ரஷ்யா-உக்ரைன் மோதல் இலங்கை மீதான தாக்கம்

நஜீப் பின் கபூர்

பூசையில்

கரடியாக

வந்ததோ

உக்ரைன்

செல்லாக் காசுகள்தான் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன

அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை”

வருடம் ஒரு முறை வந்து போகும் களியாட்ட விழாவைப் பார்க்க மக்கள் நெடுநாள் காத்திருப்பது போல் ஈழத் தமிழர்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஜெனீவாவின் நடக்கின்ற மனித உரிமைகள் தெடர்பான கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பது கடந்த பல வருடங்களாக  நடந்து கொண்டு வருகின்றது. தனிப்பட்ட ரீதியின் அதில் எமக்குப் நம்பிக்கைகள் கிடையாது காரணம் இது போன்ற நியாயங்களுக்காக சில இனங்கள் பல நூறு ஆண்டுகால எதிர்பார்ப்பில் தனது இலக்கை இன்று வரை அடையாது நம்பிக்கையே வாழ்க்கை என்று காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றது.

இது அந்த இனங்களின் விதியோ என்னவோ நமக்குப் புரியவில்லை. அவ்வாறான இனங்களின் பட்டியலை இங்கு நாம் தொகுக்கவும் விரும்பவில்லை. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அணிகள் இருக்கின்றன. ஜெனீவா மனித உரிமைகள் அமர்வை எடுத்துக் கொண்டால் அங்கு கூத்துப் போடுகின்ற கூட்டமும் கல்லெறிகின்ற வியாபாரம் செய்கின்ற கூட்டம் என்று பலதரப்பினர் இருக்கின்றனர். நாம் இங்கு அவை பற்றியும் பேசவரவில்லை. இந்த முறை வழக்கமாக கூட்டத் தொடரில் நல்ல செய்திகள் ஏதாவது வருமா என்று எதிர் பார்த்திருந்த நேரத்தில் சிவ பூசையில் கரடி புகுந்த கதை போல உக்ரைன் விவகாரம் அமைந்து விட்டது.

இந்த இடத்தில் சிவ பூசையில் கரடி புகுந்த விவகாரம் பற்றி ஒரு சிறிய குறிப்பை சொல்ல வேண்டும் போல் இருக்கின்றது. இந்தக் கரடி பற்றி பலரிடம் பிழையான ஒரு கருத்துதே இருந்து வருகின்றது. அனேகமானவர்கள் அமைதியாக நடக்கின்ற சிவ பூசையில் கரடி புகுந்த விட்டது என்று சொல்லும் போது காட்டிலுள்ள கரடிதான் அங்கு நுழைந்து கதையைக் குழப்பி விட்டது என்று நினைத்துக் கொள்கின்றார்கள். ஆனால் இங்கு கரடி என்பது ஓசை மிகுந்த ஒரு மேளம். அதன் சத்தம் வெளியே வருகின்ற போது ஏனைய சத்தங்கள் அந்த அரங்கில் எடுபடாமல் போய் விடும் இதுதான் கரடிக் கதை. அதனைத் தான் நாம் இங்கு சொல்ல வருகின்றோம்.

ஏனைய பூசைகளை விட சிவ பூசை சற்று வித்தியாசமானது அது அமைதியாக நடக்கக் கூடியது. அது போன்ற நடக்கின்ற இந்த ஜெனீவா அமர்வில் இந்த உக்ரைன் கரடியின் ஓசைதான் முழு உலகத்தாரினதும் கவனம் ஈக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அங்கு நடக்கின்ற விவாதத்தில் உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு கொடுக்கின்ற அமொரிக்க தலைமையிலான நாடுகள் பக்கமா அல்லது உக்ரைன் மீது தாக்குதல் நடத்துக்கின்ற ரஷ்யா பக்கமா என்று இழுபறிகளுக்கு இடமிருக்கின்றது. எனவே எதிரியின் எதிரி நண்பன் என்பது போல இந்த உக்ரைன் மீதான அணிகள் இலங்கை விவகாரத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாமோ என்று எண்ணத் தோன்றதுகின்றது.

