ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை?

-ஆ. விஜயானந்த்பிபிசி-

ஆயுள் சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவை, மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். “கைதிகளின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அறிவதற்கு பல மாநிலங்களில் பல்வேறு அளவுகோல்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அப்படி எந்த அளவுகோள்களும் இல்லை,” என்கின்றனர் வழக்கறிஞர்கள். தமிழ்நாடு அரசின் இந்த குழுவால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படுமா? இந்த குழுவால் என்ன நடக்கும்?

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் 700 கைதிகளை அரசு விடுதலை செய்ய உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து, முன்விடுதலையை பெறுவதற்குத் தகுதியானவர்கள் தொடர்பான அரசாணையும் வெளியானது.

அதில், வகுப்பு மோதல், சாதி மோதல், பாலியல் வன்கொடுமை, அரசுக்கு எதிரான செயல்பாடுகள், குண்டுவெடிப்பு, ஊழல் உள்பட 17 வகையான குற்றங்களில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்தது.

அரசாணையில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி பார்த்தால், இஸ்லாமிய சிறைக் கைதிகள், 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வீரப்பன் அண்ணன் மாதைய்யன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேர் ஆகியோரது முன்விடுதலை சாத்தியமில்லாமல் போய்விட்டதையும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டினர். தவிர, பழைய அரசாணையையே புதிய அரசும் புதுப்பித்துள்ளதாகவும் இதற்கென தனியாக குழு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

குழுவில் 6 பேர்

இந்நிலையில், ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் மனநல மருத்துவர், மருத்துவக் கல்வி இயக்குநர், சிறைத்துறையின் தலைமை நன்னடத்தை அலுவலர், குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் உள்ள மூத்த வழக்கறிஞர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் துணைத் தலைவர் பதவி உள்ள ஒருவர் என ஆறு பேர் இடம்பெற உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவினர் தமிழ்நாடு சிறைகளில் பத்து மற்றும் 20 ஆண்டுகளில் தண்டனை முடிந்தும் விடுதலை ஆகாமல் உள்ளவர்களில் வயது முதிர்ந்தவர்கள், பல்வேறு இணை நோய்கள் உள்ளவர்கள், உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரது நிலைமையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின்படி முன்விடுதலைக்கு பரிந்துரை செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த கால பாரபட்சங்கள்

இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ` கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் பயன்பெற முடியாத வாழ்நாள் சிறைவாசிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதற்கு வழிவகுக்கும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த கால பாரபட்சங்களால் கண்ணீர் நிரம்பிய சிறைவாசிகள் குடும்பத்தினரின் இல்லங்களுக்கு ஆதிநாதன் குழு விரைவில் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் வாழ்நாள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யப் பரிந்துரைக்க ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் குழு.வரவேற்கத்தக்க நடவடிக்கை!
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும்

இதுதொடர்பாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ` சிறை என்பது தவறிழைத்த மனிதனை நல்வழிப்படுத்தி சமூகத்தில் தகுதியானவனாக மாற்றுவதற்கே என்பது நாகரிக சமூகம் ஏற்றுக்கொண்ட கருத்தியல் ஆகும். அதிலும் குற்றமற்றவர்கள்கூட சில நேரங்களில் நீதிப் பிழையால் சிறைத் தண்டனை அடைந்துவிடும் நேர்வுகளை இந்த உலகம் கண்டிருக்கிறது என்பதால் சிறைகள் ஒருபோதும் பழிவாங்கும் இடமாக இருக்கக் கூடாது என்பதே நியதி’ என்கிறார்.

மேலும், `ஒரு மனிதனை எட்டு ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்பதே அதிகப்படியானது என மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொல்வார். ஒரு நாடு நாகரிமடைந்துவிட்டது என்பதை சிறைவாசிகளை அந்த அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதில்தான் அடங்கிருக்கிறது என்பார்கள். தண்டனை குறைப்பு என்பது அரசின் அதிகாரத்துக்குட்பட்டதே என பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பில் முதலமைச்சரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்’ என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சமூகநீதி பேசும் மாநிலம்தான்… ஆனால்?

“சிறையில் உள்ளவர்களை  இருவகையாக பார்க்கலாம். குற்றம் செய்துவிட்டு சிறையில் உள்ளவர்கள், குற்றத்தில் தொடர்பில்லாத சில நிரபராதிகள் என பிரித்துப் பார்க்கலாம். சிறை என்பதே சீர்திருத்தத்திற்கான இடம். ஒரு மனிதன் தன்னுடைய இயல்பு நிலையில் இருந்து தவறி ஒரு செயலைச் செய்யும்போது அதற்காக அவரை அடைத்துவைக்கும் இடமாக சிறை உள்ளது. ஆயுள் தண்டனைக் கைதிகள் விவகாரத்தில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் அந்தக் கைதி எந்தளவுக்கு மாறியிருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்கு அளவுகோல்கள் உள்ளன. தமிழ்நாட்டில் அதுபோன்ற அளவுகோள்களே இல்லை.

இத்தனைக்கும் சமூக நீதி பேசக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” என்கிறார், மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான சிவக்குமார். தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், “இங்குள்ள சிறைவாசிகளும் நீதிமன்றத்துக்குச் சென்று, வெவ்வெறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி தனக்கு நீதி கேட்பதுதான் நடக்கிறது. மேலும், சிறைத்துறைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. சிறைத்துறை என்பது முழுக்கவே சீர்திருத்தம்தான். சிறைத்துறையும் காவல்துறையும் இரண்டறக் கலந்ததால் இதற்கான வித்தியாசங்களே இல்லாமல் போய்விட்டது,” என்கிறார்.

