லிபியாவில் இரு பிரதமர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்

லிபியா தலைநகர் திரிபோலியில், இரு பிரதமர்களின் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் நிகழ்ந்ததால் பதற்றம் ஏற்பட்டது.வடக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த லிபியாவில், 2011ல் நடந்த மக்கள் புரட்சியில் அதிபர் கடாபி கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட உள்நாட்டு கலவரம் லிபியாவை, கிழக்கு மேற்காக பிரித்தது.

கிழக்கு பகுதி, ராணுவ தளபதி கலிபா ஹிப்டரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இரு மாதங்களுக்கு முன் முன்னாள் உள்துறை அமைச்சர் பஷாகா, லிபியாவின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க, லிபியா பிரதமர் அப்துல் ஹமீது டிபெபாவு மறுத்து விட்டார்.

தேர்தல் மூலம்தான் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் எனவும், அதுவரை தான்தான் பிரதமர் எனவும், அப்துல் ஹமீது கூறி விட்டார்.இந்நிலையில் இடைக்கால பிரதமர் பஷாகா, நேற்று தன் அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் லிபியா தலைநகர் திரிபோலிக்கு சென்றார்.அப்போது அவர்களுக்கும், அப்துல் ஹமீது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.நிலைமை மோசமானதை உணர்ந்த பஷாகா, தன் ஆதரவாளர்களுடன் திரும்பினார். மக்களின் பாதுகாப்பு காரணமாகவும், ரத்தம் சிந்துவதை தவிர்க்கவும் திரிபோலியில் இருந்து திரும்பி விட்டதாக பஷாகா தெரிவித்துள்ளார். இதற்கிடையே எகிப்தில் லிபியா தொடர்பான அமைதி பேச்சு துவங்கியுள்ளது.

Previous Story

பிரேத ஊர்தியில் தப்பிய 3 உறுப்பினர்கள்!

Next Story

UK தேர்தலில் வென்ற இலங்கை பெண்