ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி- யார் காரணம்?

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஹமாஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

இஸ்மாயில் ஹனியே
62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை இரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர் ஹனியே கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

”சம்பவத்திற்கான” காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் “விசாரணை செய்யப்பட்டு வருகிறது” என்று இரானிய புரட்சிகர காவல்படை கூறியதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம்தெரிவித்துள்ளது.

62 வயதான ஹனியே 1980களின் பிற்பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

இஸ்ரேல் சொல்வது என்ன?

இஸ்ரேலிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் இன்னும் வரவில்லை.ஆனால் இஸ்ரேலின் தீவிர வலதுசாரியான கலாசார அமைச்சர் அமிக்கேய் எலியாஹு போன்ற சில அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்வினை வந்துள்ளது. ஹனியேவின் மரணம் “உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Life of defiance: Ismail Haniyeh, Hamas political boss, killed

ஹமாஸ் கூறியது என்ன?

”பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் ஹமாஸ் இரங்கல் தெரிவித்து கொள்கிறது” என ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹனியேவின் படுகொலைக்கு தங்கள் குழு பதிலடி கொடுக்கும் என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

”இந்த கோழைத்தனமான செயலுக்கு, நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என என்று முசா அபு மர்சூக் கூறியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் அல்-அக்ஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அதிபர் கண்டனம்

“ஹனியே கொல்லப்பட்டது ஒரு கோழைத்தனமான செயல், அபாயகரமான முன்னேற்றம்,” என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசு ஊடகமான வாஃபாவில் வெளியான அவரின் அறிக்கையில், அவர் பாலஸ்தீனியர்கள் அனைவரும், “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள ஒன்றிணைந்து, பொறுமையாக, திடமாக இருக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

அப்பாஸின் நிர்வாகமானது மேற்குகரையில் குறிப்பிட்ட அளவில் சுய ஆட்சியை கொண்டிருக்கிறது. ஆனால் இஸ்ரேல் முழுமையான கட்டுப்பாட்டை வைத்துள்ளது.

இஸ்மாயில் ஹனியே

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டது எப்படி?

இஸ்மாயில் ஹனியே எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய சில தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன. அவர் தங்கியிருந்த வீட்டின் மீது ராக்கெட் தாக்கியதில் அவரும் அவரது பாதுகாவலரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பொதுவாக வெளிநாட்டில் அதன் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. இருப்பினும், ஏப்ரல் 19 அன்று இரானில் அணுசக்தி நிலையத்தை சுற்றி வான் பாதுகாப்பை குறிவைத்து நடத்தப்பட்ட அதே முறையை இந்த தாக்குதலிலும் பின்பற்றியிருக்கலாம் எனத் தெரியவருகிறது.

International headlines from ABC News

அந்த நடவடிக்கையில், இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் இரானிய வான்வெளிக்கு வெளியில் இருந்து ராக்கெட்டுகளை வீசியதாக நம்பப்படுகிறது.

சௌதி அரேபியாவின் அல் ஹதாத் செய்தி நிறுவனமும் இதேபோன்ற தகவலைத் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியேவின் இல்லம், வழிகாட்டப்பட்ட ஏவுகணையால் (Guided Missile) தாக்கப்பட்டதாக சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரானின் அரசு ஊடகமும் இதையே கூறியுள்ளது.

இஸ்மாயில் ஹனியே

முன்பு கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர்கள்

அக்டோபர் 7-ல் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குலுக்கு பிறகு ஹமாஸின் மூத்த தலைவர்களை ”அழிப்போம்” என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது.

அதன் பிறகு பல மூத்த ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர் என நம்பப்படுகிறது. ஹமாஸின் துணை அரசியல் தலைவர் சலே அல்-அரூரி மற்றும் ஹமாஸின் ராணுவப் பிரிவின் துணைத் தளபதி மர்வான் இசா ஆகியோர் இதில் அடங்குவர்.

இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் மற்றும் அவரது நான்கு பேரக்குழந்தைகள் ஏப்ரல் மாதம் காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா, துருக்கி கண்டனம்

ஹனியேவின் கொலை குறித்த செய்திகள் வெளியாகி வருகின்ற சூழலில், உலக நாடுகள் இதற்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஏற்றுக்கொள்ளவே முடியாத அரசியல் கொலை என்று கூறியதாக அரசு ஊடகமான ரியா அறிவித்துள்ளது.

அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மிக்கைல் போக்டனோவ், இந்த கொலை மேலும் பதட்டத்தை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

துருக்கியின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதற்கு தன்னுடைய கண்டன குரலை பதிவு செய்துள்ளது. “தெஹ்ரானில் நடைபெற்ற வெட்கக்கேடான கொலை இது,” என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், “இந்த கொலை, காஸாவில் நிழவி வரும் போரை பிராந்திய அளவில் பரப்புவதை இலக்காக கொண்டுள்ளது,” என்றும் தெரிவித்துள்ளது.இஸ்மாயில் ஹனியே

இஸ்மாயில் ஹனியே யார்?

அபு அல்-அப்து என்ற புனைப்பெயர் கொண்ட இஸ்மாயில் அப்தெல் சலாம் ஹனியே, பாலத்தீன அகதிகள் முகாமில் பிறந்தவர். இவர் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர்.

இஸ்மாயில் ஹனியே ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராக பரவலாகக் கருதப்படுகிறார். 1980 முதல் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார்.

பாலத்தீன அரசாங்கத்தின்(Palestinian Authority government) பத்தாவது பிரதமராக 2006-ஆம் ஆண்டில் வகித்தார். ஒராண்டுக்கு பிறகு அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.அவர் 2017 இல் ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அவரை 2018 இல் பயங்கரவாதியாக அறிவித்தது.

இஸ்மாயில் ஹனியே

 ‘போருக்கான சூழலை’ உருவாக்கிய ஹனியே கொலை

ஹமாஸின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டது, அந்த பிராந்தியத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு முழுமையான போர் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார் நாதெர் ஹஷெமி. அவர் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மத்திய கிழக்கு படிப்புகள் பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

“இது முக்கியமான நிகழ்வாகும்,” என்று கூறும் அவர், இது லெபனானிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறார். “ஏன் என்றால் சில மணி நேரங்களுக்கு முன், தெற்கு பெய்ரூட்டில், ஹெஸ்பொலாவின் மூத்த தலைவரை கொல்ல முயற்சி செய்தது இஸ்ரேல். இரானும், ஹெஸ்பொலாவும் இந்த விவகாரத்தை பெரிதாக்க விரும்பாது என்று நினைத்து இதனை அரங்கேற்றியது. ஆனால் ஹனியேவின் கொலையானது அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது,” என்றும் கூறுகிறார் நாதெர்.

“தற்போது இந்த விவகாரத்தை பெரிதாக்க தேவையான அனைத்து காரணங்களையும் இரான் பெற்றிருக்கிறது,” என்றும் குறிப்பிட்டார்.

தன்னுடைய நாட்டில் இஸ்ரேல் நடத்திய கொலைகள் என்று இரான் கூறும் நிகழ்வுகள்

இஸ்ரேலும் இரானும் நீண்ட நாட்களாக மாறி மாறி தாக்குதல் நடத்திவருகின்றன. ஆனால் அந்த தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை.

ஆனால் இஸ்ரேல், தன்னுடைய நாட்டில் சில கொலைகளை அரங்கேற்றியுள்ளது என்று இரான் நம்புகிறது.

அதில் முக்கியமான நிகழ்வு 2021ம் ஆண்டு, இரானின் அணு ஆராய்ச்சியாளர் மோஹ்சென் ஃபக்ரிஸாதேஹ் கொல்லப்பட்டதாகும். அவர் ரிமோட்டால் கட்டுப்படுத்தப்படும் ஆயுதம் மூலம் கொல்லப்பட்டார்.

2022ம் ஆண்டு இரானின் புரட்சிப்படை தளபதியான கர்னல் ஷயத் கோடாய், தெஹ்ரானில் கொல்லப்பட்டதும் மிக முக்கியமான நிகழ்வாகும்.

Previous Story

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவிப்பு!

Next Story

எங்க நாட்டிலேயே ஹமாஸ் தலைவரை கொன்னுட்டீங்களே.. பழிவாங்காமல் விடமாட்டோம்!