“சமூகத்தோடு சேர்ந்து வாழ்வதற்கான சூழலுக்கு ஒரு கைதி வந்துவிட்டாரா என்பதை உளவியல் நிபுணர், சிறை நன்னடத்தை அலுவலர், சிறைத்துறை அதிகாரிகள் ஆகியோர் பார்க்கலாம். `சிறைக் கைதிகளின் நன்னடத்தையை அளவிடுவதற்கு ஒரு குழுவை அமைத்து, அதற்கேற்ப விடுதலை செய்யலாம்’ என நீண்டகாலமாக பேசி வருகிறோம். தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறோம்.

அரசு கவனிக்க வேண்டிய அம்சங்கள்

சிறைக் கைதிகள் சிறையில் என்ன செய்தார்கள், அவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்க்கைக்கான அறிவிப்பாகவும் இதனைப் பார்க்கிறோம். மனிதனை மேம்படுத்தும் இடமாக சிறை உள்ளது என காந்தி சொல்வார்.

பள்ளிக்கு ஒரு மாணவர் செல்கிறார் என்றால், அவர் நல்லபடியாக படிக்க வேண்டும் என்பது அடிப்படை. அதேபோல், ஒருவர் சிறைக்குச் செல்கிறார் என்றால் அவர் திருந்தி நல்லபடியாக வரவேண்டும் என்பதே மக்களின் மனநிலையாக இருக்க வேண்டும். அரசின் முடிவை வரவேற்கிறோம். இந்தக் குழுவில் மிகச் சிறந்த நிபுணர்களை முதலமைச்சர் நியமிப்பார் எனவும் நம்புகிறோம்,” என்கிறார் வழக்கறிஞர் சிவக்குமார்.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆதிநாதன் குழு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் சிவசுப்ரமணியம், “கைதிகள் முன்விடுதலை விவகாரத்தில் அரசு நேரடியாக முடிவெடுக்க முடியாத சூழல் வரும்போது, ஒரு குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் எடுப்பது என்பது வரவேற்கத்தகுந்த முடிவு. ஆனால், அந்தக் குழுவின் நோக்கம் நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்யும் வகையில் இருக்க வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக இல்லாத குழுவாக அது இருந்தால் நல்லது,” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ அரசாணையில் 17 வகையான குற்றங்களைக் குறிப்பிட்டுள்ளதால், அது தொடர்புடைய வழக்குகளில் கைதானவர்களை முன்விடுதலை செய்வதில் சிக்கல்கள் உள்ளன. இதனைக் களையும் வகையில் அரசு அமைத்துள்ள குழுவானது, வழக்கோடு தொடர்புடைய ஆவணங்களையும் பார்க்க வேண்டும். வீரப்பன் தொடர்பான வழக்கில் அவரது அண்ணன் மாதைய்யன் உள்பட 3 பேர் சிறையில் நீண்டகாலம் உள்ளனர்.

இதில் சம்பவம் நடந்த இடத்தில் மாதைய்யன் இல்லை. ஆனால், அவர் இருந்ததாக போலீஸார் சான்றுகளை சமர்ப்பித்தனர். இதனை விசாரிக்கும்போது அவருக்குத் தொடர்பில்லை என்றால் விடுவிக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் அவரது வயது, உடல்நிலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு தளர்வுகளை கொடுத்தால் வரவேற்க வேண்டிய விஷயம்” என்கிறார்.

மேலும், “ இஸ்லாமிய சிறைக் கைதிகள் மீது கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் சொல்லப்படுகிறது. அவர்கள் விவகாரத்தில் அரசு கருணை உள்ளத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களை விடுதலை செய்த பிறகும்கூட அரசு கண்காணிக்கலாம். இறுதிக் காலத்தில் குடும்பத்தினருடன் அவர்கள் தங்களது வாழ்நாள்களை கழிப்பதற்கு அரசின் இந்த நடவடிக்கை பலன் கொடுக்கும். இவர்களில் பலர் குடும்பத்துடன் தொடர்பில்லாமலும் உள்ளனர் என்பதுதான் வேதனையானது,” என்கிறார்.

குழுக்களின் அலட்சியம்

ஓய்வுபெற்ற நீதியரசர் ஆதிநாதன் தலைமையிலான குழுவின் பணிகள் குறித்து அரசு வழக்கறிஞரும் சிறைத்துறை வழக்குகளைக் கையாண்டு வரும் வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். “இப்படியொரு குழுவை எந்த அரசும் அமைத்ததில்லை. மாவட்டங்களில் உள்ள அறிவுரைக் குழுவை வலுப்படுத்துவதை முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். சிறைவாசிகளின் உடல்நிலை, வயது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். உயிர் துறக்கக்கூடிய நிலையில் உள்ள அபாய நோய்கள், தொடர் சிகிச்சையில் உள்ளவர்கள் எல்லாம் 20 ஆண்டுகளைக் கழித்துவிட்டால் அவர்களை விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அறிவுரைக் குழுவுக்கு கலெக்டர், தலைவராக இருக்கிறார். அந்தக்குழு ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரை செய்யும். கடந்த காலங்களில் அந்தப் பரிந்துரைகளின் பேரில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. அறிவுரைக் குழுவும் ஆண்டுதோறும் கூடுவதில்லை.

இதனால் கைதிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அறிவுரைக் குழுவுக்கு அரசால் நியமிக்கப்பட்ட குழு, பரிந்துரைகளை வழங்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதுகிறோம். வீரப்பன் அண்ணன் மாதைய்யன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இந்தக்குழுவின் பரிந்துரைகள் சிறைத்துறை வரலாற்றில் மிக முக்கியமானதாக இருக்கும்” என்கிறார்.

Previous Story

அரச ஊழியர்களுக்கு 4000 ரூபாய்!

Next Story

ரயிலில் இலவசமாக பயணம் !