ரூ.13,000 கடனுக்கு ரூ.17 லட்சம் வசூல் – மிரட்டும் ஆன்லைன் ?

“எனது கணவரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கள் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டன. அதில் என் கணவர் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக காட்டப்பட்டார். இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் தவித்தோம். இது இந்த அளவோடு நிற்காமல் இருந்திருந்தால் அதற்கு அடுத்ததாக என்னுடைய படத்தை தவறாகச் சித்தரித்து வேறு ஆண்களுடன் இருப்பது போல் காட்டி, தவறான இணையதளங்களில் பரவவிட்டிருப்பார்கள். எனக்கு தினமும் மொபைல் ஃபோன் மூலம் அழைப்பு விடுத்த அடையாளம் தெரியாத எண்களில் இருந்து அந்தப் படங்கள் பகிரப்பட்டிருக்கும்.”

கடன்வழங்கிவிட்டு மிரட்டும் கும்பல்

இது குறிப்பிட்ட தொகையைக் கடனாகப் பெற்றிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரின் மனைவியான ஃபௌவுசியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கு நேர்ந்த அநீதி.

இதற்குப் பிறகு, ஃபௌவுசியாவும் அவரது கணவரும் கடனை அடைப்பதற்காக வீட்டில் இருந்த பொருட்களைக் கூட விற்கும் நிலை ஏற்பட்டது. .

ஏராளமான சமூக ஊடகங்கள் செயல்படும் இந்த காலத்தில், ஒரு இடத்தில் வசிப்பவர், தனது படங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வேறு எங்கோ வசிக்கும் ஒரு தவறான நபரின் கைகளுக்குக் கிடைத்துவிடுமோ என அச்சப்படுகிறார். அப்படி ஒருவேளை ஒரு தவறான நபரிடம் அது போன்ற படங்கள் கிடைத்துவிட்டால், அந்த படங்களை அவர் மோசமாகப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது.

ஃபௌவுசியாவின் கணவர் கடன் வாங்கியபின் திருப்பிச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால் இது போல் கணவன், மனைவி ஆகிய இருவரும் கடன் கொடுத்த கும்பலால் மிரட்டப்பட்டனர்.

ஃபௌசியாவின் கணவர் நடத்தி வந்த காய்கறி வியாபாரத்தில், கூலிக்கு தொழிலாளர்களை அமர்த்தியிருந்தார். ஆனால் ஒரு சூழ்நிலையில் வருமானம் குன்றிப் போனதால், மகளுக்கு பால் வாங்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் வாங்கும் நிலையைத் தவிர்க்கமுடியவில்லை.

ஆனால் வாங்கிய கடனை அடைக்க ஃபௌசியாவும் அவரது கணவரும் வீட்டுப் பொருட்களை ஏன் விற்க வேண்டும்? இந்த கேள்விக்கான பதிலைத் தேடிய போது தான், மறைக்கப்பட்ட அந்தக் கதை தெரிந்தது. அந்தக் கதை பற்றிக் கேட்டபோதே அவரிடம் ஒரு பயம் தெரிந்தது.

2020 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த போது, பாகிஸ்தானில் ​​ஆன்லைன் செயலிகள் மூலம் எளிதான தவணைகளில் கடன் பெறும் நடைமுறை தொடங்கியது. இந்தக் கடனைப் பெறுபவர்கள் அதற்காக ஒரு செயலியை தங்கள் செல்ஃபோன்களில் நிறுவவேண்டும். இந்த செயலியை நிறுவும் போது, அதில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் முழுக்க முழுக்க பின்னர் மீறப்படும் என்பது அப்போது தெரியாது.

உதாரணமாக, கடனைத் திருப்பிச் செலுத்த 91 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு, எடுத்த தொகைக்கு மூன்று சதவீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும்.

ஆனால் அந்த ஆன்லைன் செயலி மூலம் ஒருவர் கடன் வாங்கினால், ஒரு வாரத்திற்குள் கடனைத் திருப்பித் தரக் கேட்டு பல்வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கி, கடன் தொகை நாளுக்கு நாள் இரட்டிப்பாகிக் கொண்டே போகும்.

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து ஏதேனும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது, ​​அந்த செயலி, பயனருடைய மொபைல் போனில் இருக்கும் ‘ஃபோன் புக்குடன்’ தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள அனுமதி கேட்கும். அதற்கான அனுமதியை பயனர் கொடுத்தவுடன், ஃபோன் புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை அந்தச் செயலி பெற்றுவிடும். இது போல் மொபைல் ஃபோனில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்களை எடுக்கும் ஈஸி கடன் செயலிகள், கடன் பெற்றவரை மிரட்டும் நோக்குடன், அவர்கள் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற தகவலை புகைப்படடத்துடன் அவர்களுடன் தொடர்புடைய எண்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பிவிடும்.

