‘லால் சலாம்’

இந்து-முஸ்லிம் பிரச்னை:கிரிக்கெட் மூலம் பேச முயலும் ரஜினி திரைப்படம்

லால் சலாம் திரைப்படம், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்

ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் ‘லால் சலாம்’ திரைப்படம் இன்று (வெள்ளி, பிப்ரவரி 9) வெளியானது.

ஐஸ்வர்யா ‘3’, வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கி கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கான ஊடக விமர்சனங்கள் தற்போது வரத் துவங்கியிருக்கின்றன.

லால் சலாம் படத்தின் கதை என்ன?

ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்து மற்றும் இஸ்லாமிய சமூக மக்களிடையே இருக்கும் வேறுபாடுகள் எப்படி கிரிக்கெட் விளையாட்டில் பிரதிபலிக்கிறது என்பதையே இப்படம் பேசுகிறது என்று ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களில் தெரிவிக்கின்றன.

மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் வரும் ரஜினிகாந்தின் மகன் ஷம்சுதீனாக வருகிறார் விக்ராந்த். விக்ராந்துக்கும், திரு என்ற கதாபாத்திரத்தில் வரும் விஷ்ணு விஷாலுக்கும் சிறு வயது முதலே போட்டி மனப்பான்மை நிலவுகிறது. இருவரும் மொய்தீன் துவங்கிய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகின்றனர். அணியும் பல வெற்றிகளைக் குவிக்கிறது.

ஆனால் விஷ்ணு விஷாலின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படும் சிலர், அவரை அணியிலிருந்து வெளியே அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர் தனியே ஒரு கிரிக்கெட் அணியைத் துவங்குகிறார்.

இரண்டு அணிகளும் இந்து-இஸ்லாம் என இரண்டு சமூகங்களின் அணிகளாக மாறிப் போகின்றன. இது அந்தக் கிராமத்தின் அமைதியைக் குலைக்கிறது. ஒரு போட்டி, விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரது வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது.

என்ன நடந்தது, ரஜினிகாந்த் இந்தப் பிரச்னைகளைச் சமாளித்தாரா என்பதுதான் படத்தின் கதை.

‘தற்கால சமூக-அரசியல் சூழலுக்குப் பொருத்தமான படம்’

லால் சலாம் திரைப்படம், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்தப் படம் ‘தற்கால சமூக-அரசியல் சூழலுக்கு பொருத்தமான படம்’ என்று எழுதியிருக்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ்.

ரஜினிகாந்தை, இஸ்லாமிய சமூகத் தலைவரான மொய்தீன் பாயாக பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது எனக் கூறும் அந்த விமர்சனம், “அவர் தந்தையாகவும் சமூகத் தலைவராவும் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இரட்டைப் பொறுப்புகளை மிக அழகாகச் செய்திருக்கிறார்,” எனப் பாராட்டியுள்ளது.

“அவரது நடிப்பு கட்டுக்கோப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகள்கூட நம்பமுடியாத வகையில் இல்லை. சொல்லப்போனால் ரஜினிகாந்த் தான் இப்படத்தின் முதுகெலும்பு,” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் விமர்சனம் தெரிவிக்கிறது.

நிஜ வாழ்வில் கிரிக்கெட் விளையாடுவதால், படத்திலும் விஷ்ணு விஷாலும் விக்ராந்தும் கிரிக்கெட் வீரர்களாக நன்றாக நடித்திருக்கிறார்கள் என்றும் இதில் கூறப்பட்டிருக்கிறது.

சூஃபி இசையும், கிராமத்து இசையும் கலந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை படத்திற்கு வலு சேர்க்கிறது என்றும் இவ்விமர்சனம் கூறுகிறது.

ஆனால், “படத்தின் கதை இன்னும் கவனமாக எழுதப்பட்டிருக்கலாம். சில கதையம்சங்கள் சரியாக விளக்கப்படவில்லை. சில காட்சிகள் படத்தின் தன்மையைக் கெடுக்கின்றன, அவற்றை வெட்டியிருக்கலாம்,” என்றும் கூறுகிறது.

படத்தின் திரைக்கதை எப்படி இருக்கிறது?

லால் சலாம் திரைப்படம், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்

இதே கருத்தைச் சற்றுக் கூர்மையாகச் சொல்லியிருக்கும் ‘இந்தியா டுடே’ விமர்சனம், புதுமையான அம்சங்கள் இல்லாததாலும், வழக்கமான வடிவத்திலேயே கதையை நகர்த்துவதாலும் படம் திணறுகிறது, என்று கூறியுள்ளது.