மேற்சொன்ன விடயத்தை சற்று விளக்குவதாக இருந்தால் உக்ரைன் விவகாரத்தில் இந்த அமெரிக்க-ரஷ்யா ஆதரவு உணர்வுகள் இலங்கை மீதான வாக்கொடுப்புக்கள் என்று வரும் போது அதில் ஆதிக்கத்தை செலுத்த வாய்ப்புக்கள் ஏற்படுமோ என்ற ஒரு அச்சம் நமக்கு வருகின்றது. என்னதான் இருந்தலும் இலங்கை ஜெனீவா விவகாரத்தில் பெரிய விட்டுக் கொடுப்புக்களை எதையும் செய்வதற்குத் தயார் இல்லை என்றுதான் தெரிகின்றது. மேலும் என்மை விட பலமடங்கு மனித உரிமை மீறல்களைச் செய்த நாடுகள் நம்மிடம் எந்த முகத்துடன் கேள்விகளை எழுப்பு முடியும் என்று நமது இரஜதந்திரிகள் கேள்வி எழுப்பி இருந்தனர் அதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

இந்த முறை 49 வது ஜெனீவா அமர்வில் லோஹன் ரத்வத்தை சிறைக்குள் சென்று நடத்திய அத்து மீறல்கள்-அடவடித்தனம், கடும் இனவதியாகவும் வன்முறையாளராகவும் கருதப்படுகின்ற ஞானசாரத் தேரரை ஒரு நாடு ஒரு சட்டம் என்று நீதியை சமைக்கின்ற ஆலோசனைக் குழுவுக்குத் தலைவராக நியமித்தது. முஸ்லிம் சமூகத்துக்கு இனரீதியில் கொடுக்கப்படுகின்ற அழுத்தங்கள். பொரல்லை தேவாலயக் குண்டு வைப்பு நாடகம், நிருவாக சேவைகளுக்கு இராணு அதிகாரிகள் நியமனம் செய்தல்;, பயங்கரவாத தடைச் சட்டம் என்பன பற்றி புதுக் கேள்விகள் இந்த முறை ஜெனீவாவில் எழுப்பப்பட்டிருந்தன குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈஸ்டர் படுகொலைக்கு நீதி கேட்டு பேராயர் மெல்கம் ரஞ்சித் பெர்ணாந்து பல இடங்களில் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார். வத்திக்கான் போய் பப்பாண்டவரைச் சந்தி;திருக்கின்றார். மரணித்தவர்களுக்கு வத்திகானில் பாப்பாண்டவரை வைத்து ஆராதனை பண்ணி இருக்கின்றார். நெதர்லாங்து-ஹேக்  போய் சர்வதேச நீதி மன்றில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார். ஜெனீவா போய் மனித உரிமைகள் அணையாளர் மிச்சல் பெசலேயைச் சந்தித்து அவர்களிடம் நீதி கேட்டிருக்கின்றார். சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை தொடர்பாகவும் ஒரு குழுவை சஜித் அணி அங்கு அனுப்பி வைத்திருக்கின்றது. ஜெனீவாக் கதைகள் அப்படி இருக்க உக்ரைன் போர் இலங்கை விவகாரங்களில் எப்படி ஆதிக்கம் செலுத்தும் என்று பார்ப்போம்.

