ஃபீச்சர், கிழக்கு பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்கில் உள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் 2007ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி தமது வழக்கறிஞருடன் பேசிக் கொண்டிருக்கிறார். இவரைப் போன்ற குழந்தைகள், லெபென்ஸ்போர்ன் குழந்தைகள் ஆக அந்த காலத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த கோட்டையின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் எஸ்.எஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் கையசைவில் இருந்தது.

“நாங்கள் கோட்டைக்குள் நுழைந்தவுடனேயே ஒவ்வொருவரையும் அங்குலம் விடாமல் அந்த மருத்துவர் பரிசோதனை செய்தார். எவ்வித பரம்பரை நோயும் இல்லை, மது மீது நாட்டம் கிடையாது, குடும்பப் பற்று கிடையாது என நாங்கள் அனைவரும் சுய விருப்பத்துடன் ஆவணத்தில் கையெழுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டோம்,” என்று ட்ரூஸ்ட் தெரிவித்தார்.

அந்த மருத்துவர், தாங்கள் பெற்றெடுக்கும் எந்தவொரு குழந்தைக்கும் உரிமை கோர மாட்டோம் என்ற ஆவணத்திலும் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார். அந்த குழந்தைகள் தேசத்தின் சொத்தாக கருதப்படுவர் என்பதையும் அந்த மருத்துவர் தெளிவாக கூறினார்.

அவ்வாறு பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள், நாஜி சிந்தனைக்கு விசுவாசமாக மாறும் கட்டம் வரை அவர்கள் நாச்சின் சிறப்பு கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுவர்.

ஒரு வாரம் பழகி துணைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு

இந்த விதிகள் அனைத்துக்கும் ட்ரூட்ஸ் மற்றும் அவருடன் இருந்த பிற பெண்கள் ஒப்புக் கொண்டனர். இதைத்தொடர்ந்து ஒப்பந்த ஆவணங்கள் கையெழுத்தானதும், தங்களுடைய படுக்கையை பகிர விரும்பும் துணைவர்களை இந்த பெண்கள் தேர்வு செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த இளைஞர்களும் உயரமான தோற்றம், நீலக்கண்களைக் கொண்டவர்களுமாக இருந்தனர். பரஸ்பர அறிமுகம், குழு விளையாட்டுகள், ஒன்றாக சேர்ந்து படங்களை பார்ப்பது மற்றும் சமூக கலந்தாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் பேசிப் பழகும் வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டது.

“ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது துணைவரை தேர்வு செய்ய ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டது,” என்று ட்ரூட்ஸ் தெரிவித்தார். துணைவரைத் தேர்வு செய்யும்போது உங்களுடைய தலை முடி நிறமும் அவரது கண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பெண்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்படி பழகும் எந்தவொரு ஆண் வீரர் அல்லது அதிகாரியின் பெயரும் அந்த பெண்களிடம் பகிரப்படவில்லை. அதுதானே லெபென்ஸ்போர்ன் திட்டத்தின் அடிப்படை.

ஞானத்தந்தை அடோல்ஃப் ஹிட்லருடன் 1938இல் ஓர் ஆலயத்தில் ஞான ஸ்னானம் பெற்ற ஹெர்மான் கோரிங்கின் குழந்தை.

“எல்லா நடைமுறையும் முடிந்து மாதவிடாய் தொடங்கிய பத்தாம் நாளில் எங்களுடைய துணைவருடன் சேரும் கட்டம் வந்தது. அதற்கு முன்பாக ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு நாங்கள் உட்படுத்தப்பட்டோம். அதன் பிறகு தனி அறையில் எங்களுக்கு பிடித்த, நாங்கள் தேர்வு செய்த ஆணுடன் இரவைக் கழிக்க அனுமதிக்கப்பட்டோம்.”

