ராணுவத்தில் மகன் – புரட்சிக் குழுவில் தந்தை; மியான்மரில் ஒரு பாசப் போர்!

“முதலில் சுடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் நான் உன்னை கொன்று விடுவேன்” – மியான்மர் ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு பேசுகிறார் போ கியார் யெய்ன்.
மியான்மர் போராட்டம்

மியான்மரில் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ராணுவ புரட்சி வெடித்ததையடுத்து, ஓர் ஆயுத குழுவில் போ கியார் யெய்ன் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து நடந்த கொடூரமான உள்நாட்டுப் போர் அவரது குடும்பத்தைப் பிளவுபடுத்தியது. போ கியார் யெய்ன் இப்போது அவரது மகன் ராணுவ வீரனாக இருக்கும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வருகிறார்.

 “உன்னை நினைத்து கவலைப்படுகிறேன். தந்தை என்பதால் நீ எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், ஆனால் நான் நிச்சயம் உன்னை விட மாட்டேன்”- காட்டில் ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தனது மகன் நியி நியி-விடம் தொலைபேசியில் இவ்வாறு பேசிகொண்டிருந்தார் போ  கியார் யெய்ன்.

“நானும் உங்களை நினைத்து கவலைப்படுகிறேன் அப்பா. ஒரு ராணுவ வீரன் ஆக வேண்டும் என என்னை ஊக்குவித்தது நீங்கள்தான்” என மறுமுனையில் இருந்து பதில் வருகிறது.

போ கியார் யெய்ன்னின் இரண்டு மகன்கள் ராணுவத்தில் உள்ளனர். மூத்த மகன் அவரது  அழைப்புகளுக்கு பதிலளிப்பது இல்லை.

 “ராணுவம் வீடுகளை அழித்துவிட்டன. அவற்றுக்கு தீ வைத்துவிட்டன” என்று கூறும் போ  கியார் யெய்ன் தனது மகனை ராணுவத்தில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறார். “ராணுவம் மக்களைக் கொல்கிறது, போராட்டக்காரர்களை அநியாயமாக சுடுகிறது, காரணமின்றி குழந்தைகளைக் கொல்கிறது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது. அது உனக்கு தெரியாமல் இருக்கலாம்” என்று மகனிடம் கூறுகிறார்.

“அது உங்களின் பார்வையாக இருக்கலாம் அப்பா. நாங்கள் அப்படி பார்ப்பதில்லை” என்று தனது தந்தையின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு  பதிலளிக்கிறார் நியி நியி. இத்தகைய மறுப்புகள் இருந்தபோதிலும், ராணுவத்தின் அட்டூழியங்கள் பரவலாகவும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டவையாகவும் உள்ளன.

இரண்டு மகன்களையும் சமாதானம் செய்ய தான் முயற்சிப்பதாகவும், அவர்கள் கேட்பதில்லை என்றும் கூறும் போ கியார் யெய்ன்,     “போரில் நாங்கள் சந்தித்துக்கொள்வது என்பது விதியின் வசம் உள்ளது” என்று தெரிவிக்கிறார்.

 “கையளவு உள்ள காய்கறிகளில், இரண்டு அல்லது மூன்று சரியில்லாதவையாக உள்ளன. ஒரு குடும்பத்திலும் அப்படித்தான். சிலர் நல்லவர்களாக இல்லாமல் இருக்கலாம்” என்கிறார் அவர்.

மியான்மர் போராட்டம்

போ கியார் யெய்ன் மற்றும் அவரது மனைவி யின் யின் மைன்ட் ஆகியோருக்கு மொத்தம்  எட்டு குழந்தைகள், அவர்களில் இரண்டு பேர் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டதில் அவர்கள் பெருமிதம் அடைந்தனர். மகன்களின் இராணுவ பட்டமளிப்பு விழாவின் புகைப்படங்களை போ கியார் யெய்ன்  நினைவுச்சின்னமாக வைத்திருந்தார். இரண்டு மகன்களும் அதிகாரிகள் ஆனார்கள்.

மகன்கள் ராணுவ வீரர்களாக இருந்தது பெருமையாக இருந்ததாக கூறுகிறார் அவர். மத்திய மியான்மரின் இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் கிராமங்களுக்குள் இராணுவத்தை மலர்கள் கொடுத்து வரவேற்ற காலம் அது.

யின் யின் மைன்ட் கூறுகையில், முழுக் குடும்பமும் வயல்களில் வேலை செய்து பணம் சம்பாதித்ததால் இரண்டு மகன்களும் படித்து ராணுவத்தில் சேர முடிந்தது என்றார்.

உள்நாட்டுப் போருக்கு முன்பு, மியான்மரின் ஆயுதப் படைகள் என அழைக்கப்படும் டாட்மடாவில் வேலை பார்ப்பது என்பது குடும்பத்திற்கு உயர்ந்த சமூக மற்றும் பொருளாதார நிலையைக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

நிராயுதபாணியான ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களை ராணுவம் இரக்கமின்றி ஒடுக்குவதை போ கியார் யெய்ன் பார்த்தபோது, அவர் இனி அவர்களுக்கு ஆதரவளிக்க முடியாத என்று முடிவு செய்ததோடு, தனது மகன்களை ராணுவத்தை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினார்.

