“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இதற்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தான் வம்சாவளியும் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ராஜாவை பற்றி பார்ப்போம்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தகுதிச் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 12 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குரூப் ஒன்றில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. குரூப் இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அகிய அணிகள் இடம்பெற்று உள்ளன.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதில் ஒவ்வொரு அணியும் குழுவில் உள்ள மற்ற அணியுடன் மோதி வருகின்றன. கடந்த ஞாயிறு அன்று குரூப் இரண்டில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இன்று இந்தியா 2வது போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடி எளிதான வெற்றியை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜிம்பாப்வே அணி பேட்டிங்

ஜிம்பாப்வே அணி பேட்டிங்

அதே போல், பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்களை மட்டுமே அந்த அணி சேர்த்தது. பாகிஸ்தான் அணியை சேர்ந்த முஹம்மது வாசிம் 4 விக்கெட்டுகளையும், சதாப் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் பாபர் அசாம் 4 ரன்களிலும், முஹம்மது ரிஜ்வான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷான் மசூதை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் மீதான எதிர்பார்ப்பு

பாகிஸ்தான் மீதான எதிர்பார்ப்பு

கடந்த உலகக்கோப்பை டி20 தொடரில் வலுவான அணியாக திகழ்ந்த பாகிஸ்தான் அணி இந்த தொடரிலும் அதிக நெருக்கடி கொடுக்கும் என்று பேசப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினாலும், பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெருக்கடியை கொடுத்தது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால், வலுவற்ற அணியாக பார்க்கப்பட்டு வந்த ஜிம்பாப்வே அணியிடம் 130 என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை தழுவி இருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் அந்த நாட்டின் வம்சாவளி என்றால் நம்ப முடிகிறதா?

வம்சாவளி வீரர்

வம்சாவளி வீரர்

ஆம், ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ராஜாதான் அவர். ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கைக்குரிய ஆல் ரவுண்டராக திகழ்ந்து வரும் சிக்கந்தர் ராஜா இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றியை தட்டிபறித்து உள்ளார். பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் சதாப் கான், ஹைதர் அலி மற்றும் 44 ரன்களை விளாசி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷான் மசூதை அவர் வீழ்த்தி இருக்கிறார்.

யார் இந்த சிக்கந்தர் ராஜா?

யார் இந்த சிக்கந்தர் ராஜா?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட்டில் கடந்த 1986 ஆம் ஆண்டு பிறந்த சிக்கந்தர் ராஜா, கடந்த 2002 ஆம் ஆண்டு குடும்பத்தோடு ஜிம்பாப்வே நாட்டிற்கு குடிபெயர்ந்தார்.

காஷ்மிரி மொழி பேசும் குடும்பத்தை சேர்ந்தவர் ராஜா, பாகிஸ்தான் விமானப்படை பள்ளியில் பயின்றார். பாகிஸ்தான் விமானப்படையில் விமானியாக வேண்டும் என்பதே ராஜாவின் இலக்காக இருந்ததாம். ஆனால், அவரால் அதை அடைய முடியவில்லை.

நம்பிக்கையான வீரர்

நம்பிக்கையான வீரர்

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ கலேடோனியன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மென்பொறியியல் படித்த சிக்கந்தர் ராஜா மீண்டும் ஜிம்பாப்வேவுக்கு திரும்பி கிரிக்கெட் பயிற்சி எடுத்து உள்நாட்டில் கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கி சர்வதேச அணியில் இடம்பிடித்தார். ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கைக்குரிய ஆல்ரவுண்டராக விளையாடி வரும் ராஜா, தனது பிறந்தநாட்டை வீழ்த்த பெரும் பங்காற்றி உள்ளார்.

Previous Story

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்?

Next Story

பேரவாவியில் தூக்கிப் போடுவோம்!