ஹஜ் பெயரில் நடக்கும் மோசடிகள் தப்புவது எப்படி?

ஹஜ் யாத்திரை, முஸ்லிம், மெக்கா
                                                                                                      -சுசீலா சிங்-

ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசிக்கும் இலாஹி பக்‌ஷ் அன்சாரி, தனது மனைவியுடன் ஹஜ் செல்ல திட்டமிட்டிருந்தார்.

அது 2018 ஆம் ஆண்டு.

இலாஹி பக்‌ஷ் அன்சாரி ஒரு தனியார் சுற்றுலா ஒருங்கிணைப்பாளரைப் பற்றி தனது பக்கத்து வீட்டாரிடம் இருந்து தகவல் பெற்றார்.

இந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தை நடத்தி வருபவரின் பெயர் ஜமீருதீன். அவர் ராஜஸ்தானின் பூந்தி மாவட்டத்தில் வசித்து வந்தார்.

இலாஹி பக்‌ஷ் அன்சாரி தொழில் ரீதியாக தையல்காரர்.

”ஜமீருதீனை பற்றி அக்கம் பக்கத்தினர் மூலம் தெரிந்து கொண்டேன். பூந்தியில் இருக்கும் எனது உறவினர் மூலம் அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் நல்லவர், காஜியின் மகன், நீ நிம்மதியாக இரு என்று என் உறவினர் கூறினார். எனக்கும் முழு நம்பிக்கை வந்தது. நான் அரசு படிவத்தை நிரப்பினேன். ஆனால் நம்பர் வரவில்லை. எனவே தனியார் சுற்றுலா அமைப்பின் உதவியை நாடினேன்,” என்கிறார் அவர்.

தன்னைப்போல சுமார் 20 பேர் ஜமீருதீனை நம்பி ஹஜ் யாத்திரைக்கு முன்பணம் கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

ஹஜ் பற்றிய தகவல்கள்

  • ஹஜ் யாத்திரை இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி தொடங்குகிறது.
  • சுமார் இருபது லட்சம் பேர் இந்த ஹஜ் யாத்திரைக்கு வர உள்ளனர் என்று செளதி அரேபியாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • இந்தியாவில் இருந்து 1,75,025 ஹஜ் யாத்ரீகர்கள் செல்கின்றனர்.
  • இந்த முறை 4000 க்கும் மேற்பட்ட பெண்கள் மஹ்ரம் (பாதுகாவலர்) இல்லாமல் ஹஜ் செல்வார்கள்.
  • இஸ்லாத்தில் மஹ்ரம் என்பவர் ஒரு பெண்ணின் கணவர் அல்லது ரத்த உறவில் இருக்கும் ஒரு ஆண்.
  • ஹஜ் கமிட்டி வழியாக செல்பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹஜ் செல்ல வேண்டும் என்ற கனவு

ஹஜ் யாத்திரை, முஸ்லிம், மெக்கா
படக்குறிப்பு,இந்த முறை 4000க்கும் மேற்பட்ட பெண்கள் மஹ்ரம் (ஆண் துணை) இல்லாமல் ஹஜ் செல்கிறார்கள்.

“எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். நான் அனைவருக்கும் திருமணம் செய்துவிட்டேன். நான் ஒரு ப்ளாட் வைத்திருந்தேன், அதை விற்றேன். இரண்டு பேருக்காக முன்பணம் கொடுத்தேன். செளதி அரேபிய கரன்சியான ரியாலை வாங்குவதற்காக 70,000 ரூபாயும் கொடுத்தேன். அதன் ரசீதையும் பெற்றேன்,” என இலாஹி பக்‌ஷ் அன்சாரி கூறுகிறார்.

அதேசமயம் ஷாஹித் என்பவர் இலாஹியின் கடைக்கு வந்து செல்வது வழக்கம். அந்த நேரத்தில் ஹஜ் பற்றிய பேச்சு வந்தது.