“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஏன் சுட்டுக் கொன்றார்கள்? ஏன் சித்ரவதை செய்தார்கள்? ஏன் காரணமின்றி மக்களைக் கொல்கிறார்கள்?” காட்டில் தனது முகாமில் வெற்றிலை பாக்கை மென்றபடி போ  கியார் யெய்ன் கேட்கிறார். இவை அனைத்தாலும் தான் மனம் நொறுங்கிவிட்டதாக அவர் கூறுகிறார்.

இராணுவப் புரட்சிக்கு முன், போ கியார் யெய்ன் ஒரு விவசாயி, அவர் துப்பாக்கி ஏந்தியதில்லை. இப்போது, அவர் ஒரு போராட்டப் பிரிவின் தலைவர். அவர்கள் மக்கள் பாதுகாப்புப் படைகள் (PDF) எனப்படும் இயக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், அவர்கள் மிகப் பெரிய மற்றும் சிறந்த ஆயுதம் கொண்ட ராணுவத்திற்கு எதிராக ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடி வருகின்றனர்.

ராணுவ வீரர்களை நாய்கள் என இழிவாக குறிப்பிடும் அவர், “ஒரு கிராமத்திற்கு நாய்கள் வரும்போது, அவர்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள், அவர்கள் வீடுகளை எரிக்கிறார்கள் மற்றும் சொத்துக்களை சூறையாடுகிறார்கள்… நாம் அவர்களுக்கு எதிராக நிற்க வேண்டும்,” என்று போ கியார் யெய்ன் கூறுகிறார்.

தங்களை காட்டுப் புலிகள் என்று அழைக்கும் சுமார் 70 ஜனநாயக சார்பு போராளிகளைக் கொண்ட ஒரு பிரிவிற்கு போ கியார் யெய்ன் தலைமை தாங்குகிறார். அவர்களிடம் மூன்று தானியங்கி துப்பாக்கிகள் மட்டுமே உள்ளன.

மியான்மர் போராட்டம்

அவருடைய மற்ற நான்கு மகன்களும்  சண்டையில் அவருக்கு பக்க துணையாக உள்ளனர்.  ராணுவத்தில் உள்ள இரண்டு மகன்களும் அவர்களின் கிளர்ச்சியாளர் தளத்திலிருந்து 50 கிமீ (30 மைல்) தொலைவில் உள்ளனர்.

“ராணுவத்தில் உள்ள எங்களின் மகன்களை நம்பலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது அவர்களே எங்களுக்கு சிக்கலாக மாறிவிட்டனர்” என்று யின் யின் மைன்ட் வேதனையுடன் கூறுகிறார்.

மழையாக பொழிந்த துப்பாக்கி குண்டுகள்

பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒருநாள் அதிகாலை 3 மணியளவில், ராணுவம் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அருகில் உள்ள கிராமத்தில் இருந்து போ கியார் யெய்ன் குழுவுக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. அப்போது எதிர் தரப்பில், “எங்களுக்கு உதவி தேவை, நாய்கள் [சிப்பாய்கள்] எங்கள் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டன, வந்து எங்களுக்கு உதவுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.

இரண்டாவது  மகன் மின் ஆங் முதலில் புறப்படத் தயாரானான். அவனைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த அவனுடைய தாய், அவன் பத்திரமாகத் திரும்ப வேண்டிக்கொண்டாள். காட்டுப் புலிகள் மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டனர். தனது மகன்  மின் ஆங்குடன்  போ கியார் யெய்ன் படையை வழி நடத்தி சென்றார்.  முன்னொரு காலத்தில் அவர்கள் பதுங்கிருந்தபோது பாதுகாப்பாக இருந்த பாதை வழியாக அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

 “அங்கு ஒளிந்துகொள்ள எந்த இடமும் இல்லை. பெரிய மரங்களோ அல்லது எதுவுமே இல்லை” என்று தெரிவித்த மற்றொரு மகன் மின் நாயிங், “சோளத்தை பொரிப்பது போல் அவர்கள் எங்களை நோக்கி மளமளவென துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் கொலைக்களத்தில் இருந்தோம். அவர்களின் ஆயுதங்களுக்கு எங்கள் ஆயுதங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

போ கியார் யெய்ன் தனது குழுவினரை பின்வாங்க உத்தரவிட்டார். அவர்கள் நெல் வரப்பில் ஒளிந்துகொண்டனர். “அவர்களில் யாரோ ஒருவர் என்னை அறிந்திருப்பதாக தோன்றியது”என்று கூறும் போ கியார் யெய்ன், தன்னை இலக்காக கொண்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உணர்ந்ததாக தெரிவிக்கிறார். அவர்களை நோக்கி சுட்டுக்கொண்டே தான் ஓடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மியான்மர் போராட்டம்

இந்த துப்பாக்கிச் சூடு சத்தங்களை எல்லாம் கேட்டுக்கொண்டு முகாமில் பதற்றத்தோடு யின் யின் மைன்ட் காத்திருந்துள்ளார்.  இது குறித்து அவர் கூறும்போது, “துப்பாக்கிச் சத்தம் தொடர்ந்து கேட்டது, அது மழை போல் ஒலித்தது” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்த திடீர் தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரங்களில், ராணுவம் இறந்தவர்களின்  புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டது, 15 பேரைக் கொன்றதாக பெருமையாகக் கூறியிருந்தனர்.