கடன்வழங்கிவிட்டு மிரட்டும் கும்பல்

மொபைல் ஃபோனில் நிறுவப்படும் ஈஸி லோன் செயலிகள் பல மோசடிகளை அரங்கேற்றி வருகின்றன.

‘தற்கொலை செய்ய இரண்டு முறை முயன்ற கணவன்’

இது போன்ற கடன் செயலி ஒன்றினால் மனமுடைந்த தனது கணவர் சில நாட்களுக்கு முன்பு இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்றதாக ஃபௌவுசியா கூறினார்.

“என்னையும், எனது மகளையும் அறைக்கு வெளியே இழுத்து வந்து மின்விசிறியில் தூக்கிலிட்டு கொலை செய்ய முயன்றதுடன், தொடர்ந்து வந்த மொபைல் ஃபோன் அழைப்புகளால் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு, மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்ய எனது கணவர் முயன்றார்.”

இந்த ஆன்லைன் மோசடிக்கு இரையாகி, தொடர்ந்து மிரட்டல்களை எதிர்கொண்ட ஃபௌசியா மற்றும் அவரது கணவரைப் போல மேலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் இந்த ஆன்லைன் செயலிகள் மூலம் 13 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, பின்னர் தங்கள் வீடுகள் மற்றும் சொத்துகளை விற்று 17 லட்சம் ரூபாயைக் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுவிட்டு, தங்கள் கடை மற்றும் மனைவியின் நகைகளை எல்லாம் விற்று 13 லட்சம் ரூபாயைச் செலுத்தியுள்ளனர்.

இதற்கு மற்றொரு உதாரணம் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டி நகரைச் சேர்ந்த முகமது மசூத் என்ற 42 வயது நபரை எடுத்துக்கொள்ளலாம். அவர் இதுபோன்ற ஒரு ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி, பின்னர் தொடர்ந்து மிரட்டப்பட்டதால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

முகமது மசூதின் தற்கொலைக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் மக்கள் அந்த செயலிகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்திவந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். அதன் பிறகு தான் அரசு நிறுவனங்கள் இந்தப் பிரச்சினையில் செயல்படத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, அந்த மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

கடன்வழங்கிவிட்டு மிரட்டும் கும்பல்

மோசடி செயலி மூலம் கடன் வாங்கி பின்னர் தற்கொலை செய்யுமளவுக்கு சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஆன்லைன் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

இந்த ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட பலரிடம் பேசிய பிறகு, பலர் FIA எனப்படும் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சிக்கு இந்த செயலிகள் தொடர்பாக பல முறை புகார் கூறியும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

இதுவரை ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய இஸ்லாமாபாத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் இயக்குநர் அயாஸ் கானிடம் பிபிசி பேசியது.

ஆன்லைன் செயலிகள் குறித்து தனக்கு நீண்ட காலமாக புகார்கள் வந்துகொண்டிருப்பதாகவும், அந்த புகார்களின் மீது ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் அயாஸ் கான் கூறினார்.

“இந்தச் செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படும் போதெல்லாம், அவை பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் (SECP) கட்டுப்படுத்தப்பட்டுவருகின்றன. அதாவது இந்தச் செயலிகள் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவை, அவற்றின் நிறுவனர், அவரின் செயல்பாடுகள் மற்றும் மீதமுள்ள அனைத்து தகவல்களும் இந்த ஆணையத்திடம் இருக்கும்,” என்கிறார் அவர்.

“இதனால், புகார்கள் வரத் தொடங்கிய போதே, இந்தச் செயலிகள் முறையான அனுமதி பெற்று இயங்குகின்றனவா என்று முதலில் எஸ்இசிபியிடம் கேட்டோம். ஆனால், இந்த செயலிகளுக்கு உரிமம் இல்லை என்றும், அனுமதி பெற்றுச் செயல்படும் செயலிகளும் இது போன்ற தவறுகளைச் செய்துவந்ததாகவும் அங்கிருந்து பதில் கிடைத்தது. அது சட்டத்தை மீறுவதாகும்.”

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற கடன் வழங்கும் செயலிகளுக்கு அலுவலகம் இல்லாததாலும், கடன் வாங்குபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய எண்ணிலிருந்து கடனைத் திரும்பக் கேட்டு அழைப்புகள் வருவதால், அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது கடினம் என்றும் தெரிவித்தார்.

கடன்வழங்கிவிட்டு மிரட்டும் கும்பல்

மோசடி செய்யும் செயலிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் இயக்குநர் அயாஸ் கான் கூறுகிறார்.

