வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா..

மத்திய கிழக்கில் 5வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், அங்குள்ள மிகப் பெரிய பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த பாலத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

அதில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. கடந்த பிப்ரவரி இறுதியில் மோதல் ஆரம்பித்த சூழலில், தற்போது வரை அது தொடர்கிறது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தியும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சர்வதேச நாடுகளும் உணர ஆரம்பித்துள்ளது.

தொடரும் மோதல் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், தற்போதைய சூழலில் மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ச்சியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமாக உள்ளது. இதற்கிடையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், மத்திய கிழக்கின் மிக உயரமான பாலம் சேதமடைந்துள்ளது.

‘ஈரானை கற்காலத்திற்குக் குண்டு வீசி அழிப்போம்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் சில பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இடிந்து விழுந்த பாலம் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருந்த இந்தப் பாலம், ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் மேற்கு நகரமான கராஜ் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வந்தது.

136 மீட்டர் உயரம் கொண்ட இது, மத்திய கிழக்கின் பொறியியல் அதிசயமாகக் கருதப்பட்டு வந்தது. இந்த சூழலில் தான் அந்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து கடுமையான புகை மண்டலம் உருவாகியுள்ளது. மேலும், பாலம் இடிந்து விழும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த தாக்குதலை ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. தெஹ்ரானுக்கு மேற்கே உள்ள கராஜ் நகரில் அமைந்துள்ள B1 பாலத்தை அமெரிக்க எதிரிகள் குறிவைத்துத் தாக்கியதாகக் கூறியுள்ளது. இந்த பாலத்தில் முதலில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது.

அதில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவசரக்கால குழுக்கள் காயமடைந்தோருக்கு உதவ பணியில் ஈடுபட்டிருந்தபோது அடுத்த தாக்குதல் நடந்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி குறிப்பிட்டது.

டிரம்ப் எச்சரிக்கை டிரம்ப் இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகளைத் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் மேலும், “ஈரானில் உள்ள மிகப் பெரிய பாலம் இடிந்து விழுந்துள்ளது.. இனி அதைப் பயன்படுத்த முடியாது.. இன்னும் பல சம்பவங்கள் தொடர்ந்து வரப் போகிறது.. நிலைமை கை மீறிச் செல்வதற்குள் ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்” என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

முன்னதாக, இந்த போரில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் கூறி வந்தார். ஈரானின் ராணுவ பலத்தை அமெரிக்கா அழித்துவிட்டதாகவும், முக்கிய நோக்கங்கள் நிறைவடைவதால் விரைவில் வேலையை முடித்துவிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Previous Story

බුද්ධාගම අනතුරේද ?

Next Story

ගම්මන්පිලගේ පොත නිසා සජබයට විපතක්.