அப்போதுதான் தனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மகனை இழந்துவிட்டதை யின் யின் மைன்ட் உணர்ந்தார்.

“என் மகன் என் மீது அதிக அக்கறை கொண்டிருந்தான். எனக்காக சமையலறையை சுத்தம் செய்வான், என் துணிகளை துவைப்பான். காயவைத்த என் சேலைகளை எடுத்து தருவான். என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தான் ” என்று அவர் கூறுகிறார்.

ஜூன் மாதம், ராணுவத்தினர் அவர்களது கிராமத்தில் உள்ள 150 வீடுகளுடன் அவர்களின் வீடு மற்றும்  உடைமைகள் அனைத்தையும் எரித்தனர். நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மியான்மரில் ராணுவ வீரர்களால் தீவைப்பு நடந்துள்ளது. கிளர்ச்சியில் போ கியார் யெய்னின் பங்கு குறித்து ராணுவத்தினர் நன்கு அறிந்திருப்பதாகவே தெரிகிறது. எனினும், ராணுவத்தில் அவரது மகன்கள் உள்ளனர் என்பது அவர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

மியான்மர் போராட்டம்

தனது இழப்புகளை தாங்கிக்கொள்ள முடியாமல் யின் யின் மைன்ட்  தவித்து வருகிறார்.  “எனது வீடு எரிக்கப்பட்டது, எனது மகனை நான் இழந்துள்ளேன். இவற்றை என்னால் தாங்க முடியவில்லை. பைத்தியம் பிடித்தது போல் உணர்கிறேன்” என்று வேதனையுடன் அவர் தெரிவிக்கிறார்.

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர், குறைந்தது 30 ஆயிரம்  வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர், 2,500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என சிறை கைதிகளுக்கான உதவி சங்கம் தெரிவித்துள்ளது. மோதல் கண்காணிப்பு குழுவான அக்லெட்(Acled) -இன் தரவுகளின்படி, இரு தரப்பிலும் உள்ள மொத்த உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ராணுவம் போர்க்கள இழப்புகளை ஒப்புக்கொண்டது, ஆனால் அதுதொடர்பாக எந்த விவரங்களையும் வழங்கவில்லை.

மின் ஆங்கின் உடலை மீட்க குடும்பத்தினர் இரண்டு நாட்களாக முயன்றனர், ஆனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் காவலில் இருந்ததால் அது முடியாமல் போனது.

“என்னால் அவனது எலும்புகளை கூட எடுக்க முடியவில்லை,” என்று அவரது தாயார் கூறுகிறார். “இதனால் நான் கடுங்கோபத்தில் உள்ளேன். போய் சண்டை போட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நான் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் என்பதால் என்னை அழைத்துச் செல்ல மாட்டார்கள்.”

மியான்மர் போராட்டம்

நீ உட்பட யாரையும் விட மாட்டேன்

ராணுவத்துக்கு எதிராக அதிகரித்துவரும் கிளர்ச்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் மீண்டும் குடும்ப வீட்டை கட்டுவோம் என்றும் நம்புவதாக  போ கியார் யெய்ன் கூறுகிறார்.

ஆனால், உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துவருவதால் இதற்கு நீண்ட காலம் ஆகலாம்.  அவரது இரண்டு மகன்களும் ராணுவத்தை விட்டு வர மறுப்பதால் குடும்பம் பிளவுப்பட்டு உள்ளது. “நாங்கள் விருப்பப்பட்டு ராணுவத்துக்கு எதிராக போராடவில்லை. உங்கள் தலைவர்கள் சரியாக இல்லை என்பதால் நாங்கள் போராடுகிறோம். உங்களால்தான் உன் சகோதரன் கொல்லப்பட்டான்” என்று ராணுவத்தில்  உள்ள தனது மகனிடம் போ கியார் யெய்ன் தெரிவிக்கிறார்.

தனது சகோதரர் இறந்தது தனக்கு தெரியும் என்று நியி நியி கூறுகிறார். அப்போது, “ உன் சொந்த கிராமத்தை வந்து பார். அனைத்தும் சாம்பலாகிவிட்டது. உன் புகைப்படங்களை கூட எங்களால் காப்பாற்ற முடியவில்லை. என் இதயம் வலியால் துடிக்கிறது.” என்று அவரிடம் போ கியார் யெய்ன் ஆவேசத்துடன் தெரிவிக்கிறார்.

Previous Story

பாலஸ்தீனுக்கு ஆதரவு.. ரொனால்டோவுக்கு “அநீதி”! அரசியல் “சதி”

Next Story

லவ் ஜிஹாத்: நடிகை துனிஷா ஷர்மா மரணம்!  நடந்தது என்ன?