இருப்பினும் அந்த நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முகமது மசூத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கைகள் சமீபத்தில் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

“நாங்கள் ஏழு எஃப்ஐஆர்களை பதிவு செய்து, 25 பேரை கைது செய்துள்ளோம். அதே நேரத்தில் கால் சென்டர்கள் போல் செயல்பட்டு வந்த ஏழு நிறுவனங்களின் அலுவலகங்களை மூடியுள்ளோம். மேலும், 35 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன,” என்கிறார் அவர்.

தனி மனிதர்களின் படங்களை எடிட் செய்து தவறாகப் பயன்படுத்துபவர்களைத் தண்டிக்க சைபர் கிரைம் என்ற கடுமையான சட்டம் இயற்றப்பட்டு அதன் மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அயாஸ் கான் கூறுகிறார். இந்த சட்டத்தின்படி, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இது மட்டுமல்லாமல், இந்த சட்டப் பிரிவில் ஒருவர் கைது செய்யப்படும்போது அவர் ஜாமீனில் கூட வெளிவர முடியாது. இது போன்ற குற்றங்களைச் செய்து தண்டனை பெறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்று அயாஸ் கான் கூறுகிறார்.

பலருக்கு அந்த செயலிகளைப் பற்றித் தெரியாது என்றும் இந்த செயலிகள் தெரிவிக்கும் தகவல்களை நம்பி அவை தேவைப்படும் போது பதிவிறக்கம் செய்துகொள்கின்றனர் என்றும் கூறும் அயாஸ் கான், ஆனால் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது சமூக வலைதளப் பக்கங்களில் அவரது உருக்கமான பேச்சுக்கள் வைரலாக பரவி வருவதால், அந்தச் செயலிகள் குறித்த உண்மைத் தகவல்கள் மக்களுக்குத் தெரிந்துள்ளது என்கிறார்.

இஸ்லாமாபாத் சைபர் கிரைம் கூடுதல் இயக்குநர் அயாஸ் கான் மேலும் பேசுகையில், யாரேனும் ஒருவர் இது போல் துன்புறுத்தப்பட்டால், அவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள எஃப்ஐஏ (ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி) அல்லது சைபர் கிரைம் அலுவலகங்களுக்கு இணையம் மூலம் புகாரை அனுப்பவேண்டும் என்று கூறுகிறார்.

அவ்வாறு மோசடி செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.

கடன்வழங்கிவிட்டு மிரட்டும் கும்பல்

கடன் செயலிகளின் மோசடியில் சிக்கிய பலர், அது போன்ற செயலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

ஆன்லைன் மோசடிகளை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய போராட்டங்கள்

அகீல் நோமி மற்றும் இம்ரான் சவுத்ரி போன்றவர்கள் இந்த மோசடி செயலிகள் தொடர்பான தகவல்களை விழிப்புணர்வு அடிப்படையில் பொதுமக்களுக்கு அளித்து வருகின்றனர். அவர்களும் அந்த செயலிகளின் மோசடிக்கு ஆளாகியுள்ளனர்.

அகீல் நோமி யூடியூப்பில் ஒரு சேனலை உருவாக்கி, இந்த மிரட்டல் செயலிகளிடமிருந்து எப்படி பொதுமக்கள் தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட பின் எப்படிச் செயல்படவேண்டும் என்பது குறித்தும் பல்வேறு தகவல்களை அளித்து வருகிறார்.

இதேபோல், இம்ரான் சவுத்ரியும் அந்த மோசடி செயலிகளை ஒழிக்கக் கோரியும், இது போன்ற செயலிகளை நிர்வகிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் விசாரணை அமைப்புகளின் அலுவலகங்கள் முன் பல முறை போராட்டம் நடத்தியுள்ளார்.

இது குறித்து இம்ரான் சவுத்ரி கூறும்போது, ​​“இது மிகப்பெரிய மோசடி. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த மோசடிகளுக்கு இரையாகி பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். அதனால் நான் பல செய்தி சேனல்கள், எஃப்ஐஏ மற்றும் எஸ்இசிபி அலுவலகங்களை தொடர்பு கொண்டு, இது போன்ற செயலிகளினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்க என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்,” என்கிறார்.

இம்ரான் சௌத்ரி கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த செயலிகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார். இது குறித்து பாகிஸ்தான் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டுள்ளார். தற்போது வாட்ஸ்ஆப்பில் மிரட்டுவதால் மன உளைச்சல் அடையும் ஆயிரக்கணக்கானோர் அவரிடம் உதவி கேட்கின்றனர்.

இந்த மோசடி குறித்து எஃப்ஐஏவிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இம்ரான் கூறுகிறார்.

இப்போது எஃப்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் அது போன்ற மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளதாகவும், அதே நேரம் சமூக ஊடகங்களிலும் மக்களுக்கு நிறைய புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

“எதிர்காலத்தில் அந்தச் செயலிகளை முழுமையாகத் தடுப்போம் என்று நம்புகிறோம்.”