உக்ரைன் விவகாரம் இலங்கை மீது எப்படியான தாக்கங்களைச் செலுத்தக் கூடும் என்பதனை ஒரு முறை பார்ப்போம். சில தினங்களுக்கு முன்னர் ஒரு பௌத்த தேரர் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடாத்தினால் இலங்கைக்கு அதனால் ஒரு சீறு கீரல் கூட வர மாட்டது என்று சொல்லி இருந்தார். அத்துடன் இந்த விவகாரத்தில் நமது ஜனாதிபதியும் நிதி அமைச்சரும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்கப் பிரசைகளும் கூட. முன்னவர் அந்த பிரசா உரிமையை இரத்துச் செய்து விட்டேன் என்று சொன்னாலும் பின்னவர் பீ.ஆர். இன்றும் அமெரிக்க பிரசை அந்தஸ்தில் இருக்கின்றார். அதே நேரம் அமெரிக்க அரசியல் யாப்புப்படி தேச விசுவாசம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. அதன் படி தனிப்பட்ட ரீதியில் அவர் அமெரிக்காவுக்கு விசுவாசமான நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டி இருக்கின்றது.

அதே நேரம் உக்ரைனில் ஒன்பது வருடங்கள் தொடர்ச்சியாக தூதுவர் பதவி வகித்தவர் உதயங்க வீரதுங்ஹ ராஜபக்கஸாக்களின் குடும்பக்காரர். இப்படி ஒன்பது வருடங்கள் ஒருவர் ஒரு நாட்டில் தொடர்ந்து இருப்பது இராஜதந்திர ரீதியில் ஒரு அசாதாரன நிலை. சர்ச்சைக்குறிய உதயங்க வீரதுங்க சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நீங்கள் ரஷ்யா-உக்ரைன் மோதலில் யாரை ஆதரிக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு எடுத்த எடுப்பிலே ரஷ்யா பக்கம் தான் இருப்பதாக அங்கு தெரிவித்தார். அதே நேரம் இவர் தற்போது உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமீர் ஜெலன்ஸ்கியுடன் மிக நெருக்கமான உறவை வைத்திருக்கின்றார். மேலும் அவரது வியாபார-தொழில் நடவடிக்கைகள் இன்னும் அங்குதான் இருப்பதாகவும் அவர் அந்த நிகழ்ச்சியில் பகிரங்கமாக தெரிவித்தார்.

தான் மீண்டு உக்ரைன் போய் தனது வேலைகளைத் துவங்க இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அது எப்படி? அனேகமாக ரஷ்யா உக்ரைனைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும் என்று அவர் கருதுகின்ராரோ என்னவோ தெரியாது.  இலங்கை பொருளாதாரத்தில் அதிக வருமானம் தரும் துறைகளில் உல்லாசப் பிரயணத்துறை முக்கியமானது. இலங்கைக்கு வருகின்ற உல்லாசப் பிரயாணிகளில் உக்ரைன்-ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்கள் கடந்த காலங்களில் முதல் பத்து இடங்களில் இருக்கவில்லை. ஆனால் இன்று இந்த நாட்டுக்கு வரும் உல்லாசப் பிரயாணிகளில் முப்பது சத வீதமானவர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யர்கள். அவர்கள்தான் இன்று முதலாம் இடத்தில் இருக்கின்றார்கள்.

தற்போது உல்லாசப் பிரயாணத்துறையில் அதிக வருமானம் உக்ரைன்-ரஷ்யர்களால் வருகின்றது என்றால் அதற்கு மூலகாரணம் இந்த உதயங்க வீரதுங்கதான் என்பது உண்மை. போர் காரணமாக இதில் பாதிப்புக்கு இடமிருக்கின்றதே என்று கேட்டால் அதற்கு உதயங்க தரும் பதில் ஒரு போதும் போர் இதில் பாதிப்பைக் கொண்டுவராது. இன்று 40து வரையிலான நாடுகள் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை வித்திருக்கிறன. அதில் விமானத் தடை முக்கியமானது. அதனால் அவர்கள் மேற்கு நாடுகளைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் வருகையில் பாதிப்புக்கள் நமக்கு வராது என்பது அவரது வாதம். அதுவும் யதார்த்தமானதுதான்.