“மத அரசியல் பேசும்போதும், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரின் கதாபத்திர வளர்ச்சி ஆகியவற்றில், ‘லால் சலாம்’ பல உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கொண்டுள்ளது.

ஆனால், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதையில் சில புதிய கையாடல்களைக் கொண்டு வந்திருக்கலாம். துவக்கத்திலிருந்தே படம் மிகவும் ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது,” என்கிறது இந்த விமர்சனம்.

படத்தில் கபில்தேவின் ‘கேமியோ’ தோற்றம்கூட சோபிக்கவில்லை என்று கூறும் இந்த விமர்சனம், படத்துக்கு 2.5 என்ற ரேட்டிங்கை வழங்கியுள்ளது.

‘மெல்லிய உணர்வுகளால் பெரிய அரசியலைப் பேசுகிறது. ஆனால்…’

லால் சலாம் திரைப்படம், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ‘3’ படத்தில் மெல்லிய உணர்வுகளைக் காட்சிப்படுத்தி அதன் மூலம் பெரிய விஷயங்களைப் பேசியிருப்பார். ஆனால் ‘லால் சலாம்’ படத்தில் முக்கியப் பிரச்னைகளை பேச அத்தகைய காட்சிகளை அவர் அதிகம் பயன்படுத்தவில்லை எனக் கூறுகிறது ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழின் விமர்சனம்.

மேலும், இந்தப் படத்தில் அத்தகைய காட்சிகளைக் கையாளும்போது அவை மிக நீளமாக இருக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளது.

“லால் சலாம் படத்தின் முதல் எதிரி, அதன் நீளம்தான். படத்தின் இரண்டாம் பாதியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத காட்சிகள் படத்தின் நீளத்தை நியாயப்படுத்தவில்லை, மாறாக கதை நகராதது போன்ற உணர்வையே தருகின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.

ரஜினிகாந்த் மட்டும் இல்லையென்றால் இப்படம் இன்னும் சுமாராகவே இருந்திருக்கும் எனக் கூறும் இந்த விமர்சனம், இப்படத்திற்கு 3 என்ற ரேட்டிங்கை கொடுத்துள்ளது.

படத்தின் அரசியல் கருத்து சரியாகச் சொல்லப்பட்டுள்ளதா?

லால் சலாம் திரைப்படம், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த்

சொல்ல எடுத்துக்கொண்ட கருத்தை படம் கூறியிருக்கும் விதத்தை ‘ஃபர்ஸ்ட்போஸ்ட்’ இணையதளம் மிகக் காட்டமாக விமர்சித்திருக்கிறது.

‘லால் சலாம்’ படம் உணர்ச்சிகளை நீர்த்துப்போக வைத்திருப்பதாகக் கூறுகிறது இந்த விமர்சனம். இப்படம், இன்று நாம் காணும் சமூக-அரசியல் பிரச்னையை ‘மேலும் குழப்புவதாக’ ஃபர்ஸ்ட்போஸ்ட் விமர்சனம் தெரிவிக்கிறது.

“உதாரணமாக, மொய்தீன் பாயாக வரும் ரஜினிகாந்த், ராஜதந்திரமாக இருக்க முயல்கிறார். அவர் ஒற்றுமை மற்றும் புரிதலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பொதுமக்களிடம் பிரசங்கம் செய்கிறார். இந்தச் சித்தரிப்பு நிதர்சனத்துடன் தொடர்பில்லாமல் இருக்கிறது,” என்கிறது இந்த விமர்சனம்.

மேலும், இரு சமூக மக்களின் உறவைச் சித்தரிக்கும் விதத்தைப் படம் தவறவிடுவதாகவும் அதன் விமர்சனம் கூறுகிறது. “இந்த உறவில் ஆராயப்படாத அடுக்குகள் உள்ளன. பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினரிடம் இருந்து பலனடைந்ததைப் பற்றி, சிறுபான்மையினர் சந்திக்கும் அவமரியாதையைப் பற்றி, மோதல் சம்பவங்கள் இளைய தலைமுறைக்கு ஏற்படுத்தும் அதிர்ச்சி பற்றி, இந்தப் படத்தில் உண்மையான சித்தரிப்புகளைக் காண முடியவில்லை,” என்கிறது இந்த விமர்சனம்.

மாறாக, இந்தப் படம் பலமுறை பார்த்துச் சலித்த பழைய முறையையே பின்பற்றுகிறது, என்னும் இந்த விமர்சனம், படத்துக்கு வெறும் 1.5 என்ற ரேட்டிங்கையே கொடுத்திருக்கிறது.

Previous Story

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை 

Next Story

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்