அவர் தனது பெற்றோரை உம்ராவுக்கு அனுப்ப விரும்பினார். உம்ராவும் ஒரு சமய யாத்திரைதான். ஆனால் ஹஜ்ஜுடன் ஒப்பிடும்போது இதைச்செய்வது அத்தனை கடினம் அல்ல. வருடத்தில் ஐந்து நாட்கள் ஹஜ்ஜுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த ஐந்து நாட்களைத் தவிர ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் உம்ரா செய்யலாம்.

“நான் ஜமீருதீனுக்கு வங்கியில் இருந்து நேரடியாக 80,000 ரூபாயை அனுப்பினேன். டிரான்ஸ்ஃபர் செய்த பணத்தை பார்க்கமுடியும் அதே நேரம் உம்ராவுக்காக இந்த தொகையை அவரிடம் கொடுத்தேன் என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை” என்றார் ஷாஹித்.

தனது நம்பர் வந்துவிட்டதாக ஜமீருதீன் சொன்னபோது மகிழ்ச்சியில் மூழ்கியதாக இலாஹி கூறுகிறார்.

“எங்கள் ஏற்பாடுகள் தொடங்கின. வாழ்த்துச் செய்திகள் குவியத் தொடங்கின. முதலில் டெல்லிக்கு செல்ல முன்பதிவு செய்யச் சொன்னார். பின்னர் அதை ரத்து செய்துவிட்டு மும்பைக்கு முன்பதிவு செய்யச் சொன்னார்.”

“அதற்குப் பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார் என்று செய்தி வந்தது. ஜமீருதீன் எங்கள் அழைப்புகளை எடுப்பதை நிறுத்திவிட்டார். பின்னர் அவரை தொடர்புகொள்ளவே முடியவில்லை,” என்றார் இலாஹி.

ஏமாற்றப்பட்ட பின்னணி

ஹஜ் யாத்திரை, முஸ்லிம், மெக்கா

இந்த ஆண்டு மே 21 ஆம் தேதி ஹஜ் யாத்திரை தொடங்குகிறது.

“அம்மா-அப்பா மிகவும் வருத்தம் அடைந்தனர். நாங்கள் ஒரு உன்னதமான காரணத்திற்காக பணத்தை கொடுத்தோம். ஆனால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்,” என்று ஷாஹித் கூறுகிறார்,

“நாங்கள் பூந்திக்கு சென்று ஜமீருதீனின் குடும்பத்தாரை சந்தித்தோம். ஆனால் அவர் அங்கு வசிக்கவில்லை என்று அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அவர் வந்தால் சொல்கிறோம். உங்கள் பணத்தை நாங்கள் எடுக்கவில்லை என்றும் கூறினார்கள்,” என்கிறார் அவர்.

”எங்கள் குடும்பத்தில் இதுவரை யாரும் ஹஜ் சென்றதில்லை. இந்தப் புனிதப் பயணத்தை நாங்கள்தான் முதலில் செய்திருப்போம். ஆனால் எங்களால் ஹஜ் செல்ல முடியாமல் போனது வருத்தம்தான்,” என்கிறார் இலாஹி.

“இந்தச் செய்திக்குப் பிறகு என் மனைவியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. நல்லவேளையாக எங்கள் பாஸ்போர்ட்டை நாங்கள் திரும்பப் பெற்றோம். இல்லையென்றால் மேலும் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும்.” என்றார் அவர்.

இந்த விவகாரத்தில் இலாஹி மற்றும் ஷாஹித் இருவரும் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை, ஆனால் சிலர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் என்றும் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் ஜமீருதீன் எங்களிடம் சொன்னார். ஆனால் எதுவுமே கிடைக்கவில்லை என்று இலாஹி கூறுகிறார்.

இலாஹி மற்றும் ஷாஹித் ஏமாற்றப்பட்டிருப்பதுபோல இன்னும் பலருக்கும் நடந்துள்ளது. ஆனால் இதுபோன்ற ஏமாற்று விவகாரங்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை.

மோசடியைத் தவிர்ப்பது எப்படி?

ஹஜ் யாத்திரை, முஸ்லிம், மெக்கா

ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு முன் அமைப்புகள் ஹாஜிகளுக்கு விதிமுறைகள் பற்றி தெரிவிக்கின்றன.

