/

யூட்யூப் சேனல் ஆரம்பித்த  யார் இந்த இசாக் முண்டா?

கொரோனாவால் வேலையிழந்த இசாக் முண்டா இன்று லட்சத்தில் வருமானம் ஈட்டுகிறார்!

ஒரிசாவைச் சேர்ந்த தினக் கூலித் தொழிலாளி இசாக் முண்டா. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து வீட்டில் இருந்தவர், பின் யூட்யூப் சேனல் ஆரம்பித்து வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்து யூட்யூப் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது முதல் வீடியோவைப் பதிவிட்ட இசாக் முண்டாவுக்கு அந்த சமயத்தில் எந்த ஆதரவும் இல்லை. ஓரிசாவைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தில், ஒரு தினக்கூலியாக பணிபுரிந்து வந்த இசாக், கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையை இழந்திருந்தார். வாழ்வாதரமாக இருந்த வேலையும் போனதால் கடுமையான சிரமத்தில் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால், இதெல்லாம் ஒரு புள்ளி வரைக்கும் தான்.

தனது குழந்தைகள் யூட்யூபில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, யூட்யூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். அவ்வளவுதான். ஏன், நாமும் இதை முயற்சிக்கக் கூடாது என்ற கேள்வி அவர் மனதில் எழுந்தது. இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்று தைரியமாக வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தார்.

ஆடம்பரமற்ற, எளிமையாக செய்யக் கூடிய உணவுகளை சாப்பிட்டு வீடியோக்களை பதிவிட ஆடரம்பித்தார். இவரது முதல் வீடியோ எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் பார்வையாளர்களைப் பெறவில்லை. ஏறக்குறைய ஒரு வாரம் வரை தனது முதல் வீடியோவை ஒருவர் கூட பார்க்கவில்லை. இதனால் தான் மனம் உடைந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்பு மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்க திட்டமிட்டார். அதேசமயம், பிரபல யூடியூபர்கள் தங்களது வீடியோக்களை எவ்வாறு பகிர்ந்துள்ளனர் என்று கவனித்துள்ளார்.

பின்னர், முகநூலில் தனக்கு ஒரு கணக்கு தொடங்கி தனது யூடியூப் வீடியோவை அதில் பகிர்ந்து உள்ளார். இம்முறை அவருக்கு 10 முதல் 12 பார்வையாளர்கள் கிடைத்தனர்.

இப்படியே நகர்ந்த சில நாட்களுக்குப் பிறகு, அவரது ஒரு வீடியோ வைரலாகி அதிக பார்வைகளைப் பெற்றது.

இதன் மூலம் சில நாட்களிலேயே சுமார் 20,000 பேர் அவரது சேனலை பின்தொடர்ந்தாகவும் உலகளவில் அமெரிக்கா, பிரேசில், மங்கோலியா, போன்ற நாடுகளில் இருந்தும் கூட பார்வையாளர்களைப் பெற்றதாகவும் கூறுகிறார் ஐசக்.

இதுதான், தொடர்ந்து வீடீயோக்களைப் பதிவிட அவரை ஊக்குவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவரது யூடியூப் சேனலான ‘இசாக் முண்டா ஈட்டிங்’ 8 லட்சம் சப்ஸ்கிரைபர்களையும் 10 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைத்து உள்ளது.

இப்பொழுது இவரால் கேமராவின் முன்பு தயக்கம் இன்றி பேசவும் இயல்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் முடிகிறது என்பதை இவராலேயே உணர முடிகிறது என்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் – மன் கி பாத் – வானொலி உரையாடலின்போது, கலாசாரம் மற்றும் உணவு முறைகளின் கலப்பு குறித்து பேசுகையில் பிரதமர் இவரைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தற்போது இவரது வீடியோக்கள் யூட்யூபில் `முக்பேங்` என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. முக்பேங் பிரிவு என்பது வித விதமான உணவு வகைகளை சாப்பிட்டபடியே மக்களிடம் பேசும் வகையிலான வீடியோக்களுக்கான பிரிவு. இவ்வாறு உணவு வகைகளை சாப்பிட்டு வீடியோ வெளியிடும் வழக்கம் 2010 இல் ஜப்பானில் தொடங்கியது. பின்னர், நாளடைவில் இந்த மாதிரியான வீடியோக்கள் இந்தியாவிலும் பிரபலமாயின. இது போன்ற முக்பேங் வீடியோக்களுக்கு தற்போது பெருமளவு பார்வையாளர்கள் உலகளவில் உள்ளனர்.