“இது ஒரு பாலியல் உறவு கொள்ளும் செயல்பாடு என்பதை தாண்டி, எனது ஞானத்தந்தை ஃபியூரருக்காக (ஹிட்லர்) செய்கிறேன் என்ற பெருமையே எனக்கு அதிகமாக இருந்தது. உறவில் ஈடுபட்ட நானும் சரி, எனது துணைவரும் சரி, எங்களுடைய பரஸ்பர நோக்கத்தை புரிந்து கொண்டவர்களாக இருந்தோம். இதை செய்வதில் எங்களுக்கு எவ்வித அவமானமும் இருக்கவில்லை. சொல்லப்போனால், இது ஒரு முட்டாள்தனமான நினைப்பாக இருக்கலாம். ஆனால், என்னுடன் சேர்ந்த துணைவரின் வசீகர தோற்றத்தால் நானும் கவர்ந்து இழுக்கப்பட்டேன்,” என்றார் ட்ரூட்ஸ்.

தாயிடம் இருந்து குழந்தைகள் பிரிப்பு

அந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களும் அந்த எஸ்.எஸ். அதிகாரி ட்ரூட்ஸின் படுக்கையை பகிர்ந்து கொண்டார். மற்ற மூன்று நாட்களும் அவருக்கு வேறு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள கட்டளையிடப்பட்டிருந்தது.

ட்ரூட்ஸ் அடுத்த சில வாரங்களிலேயே தாம் கருவுற்று இருப்பதை உணர்ந்தார். பரிசோதனைகள் அதை உறுதிப்படுத்தியதும், அவர் அந்த கோட்டையில் இருந்து மகப்பேறு இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.

“கோட்டையின் உள்ளேயே இருந்த தனக்கு இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் சூழ்நிலை வரும் என்பதை ட்ரூட்ஸ் நினைத்திருக்கவில்லை. பிரசவ நாளும் வந்தது. அது வலி நிறைந்ததாக இருந்தது. இப்போதைய நவீன ஜனநாயகத்தில் வலியின்றி ஊசி செலுத்தி பிரசவம் நடப்பது போல அந்த காலத்தில் எந்தவொரு ஜெர்மன் பெண்ணும் தனக்கு செயற்கையாக பிரசவம் நடப்பதை விரும்ப மாட்டார்,” என்றார் ட்ரூட்ஸ்.

பிரசவத்தில் ட்ரூட்ஸுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அவர் பாலூட்டினார். இரண்டு வாரங்களுக்கு அக்குழந்தை அவரது அரவணைப்பில் இருந்தது. பிறகு தாயிடம் இருந்து குழந்தை பிரிக்கப்பட்டு சிறப்பு எஸ்எஸ் விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டது. நாஜிப்படையின் விசுவாசமான வீரனாக அந்த குழந்தை வளர்க்கப்படலாம்.

தான் உறவு கொண்ட எஸ்.எஸ் அதிகாரியை ட்ரூட்ஸ் அதன் பிறகு பார்க்கவில்லை. அந்த குழந்தையும் பார்த்திருக்காது என்று அவர் நம்பினார்.

உடல் நலம் தேறி வீடு திரும்பிய அவரிடம் தேசப்பணிக்காக மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று பிடிஎம் தலைவர் ஆசையைத் தூண்டினார். ஆனால், வெகு விரைவிலேயே மற்றொரு இளம் அதிகாரியுடன் நட்பு கொண்டு அவரை ட்ரூட்ஸ் திருமணம் செய்து கொண்டார்.

தனது புதிய கணவரிடம் ஃபியூரருக்காக குழந்தை பெற்றுக் கொடுத்த திட்டத்தில் தான் முன்பு பங்கெடுத்தது பற்றி அவர் தெரிவித்தார். ஆனால், தான் எதிர்பார்த்தபடி அவரது கணவர் ட்ரூட்ஸின் பேச்சை கேட்டு மகிழ்ச்சி கொள்ளவில்லை. வெளிப்படையாக தனது மனைவியை அவர் விமர்சிக்கவும் இல்லை.

