மேற்கு வங்கம்: 77 சாதிகளின் ஒபிசி அந்தஸ்து ரத்து:அரசியல் சர்ச்சை

-பிரபாகர் மணி திவாரி-

மேற்கு வங்கம்: 77 சாதிகளின் ஒபிசி அந்தஸ்து ரத்து, சிதையும் கனவுகள் - வலுக்கும் அரசியல் சர்ச்சை

“அடுத்த ஆண்டின் மாநில நிர்வாகப் பணித் தேர்வுக்கு நான் தயார் செய்து கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு என் கனவைச் சிதைத்துவிட்டது. இப்போது பொதுப் பிரிவில் வேலை கிடைப்பது கடினம். அரசு எதுவும் செய்யவில்லையென்றால் அரசு வேலை என்ற என் கனவு நனவாக முடியாது,” என்று கூறுகிறார் 25 வயதான முகமது ஷபிகுல்லா. மூன்று ஆண்டுகளுக்கு முன் பட்டப் படிப்பை முடித்ததில் இருந்து அரசு வேலைக்காக அவர் தயார் செய்து வருகிறார்.

இது ஷபிகுல்லாவின் நிலைமை மட்டுமல்ல. 2010க்குப் பிறகு வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்யும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, அவரைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டதாக உணர்கிறார்கள்.

இருப்பினும் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி அரசுப் பணிகளில் சேர்ந்தவர்கள் அல்லது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஆனால் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாமல் போகலாம் என்பதுதான் இப்போது இவர்களின் கவலை.

தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பாங்கட் பகுதியில் வசிக்கும் அப்துல் மசூத், குடும்ப சூழ்நிலை காரணமாக அதிகம் படிக்க முடியவில்லை. ஆனால் அவர் விவசாயம் செய்து தனது தம்பியைப் படிக்க வைக்கிறார்.

​​“படித்து முடித்த பிறகு தம்பிக்கு அரசு வேலை கிடைக்கும் என்று நினைத்தேன். அப்போது குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும் எனக் கருதினேன். இப்போது விவசாயத்தில் அதிக லாபம் கிடைப்பதில்லை. இனி என்ன நடக்கும் என்று எனக்கு புரியவில்லை,” என்று மசூத் கூறினார்.

மேற்கு வங்கத்தில், பெரும்பான்மையாக முஸ்லிம்கள் அடங்கிய 77 பிரிவினரின் ஒபிசி அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பான அரசியல் சர்ச்சை
குடும்ப சூழ்நிலை காரணமாக அப்துல் மசூத் அதிகம் படிக்க முடியவில்லை. ஆனால் அவர் விவசாயம் செய்து தனது தம்பியைப் படிக்க வைக்கிறார்

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

“இட ஒதுக்கீடு காரணமாக எனக்கு வேலை கிடைக்கப் பல ஆண்டுகள் ஆனது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன நிலையில் இட ஒதுக்கீடு நியாயமற்றது. பின்தங்கிய வகுப்பினருக்கு அரசு திட்டங்கள் மூலம் சிறந்த வழியில் உதவ முடியும். நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதான். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும்,” என்று பிரதீப்த் சந்த் என்ற ஆசிரியர் தெரிவித்தார்.

கடந்த மாதம் உயர்நீதிமன்றத்தால் பணி ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களில் பிரதீப்தும் ஒருவர். ஆனால் தற்போது அந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2016ஆம் ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனங்களை சட்டவிரோதம் என அறிவித்து உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

”திறமையின் அடிப்படையில் எனக்கு வேலை கிடைத்தது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அல்ல,” என்கிறார் பிரதீப்த்.

இந்த விவகாரம் தொடர்பான அரசியல் சர்ச்சையும் வலுத்து வருகிறது. இதுகுறித்து முதல்வர் மமதா பானர்ஜி மிகவும் ஆவேசமாக உள்ளார். அதேநேரம் இந்த முடிவை பாஜக வரவேற்றுள்ளது. இந்த முடிவு எதிர்க்கட்சி கூட்டணியின் முகத்தில் விழுந்த பெரிய அடி என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

முழு விஷயம் என்ன?

இந்த வாரம் புதன்கிழமை கொல்கத்தா உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பில், 2010 முதல் வழங்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) சான்றிதழ்கள் அனைத்தையும் ரத்து செய்தது.

இதன் காரணமாக ஐந்து லட்சம் பேரின் ஓபிசி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன. இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். இந்தப் பட்டியலில் 77 பிரிவுகளின் கீழ் ஓபிசி சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவை.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு ஓபிசி இட ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லிம்களை கொண்டு வந்தது. பின்னர் 2011இல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.

மாநில அரசை விமர்சித்த நீதிமன்றம், “ஓபிசியின் கீழ் 77 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே செய்யப்பட்டது. அவ்வாறு செய்வது அரசமைப்பு சட்டத்தை மீறுவது மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தை அவமதிக்கும் செயல்” என்று கூறியது.