உதயங்க வீரதுங்க அந்த விவாதத்தில் சில விடயங்களை மூடி மறைத்தாலும்-சிரித்துச் சமாளித்தாலும்  திறந்த மன நிலையில் கருத்துக்களை அங்கு முன்வைத்தார் என்பது எமது பார்வை. உக்ரைன் அதிபருக்கு நெருக்கமாக இருந்து கொண்டு ரஷ்யா ஆதரவு டன்பாஸ் கிளர்ச்சிப் படையினருக்கு ஆயுதங்களை இவர் வினியோகித்து வந்தார் என்பதில் இருந்து இந்த உதயங்க வீரதுங்ஹ எப்படியாக கில்லாடி என்பதனை புரிந்து கொள்ள முடியும். இன்றும் அவரது தொழில் ரீதியான நடவடிக்கைகள் உக்ரைனில்தான் இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் இந்த விடயம் இலங்கையைப் பாதிக்காது என்று சொன்னாலும் இதன் நடைமுறைத் தன்மையை எதிர் காலத்தில் தான் நாம் பார்க்க முடியும். உலக எரி பொருள் ஏற்றுமதியில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கின்றது. அதே போன்று ரஷ்யாவும் உக்ரைனும் தான் கோதுமை ஏற்றுமதியிலும் அதிகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இலங்கைத் தேயிலையைக் கொள்வனவு செய்கின்ற நாடுகளில் இந்த இரு நாடுகளும் முக்கியமானது.

மீண்டும் உக்ரைனில் பழையே ஆட்சியே தொடர்ந்தால் அவர்கள் நமது தேயிலையைத் தொடர்ந்து வாக்குவார்களா? எனவே இதில் நமக்குப் பாதிப்பு வராது என்பது யதார்த்தம் அற்ற கதை. நாம் உலக நாடுகளில் இந்த நாட்களில் கடனுக்குத்தான் பொருட்களைக் கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவே இந்தப் போரால் தனது பொருளாதாரத்துக்குப் பாதிப்பு வர இருக்கின்றது என்று கூறும் போது இலங்கை மட்டும் அப்படி இதிலிருந்த தப்பித்துக் கொள்வது எப்படி என்று நாம் கேட்க வேண்டி இருக்கின்றது.

தொடர்ந்து பெற்று வரும் கடன்களைத் திருப்பிக் கொடுப்பது தொடர்பான எந்த வழிமுறைகளோ ஒழுங்கு விதிகளோ எமக்குப் புலப்பட வில்லை. நமது பொருளாதார விற்பண்ணர்களும் அதனை சொல்லவில்லை. அவர்கள் இந்த நாட்களில் தெரிவிக்கின்ற கருத்துக்கள் 2500 ரூபாவில் ஒரு மாதத்தை ஓட்டலாம் என்ற பாணியில்தான் இருக்கின்றது. நமக்குக் கடன் தருகின்ற நாடுகளும் இதனை புரிந்துதான் வைத்திருக்கின்றன. சீனா, இந்தியா நமக்குக் கடன் தரும் கதையும் அதற்கான அவர்களின் எதிர்பார்ப்பும் முற்றிலும் வித்தியாசமானது. எனவே போருக்குப் பின்னர் ரஷ்யா பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டி நிலை இருக்கின்றது. அதே நேரம் ரஷ்யா பொதுவாக இலங்கை போன்ற நாடுகளுக்கு  கடன் ரீதியில் உதவுவது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும்  அமெரிக்க தலமையிலான மேற்கு நாடுகள் தற்போது உக்ரைனுக்கு உதவுவதிலே ஆர்வமாக இருக்கின்றன. இதனால் இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த நேரத்தில் கை கொடுப்பது அவர்களுக்கு இரண்டாம் பட்ச நிலை. இன்று சீனா ரஷ்யாவின் மிகச் சிறந்த நண்பன். அது பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் பொருளாதார ரீதியில் சீனாவின் கவனம் ரஷ்யா மீதுதான்  இருக்கும். அமெரிக்காவுக்கு எதிரான தனது சகா பலயீனப்படுவதை அது விரும்பாது. அதே நேரம் உக்ரைன் விவகாரத்தில் வடக்குத் தெற்கு மக்களின் பொதுவான உணர்வு பெரும்பாலும் ரஷ்யா ஆதரவாகவே இருக்கின்றது என்று நாம் பேச்சுக் கொடுத்த அநேகமானவர்களின் கருத்துக்களில் இருந்தது வெளிப்பட்டது.

