ராஜபக்சர்களின் எச்சரிக்கையின் மத்தியிலும் ரணிலுக்கு ஆதரவு-நிமல் லான்சா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேட்புமனுவை வலுப்படுத்தும் நோக்கில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான ஆளும் கட்சியினர் உறுதியாக உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா மற்றும் அவரது சக கட்சி உறுப்பினர்களின் அண்மைய செயற்பாடுகள் குறித்து, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான அரசியல் பிரிவு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டது மட்டுமன்றி, பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

ராஜபக்சர்களின் எச்சரிக்கையின் மத்தியிலும் ரணிலுக்கு ஆதரவளிக்கு மொட்டு எம்.பி | Nimal Lanza Supports Ranil

எதிர்கால நடவடிக்கை குறித்த ஆலோசனை

இதன் பின்னணியில், லன்சா தலைமையிலான பிரிவினர் நேற்று முன்தினம் (01.08.2023) மாலை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் இல்லத்தில் முக்கியக் கூட்டமொன்றைக் கூட்டியுள்ளனர்.

கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல், குறித்த அரசியல் பிரிவின் எதிர்கால நடவடிக்கை குறித்த ஆலோசனைகளை மையமாகக் கொண்டிருந்தது.

நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, துமிந்த திஸாநாயக்க, ஜோன் செனவிரத்ன, லசந்த அழகியவன்ன போன்ற அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தநிலையில் புதிய அணி குறித்து கருத்து தெரிவித்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் விமல் வீரவன்ச தலைமையிலான அணியினருக்கு ஏற்பட்ட நிலையே லன்சா அணியினருக்கும் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Story

தத்தளிக்கும் பெஜ்யிங்: சீன தலைநகரில் 140 ஆண்டுகளில் இல்லாத கனமழை 

Next Story

உலக கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் மாற்றம்