இந்த விடியோக்களின் ரசிகர்கள், தாங்கள் உணவு உண்ணும் வேளையில் இந்த வீடியோக்களை பார்ப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக தனியாக உணவு உட்கொள்ளும் வேளைகளில் தங்கள் தனிமை உணர்வைப் போக்கவும், இது தங்களுடன் இன்னொருவரும் உணவு உட்கொள்வது போன்ற மனநிலையைப் பெறவும் இந்த வகை வீடியோக்கள் உதவுவதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இதுகுறித்தெல்லாம் அப்பொழுது இசாக் முண்டாவிற்கு எதுவும் தெரியாது.

உணவு வீடியோக்களை வெளியிடுவதற்கு முன்பு பல விதமான வீடியோக்களை வெளியிட முயன்றதாகவும் கடைசியில் உணவு மூலமாக தங்களின் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது என்பதை மக்களுக்கு காட்டினால் அது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நினைத்ததாகவும் கூறுகிறார்.

யூடியூப் தனக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கியதாகவும் யூடியூப் வழிகாட்டி வீடியோக்கள் மூலம் எந்த வகையான கேமரா வாங்குவது எப்படி வீடியோக்களை பதிவு செய்வது, பதிவு செய்த வீடியோக்களை எப்படி எடிட் செய்வது? புதுப்புது உணவு வகைகளை எப்படி சமைப்பது என்பதை எல்லாம் யூட்யூப் வீடியோக்கள் மூலமே கற்றுள்ளார்.

முதன் முதலில் வீடியோவிற்காக தனது சேமிப்பில் இருந்து 3000 ரூபாயை ஒதுக்கி, அதன் மூலம் தவணை முறையில் ஒரு நவீன ஆண்ட்ராய்டு கைபேசியை வாங்கியுள்ளார்.

இவரால் தனது பள்ளி படிப்பை முடிக்க இயலவில்லை. இருப்பினும் ஓரளவு தனக்கு தெரிந்த ஆங்கில அறிவைப் பயன்படுத்தி தனது சேனலின் உயர்விற்காக தானாகவே மின்அஞ்சல் அனுப்புவது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது, கூகுள் மொழிபெயர்ப்பை பயன்படுத்துவது போன்றவற்றை தெரிந்து கொண்டுள்ளார்.

அவரது முதல் வீடியோவில் அவர்மட்டும் சாதாரணமாக உணவு உட்கொள்வதை ஒரே ஷாட்டில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் நண்பர்களுக்கு வணக்கம் சொல்லித் தொடங்கிவிட்டு (அவரது மொழியில்) நான் இப்பொழுது சாப்பிடப்போகிறேன் என்று கூறுகிறார். பின்பு தனது தட்டில் என்னென்ன உள்ளது என விவரிக்கிறார். பின்பு சாப்பிட்டு முடிக்கிறார்.

ஆனால் பிப்ரவரி 2022 இல் இருந்து சாதாரணமாக அணைத்து வேளைகளிலும் உணவு உண்ணும் வீடியோக்களை பதிவிடுவதை தவிர்த்துவிட்டு, விழாக்கால உணவுகள் , கிராமப்புற விருந்து போன்ற வீடியோக்களை மட்டும் பதிவேற்றத் தொடங்கினார்.

விளைவு, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் இவரது வீடியோவிற்கு கீழ் தங்கள் உணவு முறைகளையும் ஒப்பிட்டுதங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதிவிடுகின்றனர்.

