வாராந்த அரசியல்19.12.2021

-நஜீப் பின் கபூர்-

தாய் நாட்டு விசுவாசம்!

மனித உரிமைகள் விவகாரத்தில் இப்போது அமெரிக்க பைடன் நிருவாகம் ஆர்வமாக இருக்கின்ற ஒரு நேரத்தில் மஹிந்த சமரசிங்ஹ தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்த விட்டு அமெரிக்க தூதுவராக போக இருக்கின்றார். இப்படி அவர் அங்கு போகின்ற நேரம் அமெரிக்க மனித உரிமை விவகாரத்தில் ஏதாவது இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானங்கள் எடுத்தால் அதனை அவர் எப்படி எதிர்கொள்ளப் போவரோ தெரியாது.

இந்த விவகாரத்தில் நமக்கு இன்னும் ஒரு கேள்வி எழுகின்றது. நமது நிதி அமைச்சர் பசில் அமெரிக்க குடி மகன். அவர் அமெரிக்க அப்படியான ஒரு தீர்மானம் எடுக்கின்ற போது அதனை எதிர்க்க முடியாது. அமெரிக்க அரசியல் யாப்புப்படி அந்த நாட்டுப் பிரசை அதற்கு ஆதரவாகத்தான் எங்கிருந்தாலும் தொழிற்பட வேண்டும் என்ற விதி இருக்கின்றது. நமது ஜனாதிபதி பிரசா உரிமை விவகாரத்தில் கூட இன்னும் தெளிவில்லா நிலை இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைவரும் அடிமை!

இருபதுக்கு கைதூக்கி ஜனாதிபதியிடம் அனைத்து அதிகாரங்களையும் அள்ளிக் கொடுத்து செய்த துரோகம்தான் இன்று நாடு அனுபவித்துக் கொண்டிருக்கின்றது இன்னல்களுக்கு அடிப்படை. இதன் மூலம் அமைச்சர்கள், பிரதமர் அனைவரும் ஜனாதிபதியின் அடிமைகள் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இப்படி சொல்லி இருப்பவர் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் அமைச்சருமான விஜேதாச ராஜபக்ஸ.

ஒரு காலத்தில் இதே மனிதன்தான் ராஜபக்ஸாக்களின் மீட்பாளராகவும் நல்லாட்சி அரசாங்கத்தில் பதவியில் இருக்கும் போது வேலைபார்த்தார் என்பதனையும் இந்த நாட்டு மக்கள் தெரிந்திருக்க வேண்டும். ராஜபக்ஸ அரசில் தனக்கு கனதியான அமைச்சுத் தரவில்லை என்பதால் மனிதன் அவர்களுடன் முரன்பாட்டில் இருக்கின்றார் என்பதும் நாம்; பார்த்த நிகழ்வுகள்தான்.

சீனக் காசு காட்சிக்கா!

உர விவகாரத்தில் நமக்கும் சீனாவுக்கு லடாய். எனவே இலங்கை எதிர்பார்க்கின்ற 1500 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அது பின்னடிக்கின்றது. மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் பலமுறை சீன அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போதும் அதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றுதான் அவர்கள் கதை விடுகின்றார்கள். ஒரு கட்டத்தில் இந்தப் பணம் அனுமதிக்கப்பட்டாலும் அதனை எப்படிப் பாவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கட்டுப்பாடுகளை வித்திதிருக்கின்றார்கள்.

நாம் பணம் தந்தால் அதனை நீங்கள் செலவு செய்ய கூடாது நீங்கள் வங்குரோத்து நாடு அல்ல என்பதற்கு இந்த பணத்தை வைப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எந்தச் செலவுகளையும் அதனால் செய்யக் கூடாது என்பது கண்டிப்பான விதியாம். இந்த கதை பிரதமரிடத்தில் முன்வைக்கப்பட்ட போது காட்சிக்கு வைக்கவா நமக்கு காசு என்று அவர் கேட்டதாகவும் ஒரு தகவல் சொல்கின்றது.

தீர்க்கமான ஜனவாரி-18

வருகின்ற ஜனவாரி- 18 தீர்க்கமான ஒரு நாள். இலங்கை 500மில்லியன் அமெரிக்கா டொலர்களை அதற்கு முன்னர் திருப்பிக் கொடுக்க வேண்டி இருக்கின்றது. இங்கு ஒரே நாடு ஒரே சட்டம் என்பார்கள். அப்பட்டமான கொலைகளைச் செய்து மரண தண்டனை என்று சிறையில் இருப்பவர் தனக்கு வேண்டியவர் என்றால் அவருக்கு விடுதலை கொடுத்து உயர் பதவியும் வழங்கி கௌரவிப்பார்கள்.

அதே போன்று சட்ட விதிகளுக்கு முரனாக எப்படி எல்லாம் பணத்தை கையாட முடியுமோ அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கக் கூடிய ஆட்களைத்தான் இன்று அதிகாரத்தில் வைத்திருக்கின்றார்கள். கற்பனை ஆள் அடையால அட்டைகள், மோசடி செய்யப்பட்ட அடையாள அட்டைகளுக்கெல்லாம் இந்த நாட்டில் அங்கிகாரம் இருப்பது போல் நாம் மேற்சொன்ன 500 மில்லியன் கடன் விவகாரத்தில் இப்படி தில்லு முல்லு பண்ண ஏற்பாடுகள் கிடையாது. என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

சாணக்கிய-நசீர் விவதம்!

சில தினங்களுக்கு முன் இருபதுக்கு கை தூக்கி முஸ்லிம் சமூகத்தை காக்கக் களமிறங்கிய மட்டக்களப்பு மு.கா.நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அதே மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை பகிரங்க விவாதத்துக்கு அழைத்திருந்தார். அதற்குத் தானும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார் சாணக்கியன். ஆனால் முதலில் சவால் விட்ட நசீரை தொடர்பு கொண்டால் ஆளைக் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பதாக ஊடகவியலாளர்களும் சாணக்கியனும் இப்போது மனிதனை வலை போட்டுத் தேடுகின்றார்கள்.

ஸ்ரீலங்கா கார்டியன் நியுஸ்.கொம் என்ற இணையத் தளம் 1976ல் வெளியான அன்னக் கிளி படத்தில் மச்சானைக் கண்டால் வரச் சொல்லுங்கள் என்ற பாடல் வரிகளை தொடர்படுத்தி இந்த நசீரைக் கண்டால் கூட்டி வரச் சொல்லுங்கள் என்று சில தினங்களுக்கு முன்னர் நகைச்சுவையாக ஒரு செய்தியும் சொல்லி இருந்தது.

-நன்றி: ஞாயிறு தினக்குரல்.

 

Previous Story

இந்திய:5 கோடி வாக்குகள் பறிபோகும்?'

Next Story

கொரோனா+அலைபேசி+ஆன்லைன்:பெற்றோர்+குழந்தைகள் எழுதப்படாத ஒப்பந்தம்?