நேற்றிரவு ரஷ்யாவின் 4 விமானப்படை தளங்கள் ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் எல்லையிலிருந்து குறைந்தபட்சம் 1000 முதல் அதிகபட்சம் 4000 கி.மீ வரை தொலைவில் இருந்த தளங்களாகும். இவ்வளவு தொலைவில் இருந்த விமான தளங்கள் தாக்கப்பட்டது, ரஷ்யாவுக்குள் உக்ரைனின் ஊடுருவலை காட்டுகிறது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விவரித்திருக்கிறார்.
“இந்த ட்ரோன் தாக்குதலை திட்டமிட மொத்தம் 1 வருடம் 6 மாதங்கள் ஆனது. எங்கள் ஆபரேட்டர்கள் ரஷ்யாவுக்குள் ஊடுருவி, 3 நேர மண்டலங்களில் வேலை பார்த்தனர். திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்ததால் இந்த தாக்குதல் வெற்றியடைந்திருக்கிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல், ராணுவ தளவாடங்களை மட்டுமே தாக்கியிருக்கிறோம். தாக்குதல் தொடரும்” என்று தனது x பக்கத்தில் ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் இவ்வளவு தீவிரமாக சண்டை செய்தது இதுவே முதல் முறையாகும்.
![]()
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், உக்ரைன் வீரர்களின் பங்களிப்புதான். 3 நேர மண்டலங்களில் அவர்கள் செயல்பட்டிருந்தது சவாலானதும், ஆச்சரியப்படத்தக்கதும் ஆகும்.
அதாவது மூன்று இடங்களிலும் நேரம் வேறு வேறாக இருக்கும். ஆனால் தாக்குதல் நடத்த வேண்டிய நேரம் ஒன்றுதான். மூன்று இடங்களிலும் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் செயல்பட்டால்தான் இந்த தாக்குதல் வெற்றியடையும்.

இதனை உக்ரைன் வெற்றிகரமாக செய்து காட்டியிருக்கிறது. மொத்தம் 117 ட்ரோன்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எந்த ட்ரோனும் 1000 கி.மீ தூரத்திற்கு தொடர்ந்து பறக்காது. எனவே இலக்குக்கு அருகில் இதனை கொண்டு செல்ல வேறு ஒரு வழியை உக்ரைன் பயன்படுத்தியிருக்கிறது.
அதாவது, மரக்கட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ட்ரோன்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
Belaya விமான தளம் (இர்குட்ஸ்க் ஓப்லாஸ்ட்) – கீவிலிருந்து 4,200 கிமீ
Olenya விமான தளம் (முர்மான்ஸ்க் ஓப்லாஸ்ட்) – கீவிலிருந்து 2,000 கிமீ
Ivanovo விமான தளம் (இவானோவோ ஓப்லாஸ்ட்) – கீவிலிருந்து 700 கிமீ
Dyagilevo விமான தளம் (ரியாசான் ஓப்லாஸ்ட்) – கீவிலிருந்து 700 கிமீ
இந்த 4 விமான நிலையங்களில் உள்ள ராணுவ விமானங்கள்தான் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. இந்த விமான தளங்களுக்கு அருகில் மரக்கட்டைகளை ஏற்றிச்சென்ற லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
அங்கு கண்டெய்னர் பகுதியின் மேற்புறம் திறக்கப்பட்டிருக்கிறது. பின்னர் ட்ரோன்கள் இலக்கை தாக்கி அழித்துள்ளன. இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில், இந்த தாக்குதலுக்கு முன்னதாக ரஷ்யா மிகப்பெரிய அட்டாக்கை நட்டத ரெடியாகிக்கொண்டிருந்தது என்பதுதான்.

உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் மூலம், ரஷ்யாவின் தாக்குதல் தற்காலிகமாக தள்ளிப்போய் இருக்கிறது. இருப்பினும், ரஷ்யா வீரியமான பதிலடியை கொடுக்கும் என்று அந்நாட்டு ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட 75% பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை எச்சரிக்கும் அலாரங்கள் ஒலித்திருக்கின்றன. இதனால் நாட்டு மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