ஹஜ் அல்லது உம்ரா ஒரு புனிதமான சமயப் பயணம். இதில் ஏமாற்று வேலை நடக்குமென்று யாரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள்.

ஹஜ் ஒதுக்கீடு தொடர்பாக செளதி அரேபியா அரசுக்கும் இந்தியாவுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் 80 சதவிகித இடங்கள் இந்திய ஹஜ் கமிட்டிக்கும், 20 சதவிகித இடங்கள் ஹஜ் குழு அமைப்புக்கும் அதாவது தனியார் டூர் ஆபரேட்டர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

யார் ஹஜ் செய்யப் போகிறார்களோ அவர்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுற்றுலா நிறுவனங்களை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் என்று டெல்லி மாநில ஹஜ் கமிட்டியின் முன்னாள் தலைவர் முக்தார் அகமது கூறினார்.

”எந்த ஒரு மானியமும் வழங்கப்படுவதில்லை என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். விஐபிகள் ஒதுக்கீட்டின் கீழ் அனுப்புவோம் என்று யாராவது சொன்னால் அது பொய். இதுபோன்ற பொய்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று அவர் விளக்குகிறார்.

“ஹஜ்ஜுக்கு விண்ணப்பிப்பவர்கள், சிறுபான்மை விவகார அமைச்சகம் வழங்கிய பட்டியலை சரிபார்க்க வேண்டும். தாங்கள் தொடர்பில் இருக்கும் தனியார் டூர் ஆபரேட்டரின் பெயர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்று செய்தியாளர் அஃப்ரோஸ் ஆலம் கூறினார்.

அஃப்ரோஸ் ஆலம் ஹஜ் விவகாரங்கள் குறித்து செய்திகள் வழங்கும் ஒரு சுயாதீன செய்தியாளர்,

“எங்கள் ஒளரங்காபாத்தில் 42 சிறிய, பெரிய தனியார் சுற்றுலா ஆபரேட்டர்கள் உள்ளனர். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நன்றாக ஏற்பாடுகளை செய்வார்கள். பிறகு பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். எனவே மக்கள் முதலில் தனியார் ஆபரேட்டர்கள் பற்றி ஆய்வு செய்யவேண்டும். மேலும் எங்கு பண பரிவர்த்தனை நடந்தாலும் அது தொடர்பான ஆதாரத்தை வைத்துக்கொள்ள வேண்டும்,” என்று மௌலானா முகமது நசிமுதீன் மிஃப்தாஹி கூறினார்.

எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

ஹஜ் யாத்திரை, முஸ்லிம், மெக்கா
மௌலானா முகமது நசிமுதீன் மிஃப்தாஹி, ஒளரங்காபாதின் கித்மத்-இ-ஹுஜ்ஜாஜ் கமிட்டியின் தலைவர்.

நகரங்களில் உள்ள படித்தவர்கள் ஹஜ் கமிட்டியின் இணையதளத்திற்குச் சென்று சரிபார்க்கலாம், ஆனால் படிக்காதவர்கள் அல்லது ஹஜ் செய்ய விரும்பும் ஆனால் அவ்வளவு விழிப்புணர்வு இல்லாதவர்கள் என்ன செய்வது?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த முக்தார் அகமது, பல்வேறு மாநிலங்கள் அரசிடம் இருந்து இடங்களைப் பெறுகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் டூருக்கு தனித்தனி சதவிகிதம் உள்ளது என்றார்.

“ஒவ்வொரு மாநிலத்திலும், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கவுண்டர்களைத் திறக்கின்றனர். ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவுவதற்காக அவர்களின் படிவங்கள் நிரப்பப்படுகின்றன. அவர்களின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.

“ஹஜ்ஜுக்கு யார் சென்றாலும், மாநில ஹஜ் கமிட்டியின் பிரதிநிதிகள் முழுப் பதிவு, பணப் பரிவர்த்தனை, தகவல் கொடுப்பது மற்றும் அவர்களை அனுப்பும் பணியை செய்கிறார்கள். பிறகு செளதி அரேபியாவுக்கு விமான முன்பதிவு, அங்கு தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநிலக் குழுக்களின் உதவியுடன் மத்திய ஹஜ் குழு செய்கிறது.

