ஹக்கீமியாவில் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்று

-யூசுப் என் யூனுஸ்-

இன்று நமது நாட்டில் பல நூறு மத்ரசாக்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் செல்வாக்கான ஒரு அரபு மத்ரசாவாக கண்டி உடதலவின்ன கலதெனியாவில் அமைந்துள்ள அல் – ஹக்கீமியா அரபுக் கல்லூரி இருந்து வருகின்றது. இதனால் நாட்டில் நாலா புறங்களில் இருந்து பல நூறு மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர்.

இந்தக் கல்லூரியில் மதரசா பாடத் திட்டத்துடன் பாடசாலை பாடத்திட்டங்களும் போதிக்கப்பட்டு வருகின்றன. வருடந்தோரும் பல நூறு மாணவர்கள் இங்கு வந்து சேர்வதால் மாணவர்களுக்கு இட நெருக்கடிகள் ஏற்படுவதும் இயல்பானதே.

இதனால் புதிதாக பல வசதிகளை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றன. இதனை உணர்ந்த பரோபகாரிகள் பலர் ஹக்கீமியாவுக்கு உதவியும் வருகின்றனர். அவ்வாறான ஒரு நிகழ்வு இன்று இந்த அல்-ஹக்கீமிய அரபுக் கல்லூரியில் நடை பெறுகின்றது.

அல்-ஹாஜ் எஸ்.எம். அன்வர்டீன் அவர்களும் அவரது குடும்பத்தினரும் இணைந்து 35 மில்லியன் (350 இலட்சம்) செலவில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மானித்துக் கொடுத்திருக்கின்றனர். இந்த அன்வர்டீன் உடதலவின்ன – கலதெனிய அல்ஹாஜ் நுஹ்மான் ஹாஜீயார் அவர்களின் மருமகன் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதன் திறப்பு விழா ஹக்கீமியா அரபுக் கல்லூரியின் பீடாதிபதி அல்ஹாஜ் எம்.ஆர்.இதாயத்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் தலைமையில் இன்று 24.03.2024 திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4 மணிக்கு மத்ரசாவில் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை ஹக்கீமிய நிருவாகம் மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் இந்த வைபவத்தை தொடர்ந்து இரண்டாயிரம் (2000) பேருக்கு (இப்தார்) நோன்பு திறப்பதற்கான ஏற்பாடுகளையும் இந்தக் கட்டிடத்தை கட்டிக் கொடுத்த அன்வர்டீனே செய்திருப்பதாகவும் தெரிகின்றது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்ரசா நிருவாகம் சிறப்பாக செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous Story

ஜனாதிபதித் தேர்தலில் தமிழருக்கான அரிய வாய்ப்பு

Next Story

 133 பேரை பலி வாங்கிய மாஸ்கோ தாக்குதல்!