ஆனாலும், ஃபியூரருக்கு ஆற்றிய கடமையாகவே அதை செய்ததாக ட்ரூஸ்ட் உறுதியாக நம்பினார்.

1941ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவுக்கு எதிரான போர் சூளுரை ஏற்கும் ஹிட்லர் தலைமையிலான நாஜிப்படை தலைவர்கள்

ட்ரூட்ஸால் கடைசிவரை தனது குழந்தைக்கு என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்கவில்லை, அந்த குழந்தையின் தலைவிதி ஒரு மர்மமாகவே இருந்தது. பல லெபென்ஸ்பார்ன் குழந்தைகளைப் போலவே, அந்த குழந்தையும் வளர்ந்து பின்னாளில் போருக்குப் போயிருக்கும். அந்த குழந்தையின் பிறப்பு மற்றும் வளர்ப்பு முற்றிலும் களங்கமாகவே இருந்திருக்கும் என்று அவர் கருதத் தொடங்கினார்.

லெபன்ஸ்பார்ன் திட்டத்தின்கீழ் 20 கோடி குழந்தைகளையாவது பெற்றெடுத்தால் உலகை தமது காலடிக்குள் கொண்டு வந்து விடலாம் என்பது ஹிட்லரின் தளபதிகளில் ஒருவரான ஹிம்லரின் நம்பிக்கை. ஆனால், அவரது திட்டம் ஈடேற ஜெர்மனியில் வாழும் தன்னார்வ பெண்கள் மட்டும் போதவில்லை. அதனால், ஆரிய வம்சத்துக்கான குணாதிசயங்கள் பொருந்தியவர்கள் உலகின் வேறு பகுதிகளில் இருந்தாலு்ம், அவர்களை கடத்தி ஜெர்மனிக்கு அழைத்து வர புறப்பட்டது ஹிட்லரின் நாஜிப்படை.

குறிப்பாக, உலகப் போர் காரணமாக ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐரோப்பாவின் பிற இடங்களில் வாழ்ந்த ஜெர்மனியர்களை இலக்கு வைத்து இந்த படை தேடுதல் வேட்டையை நடத்தியதாக வரலாறு கூறுகிறது.

ஹிட்லரின் ஆளுகையில் அந்த குறிப்பிட்ட பன்னிரண்டு ஆண்டுகளில், முக்கியமாக ஜெர்மனி மற்றும் நார்வேயில் ட்ரூட்ஸை போலவே பிற பெண்கள் மூலம் சுமார் 20,000 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. போர் முடிந்த பிறகு கைப்பற்றப்பட்ட அந்த குழந்தைகளில் பலர் தத்துக் கொடுக்கப்பட்டனர். அவர்களின் பிறப்புப் பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. அடையாளமின்மை, சமூக புறக்கணிப்பு போன்ற பல துவேஷங்களுக்கு அந்த குழந்தைகள் ஆளாயினர். தங்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதிக்காக அதில் சிலர் நீதிமன்றம் சென்றனர்.

அந்த பிஞ்சுக் குழந்தைகளில் பலர் வயோதிகம் காரணமாக காலப்போக்கில் இறந்து விட்டனர். மற்றவர்களின் ‘பிறப்பு ரகசியம்’ கண்டறியப்படாத களங்கமாகவே வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள ட்ரூட்ஸ் தொடர்பான தகவல்கள், இருபதாம் நூற்றாண்டில் ஆறு கண்டங்களில் நடந்த உலகின் 100 வினோதமான வரலாற்றை விவரிக்கும் கைல்ஸ் மில்டனின் புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டு இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

 

 

Previous Story

ஹக்கீம் - நசீர் விவாதம்! ஆனால் தலைவர் வரார்!

Next Story

ராஜபக்ஷ  உறவை முறித்துக்கொண்டோம்- ஜீவன் அறைகூவல்