ஈரானில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த சொகுசு விடுதியில், இரண்டு மாதங்களுக்கு முன்பே வெடிகுண்டை மறைத்து வைத்து, அதை வெடிக்கச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஈரானில் அதிபராக இருந்த முகமது ரெய்சி, ஜூன் 15ல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் மசூத் பெசஷ்கியான் வெற்றி பெற்று, ஜூலை 30ல் ஈரானின் புதிய அதிபராக பதவியேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக, 86 நாடுகளைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், ராணுவ தளபதிகள் மற்றும் தலைவர்கள் டெஹ்ரானுக்கு வந்திருந்தனர். நகர் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சொகுசு விடுதி

புதிய அதிபரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் பங்கேற்றார். பின், அவர் டெஹ்ரானில் வழக்கமாக தங்கும் சொகுசு விடுதிக்கு திரும்பினார். ஜூலை 31ம் தேதி, அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பலத்த வெடி சத்தம் கேட்டது.
ஈரான் படையினர் சென்று பார்த்த போது இஸ்மாயில் ஹனியேவும், அவரது பாதுகாவலரும் இறந்து கிடந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பை ஈரான் குற்றம் சாட்டுகிறது.







