ரஷ்ய-இலங்கை   ராஜதந்திர சிக்கல்

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டது, தற்போது ராஜதந்திர ரீதியிலான பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது.

இந்த பிரச்சினையால், இலங்கையின் எரிசக்தி, சுற்றுலாத்துறை மற்றும் ராஜதந்திர தொடர்புகளுக்கு எதிர்மறையான அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என சர்வதேச தொடர்புகள் குறித்த விசேட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சினைக்கு மத்தியில், எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை, ரஷ்யாவிடம் கோரியுள்ள 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவித் திட்டம் இல்லாது போகுமா? என்பதும் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.

ரஷ்ய அரசு அதிருப்தி

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து, ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு அழைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிற்கான இலங்கை தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவை, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு கடந்த 3ம் தேதி அழைத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.யூ-288 கடந்த 2ம் தேதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகைத் தந்தது.

இவ்வாறு வருகை தந்த விமானம், அன்றைய தினமே 191 பயணிகள் மற்றும் 13 விமான பணியாளர்களுடன் மாஸ்கோ நகரம் நோக்கி பயணிக்க திட்டமிட்டிருந்தது.

இந்த நிலையில், கொழும்பு வணிக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு ஒன்றினால், குறித்த விமான சேவை அன்றைய தினம் தடை செய்யப்பட்டு, விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது.

இந்த விமானம் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டமை குறித்து இலங்கை ராஜதந்திர தூதுக்குழுவின் பிரதானி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு ஏற்படும் எதிர்மறையான அழுத்தங்களை தவிர்த்துக்கொள்ள இந்த பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வொன்றை எடுக்குமாறு இலங்கை தரப்பிடம் கேட்டுக்கொள்கிறோம்” என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான வணிக விமான சேவையை ரத்து செய்த ஏரோபுளோட்

இந்தப் பிரச்சனையை அடுத்து, ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் சேவை நிறுவனம், இலங்கைக்கான வணிக விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஏரோபுளோட் விமானம் சேவையானது, ரஷ்யாவின் மிக பெரிய விமான சேவை என்பதுடன், உலகின் மிக சிறந்த விமான சேவைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்தின் விமான சேவையை இலங்கைக்கு தடையின்றி நடத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஏற்பட்டுள்ள நம்பிக்கையின்மை காரணமாக, இலங்கைக்கான தமது வணிக விமான சேவையை இடைநிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்யா விமானம் இலங்கையில் தடுத்து வைப்பு

கொழும்பு நகருக்கான விமான பயணச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், கொழும்புவில் இருந்து ஜுன் 2, ஜுன் 4 மற்றும் ஜுன் 5 ஆகிய தேதிகளுக்கு பயண சீட்டு விநியோகிக்கப்பட்ட பயணிகளுக்கு மாத்திரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எஸ்.யூ-289 விமானத்தின் ஊடாக மாஸ்கோ நகரத்துக்குச் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பு

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றிற்கு, இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி இடைகால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

அயர்லாந்து நாட்டின் சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் என்ற நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தே, ரஷ்ய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்திற்கு இலங்கையிலிருந்து வெளியேற கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க தடையுத்தரவை பிறப்பித்திருந்தார்.

எதிர்வரும் 16ம் தேதி வரை அமலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதியான ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கும், தமக்கும் இடையில் வழக்கொன்று இருப்பதாக முறைப்பாட்டாளர் தரப்பு நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதனால், பிரதிவாதிக்கு சொந்தமான விமானத்தை இலங்கையிலிருந்து வெளியேற தடை விதிக்குமாறு கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளை நடத்திய, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம், இந்த இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, தமது விமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இடைகால தடையுத்தரவை ரத்து செய்யக்கோரி, ரஷ்ய விமான நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 8ம் தேதி விசாரிக்க கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரஷ்ய விமான சேவை நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்திற்கு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை, சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இரு தரப்பு இணக்கப்பாடுகள் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இலங்கையில் தரையிறங்கவும், வெளியேறவும் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிடர் ஜெனரல் சுமதி தர்மவர்தன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தரையிறக்கப்படும் விமானங்கள் மீண்டும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு, சட்டத்தில் அதிகாரம் உள்ளதாகவும், இவ்வாறான இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்றும் அரச மேலதிக சொலிசிடர் ஜெனரல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடையுத்தரவு காரணமாக 191 பயணிகள் மற்றும் 13 விமான பணியாளர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக, ரஷ்ய விமான சேவை நிறுவனம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா விமானம் இலங்கையில் தடுத்து வைப்பு

இந்த நடவடிக்கை காரணமாக பயணிகள், பணியாளர்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முறைப்பாட்டாளர் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது, அடிப்படையற்றது எனவும், நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவை ரத்து செய்யுமாறும் சட்டத்தரணி, நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் தொடர்பு கிடையாது என விமான நிலைய மற்றும் விமான சேவை (இலங்கை) நிறுவனம் தெரிவிக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேவ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் தொடர்பில், இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தாம் நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்துடன், இது குறித்து ராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும்

இந்த தடையுத்தரவு காரணமாக மூன்று பிரிவுகளின் கீழ் பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்பாடல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ஹசித்த கந்தஉடஹேவா தெரிவிக்கின்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேவ விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேவ விமான நிலையம்

”குறைந்த விலையில் எரிபொருளை நேரடியாக விநியோகிக்க ரஷ்யா எமக்கு இணக்கம் தெரிவித்துள்ளது. 4 முதல் 6 மாத காலத்திற்குள் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள், ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தால் இந்த இரண்டுக்கும் பாதிப்பு ஏற்படும். இது அரசாங்கங்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. ரஷ்யாவின் எந்தவொரு விமானத்திற்கும் தடை ஏற்படுத்தப்படாது என இலங்கை ராஜதந்திர ரீதியில் இணங்கியுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ராஜதந்திர ரீதியிலான உறவுகளுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எமது எரிசக்தி துறைக்கும், பொருளாதார மீள் கட்டமைப்பிற்கும் இது நல்லதல்ல” என அவர் கூறுகின்றார்.

”எமது பொருளாதார நிலைமைக்கு இந்த பாரிய அச்சுறுத்தலான விடயமாகும். எதிர்காலத்தில் எமக்கு இடையில் சிறந்த தொடர்புகளை அவர்கள் பேண மாட்டார்கள்.

எதிர்வரும் மாதம் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலரை இலங்கை கடனாக ரஷ்யாவிடம் கோரியுள்ளது. இதுவும் பிரச்சினையாக மாறக்கூடும்” என பேராசிரியர் ஹசித்த கந்த உடஹேவா தெரிவிக்கிறார்.

”இதில் இரு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்ய முடியாது. எனினும், மறுபுறத்தில் ராஜதந்திர உடன்படிக்கையின் செல்லுபடித் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமானம் தொடர்பிலான பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு முன்பாக, தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என அவர் கூறுகிறார்.

Previous Story

நிமிர்ந்து நிற்கும்  ஆயிஷா!

Next Story

விண்வெளி கட்டுமானம்: சீனாபு குழு பயணம்