மோதிக்கு புதிய கார்: அறிய வேண்டிய தகவல்கள்!

ரூ. 12 கோடி ( இலங்கை நாணயப்படி 32.16 கோடி)

குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சொகுசு கார், 2019 ஆம் ஆண்டு உலகளவில் வெளியிடப்பட்ட Mercedes-Maybach S650 கார்ட் என்றழைக்கப்பட்ட ரகத்தின் மேம்பட்ட பதிப்பாகும். இந்த வடிவம் இந்தியாவில் இன்னும் அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை.

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் பாதுகாப்புக்காக புதிய குண்டு துளைக்காத பிரத்யேக கார் தயாரிக்கப்பட்டு அவரது பாதுகாப்பு வாகன தொடரணியில் (கான்வாய்) சேர்க்கப்பட்டுள்ளது. அந்த காரின் விலை ரூ. 12 கோடிக்கும் அதிகம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது பற்றி நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி சமீப காலம்வரை ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேண்ட் குரூஸர் போன்ற வாகனங்களை பயன்படுத்தினார்.பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) கட்டுப்பாட்டில் அவரது பாதுகாப்பு வாகனங்கள் பராமரிக்கப்படுகின்றன. அந்த வாகன தொடரணியில் புதிதாக Mercedes-Maybach S650 ரக கார் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது முந்தைய ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேண்ட் குரூஸர் ரகங்களை விட மேம்பட்டதாகும்.

இந்த மாத தொடக்கத்தில் இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்திக்க டெல்லி ​​ஹைதராபாத் மாளிகைக்கு வந்தபோது பிரதமர் மோதி புதிய மெர்செடீஸ் பென்ஸின் மேபேக் எஸ்650 ரக காரை முதல் முறையாக பயன்படுத்தினார்.

குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சொகுசு கார், 2019 ஆம் ஆண்டு உலகளவில் வெளியிடப்பட்ட Mercedes-Maybach S650 கார்ட் என்றழைக்கப்பட்ட ரகத்தின் மேம்பட்ட பதிப்பாகும். இந்த வடிவம் இந்தியாவில் இன்னும் அதிகாரபூர்வமாக அறிமுகமாகவில்லை.

இதற்கு முன்பு மெர்செடீஸ் பென்ஸ் நிறுவனம் Maybach S600 ரக காரை 2016இல் அறிமுகப்படுத்தியபோது அதன் இந்திய ஷோரூம் விற்பனை விலை ரூ.10.50 கோடி ஆக இருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோதி பயன்படுத்தும் புதிய Mercedes-Maybach S650 ரக காரின் விலையை அந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், தயாரிப்பு வடிவம் மற்றும் வசதிகளை வைத்து அதன் விற்பனை மதிப்பு ரூ.12 கோடி – ரூ.15 கோடி (வரிகள் சேர்க்கப்படாமல் உத்தேச மதிப்பு ) இருக்கும் என கணிக்கப்படுகிறது.

பிரதமர் மோதியின் புதிய Maybach S650 கார்ட் ரகத்துக்கு என சில முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. இது VR10-நிலை பாதுகாப்பைப் பெறுகிறது, இது உற்பத்தி செய்யப்படும் காருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கவச பாதுகாப்பு சான்றிதழின் குறியீடாகும். அதாவது, இந்த சொகுசு கார், கடினமான உலோக தோட்டாக்களை தாங்கும் திறன் கொண்டது.