ஓபிசி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டாலும், இதன்கீழ் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றவர்கள் அல்லது வேலை பெற்றவர்கள் அல்லது அதன்கீழ் பிற சலுகைகளைப் பெற்றவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாநில அரசின் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சட்டம் 2012ஐ நீதிமன்றம் ரத்து செய்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 16, பிற்படுத்தப்பட்ட சாதிகள் தொடர்பான அட்டவணையை மாற்றுவதற்கு அரசை அனுமதிக்கிறது. இந்த விதியின் உதவியுடன், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 37 புதிய பிரிவுகளை மாநில அரசு சேர்த்தது.

இருப்பினும், 2010க்கு முன் ஓபிசியின் கீழ் பதிவு செய்யப்பட்ட 66 பிரிவுகளின் விஷயத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், 2010ஆம் ஆண்டுக்கு முன் ஓபிசியின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்தப் பிரிவுகள் சவால் செய்யப்படாததே இதற்குக் காரணம்.

வலுக்கும் அரசியல் சர்ச்சை

பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டைப் பறிக்க விரும்புகிறது என்று நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை விமர்சித்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறினார்.

“இந்தத் தீர்ப்பை நான் ஏற்கவில்லை. மாநிலத்தில் ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு தொடரும். இதற்காக இறுதிவரை போராடுவேன். அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்,” என்றார் அவர்.

இது பாஜகவின் முடிவு என்று வர்ணித்த மமதா பானர்ஜி, “பிரதமர் மோதி நெருப்புடன் விளையாடுகிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது,” என்றார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோதி, “திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் திருப்திப்படுத்தும் அரசியல் செய்கின்றன. அதைக் கட்டுப்படுத்துவது அவசியம்,” என்று குறிப்பிட்டார்.

மமதா பானர்ஜி அரசு எந்தவித ஆய்வும் செய்யாமல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக நிர்ணயிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியாக முஸ்லிம்களுக்கு வழங்கியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸை தாக்கிய இடதுசாரி கட்சிகள், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வளர்ச்சிக்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்தியது. திரிணாமுல் ஆட்சியில் விதிகளைப் பின்பற்றாமல் ஓபிசி சான்றிதழ் வழங்கப்பட்டது. இது அப்பட்டமான வாக்கு வங்கி அரசியல்,” என்று தெரிவித்தன.

“ரங்கநாத் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் இடதுசாரி அரசு, ஓபிசி இட ஒதுக்கீட்டை 7 இல் இருந்து 17 சதவிகிதமாக உயர்த்தியது. சிறுபான்மையினரிடையே சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக இது செய்யப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மமதா பானர்ஜி தனது அரசியல் நலன்களுக்காக ஓபிசி சான்றிதழ்களை தன்னிச்சையாக விநியோகித்தார்,” என்று சிபிஎம் தலைவர் முகமது சலீம் குறிப்பிட்டார்.

மாநில அரசியலில் என்ன தாக்கம் இருக்கும்?

மேற்கு வங்கத்தில், பெரும்பான்மையாக முஸ்லிம்கள் அடங்கிய 77 பிரிவினரின் ஒபிசி அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பான அரசியல் சர்ச்சை
                                                                      கொல்கத்தா உயர் நீதிமன்றம்

காங்கிரஸின் மாநிலப் பிரிவு தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரியும் இந்த விவகாரத்தில் மமதா அரசை தாக்கினார். புரூலியாவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய அவர், ”திரிணாமுல் காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் 5 லட்சம் பேரின் ஓபிசி சான்றிதழ்களை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. லட்சக்கணக்கான ஓபிசி மக்களின் எதிர்காலத்தை இந்த அரசு இருளில் தள்ளியுள்ளது,” என்றார்.

தேர்தலுக்கு நடுவே வந்துள்ள இந்த முடிவு திரிணாமுல் காங்கிரஸுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். முன்னதாக கடந்த மாதம் இருபத்தி ஆறாயிரம் ஆசிரியர் பணி நியமனங்களை ரத்து செய்யும் நீதிமன்றத் தீர்ப்பும் அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றம் இதற்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால் அந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை.

​​“நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்குப் பெரிய அடி. இது அக்கட்சியின் அரசியல் சமன்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். மமதா இந்த விஷயத்தில் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்,” என்று அரசியல் அறிவியல் பேராசிரியர் உத்பல் சென்குப்தா கூறினார்.

“மாநிலத்தில் முக்கியமான இரண்டு கட்ட வாக்குப்பதிவு இனிமேல்தான் நடக்க இருக்கின்றன. அந்தப் பகுதிகளில் பல இடங்களில் முஸ்லிம் மற்றும் தலித் வாக்காளர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வலுவுடன் உள்ளனர். மமதா பானர்ஜி அரசு உருவாக்கிய ஓபிசி பட்டியலில் இவர்களில் பெரும்பாலானவர்கள் இருந்தனர். இப்போது, ​​அவர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் முடிவு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்வது கடினம். ஆனால் இது திரிணாமுல் காங்கிரஸின் பிரச்னைகளை அதிகரிக்கலாம்,” என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பத்திரிகைத் துறையில் பணியாற்றி வரும் தாபஸ் முகர்ஜி தெரிவித்தார்.

Previous Story

யார் கதையைத் தான் நம்புவது!

Next Story

ரணில் பேச்சை நம்பாதீர்-நாமல்