தனது வாசல்படியில் துப்பாகி தாங்கியவர்களைக் கொண்டு வந்து நிறுத்துவது நியாயமற்றது-ஏற்றுக் கொள்ள முடியாதது இதனை உக்ரைன் அதிபர் செய்ய முனைந்தது தவறு  என்ற கருத்தும் அமெரிக்க எல்லா இடங்களிலும் மூக்கை நுழைத்து கெட்ட பேரை வாங்கி இருப்பதும் இறுதிப் போரில் உக்ரைன் பெண் விமானி ஒருவர்தான் இங்கு தமிழ் மக்களைக் குண்டு போட்டுக் கொன்று குவித்தார் என்ற கதையும் இலங்கை மக்களின் இந்த மன நிலைக்குக் காரணம் என நாம் நம்புகின்றோம்.

உக்ரைனில் ரஷ்யா நடத்துகின்ற தாக்குதலுக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரனைக்கு ஆதரவாக 141 வாக்குகள். வாக்களிப்பைப் புறக்கணிப்புச் செய்தது 35 நாடுகள். எதிராக 5 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. இலங்கை இந்தியா பாகிஸ்தான் சீனா என்பன வாக்கெடுப்பை புறக்கணித்திருக்கின்றன. இதுவும் ஒரு வகையில் ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு என்பதுதான் எமது கருத்து.

இந்தக் கட்டுரையை நிறைவு செய்து கொண்டிருக்கின்ற நேரம் ஜனாதிபதி ஜீ.ஆர். அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்திருக்கின்றார். இதற்கு உடனடிக் காரணம் கடந்த இரண்டாம் திகதி நடந்து கூட்டத்தில் விமல் வீரவன்ச நிதி அமைச்சர் பீ.ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ததாகும். இதனால் ஜனாதிபதியைத் தொடர்பு கொண்ட நிதி அமைச்சர் பீ.ஆர் விமல் மற்றும் கம்மன்பில் அமர்கின்ற எந்த ஒரு இடத்திற்கும் தான் வரப்போவதில்லை என்று கண்டிப்பாக அண்ணனிடம் கூறியதுடன் அவர்களை வெளியே இழுத்து வீசுமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில் தான் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இதனை நாம் ஒரு பெரிய இசுவாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஏற்கெனவே செல்லாக் காசுகள். காரணம் ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரியாக்கவும் இரட்டைப் பிரசா உரிமை உள்ளவர்களுக்கு அரசியல் அதிகாரத்தையும் கொடுத்து மக்களுக்கு இந்தளவுக்குக் இம்சைகளைச் செய்யக் களம் அமைத்துக் கொடுத்தவர்களை ஒரு போதும் மக்கள் இதன் பின்னர் அங்கிகரிக்க மாட்டார்கள். அத்துடன் நாட்டை மீட்டெடுக்க புதுப் பாதை காட்டுகின்றோம் என்ற கதைகள் எல்லாம் இனி எடுபடாது. எனவே அவர்களைப் பற்றி பெரிதாக நாமும் இங்கு பேசத்  தேவையில்லை.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 06.03.2022

Previous Story

பேராயர் கதை கேளுங்கள்!

Next Story

ஆளைப் பொருத்தே நீதி!