பெரும்பாலான மக்கள் இவருடைய வெளிப்படையான சித்தரிப்பில்லாத இயல்பான மொழிநடையிலான வீடியோக்களை விரும்புகின்றனர்.

இவரது பார்வையாளர் ஒருவர் இவருக்கு உணவின் அருமை தெரிந்து உள்ளதாகவும் அதற்கு தகுந்த முறையில் மரியாதை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்பு தனது சப்ஸ்கிரைபர் ஒருவரின் விருப்பத்திற்கு இணங்க பல்வேறு உணவு வகைகளை சமைத்து சாப்பிடும் வீடியோக்களை பதிவேற்ற ஆரம்பித்து உள்ளார். உதாரணமாக வட இந்திய உணவு வகைகளான `ஆலூ பராத்தா` போன்றவை.

அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் உணவு உண்ணும் போட்டி நடத்தி அந்த வீடியோக்களையும் வெளியிடுவது உண்டு.

தினமும் இறைச்சி உணவு உண்ணும் அளவு பொருளாதார வசதி வந்துவிட்டாலும் கூட, தற்பொழுதும் பெருமளவு சாதாரண உணவு வகைகளையே சாப்பிடுவதாகவும் அதையே விரும்புவதாகவும் கூறுகிறார்.

குழந்தைகளின் எதிர்காலம் :

முண்டா கூலி தொழிலாளியாக இருந்த பொழுது அவருடைய ஒரு நாள் வருமானம் 250 ரூபாய் மட்டுமே. “மாதத்தில் 18 முதல் 20 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். ஆறு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு இந்த வருவாய் போதுமானதாக இல்லைஎன்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவரது வீடியோகளுக்கான வரவேற்பு அதிகரிக்க அதிகரிக்க, மாத வருமானம் சுமார் 3 லட்சத்தை எட்டியது. பார்வையாளர்கள் குறைந்த பொழுது அவரது வருமானமும் குறைந்து உள்ளது. இவர் தற்பொழுது மாதம் அறுபது ஆயிரம் முதல்எழுபது ஆயிரம் வரை வருவாய் ஈட்டி வருகிறார்.

அவர் இவ்வளவு காலமாக ஈட்டிய வருவாயில் தனது குடிசை இருந்த இடத்தில் ஒரு இரண்டடுக்கு மாடிவீட்டைக் கட்டியுள்ளார். இதற்காக சுமார் 20 லட்சம் ரூபாயை செலவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிக்கிறார். ஒரு பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அத்துடன் தன் எடிட்டிங் தேவைகளுக்காக மடிக்கணினி ஒன்றையும் வாங்கியுள்ளார்.

அத்துடன்தனது கிராமத்தில் தான் ஒரு பிரபலமாக மாறியுள்ளதாகவும் அவ்வப்பொழுது அப்பகுதி மக்களுக்கு கோழிக்கறியுடன் கூடிய பிரமாண்டமான விருந்து அளிக்கிறேன்என்றும் கூறியுள்ளார்..

முண்டாவின் அடுத்த குறிக்கோள், “தனக்கு அருகில் உள்ள நகர்புறத்தில் உள்ள ஆங்கில வழி பள்ளியில் தன்னுடைய குழந்தைகளை படிக்க வைப்பதுதான்.”

என்னுடைய குறைந்தபட்ச கல்வியைப் பயன்படுத்தியே என்னால் இவளவு செய்ய முடியும் என்றால், அவர்களுக்கு நல்ல கல்வியை மட்டும் அளித்துவிட்டால் அவர்களால் இன்னும் எவ்வளவோ செய்ய முடியும்என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ஐசக் முண்டோ.

Previous Story

அசிங்கப்பட்ட கோட்டா அமைச்சர்

Next Story

பன்றி உறுப்புகள், மனித உறுப்பு மாற்று சிகிச்சையின் எதிர்காலமா!