ரொனால்டோவை மிரளவைத்த கானா!

ஐந்து உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிரட்டிப் பார்த்திருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்றிருக்கும் அணிகளின் தர வரிசையில் கடைசியாக இருக்கும் கானா.

ரொனால்டோ

எதிர்பாராத வகையில் பதில் கோல்களை அடித்த கானா அணி, கடைசி நிமிடத்தில்கூட போட்டியைச் சமன் செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.

கடைசி நிமிடத்தில் போர்சுகல் கோல்கீப்பர் பந்தைப் பிடித்து கோலுக்கு அருகே அடிக்க முயன்றபோது பின்னால் இருந்த கானா வீரர் பந்தைக் காலால் பறித்து கோலை நோக்கித் தட்டிவிட்டார். ஒரு கணம் போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் உறைந்து போயிருந்தனர். அந்த நேரத்தில் களத்துக்கு வெளியே இருந்த ரொனால்டோ அதிர்ச்சியில் தலையிலேயே கைவைத்துவிட்டார்.

இருப்பினும் கோல்கீப்பரைக் கடந்து கோலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பந்தை ஒன்றிரண்டு அடிக்கு முன்பாக போர்ச்சுகல் வீரர் தடுத்துவிட்டார். அது கோலாக மாறியிருந்தால், அது கத்தார் உலகக் கோப்பை போட்டியில் மற்றொரு அதிர்ச்சியான முடிவாக அமைந்திருக்கும்.

முதல்பாதி ஆட்டம் கோல் இல்லாமலேயே முடிந்து போக இரண்டாவது பாதி ஆட்டம் கோல் மழையால் நனைந்தது என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு இரு அணிகளும் மாறி மாறி கோல்களை அடித்துக் கொண்டிருந்தன.

இறுதியாக 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.

போட்டியில் நடந்தது என்ன?

உலகக் கோப்பை தர வரிசையில் 61-ஆவது இடத்தில் கானா இருக்கிறது. போர்சுகல் 9-ஆவது இடத்தில் இருக்கிறது.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பந்தை அதிகமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போர்சுகல் அணி. 10-ஆவது நிமிடத்திலேயே கடத்தி வரப்பட்ட பந்தை ரொனால்டோ கோலாக்க முயன்றபோது கானா கோல்கீப்பர் லாரன்ஸ் அதை தடுத்து கோலுக்கு வெளியே திருப்பிவிட்டார். சில நிமிடங்களில் ரொனால்டோவின் மற்றொரு முயற்சியும் கோலாகவில்லை.

ரொனால்டோ

31-ஆவது நிமிடத்தில் கானா கோல் கீப்பரைக் கடந்து ரொனால்டோ பந்தை கோலுக்குள் அடித்தார். ஆனால் கடைசி உதைக்கு முன்பாக நடுவர் விசில் ஊதியதால் அது கோலாக கருதப்படவில்லை. முதல் பாதி முழுவதும் கானாவின் தடுப்பரணை வெற்றிகரமாகக் கடப்பதற்கு போர்சுகலால் முடியவேவில்லை.

65-ஆவது நிமிடத்தில் பெனால்ட்டி பகுதியில் ரொனால்டோவின் காலை கானா வீரர் தட்டிவிட போர்ச்சுகலுக்கு பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தவற விடாமல் கோலாக மாற்றினார் ரொனால்டோ. எனினும் கானா கோல்கீப்பரின் கைகளுக்கு மிக அருகில்தான் அந்தப் பந்து சென்று கோலுக்குள் புகுந்தது.

அடுத்த 8-ஆவது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரே ஆயேவ் இரண்டு போர்சுகல் வீரர்களையும் கோல்கீப்பரையும் கடந்து வந்த பந்தை கோலாக மாற்றினார். சில நிமிடங்களில் போர்சுகல் அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.

ஆனால் 89-ஆவது நிமிடத்தில் கானா வீரர் ஓஸ்மான் புகாரி மற்றொரு கோலை அடித்ததால் கடைசி நேர பதற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு கடைசி வரை எவ்வளவோ முயன்றும் கானாவால் கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் 3-2 என்ற கோல்கணக்கில் போர்சுகல் வென்றது.

போர்ச்சுகல்

வரலாறு படைத்த ரொனால்டோ

இந்தப் போட்டியில் பெனால்ட்டி முறையில் அடித்த கோலின் மூலமாக 5 உலகக் கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ரொனால்டோ.

37 வயதான ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக உலகக் கோப்பையில் ஆடிய 18-ஆவது போட்டி இது. 2003-ஆம் ஆண்டில் முதன் முதலாக போர்ச்சுகல் அணியில் அறிமுகமானார் ரொனால்டோ. 2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதன் முதலாகப் பங்கேற்ற அவர், இரானுக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டி மூலமாக தனது முதலாவது உலகக் கோப்பை கோலை அடித்தார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் வடகொரியாவுக்கு எதிராக இரண்டாவது கோலை அவர் அடித்தார்.

கானா

2014-ஆம் ஆண்டு பிரேசில் உலகக் கோப்பையில் இதே கானா அணிக்கு எதிராக தனது அடுத்த உலகக் கோப்பை கோலை ரொனால்டோ அடித்தார். 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் நான்கு கோல்களை அவர் அடித்தார். ஸ்பெயின் அணிக்கு எதிரான ஹாட்ரிக் கோல்களும் இவற்றில் அடங்கும்.

இப்போது கானா அணிக்கு எதிரான ஒரு கோலையும் சேர்த்து அவர் உலகக் கோப்பையில் மொத்தம் 8 கோல்களை அடித்துள்ளார்.

கானா

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை நடந்தவை

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் செலவில் மைதானங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள், சாலைகள் உள்ளிட்ட வசதிகளுடன் ஏற்பாடுகள் பிரமாண்டமான செய்யப்பட்டிருக்கின்றன.

மாற்றுத்திறனாளி இளைஞர் குரான் வாசிக்க, ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமன் அவருடன் உரையாட உற்சாகமாகப்போட்டிகள் தொடங்கின.

முதல் போட்டியில் கத்தார் அணி எக்வடோர் அணியைத் தோற்கடித்து உள்ளூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பி பிரிவில் இரான் அணியை இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தத் தொடரில் அதிர்ச்சியளிக்கும் அம்சமாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபிய அணி வீழ்த்தியது.

இ- பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி கோஸ்டா ரிகா அணியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, இந்தப் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக கோல்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

இ-பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. போர்ச்சுகல், பெல்ஜியம், பிரேசில் ஆகிய முன்னணி அணிகள் தங்களது முதலாவது போட்டிகளில் வென்றிருக்கின்றன.

Previous Story

பாக்:ராணுவத் தளபதி  லெப். ஜெனரல் சையது ஆசிம் முனிர்? சர்ச்சையாக்குவார் ...இம்ரான்?

Next Story

முட்டிக் குனியும் கட்டளை!