மோசடியை ஒப்புக் கொண்ட பிரதமர் மஹிந்த மைத்துனர்!

2013ஆம் ஆண்டு அமெரிக்கா வோசிங்டனில் புதிய தூதரகக் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்த போது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 332,027 டொலர்களை அபகரிக்க முயன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரான இலங்கைக்கான முன்னாள் தூதுவர் நேற்று நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க சட்டத்தரணிகள் அலுவலகம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அலுவலகம் என்பன இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

வேர்ஜீனியாவின் ஆர்லிங்டனைச் சேர்ந்த 61 வயதான ஜாலிய சித்ரன் விக்கிரமசூரிய (Jaliya Chitran Wickramasuriya), 2008 முதல் 2014 வரை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான தூதுவராக பணியாற்றினார்.

இந்த காலப்பகுதியில் அவர் மேற்கொண்ட இந்த அபகரிப்பு முயற்சி தொடர்பான குற்றச்சாட்டை அவர் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வைத்து ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து இந்த குற்றச்சாட்டுக்காக சட்டப்படி அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சாத்தியமான நிதி அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான தண்டனை எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2012 இன் பிற்பகுதியில் அல்லது நவம்பர் 2013 வரை, நில குத்தகை பரிவர்த்தனையின் விலையை 332,027 டொலர்களால் உயர்த்தி, வோசிங்டனில் ஒரு புதிய தூதரக கட்டிடத்தை 2013 இல் கொள்வனவு செய்தபோது விக்கிரமசூரிய (Jaliya Chitran Wickramasuriya) இலங்கை அரசாங்கத்தை ஏமாற்றும் திட்டத்தை வகுத்ததாக கண்டறியப்பட்டது.

அதன்பின்னர் வந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படாதப்படி அந்த பணத்தை திருப்பியதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

ஞானாக்கா ஆலயம் மக்களால் சுற்றி வளைப்பு

Next Story

ஊரடங்கு உத்தரவு! பங்காளி கட்சிகள் கடும் எதிர்ப்பு!!