இந்த வாகனம் உயர் சக்திவாய்ந்த வெடி மருந்து தாக்குதலை தாங்கும் திறனைக் குறிக்கும் ERV 2010 மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. உதாரணமாக, இரண்டு மீட்டர் தூரத்தில் இருந்து 15 கிலோ டீஎன்டீ எனப்படும் டிரினிட்ரோடோலூயின் வெடிமருந்துகள் அடைக்கப்பட்ட கலனில் இருந்து தாக்கினால் கூட காருக்குள் உள்ள பயணிகளை பாதுகாக்கும் வகையில் இதன் கவச தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

மெர்செடீஸ் மேபேக் எஸ்650 கார்டு உள்அமைப்பு

இந்த காரின் அடிப்பகுதி நேரடியாக வெடிகுண்டு தாக்குதலில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் தரத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை ரசாயன தாக்குதல் நடத்தினால் கூட, காருக்குள் தனியாக காற்றோட்ட வசதியை வழங்கும் வசதியும் இதில் நிறுவப்பட்டுள்ளது.

மெர்செடீஸ் மேபேக் எஸ்650 கார்டு ரக கார், 6.0-லிட்டர் ட்வின்-டர்போ V12 இன்ஜினைக் கொண்டது. இது அதிகபட்சமாக 523 குதிரைத்திறன் ஆற்றலையும் 830 நியூட்டர் மீட்டர் உச்ச முறுக்குவிசையையும் வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொண்டது. மணிக்கு 190 கி.மீ வேகத்தில் கார் சென்றாலும் அதை மின்னணு முறையில் கட்டுப்படுத்தி சீரோட்டத்தை தரும் வகையில் இதன் என்ஜின் திறன் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேகமாக செல்லும்போது காரின் டயர்கள் பஞ்சர் ஆனாலும் கார் கட்டுப்பாட்டை இழக்காமல் 30 கி.மீ வரை இயங்கும் வகையில் இதன் டயர்கள் தட்டை உருளை வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமரைப் பாதுகாப்பதற்கான இந்த உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களைத் தவிர, Mercedes-Maybach S650இல் இடம்பெற்றுள்ள பிற அனைத்து வசதிகளைப் போலவே மோதி பயன்படுத்தும் கார் உள்ளது.

இந்திய பிரதமருக்குப் புதிய கார் வேண்டும் என்ற கோரிக்கை பொதுவாக நாட்டின் தலைவரைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள சிறப்புப் பாதுகாப்புக் குழு அல்லது எஸ்பிஜி மூலம் விடுக்கப்படும். அந்தப் படை, பிரதமரின் பாதுகாப்பு அச்சுறுதலை அளவிட்டு அதற்கேற்ப அவருக்கு கவச வசதிகளை வழங்கும் கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் தங்களுடைய தேவையை தெரிவிக்கும். அதன் அடிப்படையில் சிறப்பு வசதிகள் காரில் நிறுவப்பட்டு பிரத்யேகமாக தயாரிப்புகள் வழங்கப்படும்.

வழக்கமாக, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்களுக்கான கார்களை தயாரிக்கும்போது, ஒரே மாதிரி வடிவமைப்பைக் கொண்ட இரு மாடல்களை எஸ்பிஜி பயன்படுத்தும். பிரதமரின் பாதுகாப்பு தொடரணியில் இந்த இரண்டு கார்களுமே இடம்பெறும். ஆனால், பிரதமர் எந்த காரில் பயணம் செய்கிறார் என்பதை அவரது மெய்க்காவல் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள்.

இந்திய பிரதமராகும் முன்பு குஜராத் மாநில முதல்வராக நரேந்திரமோதி இருந்தபோது பல ஆண்டுகளாக அவர் குண்டு துளைக்காத மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ரக காரை பயன்படுத்தினார். பிறகு அவர் தமது பாதுகாப்புக்காக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் உயர் பாதுகாப்பு பதிப்பை பயன்படுத்தினார். இந்திய பிரதமர் ஆனபோதும் அந்த ரக காரையே ஆரம்பத்தில் பயன்படுத்திய பிரதமர் பிறகு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ரக கார்களை பயன்படுத்தியுள்ளார்.

Previous Story

பிரான்ஸ்:ஜிஹாதிகளுக்கு ஆதரவாக பிரசங்கம் மூடப்பட்ட மசூதி

Next Story

இலங்கையில்  பஞ்சம்