கடன்வழங்கிவிட்டு மிரட்டும் கும்பல்
ஏமாற்றும் செயலிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் செயலாளர் இயக்குனர் கலீதா ஹபீப் கூறுகிறார்.

அந்தச் செயலிகளுக்கு உரிமம் கிடைத்தது எப்படி?

இது போன்ற ஈஸி லோன் செயலிகளுக்கு எவ்வாறு உரிமம் வழங்கப்படுகிறது? சட்டவிரோத செயலிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

இதுகுறித்து, பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் செயலாளர் இயக்குனர் கலீதா ஹபீப் கூறுகையில், பொருளாதாரத் துறையை எஸ்இசிபி ஒழுங்குபடுத்துகிறது என்றார்.

“பொதுவாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு எஸ்இசிபி உரிமம் வழங்குகிறது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் நாட்டில் கடன் வழங்கும் வேலையைச் செய்ய முடியும்.”

மேலும், “நாம் ஒரு நிறுவனத்திற்கு உரிமம் வழங்கும் போதெல்லாம், அந்த நிறுவனத்தில் யார் முதலீடு செய்துள்ளனர், அதன் தலைவர் யார் என்பது உள்ளிட்ட விஷயங்களைச் சரிபார்க்கிறோம். பின்னர் நாங்கள் ஒரு சைபர் கிரைம் படிவத்தை வழங்குகிறோம். அதில் கடன்களை வழங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகள் அனைத்தும் இருக்கும். நாங்கள் அங்கீகரிக்கும் செயலியின் அமைப்பும், அதன் செயல்முறையும் இணைய பாதுகாப்பிற்கு ஏற்ப இருப்பதையும் உறுதி செய்கிறோம்,” என்கிறார் அவர்.

அந்த செயலிகளை அறிமுகப்படுத்திய பிறகு, அவற்றைப் பற்றிய புகார்கள் வரத் தொடங்கியதாகவும், இதன் காரணமாக அந்த செயலிகளின் மீது பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் கலீதா ஹபீப் கூறுகிறார்.

“2022 இல் எஸ்இசிபி ஒரு கடிதத்தை வெளியிட்டது. ஒரு பயனரின் மொபைல் ஃபோனை இது போன்ற செயலிகள் அணுகுவது கட்டுப்படுத்தப்படும் என்றும், கடன் தொகை மற்றும் பிற விவரங்கள் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.”

மேலும், “நாங்கள் PTA (பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம்), கூகுள், ஸ்டேட் வங்கி மற்றும் பிற நிறுவனங்களுடன் பேசி, சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து செயலிகள் குறித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், நாங்கள் குறிப்பிடும் செயலிகளை ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற தளங்களிலிருந்து அகற்றவேண்டும் என்றும் கூறியுள்ளோம். இது வரை 65 செயலிகள் இப்படி அகற்றப்பட்டுள்ளன,” என்று அவர் கூறுகிறார்.

கூகுள் ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாகவும், அதன்படி எஸ்இசிபியின் உரிமத்தைக் காட்டினால் மட்டுமே இது போன்ற ஈஸி கடன் செயலிகளை பொதுமக்களுக்கு வழங்கப் போவதாகவும் கலிதா ஹபீப் கூறுகிறார்.

“மேலும் எஸ்இசிபி, பயனரின் மொபைல் ஃபோனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த சட்டவிரோத செயலிகளின் இணையதள முகவரியை முதலில் தடுக்குமாறு PTA-ஐக் கேட்டுக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், எஸ்இசிபியின் உரிமம் இன்றி எந்தச் செயலியும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டாம் என்று ஸ்டேட் வங்கிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்இசிபியின் உரிமம் இல்லாத பணப் பரிவர்த்தனைகளுக்கு அனுமதியளிக்கவேண்டாம் என்றும் ஸ்வேட் வங்கிக்குக் கூறப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறுகிறார்.

சட்டவிரோத செயலிகள் நிரந்தரமாக தடுக்கப்படுமா?

இந்த கேள்விக்கு பதிலளித்த கலீதா ஹபீப், “எஸ்இசிபி ஒரு கண்காணிப்பு அமைப்பு. அதன் வேலை சட்டவிரோத பயன்பாடுகளை கண்டறிந்து தடுப்பதாகும். எதிர்காலத்திலும் அந்த செயலிகளை நாங்கள் தொடர்ந்து தடுப்போம். மேலும் அவை மீது நடவடிக்கை எடுப்போம்,” என்கிறார்.

Previous Story

பாக்: இஸ்லாமிய கட்சிக் கூட்டத்தில் பயங்கரம் - 35 பேர் பலி, 200 பேர் காயம்

Next Story

தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக சாணக்கியன் தெரிவு!