இதற்கு முன் இந்திய ஹஜ் கமிட்டி (HCOI) ஹஜ் யாத்ரீகர்களுக்கு 2100 ரியால்களை வழங்கி வந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் வந்துள்ள ஹஜ் கொள்கை, யாத்ரீகர்கள் அதை தாங்களாகவே நிர்வகிக்கவும் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப எடுத்துச் செல்லவும் ஒரு தேர்வை வழங்குகிறது.

பயணிகளிடம் இருந்து பெறப்பட்ட முன்பணத்தில் இருந்துதான் அரசு 2100 ரியால்களை அவர்களுக்கு வழங்கிவந்தது.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

ஹஜ் யாத்திரை, முஸ்லிம், மெக்கா

தமிழ்நாட்டிலிருந்து 6,500 பேர் வரை ஆண்டுதோறும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்

தமிழ்நாட்டிலிருந்து அரசு ஒதுக்கீடு மூலமாக 4,500 பேரும் தனியார் முகவர்கள் மூலமாக இரண்டாயிரம் பேர் வரை ஆண்டுதோறும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் யாத்திரை அழைத்து செல்வதாக கூறி பெரியளவில் எந்த மோசடியும் நடைபெறவில்லை என்று பிபிசியிடம் பேசிய அகில ஹஜ் சங்கத்தலைவர் அபுபக்கர் கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் முகவர்கள் பலரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹஜ் யாத்திரை ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும் ஹஜ் பயணத்திற்கு செல்லும் நபர்களுக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவலை ஏற்கனவே ஹஜ் யாத்திரைக்கு சென்ற நபர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி நடப்பதால் தமிழ்நாட்டில் யாரும் ஏமாற்றப்படவில்லை என்று அபுபக்கர் கூறினார்.

இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் மார்ச் மாதமே முடிவடைந்த நிலையில், உங்களை அழைத்து செல்வதாக யாரும் சொன்னாலும் அதை நம்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹஜ் செல்வதற்கான விதிமுறைகள்

ஹஜ் யாத்திரை, முஸ்லிம், மெக்கா

ஹஜ் யாத்ரீகர்களின் வழிகாட்டுதலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக செயல்படும், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு அமைப்பின் தலைவரான மௌலானா முகமது நசிமுதீன் மிஃப்தாஹி, ஹஜ் செல்லும் முன் ஹாஜிகளுக்கு முழு செயல்முறையையும் விளக்குவதாகக்கூறுகிறார்.

மௌலானா நசிமுதீன், ஒளரங்காபாதின் கித்மத்-இ-ஹுஜ்ஜாஜ் கமிட்டியின் தலைவர்.

ஒளரங்காபாத் மாவட்டத்தில் இருந்து இந்த முறை சுமார் 1700 பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்வதாக அவர் கூறுகிறார்.

ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு முன் அவர்களுக்கு நான்கு பாடங்கள் கூறப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

எப்படி பயணிக்க வேண்டும், என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், என்னென்ன ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும், விமான நிலையத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம் என்று எடுத்துக்கூறுகிறோம்.

இரண்டாவது பாடம் அஹ்ராம் (யாத்ரீகர்கள் அணியும் தைக்கப்படாத வெள்ளை துணி) மற்றும் உம்ரா பற்றியது.

ஹஜ்ஜின் ஐந்து நாட்களில் என்ன செய்யப்படுகிறது என்பது பற்றிய முழுமையான தகவல்களும் கொடுக்கப்படுகின்றன.

இலாஹி பக்‌ஷ் அன்சாரி தனது மனைவியுடன் ரம்ஜானுக்கு முன்பாக உம்ரா செய்து வந்துள்ளார். ஆனால் ஹஜ் செல்ல முடியாத வேதனை இன்னும் அவர் மனதை வாட்டுகிறது.

Previous Story

MAY28 மீண்டும் தேர்தல் - பாராளுமன்றத்தில் எர்டோகன் கட்சி அதிக ஆசனம்

Next Story

கர்நாடகத் தேர்தல்: கலையும் அரசியல் சமன்பாடுகள்!