வளைகுடா போரில்.. அமெரிக்காவுக்கு ஆதரவாக அமீரகம்? 

வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த போரால் பாதிப்புகள் மிக மோசமாக மாறி வருகிறது. இதற்கிடையே இந்த போரில் அமெரிக்கா- இஸ்ரேல் ஆதரவாக ஐக்கிய அமீரகம் நேரடியாக இணையும் சூழல் உருவாகி வருகிறது. அப்படி அமீரகம் உள்ளே வந்தால் அது பிராந்திய போராக வெடிக்கும்.. மேலும், இந்தியா இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படும்.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. கடந்த சில நாட்களாகத் தாக்குதல்கள் கொஞ்சம் நிறுத்தப்பட்டு இருந்தாலும் கூட தற்போதைய சூழலில் போர் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மிக மோசமான பதற்றமே நிலவி வருகிறது.

அமீரகம்

இதற்கிடையே இந்த போரில் அமெரிக்கா- இஸ்ரேல் ஆதரவாக ஐக்கிய அமீரகம் நேரடியாக இணையும் சூழல் உருவாகி வருகிறது. கடந்த மூன்று வாரங்களில், ஈரான் 2,200க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அமீரகத்தைத் தாக்கியது. 95% தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தினாலும், அமீரகத் தலைமை பொறுமை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

உலக எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முடக்கியுள்ளது அனைவருக்கும் தெரியும். இந்தியா, சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களைத் தவிர அனைத்துமே முடக்கப்படுகிறது.

இந்த ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை நார்மலாக்க ஈரானில் தரைவழி படைகளை இறக்குவது தொடர்பாக டிரம்ப் யோசித்து வருகிறார். ஏப்ரல் 6 வரை ஈரானின் மின் நிலையங்கள் மீதான தாக்குதல்களை டிரம்ப் நிறுத்தியிருந்தாலும், ஹார்முஸ் அருகே அமெரிக்க ராணுவம் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகிறது.

உள்ளே வரும் அமீரகம்

இந்த இடத்தில் தான் ஐக்கிய அமீரகம் உள்ளே வருகிறது. அதாவது அமீரக மண்ணிலிருந்து ஈரானில் தரைவழித் தாக்குதல்கள் தொடங்கப்படலாம் என ஈரான் சந்தேகிக்கிறது. அமெரிக்கத் தளங்களுக்கு இடமளிப்பதன் மூலம் அமீரகம் ஏற்கனவே போரில் தங்களுக்கு எதிராகச் செயல்படுவதாக ஈரான் நம்புகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் அமீரகத்திற்கு வலுவான உறவு உள்ள சூழலில் அது பிரச்சினையாக மாறியுள்ளது.

அதேநேரம் அமீரகம் எந்தத் தாக்குதலையும் ஆதரிக்கக்கூடாது.. ஒருவேளை அப்படி ஆதரித்தால் அமீரகத்தில் இருக்கும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் உட்பட அமீரகத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்கக்கூடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

இதுவரை ஈரான் பல ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை அமீரகத்தில் நடத்தியிருந்தாலும் கூட அமீரகம் அமைதியாகவே இருந்து வருகிறது. ஆனால், அந்த சூழல் எப்போது வேண்டும் என்றாலும் மாறலாம்.. அமீரகம் இந்த போரில் உள்ளே வந்தால் அது நிச்சயம் பிராந்திய போராக மாறும். அதைத் தடுப்பதே இப்போது அனைவரது பிரதான நோக்கமாக இருக்கும்.

பாதிப்பு

அதேநேரம் அமீரகம் போரில் நேரடியாக இணைந்தால், உலகளாவிய எண்ணெய் அபாயம் அதிகரிக்கும்.. ஏற்கனவே ஹார்முஸ் பிரச்சனையால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழலில், அமீரகம் இந்த போரில் நேரடியாக வந்தால் வரலாறு காணாத புதிய உச்சத்திற்குக் கச்சா எண்ணெய் செல்லும். இது சர்வதேச அளவில் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை எனப் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Previous Story

ට්‍රම්ප්ට එරෙහිව ඇතුළෙන්ම විරෝධයක්

Next Story

வாஷிங்டன் முதல் ரோம் வரை ட்ரம்ப், நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் புரட்சி